வாழும் நெறி

 

வாழும் நெறி

-----


"அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது;

மானிடர் ஆயினும், கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;

பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,

தானமும் தவமும் தான்செயல் அரிது;

தானமும் தவமும் தான்செய்வர் ஆயின்,

வானவர் நாடு வழிதிறந் திடுமே."

என்று ஔவைப் பிராட்டியார் அருளினார். உயர்ந்த மானிடப் பிறவியின் நோக்கம், ஞானமும் கல்வியும் நயத்தில் என்றும், தானமும் தவமும் புரிதல் என்றும் உணர்த்தி அருளினார். தானம் என்பது பிறருக்காகச் செய்வது. தவம் என்பது தனக்காகச் செய்வது. தானம் "எனது" என்னும் புறப்பற்று ஆகிய மமகாரத்தை அறுக்கும். தவம் என்பது "நான்" என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரத்தை அறுக்கும். அகப்பற்றும் புறப்பற்றும் அறுதலே மானிடப் பிறவியின் நோக்கம். மானிடப் பிறவியே பெறுதற்கு அரியது என்பதால், "பெறுதற்கு அரிய பிறவி" என்றார் திருமூல நாயனார். "பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்" என்பார் அருணகிரிநாதர்.

பெறுதற்கு அரியது மானிடப் பிறவியை எடுத்து வந்த மக்கள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, நல்ல கதியை அடைதல் வேண்டும். அதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். 'எப்படியாவது வாழலாம்'  என்பதை விடுத்து, 'இப்படித்தான் வாழ வேண்டும்'  என்று உள்ளத்தில் உறுதி பூண்டு, வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே மானிடத்தின் குறிக்கோள் ஆகும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கெட்டுப் போகும். "குறிக்கோள் இல்லாது கெட்டேன்"  என்பார் அப்பர் பெருமான். உயர்ந்த தொண்டு நெறியைத் தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அப்பர் பெருமானே இவ்வாறு சொல்லிக் கொள்வாரானால், நமது வாழ்க்கை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது சொல்லமாலே விளங்கும். 

நில்லாமை என்பதே நிலையாக இருக்கின்ற இந்த உலகில் நிலைபெற்று வாழவேண்டும் என்று எண்ணியவர்கள், தமது புகழ் நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்கிறது புறநானூறு. நிலையில்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்தத் தமது உயிரையும் விட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், "துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே" என்றும் கூறுகிறது புறநானூறு. நெருங்க முடியாத பெரும் செல்வச் சிறப்பை உடைய செல்வர்கள், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தமது பொருளைத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தமது உயிரையும் கொடுக்கும் பெருமை மிக்க சான்றோர் காட்டிய வழியில் செல்லத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள.

முதலாவதாக, நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது, அவ்வுயர்ந்த குறிக்கோள்களை அடைய முடியாமல் போனாலும் கவலையில்லை. முயல் வேட்டையாடி மனம் சோர்ந்து போவதைவிட, யானை வேட்டையாடித் தோற்றுப் போவது மேல் என்பார் திருவள்ளுவ நாயனார்.

"கான முயல் எய்த அம்பினில், யானை 

பிழைத்த வேல் ஏந்தல் இனிது" --- திருக்குறள்.

எனவே, உயர்ந்த குறிக்கோள்கள் நமது வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும். அப்பொழுதுதான் சில அரிய செயல்களை நமக்காகவும் சமுதாயத்திற்காகவும் ஆற்ற முடியும்.

"மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;

ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;

எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;

அவற்றுள்

இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று

துன்புறு நாளும் சிலவே, ஆதலால்

பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று

இடிகரை ஒத்தது இளமை,

இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்

ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்

நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்

இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்

நாளை நாளை என்பீர் ஆகில், நாளை

நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!".    --- கபிலர் அகவல்.

இதன் பொருள் ---

பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும். பொருந்தி வந்த குழந்தைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும். இளமைப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும். ஆக, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே, அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும், மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே. அதுவும் அல்லாமல், துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே. தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும். நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை, செல்வத்தோடு இருந்து வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும், ஆதலினாலே, நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலும் அறச் செயலாகவே செய்ய வேண்டும். அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும். அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும். அந்தப் பொழுதையும் விடுத்து, நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால், நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள்தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. நாளை என்கின்ற அந்த நாள், நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

வாழ்நாளைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். ‘புகழும் இன்பமும் அறமும் ஆகிய இம்மூன்றும் சோம்பல் உடையாரிடம் தவறிக்கூட உண்டாவதில்லை’ என்று  முன்னோர் கூறினர்.

"இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்" --- நற்றிணை.

"இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறத்தை ஆற்றுதலாகிய இன்ப வாழ்வும், மறுமைக்கு இன்பம் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதன ஆகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்து அடைவதில்லை”

எனவே, வாழ்வியல் நெறிகளைச் செம்மையாக வைத்துக் கொள்ள விரும்புவோர், சோம்பியிருத்தல் தகாது என்பது முதலாவதாக ஒருவர் கற்க வேண்டிய பாடமாகும். இந்த உலகில் ஒருவர் உயிர் வாழ உறுதுணையாய் அமைவது உணவு. எந்த ஒருவருடைய முயற்சியும் உணவைத் தேடுவதிலேயே அமைவதனைக் காணலாம். வறுமை காரணமாக உண்ண உணவின்றி வருவோர்க்கு ஒரு பிடி உணவாவது கொடுத்து உதவுதல் வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். பிறந்த நாள்முதல் தூராத குழியாகிய இந்த அவல வயிற்றை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் உணவு தேடி வாழுகின்றோம். வாழ வழியற்றவர்க்கு, நம்மிடத்து உள்ள உணவில் ஒரு பிடியையாவது கொடுத்து உண்ணுதல் வேண்டும். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு" என்றார் அருணகிரிநாதர்.

"பகுத்து உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்\

தொகுத்துவற்றுள் எல்லாம் தலை"              --- திருக்குறள். 

நம்மிடத்து உள்ளதைப் பகிர்ந்து கொடுத்து உண்டு பல உயிர்களையும் இறவாதபடி காத்தல் என்பது, அறநூலோர் தொகுத்துக் கூறிய நற்செயல்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

எனவே, கிடைத்ததைப் பலருக்கும் பகிர்ந்து உண்னக் கொடுத்து வாழ வேண்டும். சோம்பல் கூடாது.  எவரையும் வெறுக்கக்கூடாது; சான்றோர் அஞ்சும் அறம் சாராத செயல்களைச் செய்யக் கூடாது. நாளும் தல்ல செயல்களையே நாடிச் செய்ய வேண்டும். எவ்வளவுதான் இலாபம் கிடைப்பதாயினும் பழிச் செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய மனவுறுதி அமைதல் வேண்டும். தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணும் பெற்றியராகத் துலங்க வேண்டும்’ என்பது புறநானூறு காட்டும் வாழ்வியல் நெறி ஆகும். இந்த வாழ்வியல் நெறியை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகம் இன்னமும் ஆழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

"உண்டால் அம்ம! இவ்வுலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகு உடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.". --- புறநானூறு.

இதன் பொருள் ---

இந்த உலகம் எவ்வளவோ காலமாக அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறதே! இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்றால், தேவர்களுக்கும், தேவர்கள் தலைவன் ஆகிய இந்திரனுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு பயன் அடைந்துகொள்ளலாம் என்று எண்ணும் மனம் இல்லாதவர்கள்; பிறரிடம் சினம் கொள்ளாதவர்கள்; சோம்பல் இல்லாதவர்கள்; பிறர் கண்டு அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாழ்பவர்கள்; புகழுக்கு உரிய செயல் என்றால், அதற்காகத் தமது உயிரையும் கொடுப்பவர்கள்; அதேசமயம் பழிக்கு இடமாகிய செயல் என்றால், அதற்குப் பரிசாக இந்த உலகமே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்; எந்நேரமும் மனத் தளர்வு இல்லாதவர்கள். இத்தகைய குணநலன்கள் எல்லாம் நிரம்பப் பெற்று, தனக்கு என வாழும் தன்னலம் இல்லாத, பிறர் வாழ்வதற்காகத் தான் வாழும் பொதுநலம் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதைத்தான், "புண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம், அது இன்றேல் மண் புக்கு மாய்வதுமன்" என்றார் திருவள்ளுவ நாயனார். பண்பு உடையவர்கள் இருப்பதால் இந்த உலக இயக்கம் இருந்துகொண்டு இருக்கிறது. இல்லையானால், மண்குழியில் அமிழ்ந்து முற்றும் அழிந்துபோகும்.

சாதி, சமயம் ஆகிய வேறுபாட்டு உணர்வுகளால் மனித இனத்தை வேறுபடுத்திப் பார்க்காமல், மனிதகுலம் ஒன்றேதான் குலம், மனிதகுலம் முழுமைக்கும் ஒன்றேதான் கடவுள் என்னும் பொதுமைப் பண்பு உருவாக வேண்டும். அப்போது, அன்பு என்ற ஒப்பு உயர்வற்ற பண்பே மனிதகுலத்தை ஆட்கொள்ளும். எனவேதான்,  "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று முழங்கினார் திருமூல நாயனார்.

"அல்லா என்பார் சிலபேர்கள்;

அரன் அரி என்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை என்பார்கள்;

சொல்லால் விளங்கா  நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

"எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்,

நினைவிலும் கெடுதல் செய்யாமல்,

வந்திப்போம்; அதனை வணங்கிடுவோம்;

வாழ்வோம்; சுகமாய் வாழ்ந்திடுவோம்;"

என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.

இவ்வாறு இறை நம்பிக்கையுடன் வாழத் தலைப்படும் நேரத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் கெறி எதுவெனச் சிக்திக்கும் பொழுது ஈட்டும் செல்வத்தினைப் பிறர்க்குப் பகிர்ந்து வாழும் தன்மையை மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஏனெனில், கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு வெண்கொற்றக் குடையின்கீழ் ஆளும் பேரரசனாயினும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும், இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான். உடுப்பவை இடுப்பில் ஒன்று, தோளில் ஒன்று ஆக இரண்டேதான். மற்ற பிற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் இவ்வாறேதான். எனவே செல்வத்தை ஈட்டுவதன் பயன், இல்லாதவர்க்கு ஈந்து உதவுவதே ஆகும். அப்படி இல்லாமல் நாம் மட்டும் அனுபவித்து வாழ்வோம் என்று இருந்தால் அதனால் வரும் கேடுகள் பல உண்டு என்றும் நவில்கிறது புறநானூறு.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே."  --- புறநானூறு.

நம் வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவதாகவே அமைய வேண்டும். பொருளால்தான் உதவவேண்டும் என்பது இல்லை. மனம், மொழி, மெய் என்னும் முக்கரணத்தாலும் நலத்தை நினைக்கலாம், நல்லதைப் பேசலாம். நல்லதைச் செய்யலாம். இந்த எண்ணம் உண்டாகிவிட்டால், பிறருக்கு எவ்வுகையாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னாலேயே வந்துவிடும். அதுதான் சான்றோர் கண்ட வாழ்வியல் நெறி.  அவ்வாறு ஒருவேளை உதவ முடியாமல் போனாலும், பிறருக்குத் தீங்காவது செய்யாமல் இருத்தலே சிறப்பாகும். அதுவே எல்லோராலும் விரும்பப்படுவது ஆகும். அதுவே நல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் பாங்கு உடையதாகும். 

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் 

அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் 

எல்லோரும் உவப்பது அன்றியும் 

நல்லாற்றுப் படுஉம் நெறியும் ஆர் அதுவே."   --- புறநானூறு.

இத்தகைய மனத் தெளிவைப் பெற்றவுடன் மனிதன் விரைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பலவாகும். உலகியல் உரிமையை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவது அவற்றுள் ஒன்றாகும்.

சேற்றிலே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் தாமரை மலரில், ஒளி பொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும். அதுபோல ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிலே பிறரால் புகழப் பெற்றவர்கள் ஒரு சிலராகத்தான் அமைவார்கள். தாமரையிலை போலப் புகழ் இன்றி மாண்டவர்களே பலராக இருப்பர். புலவர்களின் பாடல்களைப் பெற்ற புகழுடையவர்கள் தாம் ஆற்றும் கடமைளைச் குறைவறச் செய்து முடிப்பர். அதன் பயனாக வானத்திலே ஒட்டுவான் இல்லாத வானவூர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும் பொருளைப் பெற்று இன்புறுவர்.

இவ்வுலகிலே சந்திரன் ஒர் உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. ஒருவனுக்குச் செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவதும் உண்டு; அடியோடு அழிந்து போவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு என்ற உண்மையைச் சந்திரன், கல்வி அறிவு இல்லாதோரையும் உணர்த்மு கொள்ளுமாறு தன் செய்கையால் வெளிப்படுத்துகின்றது. 

ஆதலால், இந்த உலகிலே ஒன்றைச் செய்ய வல்லவராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வாடி வருந்தி வந்தோர் யாராயினும், அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்க வேண்டும்; அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்த்து. அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக வேண்டும். இதுதான் வாழ்வியல் நெறி என்கிறது புறநானூறு.

"சேற்றுவளர் தாமரைப் பயந்த ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நிரைகண்டு அன்ன

வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே,

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே,

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்ப தம்செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,

வல்லார் ஆயினும் வல்லுநரு ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி, அருளுஇலர்

கொடாமை வல்லர் ஆகுக,

கெடாத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே."   --- புறநானூறு.

மேலும், வாழ்வியல் நெறியாகப் பின்வரும் நற்பண்பு ஒன்றும் முன்நாளில் பாராட்டப் பெற்றது. “தம்மால் கொடுக்க முடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பதும், தம்மால் கொடுக்க முடியாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவதும் ஆகிய இரண்டு பண்புகளும் நற்பண்புகள்தாம். உதவி செய்யும் தன்மையோடு கூடிய நட்பின் தன்மைதான். இதுபோன்றே தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லுதலும், தன்னால் செய்யக் கூடியதை முடியாது என்று மறுத்தலும் ஆகிய இந்த இரண்டு பண்புகளும் தீயபண்புகள் தாம். இந்தத் தீயபண்பு, தன்னிடம் உதவி நாடி விரைந்து வந்த இரவலர்களைத் துன்புறுத்துவதாகும். அது மட்டுமல்லாமல் ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியும் ஆகும்" என்றும் வாழ்வியல் நெறியினை வற்புறுத்துகிறது புறநானூறு.

"ஒல்லுவது ஒல்லும் என்றாலும், யாவர்க்கும் 

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும் 

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; 

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறை படுஉம் வாயில்." --- புறநானூறு

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பார்த்தால், வாழ்வியல் நெறிகள் என்று சிலவற்றை நமது முன்னோர் நமக்கு வகுத்து வைத்துச் சென்றிருக்கின்றனர் என்பது புலப்படும். அவற்றைக் கடைப்பிடித்து, வாழ்வாங்கு வாழ்ந்து ஈடேறுவதும், நமது சந்ததியினருக்கும் வாழும் வழியைக் காட்டி அவர்களையும் ஈடேற வைப்பதும் நமது கடமை ஆகும்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...