பொது --- 1060. அதல சேடனாராட

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அதல சேடனாராட (பொது)

முருகா!

பிரபுடதேவன் காண தேவரும் மூவரும் சூழ மயிலும் ஆட, 

தேவரீரும் ஆடி அருட்காட்சி தர வந்து அருளுவீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான



அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட ...... அவளோடன்


றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள ...... மவையாட


மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட ...... மதியாட


வனச மாமி யாராட நெடிய மாம னாராட

     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்


கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு

     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்


கதறு காலி போய்மீள விசய னேறு தேர்மீது

     கனக வேத கோடூதி ...... அலைமோதும்


உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத

     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே


உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ

     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


அதல சேடனார் ஆட, அகில மேரு மீது ஆட,

     அபின காளி தான் ஆட, ...... அவளோடு அன்று


அதிர வீசி வாதுஆடும் விடையில் ஏறுவார் ஆட.

     அருகு பூத வேதாளம் ...... அவை ஆட,


மதுர வாணி தான் ஆட, மலரில் வேதனார் ஆட,

     மருவு வான் உளோர்ஆட, ...... மதி ஆட,


வனச மாமியார் ஆட, நெடிய மாமனார் ஆட,

     மயிலும் ஆடி, நீ ஆடி ...... வரவேணும்.


கதை விடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால், நீடு

     கருதலார்கள் மாசேனை ...... பொடியாக,


கதறு காலி போய்மீள, விசயன் ஏறு தேர்மீது,

     கனக வேத கோடு ஊதி, ...... அலைமோதும்


உததி மீதிலே சாயும், உலகம் மூடு சீர்பாத,

     உவணம் ஊர்தி மாமாயன் ...... மருகோனே!


உதய தாம மார்பான, ப்ரபுட தேவ மாராஜன்

     உளமும் ஆட வாழ் தேவர் ...... பெருமாளே.


பதவுரை

கதை விடாத தோள் வீமன் எதிர்கொள் --- கதாயுதத்தை விடாது தோள் மீது வைத்துள்ள விமசேனனால் எதிர்க்கப்பட்டதும்,

வாளியால் நீடு --- ஆயுதங்களினால் நீண்ட வலிமை உள்ளதும் ஆகிய

கருதலார்கள் மாசேனை பொடியாக --- பகைவர்களின் பெரிய சேனையானது மாண்டு பொடிபடும்படியும்,

கதறு காலி போய் மீள ... பயத்தினால் கதறும்படியான பசுக் கூட்டம் பயம் நீங்கி மீளும் பொருட்டும்,

விசயன் ஏறு தேர் மீது --- அர்ச்சுனன் ஏறியுள்ள தேரின்கண் பாகனாய் இருந்து,

கனக வேத கோடு ஊதி --- பொன் மயமாய், வேத நாதத்துடன் கூடிய சங்கத்தை ஒலித்தவரும்,

அலைமோதும் உததி மீதிலே சாயும் உலக மூடு சீர்பாதன் --- அலைகள் மோதுகின்ற கடலின் நடுவே கிடக்கின்ற, உலகத்தை ஓர் அடியால் அளந்து மூடிய சிறந்த திருவடியை உடையவரும்,

உவணம் ஊர்தி மாமாயன் மருகோனே --- கருட வாகனரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

உதய தாம மார்பான --- ஒளி பொருந்திய மாலையை அணிந்த மார்புடன் கூடிய

ப்ரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் ---  ப்ரபுடதேவ மகா மன்னனுடைய உள்ளமும் களிக்கும்படி எழுந்தருளி உள்ள

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

அதல சேடனார் ஆட --- அதல உலகத்தில் வாழும் ஆதிசேடன் தனது பணாமகுடங்களை விரித்து ஆடவும்,

அகிலம் மேரு மீது ஆட --- மண்ணுலகமும் மகா மேருமலையும் மிகவும் அசைந்து ஆடவும்,

அபின காளி தான் ஆட --- சிவத்திற்கு அன்னியம் இல்லாதவளாகிய காளிதேவி ஆடவும்,

அவளோடு அன்று --- அக்காளிதேவியுடன் அந்நாளில்

அதிர வீசி வாதாடும் --- உலகமெல்லாம் அதிரும்படி கரசரணங்களை வீசி வாது புரிந்து திருநடனம் புரிந்த

விடையில் ஏறுவார் ஆட --- சிவமூர்த்தி இடப வாகனத்தின் மீது ஏறி ஆடவும்,

அருகு பூதவேதாளம் அவை ஆட --- தேவரீரது பக்கத்தில் பூதவேதாளங்கள் யாவும் ஆடவும்,

மதுர வாணி தான் ஆட --- இனிமை மிக்க வீணாகானம் புரியும் கலைமகள் ஆடவும்,

மலரில் வேதனார் ஆட --- தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவன் ஆடவும்,

மருவு வான் உளோர் ஆட --- உமது திருவடியைச் சார்ந்துள்ள தேவலோக வாசிகளாகிய அமரர்கள் ஆடவும்,

மதி ஆட --- சந்திரன் ஆடவும்,

வனச மாமியார் ஆட --- தாமரைக் கோயிலில் வாழும் உமது  மாமியார் ஆகிய இலக்குமி தேவி ஆடவும்,

நெடிய மாமனார் ஆட --- நீண்ட வடிவம் எடுத்த உமது மாமனார் ஆகிய நாராயணமூர்த்தி ஆடவும்,

மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும் --- நீ ஏறிவரும் மயில் வாகனமும் ஆடவும், அதன்மீது தேவரீரும் ஆடி வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

கதாயுதத்தை விடாது தோள் மீது வைத்துள்ள விமசேனனால் எதிர்க்கப்பட்டதும், ஆயுதங்களினால் நீண்ட வலிமை உள்ளதும் ஆகிய பகைவர்களின் பெரிய சேனையானது மாண்டு பொடிபடும்படியும், பயத்தினால் கதறும்படியான பசுக் கூட்டம் பயன் நீங்கி மீளும் பொருட்டும், அர்ச்சுனன் ஏறியுள்ள தேரின்கண் பாகனாய் இருந்து, பொன் மயமாய், வேத நாதத்துடன் கூடிய சங்கத்தை ஒலித்தவரும், அலைகள் மோதுகின்ற கடலின் நடுவே கிடக்கின்ற, உலகத்தை ஓர் அடியால் அளந்து மூடிய சிறந்த திருவடியை உடையவரும், கருட வாகனரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

ஒளி பொருந்திய மாலையை அணிந்த மார்புடன் கூடிய ப்ரபுட தேவ மகா மன்னனுடைய உள்ளமும் களிக்கும்படி எழுந்தருளி உள்ள, தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

அதல உலகத்தில் வாழும் ஆதிசேடன் தனது பணாமகுடங்களை விரித்து ஆடவும், மண்ணுலகமும் மகா மேருமலையும் மிகவும் அசைந்து ஆடவும்,  சிவத்திற்கு அன்னியம் இல்லாதவளாகிய காளிதேவி ஆடவும், அக்காளிதேவியுடன் அந்நாளில் உலகமெல்லாம் அதிரும்படி கரசரணங்களை வீசி வாது புரிந்து திருநடனம் புரிந்த சிவமூர்த்தி இடப வாகனத்தின் மீது ஏறி ஆடவும், தேவரீரது பக்கத்தில் பூதவேதாளங்கள் யாவும் ஆடவும், இனிமை மிக்க வீணாகானம் புரியும் கலைமகள் ஆடவும்,  தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவன் ஆடவும், உமது திருவடியைச் சார்ந்துள்ள தேவலோக வாசிகளாகிய அமரர்கள் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரைக் கோயிலில் வாழும் உமது  மாமியார் ஆகிய இலக்குமி தேவி ஆடவும்,  நீண்ட வடிவம் எடுத்த உமது மாமனார் ஆகிய நாராயணமூர்த்தி ஆடவும்,  நீ ஏறிவரும் மயில் வாகனமும் ஆடவும், அதன்மீது தேவரீரும் ஆடி வந்து அருள வேண்டும்.


விரிவுரை


பாடலின் தோற்றம் ---

இத் திருப்புகழ் அருணகிரிநாதருடைய வரலாற்றின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது.

திருவண்ணாமலையில் அருக சமயத்தைச் சேர்ந்த சம்பந்தாண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் அருணகிரிநாதருடைய அளவற்ற புகழைக் கண்டு, அழுக்காறு கொண்டான். அப்பொழுது திருவண்ணாமலையை அரசு புரிந்த பிரபுடதேவ மன்னன் முன் இருவருக்கும் வாது நிகழ்ந்தது.  தனது வழிபடு கடவுளைச் சபையில் வரவழைத்துக் காட்டுவதாகவும், அதுபோல் அருணகிரியாரும் காட்டுதல் வேண்டும் என்றும் சம்பந்தாண்டான் வாதிட்டான்.  அருணகிரிநாதர் அதற்கு இணங்கினார்.

இரவு முழுவதும் அபிசார ஓமம் புரிந்தும், வாய் வருந்த அழைத்தும் சம்பந்தாண்டானது வழிபடு மூர்த்தியாகிய காளிதேவி வந்தாரில்லை.  அதனால் சம்பந்தாண்டான் படுதோல்வி உற்றான்.  பிரபுடதேவ மன்னன், தனது அமைச்சர் புரோகிதர் அறிஞர் முதலியோர் சூழ திருக்கோயிலுக்குச் சென்று, ஆங்கு திருக்கோபுரக் குடவரையில் தியானபரராக வீற்றிருக்கும் அருணகிரியாரை அஞ்சலி செய்து, "அருட்கொண்டலே! சம்பந்தாண்டான் காளிதேவியைத் தருவித்துக் காட்டுந் திறனின்றி தோற்றனன். கருணை கூர்ந்து, எந்தை கந்தவேளை வரவழைத்து அடியேங்கள் உய்யும் பொருட்டுக் காட்டியருள வேண்டும்" என்று வேண்டி நின்றனன்.

அருணகிரிநாதர், "கந்தவேளை எந்த வேளையும் காணலாம். எங்கே நினைக்கினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பன்" என்று கூறி, சிவகங்கையில் முழுகி, சிவகங்கைக் கரையில் இருக்கும் பதினாறுகால் மண்டபத்தின் ஈசானத்தூண் அருகில் நின்று, "ஐயனே! முன் ஒரு முறை பிரகலாதர் பொருட்டு, திருமால் தூணில் இருந்து வெளிப்பட்டனர். இப்போது அடியேன் பொருட்டுக் கருணை வடிவான தேவரீர் இத் தூணில் இருந்து வெளிப்பட்டுக் காட்சி தரவேண்டும்" என்று துதித்து, "எந்தத் திகையினும்”, "கொடிய மறலியும்”, "இருவர் மயலோ" என்ற திருப்புகழ்ப் பாக்களைப் பாடி, இறுதியில் ஆண்டவன் இன்ன இன்ன மூர்த்திகளுடன் ஆடிக்கொண்டு வந்து காட்சி தரவேண்டும் என்று, "அதல சேடனார் ஆட" என்ற இத் திருப்புகழைப் பாடினார்.  அவ்வண்ணமே ஆறுமுகப் பரமன் வந்து காட்சி தந்து அருளினார்.

"சயிலம் எறிந்தகை வேற்கொடு

  மயிலினில் வந்து எனை ஆட்கொளல்

  சகம் அறியும்படி காட்டிய ....குருநாதா.." --- (அரிவையர்) திருப்புகழ்.

என்று அடிகளார் பாராட்டினார்.


அதல சேடனார் ஆட ---

அதல உலகிலே வாழுகின்ற அறிவின் மிக்க ஆதிசேடன் தேவரீருடைய ஆறு திருமுடிகள் மீது வெயில் தாக்காவண்ணம் ஆயிரம் பணாமகுடங்களை விரித்து, ஆயிரம் நாகரத்தினங்களும் ஆயிரம் சிறு ரத்தின தீபங்களாக வரிசையாக ஒளி செய்ய இனிது ஆடிக் கொண்டு வரவேண்டும்.  அறிவின் மிக்கவராதலின் சேடன் என்று வாளா கூறாமல், "சேடனார்" என்று கூறியருளினார்.  

அறிவிலே சிறந்தவர் சேடனார் என்பதனை, ஆதிசேட அவதாரமாகிய பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் செய்ததனால் அறிக. பாணினி செய்த வியாகரணத்திற்குப் பாஷ்யம் எழுதியவரும் பதஞ்சலியே.

இராமலிங்க அடிகளின் அறிவின் திறத்தை நோக்கி ஒரு புலவர் கூறும் துதிப்பாடலிலும் ஆதிசேடனைச் சிறப்பித்து இருப்பதைக் காண்க.


"அகத்தியனோ வால்மிகியோ ஆதிசேடன் தானோ

மகத்துவம்ஆர் சம்பந்த மாலோ --- சகத்துஇலகு

சச்சிதா னந்தத்தின் தண்ணளியோ என்என்பேன்

மெச்சுமதி ராமலிங்க வேள்."


அகில மேரு மீது ஆட ---

அகிலம் - பூமி. பூமியும் மேருவும் ஆடவேண்டும் என்கின்றார்.  யாண்டும் நீக்கமற நிறைந்த நிமலன் ஆடுவதனால் மண்ணும் மலையும் ஆடும் என்பது கருத்து. சராசரங்கள் ஆட, அவன் ஆடுகின்றான்.


அபின காளி தான் ஆட ---

பின்னம் - வேற்றும். அபின்னம் - வேற்றுமை இன்மை.  சிவத்துடன் வேறுபடாத காளி. எந்தக் காளி முருகவேள் உடனே வருவதற்கு, சம்பந்தாண்டான் வேண்டிய வரத்தினால், சிறிது தடை புரிந்தனளோ, அந்தக் காளியும் ஆடிக் கொண்டு வருக.

"கங்காளருக்கு அபின்னமாய சங்கரி" என்பார் பாம்பன் சுவாமிகள்.

அவளோடு அன்று அதிர வீச வாதாடும் விடையில் ஏறுவார் ஆட ---

அந்தக் காளி ஆடினால் உலகமெல்லாம் அழியும். அதனால், முன்னொரு நாள் திருவாலங்காட்டிலே அவளுடன் கண்ட தாண்டவம் ஆடி, அவள் தருக்கைச் சிவபெருமான் அடக்கி அருளினார்.  எனவே, இப்போது காளியாடும் பொழுது,  அவள் நடனத்திற்கு இணங்க நடராஜமூர்த்தியும் ஆடிக்கொண்டு வருவாராக.

சிவபரம்பொருள் அதிர வீச ஆடுவது பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் பாடுமாறு காண்க.

"முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வன் நீ, முழங்கு அழல்

அதிரவீசி ஆடுவாய், அழகன் நீ, புயங்கன் நீ,

மதுரன் நீ, மணாளன் நீ, மதுரை ஆல வாயிலாய்,

சதுரன் நீ, சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே."


அருகு பூதவேதாளம் அவை ஆட ---

இரைவனுடைய அழகிலே பூதவேதாளங்கள் இருந்து, இறைவனுடைய கீதங்களை ஓதும். இசையுடன் பாடும். புகழை முழக்கும். சங்கீதக் கருவிகளை ஒலிக்கும்.

அருகிலே பூதவேதாளங்கள் ஆட, சிவபரம்பொருள் ஆடுவது குறித்து திருஞானசம்பந்தப் பெருமான் பாடுமாறு காண்க.

"ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து

கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே

மான் அடைந்த நோக்கிகாண மகிழ்ந்து எரி ஆடல் என்னே?

தேன் அடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே."


பூதவேதாள வகுப்பில் அருணகிரிநாதப் பெருமான் பாடியருளுவதைக் காண்க.

"உருவம் இருள்எழ எயிறு நிலவுஎழ

    உலகு வெருவர அசைய வருவன, 

உடைய நாயகி கண்டும கிழ்ந்திட

    நடைவி நோதவி தம்புரி பந்திய 

ஒக்கலைவி டாதுஅழுது அரற்றுபா லர்க்குமிக

    உச்சிவெடி யாதுநிணம் மெத்தவே தப்புவன,

உங்குக்கு இங்குவிட்டு ஆழி நான்கினும்

    ஒன்றுக்கு ஒன்றுஅடி பாய்தல் காண்பன, 

யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை

    ஒட்டமொடு ஒற்றைஇ ரட்டைபி டிப்பன,


யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய

    மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ 

உவணநிரை கொண்டிடும் செங்காவ ணத்திடையில்

    உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன, 

உமிழ்குருதி ஆறுஅடைப டக்குறடு அடுக்கிஅதில்

    உபவனமொர் ஏழையுமு றித்துஅருகு ஒழுக்குவன,  

உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல்

    உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன, 

ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்

    ஓரொர்பேய் நீள்கடை வாயில் அடங்குவ, 


உடலில் நிசிசரர் மவுலி ஒலியலும்

    உதடு மலைவன, பதடி முலையின, 

உததி எழும் அடங்க உறிஞ்சியும்

    உதர ஆரழல் நின்றுகொ ளுந்துவ, 

உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும்

    ஒற்றிஇரு தோள்கொடுப றித்திடாது அப்புவன,  

ஒன்றித் திண்குரல் கூகை பாம்பொடு

    வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன, 

ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை

    விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன, 


யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ

    ஓடைமத தந்திவயி றூடுஇனிது உறங்குவன,

உசிதபிசி தங்கொணர்ந்து இங்கேற விற்றுமென

    மதமலைஎ லும்புகொண்டு அங்காடி கட்டுவன,  

உதிரநிண வாள்பெருக ஒட்டுவன வெட்டுவன,

    உடலின்நடு ஊடுருவ முட்டுவன தட்டுவன,

ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு

    ஒடியவு ழக்கிவ ழுக்கி உருட்டி வீழ்வன,

ஊசலார் வார்குழை ஓலை இடும்படி

    ஓதுசா மீகர நேமி பிடுங்குவ, 


கரணம் இடுவன, குணலை இடுவன,

    கழையை நடுவன, பவுரி வருவன, 

ககன கூடம்உ டைந்துவி ழும்படி

    கதறி வாய்அனல் கண்கனல் சிந்துவ, 

கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித

    சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக

கண்டச் சம்பதிப் பேத மாம்பல

    கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி 

கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண

    சச்சரி மட்டிசை ஒற்றிஅ றுப்பன, 


காயெரிய பங்கியொடு சேகரமி குந்துஅசைவ,

    காதுபடு சங்கவள மாலிகைபு னைந்துஇசைவ,  

கருணைய திகந்துவந்து ஒண்கோகு லப்பெரிய

    கருமுடியொ டும்படுங் கங்காளம் ஒத்துவன,

கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்குஇசைய

    நடைநவிலு பாவனை உதிக்குநட வித்தையின,  

கடகம் அடுத்த இடக்கை வலக்கை வாளின,

    கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ,

காலமா றாத வராளிசி கண்டிகை

    பாலசீ காமர மானவி பஞ்சிகை


கவுட பயிரவி லளிதை கயிசிகை

    கவுளி மலகரி பவுளி யிசைவன,

கனவ ராடிய ரும்பட மஞ்சரி

    தனத னாசிவி தம்படு பஞ்சமி

கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்துஅடைவில்

    உச்சமது சாதிகம் எடுத்துமேல் எட்டுவன,

கஞ்சக் கஞ்சநல் தேசி ராஞ்சிகு

    றிஞ்சிப் பண்குறித் தியாழை ஏந்துவ,

கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை

    மத்தளி கொட்டிய முற்றும் அடிப்பன,  


கார்எனமு ழங்குகுரல் ஏறுதுடி சந்த்ரவளை

    வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி

கரடிபறை அங்குஅனந் தங்கோடி கொட்டுவன,

    முறைமுறை கவந்தநின்று ஒன்றோடு கிட்டுவன,  

கசரதப தாகினிஅ ரக்கர்துணி பட்டுவிழு

    களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன,  

கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை

    நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய, 

காதநூ றாயிர கோடி வளைந்தன,

    பூதவே தாளம் அநேகவி தங்களே. " 


மதுர வாணி தான் ஆட ---

முருகவேள் திருநடனம் செய்துகொண்டு எழுந்தருளி வரும்பொழுது, வீணை முதலிய கானங்கள் இன்றியமையாதனவாகும். ஆதலின் கலைமகள் மகரயாழ் வாசித்துக் கொண்டு அவளும் ஆடிக் கொண்டு வருக.


மலரில் வேதனார் ஆட ---

வேதகீதங்களை இனிது ஓதிக்கொண்டு பிரமதேவர் ஆடிக் கொண்டு வருக.


மருவு வான் உளோர் ஆட ---

மருவுதல் - இறைவனுடைய திருவடியைச் சார்தல்.

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்

மரகத மயூரப் பெருமாள்காண்."

என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறுகின்றனர்.

தேவர்கள், தேவதேவதேவாதி தேவப் பெருமாளாகிய முருகவேளுடைய திருவடியைச் சார்ந்தவர்கள். ஆதலினால், இந்திரன் முதலிய இமையவர்கள் ஆடிக்கொண்டு வருக.


மதி ஆட ---

பதினாறு கலைகளுடன் கூடிய முழுமதி இனிய ஒளியை வீசிய வண்ணம் ஆடிக்கொண்டு வருக.


வனச மாமியார் ஆட ---

மருமகன் ஆடிக்கொண்டு வருவதைக் கண்டு மகிழ வேண்டியவள் மாமியே ஆதலினாலும், இலக்குமி இல்லாத இடம் சிறப்பு அடையாது ஆதலினாலும், திருமகள் ஒருபுறம் ஆடிக்கொண்டு வருக. வனஜம் என்ற சொல் வனசம் என்று வந்தது. வனம் - நீர்.  ஜம் - பிறப்பு.  நீரில் பிறப்பதனால் தாமரைக்கு வனஜம் என்ற பேர் உண்டாயிற்று.


நெடிய மாமனார் ஆட ---

திருமாலுக்கு நெடியோன் என்ற ஒரு பேர் உண்டு.


சகல வுலகமு நிலைபெற நிறுவிய

  கனக கிரிதிரி தரவெகு கரமலர்

    தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்ற

அமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்

  அகில புவனமு மளவிடு குறியவன்

    அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே...   ---  (குமர குருபர) திருப்புகழ்.

காளிங்கன் மீது நின்று திருநடனம் புரிந்தவராதலின், அவரும் மருகராம் முருகருடைய திருநடனத்தைக் கண்டு மனமகிழ்ந்து ஆடிக்கொண்டு வருவாராக.


மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும் ---

பறவைகளுள் ஆடுகின்ற வன்மை மயில் ஒன்றுக்கே உண்டு.  தோகையை விரித்து ஓகையுடன் மயில் ஆடும்பொழுது, அழகு ஒளிவிட்டுத் திகழும். மயிலும் ஆட, அதன் மீது குழந்தைக் குமரவேளும் ஆடும்பொழுது அக்காட்சியின் எழிலை யாரே அளவிட வல்லார். அத் திருக்காட்சியை நேரே காணும் பேறு பிரபுடதேவ மன்னன் பெற்றனன்.

இவ்வாறு அருணகிரியார் பாடியவுடன், முருகவேள் இத்தனை பரிவாரங்களுடன் வந்து பிரபுட தேவன் முதலிய அனைவரும் காணக் காட்சி அளித்தனர்.


கனக வேத கோடு ---  

கோடு - சங்கம். மூங்கில்.

மாசேனை பொடியாக சங்கத்தையும், கதறு காலி போய் மீள புல்லாங்குழலையும் திருமால் ஊதினார்.  கோடு என்ற சொல் இரட்டுற மொழிதல் என்ற உத்தி என உணர்க.

உலகமூடு சீர் பாத ---

மாவலிபால் மூவடி மண் கேட்டு, திரிவிக்கிரம வடிவு கொண்டு, உலகை எல்லாம் தனது திருவடியால் மூடி திருமால் அளந்தனர்.

….. ….. ….. மாவலிபால்

மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச்

சேவடி நீட்டும் பெருமான்... --- கந்தர் அலங்காரம்.


உதய தாம மார்பான பிரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் ---

பிரபுடதேவன் அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணாமலையை ஆண்ட அரசன். இவன் பொருட்டு இறைவனை அருணகிரியார் சந்தச் சபையினில் வரவழைத்தனர்.

அக் காட்சியைக் கண்ட மன்னனுடைய உள்ளம் மகிழ்ச்சியின் மிகுதியால் ஆடியது.  ஈசான திசையில் உள்ள தூணில் இருந்து முருகவேள் வெளிப்பட்டுக் காட்சி அளித்தனர்.  ஆதலின் அத் தூணைக் கர்ப்பக் கிரகத்தில் அமைத்து ஒரு திருக்கோயிலை பிரபுடதேவ மன்னன் புதுக்கினன். அக்கோயில் திருவண்ணாமலையில் இன்றும் காண விளங்குகின்றது. சிவகங்கைக் கரையில் ஆயிரம் கால் மண்டபத்திற்குத் தென் திசையில் கம்பத்து இளையனார் கோயில் என்று, இது அன்பர்கள் அனைவரும் வழிபட மிக அழகாகத் திகழ்கின்றது.  திருவண்ணாமலைக் கோயிலில் நுழைந்துவுடன் முதலில் காட்சி அளிக்கின்றது.

உவணமூர்தி மாமாயன் மருகோனே, வாழ்தேவர் பெருமாளே, பிரபுடதே மாராயன் உளமும் ஆட, மயிலும் ஆடி, நீயாடி வரவேணும் என்று கொண்டு கூட்டிப் பொருள் செய்யினும் பொருந்தும்.


கருத்துரை

முருகா! பிரபுடதேவன் காண தேவரும் மூவரும் சூழ மயிலும் ஆட, தேவரீரும் ஆடி அருட்காட்சி தர வந்து அருளுவீர்.


No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...