பொது --- 1081. இசைந்த ஏறும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இசைந்த ஏறும் (பொது)


முருகா! 

அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.


தனந்த தானந் தனதன தானன ...... தனதான


இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்

இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்

அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.


                                 பதம் பிரித்தல்


இசைந்த ஏறும், கரி உரி போர்வையும், ...... எழில்நீறும்,

இலங்கு நூலும், புலிஅதள் ஆடையும்,...... மழுமானும்,

அசைந்த தோடும், சிரம் அணி மாலையும், ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா!

உசந்த சூரன் கிளையுடன் வேர்அற ...... முனிவோனே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் ...... நலியாதே,

அசந்த போது என் துயர் கெட மாமயில் ...... வரவேணும்,

அமைந்த வேலும் புயம் மிசை மேவிய ...... பெருமாளே.


பதவுரை


இசைந்த ஏறும் --- விருப்பமுடன் ஏறுகின்ற காளை வாகனமும், 

கரி உரி போர்வையும் --- யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், 

எழில் நீறும் --- அழகிய திருநீறும், 

இலங்கு நூலும் --- விளங்குகின்ற பூணூலும், 

புலி அதள் ஆடையும் --- புலித்தோல் ஆடையும், 

மழு மானும் --- மழுவாயுதமும், மானும், 

அசைந்த தோடும் --- திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும், 

சிரமணி மாலையும் --- தலைமாலையையும்,

முடிமீதே அணிந்த ஈசன் --- திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான்

பரிவுடன் மேவிய குருநாதா --- அன்போடு விரும்பிய குருநாதரே! 

உசந்த சூரன் கிளையுடன் வேர் அற முனிவோனே --- ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே --- அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் நலியாதே --- விருப்போடு பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, 

அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை

விரும்பி ஏறுகின்ற காளை வாகனமும்,  யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும்,  திருமேனியில் விளங்கும் அழகிய திருநீறும்,  விளங்குகின்ற பூணூலும்,  புலித்தோல் ஆடையும்,  திருக்கையில் தரித்துள்ள மழுவாயுதமும், மானும்,  திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும் ஆகிய இவைகளோடு, தலைமாலையையும் திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான் அன்போடு விரும்பிய குருநாதரே! 

ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

விருப்போடு கையில் பிடித்துள்ள பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

விரிவுரை


இசைந்த ஏறும் --- 

இசைந்த, இசைவு - விருப்பம்.

"அயிராவணம் ஏறாதே, ஆனை ஏறு ஏறி" வென்று அப்பர் பெருமானு பாடி இருப்பது காண்க.

ஏறு என்னும் சொல், ஆண் விலங்கினைக் குறிக்கும். இங்கே காளையாகிய எருதினைக் குறிக்கும். 

"இடபம் உகந்து ஏறியவாறு" என்று மணிவாசகப் பெருமானும், "விடை உகந்து ஏறுதிர்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும் பாடி அருளினமை காண்க. 


கரி உரி போர்வையும் --- 

கரி - யானை. உரி - தோல். யானையில் தோலை உரித்துப் போர்த்தியவர் சிவபெருமான். 

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் பெற்றவன். அவன் மேருமலையில் நான்முகனை நினைத்துக் கடும்தவம் மேற்கொண்டான். நான்முகன் தோன்றினான். கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான நிபந்தனையும் கிடைத்தது. அவன் தனது வேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான்.

இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான அயிராவதத்தின் வாலைப் பிடித்வத்து இழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான். பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். 

வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன், "இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் பெற் கயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான். அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும்" என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதவர் சிவபரம்பொருள் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடூரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார்.

அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீயின் சுவாலைகள் தெரித்தது. கயாசுரனைத் தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச் சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்தம் அடைந்தார். 


"புரத்தையும் எரித்து, அம் கயத்தையும்உரித்து, ஒண்

     பொடிப்பணி என் அப்பன் ...... குருநாதா."      ---  திருத்தணிகைத் திருப்புகழ்.


"தலத் தனுவைக் குனித்து, ஒரு முப்-

     புரத்தை விழக் கொளுத்தி, மழுத்

     தரித்து, புலி, கரி, துகிலைப் ...... பரமாகத் 

தரித்து, தவச் சுரர்க்கள் முதல்

     பிழைக்க, மிடற்று அடக்கு விடச்

     சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே!" ---  திருத்தணிகைத் திருப்புகழ்.

                                                               

எழில் நீறும் --- 

அணிபவருக்கு அழகினைத் தருவது என்பதால் எழில் நீறு என்றார் அடிகளார். "கவினைத் தருவது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். 


இலங்கு நூலும் --- 

சிவபரம்பொருள் திருமார்பில் பூணூலைத் தரித்தவர்.  "வேதம் ஓதி, வெண்ணூல் பூண்டு" என்று திருஞானசம்பந்த்ப் பெருமான் அருளியது அறிக.


புலி அதள் ஆடையுமெ மழு மானும் --- 

அதள் - தோல்.

தாருகவனத்து முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள். கர்மாவே பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை என்று கூறும் கொள்கையர்.

“விரதமே பரம் ஆக வேதியரும்

   சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்” --- திருவாசகம்.

தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்களென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.

முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே, அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு முனிபத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். 

சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள். புலியை உரித்து அதன் தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் திருக்கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார்.


அசைந்த தோடும் --- 

உமையம்மையத் தனது திருமேனியின் இடப்பபாகத்தில் கொண்டு இருப்பதால், சிவபரம்பொருளின் இடது திருச்செவியில் தோடு அசைந்தாடுகின்றது. "தோடு உடைய செவியன்" ஆனார். 


சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் --- 

தலையில் அணிந்த மாலை, நூறுகோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணல் எண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. "தலைக்குத் தலைமாலை அணிந்த்து என்னே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "வெண்தலைமாலை விரவிப் பூண்ட மெய் உடையார்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும், "தலைமாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவன்" என்று அப்பர் பெருமானும் பாடியருளியது காண்க.


ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா --- 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணிவிளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

கேட்டு "செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்" என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

"எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்."     --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”.  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே"  --- (கொடியனைய) திருப்புகழ்.


"மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா...." --- (விறல்மாரன்) திருப்புகழ்.


"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா..." --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

"அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே."  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்." ---  தணிகைப் புராணம்.


"மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

"தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே."

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

"வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. " --- திருமந்திரம்.


"கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்...." --- குமரகுருபரர்.


"பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே." --- அபிராமி அந்தாதி.


"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே." --- அபிராமி அந்தாதி.


"சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே."    --- சிவஞான சித்தியார்.


அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- 

அயர்ந்த என்னும் சொல் அசந்த என்று வந்தது. 

அயர்தல் - மறத்தல். அசதியில் மறதி உண்டாவது இயல்பு.

"அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே" என அப்பர் பெருமானும், "நம்பர் திருவுள்ளம் அறியாதே அயர்த்தேன்" என தெய்வச் சேக்கிழார் பெருமானும் கூறி அருளியது காண்க.

"மயில் வரவேனும்" என்றது, மயிலின் மீது முருகப் பெருமான் வந்து அருள வேண்டும் என்றதை உணர்த்தியது.

கருத்துரை

முருகா! அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.











No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...