பொது --- 1083. புழுககில் களபம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புழுககில் களபம் (பொது)


முருகா! 

மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தனதான


புழுககில் களப மொளிவிடு தரள

     மணிபல செறிய ...... வடமேருப்


பொருமிரு கலச முலையினை யரிவை

     புனையிடு பொதுவின் ...... மடமாதர்


அழகிய குவளை விழியினு மமுத

     மொழியினு மவச ...... வநுராக


அமளியின் மிசையி லவர்வச முருகி

     அழியுநி னடிமை ...... தனையாள்வாய்


குழலிசை யதுகொ டறவெருள் சுரபி

     குறுநிரை யருளி ...... யலைமோதுங்


குரைசெறி யுததி வரைதனில் விறுசு

     குமுகுமு குமென ...... வுலகோடு


முழுமதி சுழல வரைநெறு நெறென

     முடுகிய முகிலின் ...... மருகோனே


மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புழுகு, அகில், களபம், ஒளிவிடு தரளம்,

     மணிபல செறிய, ...... வடமேருப்


பொரும் இருகலச முலையினை அரிவை,

     புனைஇடு பொதுவின் ...... மடமாதர்,


அழகிய குவளை விழியினும், அமுத

     மொழியினும், அவச, ...... அநுராக


அமளியின் மிசையில் அவர்வசம் உருகி,

     அழியும்நின் அடிமை ...... தனை ஆள்வாய்.


குழல் சை அதுகொடு அற வெருள் சுரபி

     குறுநிரை அருளி, ...... அலைமோதும்


குரைசெறி உததி, வரைதனில் விறுசு

     குமுகுமு குமுஎன, ...... உலகோடு


முழுமதி சுழல, வரைநெறு நெறுஎன

     முடுகிய முகிலின் ...... மருகோனே!


மொகுமொகு மொகு என ஞிமிறு இசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


பதவுரை

குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி --- மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்து, 

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்த திருமாலின் திருமருகரே!

மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய --- புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து,

வடமேருப் பொரும் இரு கலச முலையினை --- வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து உள்ள இரு குடம் போன்ற முலைகளை உடைய,

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின்,

அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் --- அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும்,

அவச அநுராக அமளியின் மிசையில் --- தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து,

அவர் வசம் உருகி அழியு(ம்) நின் அடிமை தனை ஆள்வாய் ---  விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்தவரும்,  அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து, வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து, இரு குடம் போன்ற முலைகளை உடைய, பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின், அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து, விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- 

விலைமகளிரின் வீட்டில் பெண்கள் பலரும் இருப்பார்கள் என்பது 

"வாரும் இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம்,

     மால் கடந்தே போம் ...... என்இயல் ஊடே,

வாடி பெண்காள், பாயை போடும் என்று ஆசார

     வாசகம் போல் கூறி, ...... அணை மீதே

சேரும் முன், காசு ஆடை வாவியும் போதாமை,

     தீமை கொண்டே போம் ...... என் அட மாதர்

சேர் இடம் போகாமல், ஆசுவந்து ஏறாமல்,

     சீதளம் பாதாரம் ...... அருள்வாயே."

என்னும் திருப்புகழ்ப் பாடலால் அறியப்படும்.


குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறுநிரை அருளி --- 

சுரபி - காமதேனு, வெள்ளைப்பசு.

குறு நிரை - சிறிய பசுக்கூட்டம்.

பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான். அவன் நல்ல மேய்ப்பன்.

கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால், இறைவனாகிய கண்ணனுக்கும், அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்து, அவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

எனவே, பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம், அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்து, பருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டி, தக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்து, அவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல், கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள், ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

"தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார். இந்த விசாரசருமர் தான், பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, சண்டீச நாயனார் ஆனார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்" என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான்.  விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

வேதம் ஓதுவதன் பலன், எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது. 

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- 

அமுதம் வேண்டிப் பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தர மலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்தார மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.


மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- 

ஞிமிறு - வண்டு, தேனீ.

முளரி - தாமரை. தாமரையைத் தனது ஆதனமாகக் கொண்டு உள்ளவர் பிரமதேவர்.

பிரமனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த முதல்வர் முருகப் பெருமான்.


கருத்துரை


முருகா! மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...