பொது --- 1062. சரியும் அவல

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சரியும் அவல (பொது)


முருகா! 

திருவருளால் காமனை வென்றவர்கள் அடியார்கள்.


தனன தனன தாத்தன தனன தனன தாத்தன

     தனன தனன தாத்தன ...... தனதான


சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி

     தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ்


சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு

     சரண கமல மேத்திய ...... வழிபாடுற்


றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ

     ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி


அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில

     ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான்


விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ

     மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும்


விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்

     விசைய னொருவ னாற்பட ...... வொருதூது


திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி

     சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே


திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு

     சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப் பசி

     தணிகை பொருடு இராப்பகல் ...... தடுமாறும்,


சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய, நாக்கொடு

     சரண கமலம் ஏத்திய ...... வழிபாடு உற்று,


அரிய துரிய மேல்படு, கருவி கரண நீத்ததொர்,

     அறிவின் வடிவம் ஆய், புள ...... கிதம் ஆகி,


அவச கவச மூச்சு அற அமரும் அமலர் மேல், சில

     ரதிபதி விடு பூக்கணை ...... படுமோதான்?


விரியும் உதய பாஸ்கர கிரண மறைய, ஆர்ப்பு எழ,

     மிடையும் அலகு இல் தேர்ப்படை ...... யொடு சூழும்


விகட மகுட பார்த்திபர் அனைவருடனும், நூற்றுவர்

     விசையன் ஒருவனால் பட, ...... ஒரு தூது


திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக! பார்ப்பதி

     சிறுவ! தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே!


திமிர உததி கூப்பிட, அவுணர் மடிய, வேல்கொடு

     சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.

பதவுரை

விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய --- விரிந்து எழுகின்ற உதய சூரியனுடைய ஒளியானது மறையும்படி,

ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர்ப் படையொடு சூழும் --- பேரொலி எழ நெருங்கி வரும் கணக்கில்லாத தேர்களோடும், சேனைகளோடும் சூழ்ந்து போருக்கு வந்த,

விகட மகுட பார்த்திபர் அனைவருடன் நூற்றுவர் --- அழகிய மகுடங்களைத் தரித்த அரசர்களுடன், துரியோதனாதி நூற்றுவரும்,

விசையன் ஒருவனால் பட --- அருச்சுனன் ஒருவனால் அழியும்படி, (போர் புரிவதற்கு முன்னர்)

ஒரு தூது திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக --- (கௌரவரிடத்தே) ஒப்பற்ற தூதுவனாகச் சென்ற நிகரற்ற வலிமை மிக்க கண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!

பார்ப்பதி சிறுவ --- உமாதேவியின் திருமகனே!

தறுகண் வேட்டுவர் கொடி கோவே ---  கொடுமை வாய்ந்த வேடர் மகளான வள்ளிநாயகியின் மணவாளரே!

திமிர உததி கூப்பிட --- இருண்ட கடல் ஓலமிடவும்,

அவுணர் மடிய --- அரக்கர்கள் மடியவும்,

வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே --- வேலை விடுத்து கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேகமாகச் செலுத்திய பெருமையில் மிக்கவரே!

சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப் பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் --- அழியப் போகின்ற துன்பத்துக்கு இடமான உடலில் நெருப்பைப் போல் எரிந்து உரிமை கொண்டாடும் கொடிய பசிப் பிணி தணிந்து போகும் பொருட்டு இரவும் பகலும் தடுமாறுகின்ற,

சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய --- எல்லா சமயங்களின் தர்க்க வாதிகளின் கலகப் பேச்சுக்களை விட்டு ஒழித்து,

நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று --- நாவைக் கொண்டு தேவரீரது திருவடித் தாமரைகளைப் போற்றும் வழிபாட்டினை மேற்கொண்டு,

அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது --- அருமையான துரிய நிலைக்கு மேல் விளங்குகின்ற நிலையில், கருவி கணங்களைக் கடந்த,

ஒரு அறிவின் வடிவமாய்ப் புளகிதமாகி --- ஒப்பற்ற அறிவின் வடிவமாய்ப் புளகாங்கிதம் கொண்டு,

அவச கவச மூச்சு அற அமரும் --- தன்வயப்படாத அறிவுநிலை நீங்கி, முச்சு ஒடுங்கிப் பொருந்தி இருக்கின்ற,

அமலர் மேல் --- குற்றமற்ற அடியார்கள் மீது,

ரதிபதி விடு சில பூக்கணை படுமோ தான்? --- இரதிதேவியின் கணவனான மன்மதன் விடும் சில மலர்க் கணைகள் தாக்கத்தை உண்டாக்க முடியுமோ?

பொழிப்புரை

விரிந்து எழுகின்ற உதய சூரியனுடைய ஒளியானது மறையும்படி பேரொலி எழ நெருங்கி வரும் கணக்கில்லாத தேர்களோடும், சேனைகளோடும் சூழ்ந்து போருக்கு வந்த அழகிய மகுடங்களைத் தரித்த அரசர்களுடன், துரியோதனாதி நூற்றுவரும், அருச்சுனன் ஒருவனால் அழியும்படி, போர் புரிவதற்கு முன்னர் கௌரவரிடத்தே ஒப்பற்ற தூதுவனாகச் சென்ற நிகரற்ற வலிமை மிக்க கண்ணன் ஆகிய திருமாலின் திருமருகரே!

உமாதேவியின் திருமகனே!

கொடுமை வாய்ந்த வேடர் மகளான வள்ளிநாயகியின் மணவாளரே!

இருண்ட கடல் ஓலமிடவும், அரக்கர்கள் மடியவும், வேலை விடுத்து கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேகமாகச் செலுத்திய பெருமையில் மிக்கவரே!

அழியப் போகின்ற துன்பத்துக்கு இடமான உடலில் நெருப்பைப் போல் எரிந்து உரிமை கொண்டாடும் கொடிய பசிப் பிணி தணிந்து போகும் பொருட்டு இரவும் பகலும் தடுமாறுகின்ற, எல்லா சமயங்களின் தர்க்க வாதிகளின் கலகப் பேச்சுக்களை விட்டு ஒழித்து,

நாவைக் கொண்டு தேவரீரது திருவடித் தாமரைகளைப் போற்றும் வழிபாட்டினை மேற்கொண்டு, அருமையான துரிய நிலைக்கு மேல் விளங்குகின்ற நிலையில், கருவி கணங்களைக் கடந்த, ஒப்பற்ற அறிவின் வடிவமாய்ப் புளகிதம் அடைந்து, தன்வயப்படாத அறிவுநிலை நீங்கி, முச்சு ஒடுங்கிப் பொருந்தி இருக்கின்ற, குற்றமற்ற அடியார்கள் மீது இரதிதேவியின் கணவனான மன்மதன் விடும் சில மலர்க் கணைகள் தாக்கத்தை உண்டாக்க முடியுமோ?

விரிவுரை


சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப் பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும் சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய --- 

சரிதல் - அழிதல், குலைந்து போதல். அவலம் - துன்பம். "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்" என்பது மணிமேகலை. "இடும்பைக்கே கொள்கலம்" என்பார் திருவள்ளுவ நாயனார். அப்படிப்பட்ட உடம்பை வளர்த்து, அறிவை வளர்க்கத் துணை புரிவது இறைவனால் அருளபட்ட தீராப் பிணியான பசிப்பிணி. உட்ம்பையே பொருள் என்று கொண்டவர்களை இதை உணராது, அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதில் நினைவாய்க் கவலைப்படுவது அன்றி, சிவக்கனியைச் சேரக் கருதமாட்டார்கள். சமய வேடங்களைப் புனைந்து கொண்டு யாதொரு முயற்சியும் உழைப்பும் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்காகத் தர்க்கம் இட்டுக் கொண்டு திரிவார்கள். இவர்களை, "பொய் வேடம் பூண்பர் பொசித்தில் பயனாக" என்று அடையாளம் காட்டுகிறார் திருமூல நாயனார்.

பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை என்ன என்ன உருவில் உட்செலுத்துகின்றனர்?. பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம் .மானம்,  குலம்,  கல்வி,  வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்".                 --- நல்வழி.

 பசி நோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன?  பசி நோய் மிக்கபோது கண்ணொளி மங்குகின்றது.  கரசரணாதிகள் தடுமாறுகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன.  நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர்.  சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள்.  அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.

 

எட்டரும் பொருளே! திருச்சிற்றம்பலத்தே

            இலகிய இறைவனே! உலகில்

பட்டினி உற்றார்,பசித்தனர்,களையால்

            பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

            உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில்,எந்தாய்!

            என்உளம் நடுங்குவது இயல்பே.             ---  திருவருட்பா.

 சமயவாதிகள் தத்தம் சமயமே  சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பொறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள் உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய  இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலை ஆகும்.

ஞானம் என்பது, பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என மூவகைப்படும்.

பசு ஞானம் என்பது உயிர் அறிவு, ஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.

பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.

பதி ஞானம் என்பது, மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதி அறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது. 


பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறி கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோ, அறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோ அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.


பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,

பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,

தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,

தன்னில் மறைந்தது தன்கரணங்களே.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.


என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.


பசு ஞானம்

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால், ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும்.

கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.

இவ்வாறு கருவி அறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.


நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி

நாம் அல்ல; நாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;

முற்செய்வினை யும்தருவான் முன்.     --- சிவஞானபோத வெண்பா.


பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்

பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,

ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன்

அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி. --- தாயுமானார்.


பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால், அப்பரத்தின்

சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக

சிற்கும் திருவருளில் நெஞ்சே, யாம் நிற்பது அல்லால்

கற்கும் நெறி யாது இனிமேல் காண்.      --- தாயுமானார்.


பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்

     பார்த்தனையே, முடிவில் நின்று பார், எதுதான் நின்றது?

ஆராலும் அறியாத சத்து அன்றோ? அதுவாய்

    அங்கு இரு நீ, எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்

     புலம்பாதே, சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,

ஓராதே ஒன்றையும் நீ, முன்னிலை வையாதே,

    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே.     --- தாயுமானார்.


பதிஞானம்

இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின், அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது.

பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம்

நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்

தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!   --- பட்டினத்தார்.


அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய,

வெறி வென்றவரோடு உறும் வேலவனே. --- கந்தர் அனுபூதி.


பதிஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமே உவந்துகொண்டும், 

பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டு, கலகமிட்டுத் திரிவர்.


"கலகல கல என, கண்ட பேரொடு

     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய, வெகு சொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,

கலைகளும் ஒழிய, பஞ்ச பூதமும்

     ஒழி உற, மொழியில் துஞ்சு உறாதன

     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்? "  --- (அலகில் அவுணரை) திருப்புகழ்.

"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். "தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே நன்னைல் எனத் தெரிந்து நாட்டுவித்து" என்றும் பாடி ஆருளினார். மேலும்,

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.


நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று --- 

இறைவன் மனிதப் பிறவிக்கும் நாக்கைப் படைத்துக் கொடுத்து உள்ளான். உண்பதற்கு மட்டும் அல்ல. இறைவன் திருப்புகழை வாயாரப் பாடிப் பணிந்து ஈடேறுவதற்காகவே.


"பூக் கைக் கொணடு அரன் பொன்னடி போற்றிலார்;

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே."


என்றும், 


"வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து,

பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- 

வாயே, வாழ்த்து கண்டாய்!"

என்றும் அப்பர் பெருமான் அருளியதன் அருமையை உணர்க.


அமலர் மேல் ரதிபதி விடு சில பூக்கணை படுமோ தான்? --- 

மலம் உள்ளவர்கள் மனிதர்கள். மலம் அற்றவர்கள் இறை அடியார்கள். அவர்களைக் காம நோய் அண்டாது.

ரதிபதி - இரதிதேவயின் மணவாளன் ஆகிய மன்மதன். அவன் விடும் மலர் அம்புகளால் காம நோயில் துவளாத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி போதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. ஆனை மேல் பவனிவரும் இந்திரன், இதனால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான்.  இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான். கலைகளை ஆய்ந்தாரும், பகைவரைக் காய்ந்தாரும் காமநோயால் வீந்தார்கள். இதன் வலிமைதான் என்னே? முடி துறந்தான் ஒருவன். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாது, புன் மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.


"உடம்பினால் ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழ்

உத்தமனைக் காணும் பொருட்டு".


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,


"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்."


இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தனர். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. இறைவன் திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து ஆகும்.


"கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்

தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே."---  கந்தர் அலங்காரம்.


விகட மகுட பார்த்திபர் அனைவருடன் நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக --- 

        பூபாரம் தீர்க்கப் புகுந்த புயல் வண்ணராகிய கண்ணபிரான், பாண்டவர்கள் தூதனாகச் சதுரங்க சேனைகள் சூழ அத்தினபுரத்திற்குச் சென்றார். அவருடைய வருகையை உணர்ந்து துரியோதனனைத் தவிர, ஏனைய திருதராட்டிர புதல்வர்களும், பீஷ்மர், துரோணர் முதலிய பெரியோர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டு,  கண்ணனை எதிர் கொண்டார்கள். நகரத்து மக்கள் கமலக்கண்ணனைக் காண வேண்டுமென்று விரும்பி, வாகனங்களிலும் நடந்தும் வந்து எதிர்கொண்டார்கள். பகவான் தன்னை எதிர் கொண்ட பீஷ்மர் துரோணர் முதலியோர் சூழ நகர வீதியில் சென்றார். அவரை மகிழ்விப்பதற்காக நகரத்தை நன்கு அலங்கரித்து, வழிகளில் இரத்தினங்களை இழைத்து வைத்தனர். பெருமானைக் காணவேண்டி வீட்டில் எழுதிய சித்திரங்களைத் தவிர, மற்ற எல்லா ஜனங்களும், மார்க்கத்தில் குழுமி பூமியில் நின்று துதித்தார்கள். பகவான் கூட்டத்தின் மிகுதியால் மெல்லத் தேரை நடத்தி திருதராஷ்டிரனுடைய பொன்மாளிகையைச் சேர்ந்தார். பகவான் வருகையை உணர்ந்து திருதராஷ்டிரன் எழுந்து உபசரித்தான். கிருபர், பாகுலிகர், சோமதத்தர் முதலிய எல்லாரும் பகவானை வரவேற்று உபசரித்தனர். திருதராஷ்டிரன் அனுமதியின் மேல் பகவான் பொன் தவிசில் எழுந்தருளியிருந்தார்.

        பிறகு, அத்தையாகிய பிரதையைப் பார்த்துவிட்டு, துரியோதனனுடைய பெரிய அரண்மனைக்குச் சென்றார். கொடுமுடிபோல் உயர்ந்த மேல்மாடியில் ஏறினார். அங்கு ஆயிரம் அரசர்கள் சூழ இருந்து துரியோதனனைக் கண்டார். துரியோதனன், துர்ச்சாசனன், சகுனி முதலியோருடன் வரவேற்றான். கண்ணன் அவர்களுடன் தகுதிக்குத் தக்கவாறு பேசினார். பகவானுக்காகச் சிறந்த உணவுகளைத் தயாரித்து விருந்துக்கு அழைத்தான். வாசுதேவர், “துரியோதனா! நான் பாண்டவர் தூதனாக வந்திருக்கிறேன். தூதர்கள் காரியம் முடியா முன் புசிப்பதில்லை. நீ பாண்டவர்களைப் பகைக்கின்றாய். பாண்டவர்கள் என்னுடைய பிராணன்கள். அவர்களைப் பகைத்தவர்கள் என்னைப் பகைத்தவர்களே; அவர்களை நேசிக்கிறவன் என்னை நேசிப்பவனே. எவன் ஆசையையும் கோபத்தையும் கொண்டு குணவானை விரோதிக்கிறானோ அவனுடைய அன்னம் உண்ணத்தக்க தன்று. மனத்தையும் கோபத்தையும் ஜெயிக்காமல், எந்த அதமன் நற்குணமுள்ள ஞாதிகளை (தாயாதிகளை)ப் பகைக்கிறானோ, அவன் வெகுகாலம் செல்வத்துடன் நிலைத்திருக்க மாட்டான். அவனுடைய அன்னமும் புசிக்கத் தக்கதன்று. விதுரருடைய அன்னம் ஒன்றே புசிக்கத் தக்கது” என்று கூறிவிட்டு, தம்மிடத்து மெய்யன்பு பூண்ட விதுரர் வாழும் திருமாளிகைக்கு எழுந்தருளினார்; துரோண பீஷ்மாதி பெரியோர்கள் வீட்டிற்குச் சென்றாரில்லை.

கருத்துரை

முருகா! திருவருளால் காமனை வென்றவர்கள் அடியார்கள்.No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...