திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி
-----
உலகில் நாள்தோறும் எண்ணற்ற உயிரினங்கள் பிறக்கின்றன; இறக்கின்றன. உலகின் நியதி பிறப்பும் இறப்புமாய் அமைந்துள்ளது. பிறக்கும் உயிர்கள் அனைத்தும் உண்டு வாழ்ந்து இறுதியில் முடிகின்றன. பிறப்பதும் இறப்பதுமேதான் வாழ்க்கையா? இதில் என்ன பெருமை உள்ளது? என்ற ஐயம் எழுதல் இயல்பு. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். வான வீதியில் வலம் வரும் சந்திரனும் இதனை மக்களுக்கு உணர்த்தி வருகிறான். மாதத்தில் பதினான்கு நாட்கள் வளர்வதும் பின் பதினான்கு நாட்கள் தேய்வதும் சந்திரனின் நியதியாக அமைகிறது என்பதனை, "தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்" என்கிறது புறநானூறு. இதுதான் நிலையாமை ஆகும். இந்த நிலையாமையை வற்புறுத்தும் நாலடியார் பாடல் ஒன்று "இன் இனியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்" என்று கூறும். அருணகிரிநாதப் பெருமான், "பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால், ப்ரியம் கூர வந்து கரு ஊறி, பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்" என்றி நிலையாமையை அறிவுறுத்துகின்றார்.
திருவள்ளுவ நாயனாரும், நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்பதே இவ்வுலகிற்குப் பெருமையாக அமைகிறது என்ற கருத்தில், "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்று அருளினார். "இன்று உளார் நாளை இல்லை என்னும் பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்" என்கிறார் அப்பர் பெருமான். "நேற்று உள்ளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும் போற்றிலேன் நின்னை, அந்தோ! போக்கினேன் வீணே காலம்" என்று புலம்புகின்றார் தாயுமான அடிகளார்.
இந்த நிலையாமையினை உணர்ந்து கொள்கிற பொழுதுதான், இவ்வுலகில் நம்மால் நிலைத்த சில செயல்களைச் செய்ய முடியும். நிலையில்லாத இந்த உலகத்தில் தமது பருவுடல் அழிந்த பின்னும் புகழுடல் நிலைத்து இருக்குமாறு வாழ்ந்து பிற்காலச் சந்ததியினருக்கு வழி காட்டிச் சென்றவர்கள் நமது முன்னோர் என்பதை "மன்னா உலகில் மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம்.
நிலையாமை என்னும் நிலைத்த உண்மையை மக்கள் மனதில் நன்கு பதியும் வண்ணம் உணர்த்தியவர் நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் ஆவார். அன்றாட வாழ்க்கையில் நிகழும் எளியதொரு நிகழ்ச்சியைக் கொண்டே உலகில் பிறந்த எவரும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையாமைக் கோட்பாட்டினை உணர்த்தி உள்ளார். மனிதர் ஓயாமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பது வயிற்றுப் பாட்டுக்கே என்பது எளிதில் புலப்படும்.
"உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம்,
எண்பது கோடிநினைந்து எண்ணுவன,-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்."
என்கிறார் ஔவைப் பிராட்டியார்.
இதன் பொருள் ---
உண்பது ஒரு நாழி அரிசி அன்னமே ஆகும். உடுப்பது நான்கு முழ உடையே ஆகும். இப்படியாகவும், நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன. எனவே, அகக்கண் குருடாய் இருக்கிற மக்களின் குடிவாழ்க்கையானது மட்கலம்போல இறக்கும் அளவும். அவர்க்குத் துன்பமாகவே இருக்கிறது.
தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. சாப்பிட்டுத்தான் பழக்கம். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் (தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள். அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும், ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது” என்று சொல்லி, மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய், அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் வந்து கூறுகிறாள் என்று "குறுந்தொகை" என்னும் நூல் கூறுகிறது.
"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."
கோசலை நாடு உடைய வள்ளல் இராமபிரானைப் பிரிந்து, அசோகவனத்தில் இருக்கும் சீதையும் தன் வருத்தத்தினை அனுமனுக்குப் புலப்படுத்தும் நிலையினைக் கம்பநாட்டாழ்வார் பின் வருமாறு காட்டுவார்.
"அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? என்று அழுங்கும்;
விருந்து கண்டபோது என் உறுமோ? என்று விம்மும்;
மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? என்று மயங்கும்;
இருந்த மாநிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்." --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
தான் அமர்ந்துள்ள இடப் பரப்பானது கரையானால் அரிக்கப் பெற்றுப் புற்று தோன்றினும், அவ்விடத்திருந்து பெயர்ந்து போகாத பிராட்டி, உண்ணும் மெல்லிய இலைக்கறி உணவை இராமபிரான் எவர் பரிமாற உண்பார் என்று கூறி இரங்கித் துன்புறுவாள். பரிமாறும் நான் பக்கத்தில் இல்லாமையால். விருந்தினரைப் பார்க்கும் சமயத்தில் என்ன துன்பம் அடைவாரோ என்று நினைந்து ஏக்கம் உறுவாள். இப்படி நானே வரவழைத்துக் கொண்ட பிணிக்கு மருந்தும் உள்ளதோ என்று கூறி சோர்வு அடைவாள்.
திருமூல நாயனார் நிலையாமையினை உணர்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த காட்சியும் இந்த இல்லறக் காட்சியே ஆகும். பொருள் ஈட்டி வந்த கணவன் மனைவியிடம் அவற்றைத் தந்து சிறந்த முறையில் அன்று உணவு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டான். அவளும் தன் கைத்திறன் எல்லாம் காட்டி அருமையான, அறுசுவை மிக்க உணவைச் சமைத்திருந்தாள். கணவனும் மிக விரும்பி உண்டான். உண்டவுடன் கணவனும் மனைவியும் மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்துச் சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வாறான நிலை சற்று நேரமே நீடித்தது. திடீரென்று கணவன் தன் இடப்பக்க மார்பு சிறிது வலிக்கிறது என்றான். கீழே சாய்ந்து படுத்தான். அவ்வளவில் அவன் உயிர் உடற்கூட்டை விட்டுப் பறந்து சென்றது.
"அடப் பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்,
இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,
கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே." --- திருமந்திரம்.
இத்தோடு விட்டாரா என்றால், அதுதான் இல்லை. இறந்தவனைச் சுற்றி உற்றாரும் உறவினரும் ஊராரும் போரொலி எழுப்பி அழுகின்றனர். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்று, பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்து விடுகின்றது. அதுமட்டுமா! சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் தீக்கு இரையாக்குகிறார்கள். அவ்வாறு தீ மூட்டிய பின், உறவினரும் மற்றோரும் தீட்டுப் போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள் என்கிறார் திருமூலர்.
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,
பேரினை நீக்கி, பிணம்என்று பேரிட்டு,
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே." --- திருமந்திரம்.
பாவும் உண்டையுமாக மாறி மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பப் படுத்தி, விலை வரம்பு செய்யப்பட்ட பட்டாடை என்றும் அவ்வாறே இருப்பது இல்லை. நாளடைவில் நைந்து கிழிந்து போவதைப் பார்த்திருக்கிறோம். பட்டு ஆடையை உடுத்தி மகிழாமல், மடித்து வைத்துப் பாதுகாப்பது இயல்பு ஆகும். அதுபோலவே, இந்த உடம்பை அறச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் பாதுகாத்து, வாழ்நாளைக் கழித்து வீணாக்குகின்றோம். அது மட்டும் அல்லாமல், பிறந்த நாள் என்று குறித்துக் கொண்டாடப்படுகின்ற ஒரு நாளானது ஓர் ஆண்டின் முடிவாகவும், அடுத்த நாளானது அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கழிகின்ற போதே, கறுத்த தலைமுடியானது நரைத்து வெளுத்துப் போகும் என்பதை அறிவிப்பதாக உள்ளதைக் காண்கிறோம். இருந்தும் மக்கள் எல்லோரும் தமது அறிவும் ஆற்றலும் இன்று உள்ளது போலவே என்றும் இருக்கும் என்று மகிழ்ந்து இருப்பது அறியாமை ஆகும் என்கிறார் திருமூல நாயனார்.
"மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும், அதனைப் பெரிது உணர்ந்தார் இ(ல்)லை;
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எ(ன்)னும் நீரே." --- திருமந்திரம்.
எனவே, நிலையாமையே நிலைபெற்றிருக்கின்ற இவ்வுலகத்தில் மக்கள் செய்ய வேண்டிய செயல்களைப் புலப்படுத்தி, அவர்கள் வாழ வேண்டிய நெறியினை வகையுற எடுத்துக் காட்டுகின்றார் திருமூல நாயனார். உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி, இறைவனை வணங்குவதும், இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்னாது தம்மிடத்தில் உள்ளதைக் கொடுத்து உதவுவதும், யாவரிடத்தும் அன்போடு உசாவுவதும் வாழ்வியில் நெறி என்பதனை அறிவுறுத்துகின்றார்.
"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே." --- திருமந்திரம்.
படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.
"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே." --- திருமந்திரம்.
இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். பசுவுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பதில்லை. பூசை செய்வோர்க்குப் பசுவைத் தானமாக வழங்கவேண்டும் என்பதில்லை. பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்து இருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். புகழ்ந்துரை செய்து யாருடைய முதுகையும் சொறிய வேண்டும் என்பதில்லை. யாவரிடத்தும் அன்போடு சொல்லாடினாலே போதும்.
எனவேதான், மேலோர் வகுத்துச் சென்ற அறங்களில் எல்லாம் மேலானது, தமக்குக் கிடைத்த உணவினைப் பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்பதே என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
"பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."
தமக்குக் கிடைத்த உணவின் ஒரு பகுதியைப் பிறர்க்கென வழங்கும் நல்ல மனம் வேண்டும்; அது எல்லோராலும் இயல்வது என்பதால், "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒருகைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.
இனிய சொற்கள் இருக்க, கடும் சொற்களைப் பேசுவது, உண்ணுவதற்கு இனிய கனி இருப்ப, காயினை விரும்பி உண்ணுவதனை ஒக்கும் என்பாராய், "இனிய உள ஆக, இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்த அற்று" என்றார் திருவள்ளுவ நாயனார். பிறர் மனம் வருந்தப் பேசாமல், அவர் மனம் உவக்கப் பேசும் திறத்தில் வல்லவராகத் திகழ வேண்டும், இதுவும் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியதுதான் எனக் காட்ட "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்றார் திருமூல நாயனார்.
எனவே, உடம்பின் நிலையாமையை உணர்ந்து, அதனால் பெறவேண்டிய பயனை, அது உள்ளபோதே பெற்றுக் கொள்ளுதல் அறிவுடைமை ஆகும். மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மண வாத்தியமே சாவுக்கு அடிக்கின்ற பறையாகவும், அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகை ஒலியாகவும் மாறி முடிய, கணப்பொழுதில் தோன்றி மறையும் இவ்வுடலினால் ஆன பயனை அறிவுடையார் பெறுவர். அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயன் எய்துதல் சிறிதும் இல்லை என்று கூறுகிறது திருவிளையாடல் புராணம்.
"மணமகனே பிணமகனாய்,
மணப்பறையே பிணப்பறையாய்,
அணியிழையார் வாழ்த்தொலி போய்,
அழுகை ஒலியாய்க் கழியக்
கணம் அதனிற் பிறந்து இறும் இக்
காயத்தின் வரும்பயனை
உணர்வு உடையார் பெறுவர், உணர்வு
ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை."
உடம்பின் நிலையாமை குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க...
"மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும்
மண்மேல் இருந்து வாழ்ந்து
மடியாது இருந்தபேர் இல்லை; அவர் தேடியதை
வாரி வைத்தவரும் இல்லை;
பனி அதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப்போம் என்று
பல்கோடி நினைவை எண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்,
அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள்;
ஆசை வலையில் சுழலுவார்;
வனிதையர்கள் காம விகாரமே பகையாகும்,
மற்றும்ஒரு பகையும்உண்டோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயல்மீது இவர்ந்து அருட்திருவிளையாடல் புரியும் குகப் பெருமானே! திருப்புல்வழல் என்னும் திருத்தலத்தில் மலை மீது கோயில் கொண்டு அருளிய குமாரக் கடவுளே! மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும், மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; சிறிது சிறிதாக சேர்த்த பொருளைத் தம்முடன் எடுத்துச் செல்ல அள்ளி வைத்தவர்களும் இல்லை; பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மைபோல, அழியும் உடலை நிலையானது என்று நம்பிக்கை கொண்டு, உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, வீடுபேற்றை அடையவேண்டும் என நினையார்கள்; ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்; அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; வேறொரு பகை இல்லை.
நிலையாமைக்கு இடமான உடம்பைக் கொண்டு, பெறவேண்டிய நிலையான பயன் குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் வாழ்வியல் வழிபாட்டு நூல் கூறுவது காணலாம்.
"காயம்ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்
காட்டில் ஆற்றின் பெருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனை மனைவி இவை எலாம்
கானல் காட்டும் ப்ரவாகம்!
மேயபுய பலவலிமை இளமைஅழகு இவை எலாம்
வெயில்மஞ்சள்! உயிர் தானுமே,
வெட்டவெளி தனில்வைத்த தீபம் எனவே கருதி,
வீண்பொழுது போக்காமலே.
நேயம் உடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்
நினைவு வைத்து, இருபோதினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க
நிமலனே! அருள்புரி குவாய்
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
தூயவனே! ஆராய்ந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே! அறிவு வடிவானவனே! தலைவனே! எமது அரிய மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும். அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம். பொருந்திய தோள் வலிமை, இளமை, அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும் மஞ்சள் நிறமுள்ள இளவெயில். இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு என்றே நினைத்து, வாழ்நாளை வீணே கழிக்காமல், அறிவுத் தெளிவை அடைந்து, உன் திருவடிகளில் அன்பு பூண்டு, காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.
நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும், எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம்.
இவ்வாறாகத் திருமூல நாயனார் இவ்வுலக வாழ்வின் நிலையாமையினை மனத்தில் பதியும் வண்ணம் தெள்ளத் தெளிய உணர்த்திப் பின் வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியினை வகையுற அறிவுறுத்துகின்றார். இதுவே திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி ஆகும்.
No comments:
Post a Comment