பொது --- 1080. கலந்த மாதும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கலந்த மாதும் (பொது)


தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான


கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்

கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி

உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா

உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே

மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே

மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா

சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்

சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.


                                   பதம் பிரித்தல்


கலந்த மாதும், கண் களி உற வரு ...... புதல்வோரும்

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகு இடை ...... கலிமேவி

உலந்த காயம் கொண்டு, உளம் உறு துயர் ...... உடன்மேவா.

உகந்த பாதம் தந்து உனை உரைசெய ...... அருள்வாயே.

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி ...... மருகோனே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீச,

சிவந்த காலும் தண்டையும் அழகிய ...... பெருமாளே.

பதவுரை

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே --- மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய மணவாளா ---(விலங்குகளைக்) கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீசச் சிவந்த காலும் தண்டையும் --- சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும்,

அழகிய பெருமாளே --- அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

கலந்த மாதும் --- அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும்,

கண் களி உற வரு(ம்) புதல்வோரும் --- அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும்,

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகிடை --- கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,

கலி மேவி --- வறுமைத் துன்பத்தை அடைந்து,

உலந்த காயம் கொண்டு --- வாடிய மேனியுடன்,

உளம் துயருடன் மேவா --- உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல்,

உகந்த பாதம் தந்து உனை உரைசெய அருள்வாயே --- விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

பொழிப்புரை

மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

விலங்குகளைக் கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும் அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும், அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும், கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,வறுமைத் துன்பத்தை அடைந்து, புறத்தில் வாடிய மேனியுடனும், அகத்தில் உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல், மெய்யடியார்கள் விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

விரிவுரை

மலர்ந்த பூவின் மங்கை ---

பூ என்று சொன்னாலே, தாமரையைத் தான் குறிக்கும்.  பூவின் மங்கை - மலர்மகள் என்னும் திருமகள்.

"பூ எனப்படுவது பொறி வாழ் பூவே" என்று "நால்வர் நான்மணி மாலை"யில் கூறப்பட்டு உள்ளது காண்க. பொறி - திருமகள்.


மறம் செய்வார் ---

மறம் - கொலைத் தொழில். அத் தொழிலைச் செய்பவர் மறவர் எனபட்டனர். வேடர் என்றும் சொல்லப்படுவர்.


கலி --- 

துன்பம், வறுமை.


கருத்துரை


முருகா! மெய்யடியார்கள் துதித்துப் போற்றும் திருவடி இன்பத்தை அடியேனுக்கும் தந்து அருளவேண்டும்.





No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...