“மானொன்று வடிவெடுத்து மாரீசன்
போய்மடிந்தான்! மானே என்று
தேன்ஒன்று மொழிபேசிச் சீதைதனைச்
சிறையிருக்கத் திருடிச் சென்றோன்
வானொன்றும் அரசிழந்தான்! தண்டலையார்
திருவுளத்தின் மகிமை காணீர்!
தானொன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
நினைப்பதுவும் சகசந் தானே.”
இதன் பொருள் —-
தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக் கோயில் கொண்டு விளங்கும் இறைவருடைய திருவுள்ளப் பெருமையைப் பாருங்கள்!, மான் ஒன்று வடிவு எடுத்துப்போய் மாரீசன் மடிந்தான் - மானைப்போல் ஒன்றிய வடிவை எடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான், மானே என்று தேன் ஒன்றும் மொழிபேசிச் சீதைதனைச் சிறையிருக்கத் திருடிச் சென்றோன் - மானே எனக் கூப்பிட்டுத் தேனைப்போல இனிக்கும் மொழிகளை மொழிந்து, சீதையைத் திருடிச் சிறைக்குக் கொண்டு சென்ற இராவணன், வான் ஒன்றும் அரசு இழந்தான் - (நிலத்துடன்) வானையும் சேர்த்த தன் ஆட்சியைப் பறிகொடுத்தான், (ஆகையால்) தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசம் தான் - (உலகில் ஒருவன்) தான் ஒரு வேலையை எண்ணும்போது, தெய்வம் மற்றொன்று எண்ணுவது இயல்பே!
‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது' என்பது பழமொழி. தீவினை நினைத்தல் கூடாது. அது இறைவன் திருவுள்ளச் சம்மதம் ஆனது அல்ல. அவ்வாறு தீவினை செய்தால் அதன் பயன் நன்றாக இராது. நல்ல முயற்சியையும் அதன் பயனையும் இச் செய்யுள் குறை கூறவில்லை என்று அறிக.
No comments:
Post a Comment