மனமே! இப்படி இருந்தால் எப்படி?

 


மனமே! இப்படி இருந்தால் எப்படி?

-----

பல படிகளில் ஏறிய பிறகே  உயர்ந்த மாடியை அடைய முடியும். முயற்சி மெல்ல மெல்ல அதிகமாக ஆக, அதனால் ஏற்படும் பலனும் மெல்ல மெல்ல வளர்ந்து வரும். திடீரென்று ஒருவருக்கு உயர்ந்த நிலை வந்ததானால், அது இந்தப் பிறவியின் முயற்சியினால் வந்த பயன் என்று சொல்ல முடியாது. முற்பிறவிகளில் செய்த முயற்சிகளின் பயன் அது. முயற்சியின் அளவுக்கு ஏற்றபடி அனுபவங்களும் உண்டாகும். 

பசியின் காரணமாக, உணவு கொள்ளத் தலைப்பட்ட ஒருவனுடைய பசியானது, பாயசத்திலிருந்து தயிர்ச் சோறு வரையில் முழுமையாக உண்ட  பிறகுதான் அடங்கும் என்று சொல்ல முடியாது.  ஒவ்வொன்றாகச் சாப்பிடச் சாப்பிட அவனுக்கு உண்டாகி இருந்த  பசி மெல்ல மெல்லக் குறைந்து வரும். 

சாதகம் செய்யும்போது எந்த எந்தப் பக்குவத்தில் இருக்கிறோமோ அந்த அந்தப் பக்குவத்திற்கு ஏற்ப அனுபவம் ஏற்படும். அதனால்தான் குருநாதரைச் சரண் அடைந்து, அவர் சொன்ன வழிப்படி மெல்ல மெல்லப் பயின்று வரவேண்டும் என்கிறார்கள். குருவின் உபதேசம் பெற்றவுடனே முடிந்த முடிவாகிய பயன் கிடைத்து விடாது.  உழைப்பு இல்லாமல் ஊதியம் இல்லை. 'பல நூல்களைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.  விரிவான விளக்கமும் தந்து இருக்கின்றார்கள். அவற்றையே நாம் குரு உபதேசமாகக் கொள்ளக் கூடாதா, குருவை நேரிலே அடைந்து உபதேசம் பெற வேண்டும் என்பது அவசியமா? என்று ஐயம் தோன்றலாம்.  ஒருவர் மண்டிக் கடை வைத்திருக்கிறார். அவர் உயர்ந்த சீரகசம்பா அரிசி வியாபாரம் பண்ணுகிறார். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அந்தக் கடையில்தான்  அரிசி வாங்குகிறார்கள். விலை உயர்ந்த அரிசி என்பதற்காக, அதை அப்படியே சாப்பிட முடியாது.  வீட்டிற்கு எடுத்துச் சென்று,  தங்கள் தேவைக்கு ஏற்ப அரிசியைக் கொஞ்சம் எடுத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஒருவர்  கடைக்காரர் வீட்டுக்கு விருந்தினராகப் போகிறார். கடைக்காரர் தமது கடையில் இருக்கும் அரிசியை எடுத்தும் தமது வீட்டிலேயே சமைத்து, விருந்தினருக்கு வேண்டிய அமுது படைக்கிறார்.  ஊருக்கு எல்லாம் அரிசி வியாபாரம் செய்யும் ஒருவர் தம் வீட்டிற்கு வரும்  விருந்தாளிக்கும் அதே அரிசியைக் கொண்டுதான் அன்னம் படைக்கிறார். 

எல்லோருக்கும் அரிசி தருவது பொதுவான வேலை.  தம் வீட்டிற்கு வருபவருக்கு அமுது படைப்பது சிறப்பான செயல். பொதுவான அனுபவத்தையும், சிறப்பான அனுபவத்தையும் தருபவர் ஒருவர்தான். அதுபோலத்தான், பெரியவர்கள் எழுதி வைத்திருக்கும் நூல்களில் உள்ளவை பொதுவான உபதேசம். ஆனால், அவற்றை விளக்குகின்றவர்களிடமே நேரில் சென்றால் அவர்கள் செய்வது சிறப்பான உபதேசம். வந்திருப்பவர் இன்ன பக்குவம் உடையவர் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி செய்யும் உபதேசம் சிறப்பான உபதேசம். அந்த  உபதேசத்தின்படி நடப்பவர்களுக்கு வெவ்வேறு அனுபவம் விளையும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் அவனுடைய நிலைக்கு ஏற்றபடி அனுபவம் உண்டாகும். 

மாம்பழத்தை ஒருவன் நறுக்கிச் சாப்பிடுகிறான். மற்றொருவன். அப்படியே கடித்துச் சாப்பிடுகிறான். இன்னொருவன் சாற்றைப்  பிழித்து சாப்பிடுகிறான். இப்படிச் சுவைக்கும் முறை வேறுபட்டாலும் சுவைத்த பின் கிடைக்கின்ற இனிப்பாகிய அனுபவம் ஒன்றாகவே இருக்கும். உலகியல் சம்பந்தமான இந்திரியங்களின் அனுபவத்திலேயே இத்தகைய வேறுபாடுகள்  இருக்கின்றன. அறதுபோலத்தான் இறைவன் அருள்நெறியில் செல்கின்றபோது வேறுபட்ட பல அனுபவங்கள் உண்டு. ஒவ்வொருவரும் பின்பற்றும் சாதனம் வேறு வேறாக இருக்கும்.  ஒருவர் இறைவன் திருவுருவத்தை உள்ளத்திலே பதித்துக் கொண்டு எப்போதும் தியானத்தில் மூழ்கி இருப்பார். மற்றொருவரோ  இறைவன் பொருள்சேர் புகழைக் கூறும் அருட்பாடல்களைப் பாடிப் பரவசமாய் இருப்பார். வேறு ஒருவர் இறைவன் திருவுருவத்திற்கு வண்ண வண்ண மலர்களால் அருச்சனை செய்து கொண்டே இருப்பார்.  இவ்வாறு பலபடியாக இறைவனை நினைந்து, வாழ்த்தி, வணங்கி அவன் திருவருளைப்  பெற்றவர்கள் எத்தனையோ பேர். அகண்டமான இறைவனைக் கண்டமான உருவத்தில்  வழிபடுகிறோம். அந்த உருவங்கள் பலவாக இருக்கின்றன. அதைப் போலவே அவனை அடைவதற்குரிய வழிகளும் பலவாகவே உள்ளன. இது ஒன்றுதான் வழி என அறுதியிட்டுக் கூற முடியாது. அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்ப வழிகள் மாறுபடும். 

பலர் ஒரே குருநாதரிடம் சென்றாலும், அவர் அத்தனை மாணவர்களுக்கும்  ஒரே மாதிரியாக உபதேசம் செய்வது இல்லை. ஏனென்றால், அவர்கள் எல்லோருடைய  மனமும் ஒரே விதமான பக்குவத்தில் இருக்காது. அவரவர்களுடைய பக்குவத்தை உணர்ந்து, மனத்தின் திண்மையை உணர்ந்து, அவர்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற கருணையினால் அவரவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் செய்வார் குருநாதர். தம்மை வந்து அடைகின்ற மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து,  அவர்கள் மேலே ஏறும் அடுத்த நிலை இன்னது என்பதைக் கண்டு, அதற்கு  ஏற்ப உபதேசம் செய்வார். இறைவன் திருவருளைப் பெறுகிற முயற்சி உடையவர்களுக்குக் குருநாதரின் அருள் இருந்தால் அனுபவம் வரவர, உயர்ந்து வரும்.  அனுபவம் ஏற ஏற, அதனால் பெறும் இன்பமும் ஏறிக் கொண்டே இருக்கும். ஒரு பிடி சாப்பிட்ட உடனே அதற்கு ஏற்ற அளவு பசி தணிவது போல, அனுபவம் கொஞ்சம் பெற்ற உடனே  இன்பம் தலைப்பட ஆரம்பித்துவிடும். தொடங்கும்போதே முடிந்த முடிபாகிய முத்தியின்பம் கிடைக்கும் என்பது இல்லை. ஆனால் செய்யும் முயற்சி உண்மையானால்க, அதற்கேற்ற அனுபவம் நிச்சயமாக உண்டாகும். ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதில் பயன் இல்லை. சிறிது செய்தாலும் மெய்வருத்தக் கூலி உண்டு. "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். முயன்று வந்தால், இந்தப் பிறவியிலேயே முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெற முடியாமலும் போகலாம். ஆனால் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயமாக உண்டு. அடுத்த பிறவிகளிலாவது கிடைக்கும் என்பது உறுதி. 

உயிர் உடம்போடு வாழும் வாழ்க்கையில் இந்த உடம்போடு இருப்பது ஒர் அத்தியாயம். ஒரு நல்ல சாதனத்தைத் தொடங்கினால் அது எப்படியும் சிறந்த பயனைப் பெறும்படி செய்துவிடும். இப்போது நாம் செய்கின்ற முயற்சியின் பயன், வரும் பிறவியாகிய அடுத்த அத்தியாயத்தில் உயிரோடு ஒட்டி வரும். "ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எனவே இந்தப் பிறவியில் செய்கின்ற முயற்சி கைகூடுமோ கூடாதோ என்று நினைக்க வேண்டாம். இப்பொழுது கை கூடாவிட்டாலும் இந்த முயற்சியின் பயன் வரும் பிறவிகளிலும் தொடரும். ஆதலால், ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டு இறைவன் அருள் பெறுவதற்குரிய சாதனத்தைத் தளர்ச்சியின்றிச் செய்து வர வேண்டும். அதற்கு குருவின் அருள் பெற வேண்டும்.  மனிதனுடைய வளர்ச்சி அவன் உடம்பைப் பற்றியது அல்ல. மனத்தைப் பற்றியது ஆகும். மனப் பண்பு வளர வளர, மனிதன் வளருகிறான். மனத்தின் இயல்பு ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான். அப்படிப் பற்றுகிற மனம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த பண்புடைய ஒன்றைப் பற்றுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது உயரும். 

சாதாரண மனிதன் ஒருவன் தன் முயற்சியினால் மக்கள் தொண்டனாகி,  நகரமன்ற உறுப்பினர் ஆகி, நகரமன்றத் தலைவர் ஆகி, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, அமைச்சர் ஆகவும் வந்துவிடுகிறான். இது போன்ற வளர்ச்சிமுறை மனப் பண்பாட்டினால் உண்டாக  வேண்டும். சமூகத்தாரின் கண்ணில் கீழ்ச்சாதியில் பிறந்தவர் நந்தனார். ஆனால், அவரைக் காட்டிலும் உயர்ந்த வேதியர் யாரும் இல்லை.   "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டது இல்லை" என்றுதானே பாரதியார் அவரைப் போற்றினார்.  கண்ணப்பர் வேட்டுவ  குலத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், ஆறு நாட்களில் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை.  அவர்களுடைய மனநலம் வளர்ச்சி பெற்றது.  "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்"  என்பது திருக்குறள்.  புறக் கண்களால் பார்க்கும் உருவத்தைக் கண்டு மயங்காதே.  தேர் பெரியது. அச்சாணி எவ்வளவு சிறியது? அதுபோன்ற மனிதர்கள்  இருக்கிறார்கள்'  என்று கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். அதனால், "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்றார். 

சிவபிரான் திருமணத்தின் போது வானவர்களும், பூவுலகத்தினரும் திருமணக் கோலம் கண்டுகளிக்க இமயமலையில் வந்து கூடிவிட்டார்கள். வடநாடு தாழ்ந்ததால்  தென்னாடு உயர்ந்துவிட்டது. இதைச் சமன்படுத்த உருவத்தால் சிறுத்த அகத்திய முனிவரை எம்பெருமான் தென்னாடு அனுப்பினார்.  சின்னஞ்சிறு குறுமுனிவர், தமிழ் நூலை நமக்குத் தந்த குருமுனிவர்,  "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்பதற்குச் சான்றாக நிற்கிறார். அகத்திய முனிவர் தென்னாடு வந்தார். நிலம் சமன்பட்டு விட்டது. அது அவரது உடம்பின் வல்லமையால் அல்ல.  அவர் உள்ளம் பெரியது. மனத்தின் வன்மை அதிகமாக, திடம் அதிகமாக, பண்பு செறிந்து  வளர்ந்து நிற்கும்.  

நம்முடைய முயற்சிகள் தொடர்ந்து வந்தால், பண்பு வளர்ந்து வரும். மனத்தில் உறுதி தோன்றும். இறையருள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றும். இறைவன் இருக்கிறான் என்று பிறர் சொல்லக் கேட்கிறோம்.  நமக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை. சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சந்தேகம் நீங்க வேண்டும். இறைவன் நிச்சயம் இருக்கிறான். அவனைக் காணாத குறை  நம்முடையதே. அவன் எங்கே, எங்கே, எங்கே என்ற கேள்வி தொடங்கும்போது, நம்பிக்கை உதயமாகும். கேள்விக் குறியைப் போட்டுக் கொண்டே போனால் பயன் இல்லை.  கேள்விக்குப் பதிலை அளிக்கும் குருநாதரை அண்டி, அவர் காட்டும் நெறியிலே,  சீலத்திலே ஒழுகி நின்றால் பயன் உண்டு. மனத் திட்பம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல்  வலிமை ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. பயிற்சியை விடாமல் செய்யச் செய்யப்  படிப்படியாகத்தான்  உடல் வலுப்பெறுகிறது. அதைப் போலவே மனம் திட்பம் உண்டாக, படிப்படியாக விடாமல் சாதனம் செய்ய வேண்டும். இறைவன் திருவருளை நம்பியிருந்தால் இடையில் தடை ஏற்படாது. 

பல காலமாக உலக மாயையில் சிக்கிச் சுழன்ற மனத்தில் படிந்துள்ள பழைய வாசனை மறைய வேண்டுமென்றால், பல கால உழைப்பு வேண்டும். அந்த உழைப்பினால் பழைய வாசனை அற்றுப் போகச் செய்து, மனத்தையே நாசம் செய்பவர்கள் சீவன்முத்தர்கள்.  இறைவனிடத்தில் கொள்ளும் நம்பிக்கையினால் திடம் வரும். ஒன்றை ஒன்றாகப் பார்த்து மயங்குகின்ற தன்மை ஒழியும். அந்தத் திடம் உண்மையாக இருந்தால், அதையே புணையாகக் கொண்டு பிறவிப் பெருங் கடலை நீந்தி விடலாம். 

மனம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை. எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்கிறது. கண் பார்க்கிறது: நான் பார்த்தேன்  என்று சொல்கிறோம். காது கேட்கிறது;  நான் கேட்டேன் என்று சொல்கிறோம். கண்ணையும் காதையும் கருவியாகக் கொண்டு 'நான்' என்பது பார்க்கிறது; கேட்கிறது. எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டு ஒருவன் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரிலே போகின்ற நம்மை அவன் பார்ப்பது இல்லை. நம் மேல் அவனுடைய கண் படாமல் இல்லை. ஆனால், அவன் மனம் கண்ணோடு ஒன்றி நம்மைப் பார்க்கவில்லை. கண்ணை வாயிலாகக் கொண்டு மனம் இயங்கவில்லை. மனம் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறது. மனம் ஆகிய ஒன்று, கண் காது ஆகிய இந்திரியங்களை வாயிலாகக் கொண்டு இயங்கும்போதுதான் பார்க்கிறேன், கேட்கிறேன் என்றெல்லாம் சொல்கிறோம். அதனால் எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் மனம் ஒரு காரியத்தைச் செய்கிறது; மற்றொரு காரியம் செய்யவில்லை. 

நமது மனமானது, பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் சேல் என்பதாக எப்போதும் திரிந்து கொண்டே இருக்கிறது. ஒன்றை நினைக்காமல், பலபல பொருள்களைப் பற்றி நினைந்து திரிகின்றது. மனத்திற்கு அதுதான் வேலை. மனம் வாயுவின் கூறு உடையது.  ஆகையால், அது சலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கணமும் ஒரு நிலையில் நிற்பதில்லை. மனத்தை நிறுத்துவது எளிய காரியம் அல்ல. ஒன்றையும் பேசாமல், நினையாமல் மனம் ஒய்வாக ஒருகணம் கூட இருக்காது. "சினம் இறக்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே?” என்று தாயுமானவர் பாடுகிறார். 

பலவற்றையும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனத்தை, "எதைப் பற்றியும் சிந்திக்காதே"  என்று எவ்வளவு பலமான கூட்டில் வைத்து அடைத்தாலும் அது நில்லாது. சிந்திக்காதே எனச் சொல்வதைவிட,  'நல்லவற்றைச் சிந்தி'  என்று சொல்வது நலம். "இறைவன் சம்பந்தமானவற்றைச் சிந்தி' என்று சொல்லி, அதன் போக்கிலே விட்டு மடைமாற்றி விட வேண்டும். இறைவனோடு தொடர்புடையவற்றை நினைந்து, மற்ற நினைப்புகள் மெல்ல மெல்லக் குறைய,  இறைவனையே நினைக்கின்ற நினைப்பு வரும்போது மனம் நிற்கும். அதை "மனோலயம்" என்பர். 

ஒரு குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் போகிற ஒரு பிள்ளை அதைப் பார்க்கிறான்; பறிக்கிறான்; இதழ் இதழாகக் கிள்ளிக் கசக்கி எறிந்துவிட்டுப் போகிறான். ஓர் ஒவியன் வருகிறான். அதன் வண்ணத்தையும் மலர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து அப்படியே ஓவியம் தீட்ட முனைகிறான். ஒரு கவிஞன் பார்க்கிறான். 'இந்தத் தாமரையைப் போல் அழகு மிக்கதாகப் பெண்களின் முகங்கள் இருக்கின்றன' என்று வருணிக்கிறான். அதையே ஒரு அடியவர் பார்க்கிறார். 'இன்பத் தேனைச் சொரிந்து, அடியவர்களைத் தன்பால் அழைக்கின்ற இறைனுடைய திருவடிகளைப் போலவே, வண்டுகளை அழைக்கும் தாமரை உள்ளது’ என்று பரவசப்படுகிறார். நினைக்கின்ற நினைப்பை நல்லதாக்கிக் கொண்டவர் அடியவர். ஆதலால், தாமரையைப் பார்க்கும்போது  பெருமானுடைய திருவடி மலர்களை அவர் நினைக்கிறார்.  எங்கெங்கோ போகின்ற மனத்தை மடைமாற்றி இறைவனைப் பற்றி நினைக்கப் பழகினால், கடைசியில் நேரே இறைவனை நினைக்கிற நிலைக்கு மனம் வந்து விடும். 

விளையாட்டுப் புத்தியுள்ள சிறு குழந்தை  எப்போதும் வீதியிலே  விளையாடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடுகிற வேளையில் கூட உள்ளே வராமல்  விளையாடுகிறது. தாய் கிண்ணத்தில் உணவைப் பிசைந்து எடுத்துச் சென்று  குழந்தையை இழுத்து வந்து ஊட்டுகிறாள். ஒரு வாய் சாப்பிடுகிறது;  மறுபடியும் ஒடிவிடுகிறது. திரும்பவும் இழுத்து வந்து ஊட்டுகிறாள். விளையாட்டுத் தோழர்கள் போய் விடுவார்களே என அந்தப் பிடிசோற்றை வாயில் வாங்கிக் கொண்டு ஒடப்  பார்க்கிறது. ஒர் அடி அடித்துத் தாய் அதட்டுகிறாள். தாய்க்குப் பயந்துகொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் வாயைத் திறக்கிறது. ஆனால், அதன் கண் வீதியிலேயே இருக்கிறது. அந்தக் குழந்தை உணவின் சுவையை ரசித்துச் சாப்பிடப் பழகிவிட்டால்,  அப்புறம் மிக்க பசி வந்தவுடன் வீட்டுக்கு ஓடி வரும்.

அதைப் போலப் பலபலவற்றை நினைத்துத் தாவித் தாவி ஒடிக்கொண்டிருக்கும்  மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மடைமாற்றி விட்டு இறைவன் சம்பந்தமான பொருளை நினைக்கச் செய்தால், பிறகு இறைவனையே நினைக்கப் பழகிவிடும். பார்க்கின்ற பார்வையில், கேட்கின்ற மொழியில், செய்கின்ற செய்கையில் எப்படி இறைவன் நினைவு வரும். எந்தக் காரியத்தைச் செய்தாலும், எந்த இடத்திலே இருந்தாலும் நினைப்பு  நமக்கு எதில் ஊன்றி இருக்கிறதோ, அதுவே முந்திக்கொண்டு நிற்கும்.  "எத் தொழிலைச் செய்தாலும், ஏது அவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்றார் பட்டினத்து அடிகளார்.

செருப்பு இல்லாமல் வருந்திய வைணவர் ஒருவர், நல்ல செருப்பு ஒன்று வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். வறுமையினால் வாங்க இயலவில்லை. ஒருவழியாக வாங்கிவிட்டார்.  அதைப் போட்டுக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு வந்தார். பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காலிலே போட்டிருக்கும் புதுச் செருப்பைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு உள்ளே போனார். விரைவில் கோயிலை விட்டு வரமுடியவில்லை. அவர் நினைவோ செருப்பு மேலேயே உள்ளது. தீபாராதனை ஆயிற்று. சடகோபம் சாதிக்க நாழிகை ஆயிற்று. 'சீக்கிரம் செருப்புச் சாதிக்க வேணும்'  என்றார். பெருமாள் சந்நிதியில் இருந்தாலும் அவருக்குச்  செருப்புமேல் ஆசை 'செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே" என்று வைணவ  நூல்களில் வியாக்கியானத்தில் இந்த உதாரணம் வருகிறது. 

மனத்திலே எந்த நினைப்பு இருக்கின்றதோ அதுவே முந்திக்கொண்டு வரும் என்பதற்கு  இது சிறந்த உதாரணம்.  இறக்கும் தருவாயிலும் இறைவன் நினைப்பு வரவேண்டுமானால் காலையும் மாலையும் அவனை  நினைத்துப் பழக வேண்டும். பார்க்கின்ற பொருள்களை எல்லாம் இறைவனோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும். அவன் உருவத்தைக் கண்டு கண்டு அதை உள். வாங்கிக்கொண்டு அகக் கண்ணால் பார்க்க வேண்டும்.  இறைவனது திருவுருவத்தைத் தியானம் பண்ண வேண்டுமென்ற ஆசை இருக்கிறவர்கள் அது நழுவாது இருக்கத் திரும்பத் திரும்ப ஓடிப்போய் அத்திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். "உயிராணம் இருந்து. உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உருவு எழுதி" என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.  அந்தத் தியானத்திற்கு எது தடையாக இருக்கிறதோ, அதை நீக்குவது எளிது அல்ல. ஒன்றை  நினைக்கின்ற மனத்தை எதையும் நினைக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக,  'இதை நினை' என்று சொல்ல வேண்டும்.  "நெஞ்சே! நீ நினையாய், நிமிர் புன்சடை நின்மலனை" என்று தமது நெஞ்சுக்கு அறிவுறுத்தி, நிலை நிறுத்தினார் அப்பர் பெருமான். "நீ நாளும் நினை கண்டாய்" என்றும், "நன்னெஞ்சே! உன்னை இரந்தேன், நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய், உய்வதனை வேண்டுதியேல்" என்றும் பாடினார் திருஞானசம்பந்தப்  பெருமான். 

மக்களுக்குத் தாம் அனுபவிக்கும் பொருளைப் பற்றிச் சிறப்பித்துப் பேச ஆசை உண்டாவது இயல்பு. மகளிரை எத்தனையோ வகையில் வருணனை செய்யத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  'பாவையர்கள் பேசுகின்ற மொழியைக் கேட்டுப் பால் என்றும்,  அவர்களது ஒயிலான நடையைப் பார்த்து அவர்கள் பாதம் பஞ்சு என்றும், அவர்களது  கண்களைப் பார்த்துச் சேல் போல் இருக்கின்றன என்றும் நினைப்பதும், சொல்லித் திரிவதும் இயல்பு. இந்த மூன்றுக்கும்  மூன்று முறிவு சொல்லித் தருகிறார் அருணகிரிதாநர். அவர் சொல்லுவன கற்புடைய மகளிரைப் பற்றி அல்ல. அற வழியில் இன்பம் நுகர்பவர்களைப் பற்றி  அவர் சொல்லவில்லை. கண்ணாலும், மேனி மினுக்காலும்  உலகோரின் மனத்தை மயக்கும் பாவையர்களைப் பற்றியே பேசுகின்றார்.  இத்தகைய பாவையர்கள் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் இருந்துகொண்டுதான்  இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்து வாழ்கின்ற மனிதர்கள் யாரும் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியும் எனச் சொல்ல முடியாது. 

நமக்கு நஞ்சாக இருப்பதை, நாம் செய்யக் கூடாததை முதலில் சொல்லி, நமக்கு நன்மை அளிப்பதை, நாம் செய்ய வேண்டியதைப் பின்னே அடிகளார் சொல்கிறார். எல்லாப் பெண்களைப் பார்க்கும்போதும் காம உணர்ச்சி உண்டாவதில்லை. தாயாகப்  பார்க்கும்போதும் சகோதரியாகப் பார்க்கும்போதும் உள்ளத்தில் தீய எண்ணம் உண்டாகாது. ஆகையால் பெண்களைப் பார்ப்பதில் தீமை இல்லை. பார்க்கின்றபோது  நினைக்கின்ற நினைப்புக்கு ஏற்ப நன்மை, தீமை ஆகிய விளைவுகள் இருக்கின்றன. காம ஊற்றைத் திறக்கின்ற அதே கண்தான் பக்தி ஊற்றையும் பொங்கச் செய்கிறது. 

"பெண்களின் கண்ணைப் பார்த்துச் சேல் எனச் சொல்வதற்குப் பதிலாகச் செந்தில் ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேல் என்று சொல்"  என்பது அருணகிரிநாதர் செய்யும் அருள்  உபதேசம். நமது நினைப்பு,  பேரின்பத்திற்கு  வழிகோலுவதாக இருக்கவேண்டும். பாவையர்களைப் பார்க்கின்ற பார்வை தவறானது அல்ல. ஆனால் எண்ணம் தவறானதாக  இருக்கக் கூடாது.  'சேல்விழி' என்று சொல்லாமல், 'வேல்விழி' என்று சொல்லும்போது, முருகப் பெருமானுடைய வேல் நினைவுக்கு வரும். பாவையர் பாதம் மென்மையாகப் பஞ்சு போல் இருக்கிறது என்கிறாயே. பெண்களின் நடை மயிலின் நடை என்றும் சொல்வார்களே. 'பதம் பஞ்சு' என்று நினைப்பதை விடுத்து, 'கொற்ற  மாயூரம்' என்று நினை. பாவையரின் பேச்சு பாலைப் போல் இருக்கிறது என்று, காமப் பாலை நினைப்பதை விடுத்து, இறைவன் அருட்பாலை நினைக்க வேண்டும்.  

காணும் பொருளிலே இறைவன் நினைவை வருவித்துக் கொள்ள வேண்டும். பாவையர் கண்ணைப் பார்த்துச் 'சேல்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் 'செந்திலோன் திருக்கை வேல்' என நினைத்து உருகினால், பாவையர் பதங்களைப் பார்த்துப் 'பஞ்சு' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்து, 'கொற்ற மாயூரம்' என எண்ணி வியந்தால், பாவையர் மொழியைக் கேட்டுப் 'பால்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் செந்திலோன் கால் வெட்சித் தண்டை எழுப்பும் ஒலி எனக் கேட்டு நின்றால் அந்த நினைவு நம்மை மேலே ஏற்றிவிடும். அதனால் இந்திரியங்கள் அடங்கி, மலம் ஒழிந்து, இன்ப துன்பமில்லாப் பெருவாழ்வாகிய முத்தி கிடைக்கும். அப்படிச் செய்யாமல் மனம் திரிகிறது. "மனமே, இப்படி இருந்தால் மனமே, உனக்கு எவ்வாறு முத்தி கிட்டும்?" என்று கேட்கிறார் அருணகிரிநாதர். 


"பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் 

சேல்,என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை 

வேல் என்கிலை;கொற்ற மாயூரம் என்கிலை; வெட்சித்தண்டைக் 

கால் என்கிலை; மனமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"

என்பது அருணகிரிநாதர் அருளிய உபதேசம்.


இதன் பொருள் ---

ஏ மனமே! பெண்களின் சொல்லானது பாலை ஒத்தது எனவும், பாதமானது பஞ்சை ஒத்தது எனவும், கண்கள் சேல் மீனை ஒத்ததாகவும் எண்ணி மயங்கித் திரிகின்ற நீ, திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளின் திருக்கரத்திலே விளங்கும் வேல் என்று சொல்லுகின்றாயில்லை. வெற்றி பொருந்திய மயில் என்று சொல்லுகின்றாயில்லை. வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடி என்று சொல்லுகின்றாயில்லை. முத்தியை நீ எப்படி அடைவாய்? 


No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...