நிலையான பெருந்தவம்

நிலையான பெருந்தவம்

-----

அறம் எல்லோரும் செய்வதற்கு உரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே, மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாக அமையும். அறவழியில் சேராத பொருள் பொருளாகாது. இன்பமும் அறத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்பமாகாது. ஆகவே, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் உயிர்நாடியாக இருப்பது. அறம் என்பது, நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரிவிப்பது. செய்யக் கூடியவை விதி. செய்யக் கூடாதவை  விலக்கு என்று சொல்வார்கள். 

"அறு" என்னும் சொல்லை அடியாக உண்டானது அறம். இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடாதென்று வரையறுப்பதும் அதுவே. அப்படி வரையறுத்த நெறியே, அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் "அறத்துப்பால்" என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரங்களில் முறையாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் நாடியாக இருப்பது ஈகை. எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றார் திருவள்ளுவ நாயனார். 

நூல்கள் யாவும் தருமம் (அறம்) அர்த்தம் (பொருள்) காமம் (இன்பம்) மோட்சம் (வீடு) என்ற புருஷார்த்தங்கள் நான்கைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. ஔவைப் பாட்டி சுருக்கமாக எதையும் சொல்வதில் வல்லவர். பெருக்கமாகவும் சொல்வார். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்பமாக இருக்கவேண்டும் என்பது இல்லை. சுருக்கிச் சொல்லத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக் கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும்.  

சுருக்கமாகப் பாடுகிற ஆற்றலலைத் திருவருளால் பெற்ற ஔவைப் பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாக ஒரு பாட்டில் காட்டினார். "ஈதல் அறம்" என்றார். அறம் செய்ய வேண்டுமானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது?  "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். பணம் ஈட்டுவதற்கு இக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாளுகின்றார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால், நமது முன்னோர் இப்படி ஈட்டுவதைப் பொருளாகக் கொள்ளவில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்றார்.

எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மட்டுமே அல்ல.  உள்ளமும் இணைய வேண்டும். கருத்து ஒருமித்து ஆதரவுபடும் இன்பத்தை எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல். பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும்.  எனவே,, ஒளவைப் பாட்டி, "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்"  என்று சொன்னார். பல பிறவிகளிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். "பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு."

இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தை, மிகச் சுருக்கமாக "ஈதல் அறம்" பாட்டி என்று சொல்லிவிட்டார். ஈதல் - கொடுப்பது. ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார்கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும். 

எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூல நாயனார். இந்த உடம்பு சோற்றுப் பிண்டம். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். 

உயிர் வாழ, உடம்பு வேண்டும். உடம்பை உணவால் ஓம்புதல் வேண்டும். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும் விடக் கொடியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. துறவிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ மக்கள் பசியினால் பிள்ளையை விற்றும் பிழைக்கிறார்கள். 

தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்" என்று பாடினார் திருவள்ளுவ நாயனார். மணிமேகலைக் காப்பியம், பசியை, "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைச் சொல்வது மட்டும் அல்லாமல், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் அன்னதானத்தின் சிறப்பையும் சொல்கிறது.

மணிமேகலை என்னும் துறவி பிறருக்கு உபதேசம் செய்வதை மேற்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற்கொண்டாள். அவளுக்கு "அமுதசுரபி" ஒன்று கிடைத்தது. பசித்தோர் எல்லோருக்கும் சோறு கொடுத்தார். அமுதசுரபியில் சோறு அளித்த, ஆதிரை என்பாளும், "பாரகம் முழுவதும் பசிப்பிணி அறுக" என்று சொல்லி இட்டாள் என்கின்றது காப்பியம். ஆதிரைக்கு எவ்வளவு பேராசை பாருங்கள். உலகம் முழுவதும் பசி இல்லாமல் வாழவேண்டுமாம்.

நமது நாட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும், அன்னதானம் இல்லாமல் இருக்காது. பசித்து வந்தவர்க்கு அன்னம் அளிப்பது சிறந்த தானம். ஒருவன் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கின்ற இடமே பசித்தவர் வயிறுதான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்றார். தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால், அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"  என்பது திருக்குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான். அந்த உண்ணா நோன்பிற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்கள். இவர்கள் பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர்களுடைய பசியையும் போக்கி விடுகிறான். 

'இடம்பட வீடு எடேல்' என்று ஔவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்று பொருள். ஒரு பக்கத்தில் விளைச்சலை அதிகப் படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். விளைநிலம் அழிந்து போகிறது. உடம்பை வளர்த்தற்கு உரிய அன்னத்திற்கு உரிய நெல் விளையாமல் போகின்றது. இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத்தார்கள். நிறைய நெல் விளைந்தால்தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி.  இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தமது கலைத் திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களை அன்றிப் பிறரிடம் பிச்சை என்று இரப்பவர்கள் மிக அரிது. நாளடைவில் அந்த நிலை மாறிப் பலரும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டது. 

உயிர் வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தால் ஆனது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லை என்றால் மற்றத் தொழில்களினால் பலன் இல்லை. "உழந்தும் உழவே தலை" என்றார் நாயனார்.

சடையப்ப வள்ளல் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல் மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல்மணிகள் சிந்தி இருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர் ஒருவர்,  "வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டுமென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவிதமாகப் பார்த்தார். நெல்லை விடப் பொன் உயர்ந்தது அல்ல என்று காட்டவே,  பொன்னைக் கொண்டுவந்து இலையில் இட்டார். புலவருக்கு உண்மை விளங்கியது. "பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர்.

தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கியமான இடத்தில் அந்த வள்ளலைப் பற்றிய புகழை அமைத்திருக்கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள் இராம பட்டாபிடேகத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராம பட்டாபிடேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். இராம பட்டாபிடேகத்தன்று விசுவாமித்திரர், வசிட்டர், அநுமன், சீதாதேவி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலுக்கு அங்கே இடமே இல்லை. ஆனால், இடத்தை உண்டாக்கி, சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாகப் புகுத்தி விட்டார். 

"அரியணை அனுமன் தாங்க,

    அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க,

    இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க,

    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுஉ(ள்)ளார் கொடுக்க வாங்கி,

    வசிட்டனே புனைந்தான் மௌலி". --- கம்பராமாயணம்.

சிங்காதனத்தை அனுமன் தாங்கினான். அங்கதன் உடைவாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமபிரான் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் கம்பர். "வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபு உள்ளோர் கொடுக்க வாங்கி" இராமபிரானுக்கு வசிட்டர் திருமுடியைச் சூட்டினார் என்கிறார். இராமபிரானுக்குச் சூட்டிய மகுடத்தை சடையப்பருக்கு முன்னோர்கள் ஆகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார்.  கம்பருடைய அன்புக்கு மூலகாரணம் சடையப்ப வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 

என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லை. எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவ பூர்வமான முறையில் ஒரு தந்திரத்தை அருள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகிவிடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறது. அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு, கட்டுச் சோறாகி, வந்து சேரும் என்று அவர் சொல்கிறார். அரிசியில் பிளவு பட்டால் உண்டாவது நொய் அரிசி. அந்த நொய் அரிசியில் ஒரு பாதியையாவது பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று சொன்னார்.

பலவித பண்டங்களோடுதான் விருந்து படைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. வறுமை நிலையில் இருந்தவர்கள் கீரையைக் கறி ஆக்கி உண்டார்கள். தம்மிடம் இருந்த பொருள் அனைத்தும் வற்றிய நிலையில், தன்னை நாடி வந்த அடியவர்க்கு அமுது படைக்க, இளையான்குடி மாற நாயானார் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைத் தான் தேர்ந்து எடுத்தார். வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்  என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து,  நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும், வெறும் கீரையாக இருந்தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு.

பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி என வந்தவனுக்கு ஒரு பிடி அன்னம் இட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அருணகிரிநாதர் வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று சொல்லவில்லை. இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள்  என்றே சொல்கிறார். 

இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். அதை "அன்பின் நிலையான மாதவம்" என்கின்றார். புலன்களை அடக்கிச் செய்வதுதான் தவம் என்று எண்ணவேண்டாம். தவம் செய்கிறவனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்னும் திருவள்ளுவர் கருத்தை மேலே கண்டோம். ஆகவே பசியைப் போக்கும் தவத்தை அன்போடு செய்து வந்தால், அதுவே "நிலையான மாதவம்" என்கின்றார் அருணை வள்ளலார்.

பசித்து வந்தவருக்கு இலையாவது, வெந்தது ஏதாவது அன்போடு கொடுத்தால், அது பின்னால் பின்பு பொதி சோறாக விளையும்  என்கின்றார். மரணம் வந்தபோது, உயிரானது தான் இருக்கும் உடலை விட்டுப் போகின்றது. இனிக் கவலை இல்லை என்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. இப்போது செய்கிற "நிலையான மாதவம்" அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், உற்ற துணையாகவும் வந்து சேரும்.

அறிவை மழுங்க அடிக்கிற, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால், அதுவே தவமாகிவிடும். பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர்களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற பொறாமையினால் சிலர் செய்கிறார்கள். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் ஏசுவார்களே என்று எண்ணிச் செய்கிறார்கள். இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றும், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்றும் சொன்னார் திருவள்ளுவ நாயனார்.

அறத்தின்வழி ஈட்டிய பொருள் இறைவன் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தி, அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறை திருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். வழங்காத வன்னெஞ்சர்கள்ப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

"நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே".  ---  பட்டினத்தார்.

    இறைவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் "நிலையான மாதவம்" ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது, நம்மை நினைத்தால் ஆசை வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே "கர்மயோகம்" ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவம்தான்.  ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறைவனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும். அன்பு இருந்தால் ஏழையைக் கண்டு ஏளனம் செய்யத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்றார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். 

நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறைவன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத்திருக்கும் குடை சிறிதாகத் தோன்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோன்றுகிறது. 

"மலைஆறு கூறுஎழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின் 

நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்; 

இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்நு ஏற்றவர்க்கே". 

என்று அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருள் உபதேசம் புரிந்து நல்வழியைக் காட்டுகின்றார்.

இதன் பொருள் --- 

உலகத்தவர்களே! பசியோடு வந்தவர்க்கு நீங்கள் வழங்கியது நீங்கள் இறுதியில் தொலையாத வழியில் செல்லும் நெடிய பயணத்துக்கு, உங்களைத் தேடிக்கொண்டு வருகின்ற கட்டுச் சோறும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலால், உம்மிடத்தில் வந்து யாசித்தவர்க்கு இலைக் கறியையாவது, வெந்தது வேறு எதையாவது பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிகாணப் பிளக்குமாறு வேலை விட்டு அருளிய முருகப்பெருமானை அன்புடன் பணிந்து, நிலைபெற்ற பெருந்தவத்தைச் செய்து வருவீர்களாக.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...