பொது --- 1061. குருதி மூளை

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குருதி மூளை (பொது)


முருகா! 

ஞான வீட்டினை அருள்வாய்


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு

     குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்


குமிழி போல நேராகி அழியு மாயை யாதார

     குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்


பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்

     படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்


பரவு நாட காசார கிரியை யாளர் காணாத

     பரம ஞான வீடேது ...... புகல்வாயே.


எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான

     இமய மாது மாசூலி ...... தருபாலா


எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்

     இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே


அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக

     மதிர நாக மோரேழு ...... பொடியாக


அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட

     அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.


                          பதம் பிரித்தல்


குருதி, மூளை, ஊன், நாறு மலம் அறாத, தோல்மூடு

     குடிசை, கோழை மாசு ஊறு ...... குழி, நீர்மேல்


குமிழி போல நேர்ஆகி அழியும் மாயை, ஆதாரம்,

     குறடு பாறு நாய் கூளி ...... பலகாகம்


பருகு காயமே பேணி, அறிவு இலாமலே வீணில்

     படியின் மூழ்கியே, போது ...... தளிர்வீசிப்


பரவு நாடக ஆசார கிரியை ஆளர் காணாத

     பரம ஞான வீடு ஏது ...... புகல்வாயே.


எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான

     இமய மாது, மாசூலி ...... தருபாலா!


எழுமை ஈறு காணாதர் முநிவரோடு வானாடர்

     இசைகளோடு பாராட ...... மகிழ்வோனே!


அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோகம்

     அதிர நாகம் ஓர் ஏழு ...... பொடியாக


அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட

     அசுரர் மாள வேல்ஏவு ...... பெருமாளே.

பதவுரை

எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான --- நெருப்பான திருமேனியில், திருநீறு விளங்குகின்ற பரமர் ஆகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் வாழ்கின்றவரும்,

இமயமாது மாசூலி தரு பாலா --- இமயமலை மகளாகியவரும், சிறந்த சூலாயுத்ததை உடையவரும் ஆகிய உமாதேவியார் ஈன்ற குழந்தையே!

எழுமை ஈறு காண் நாதர் முனிவரோடு --- எழுவகைப் பிறவிகளின் முடிவையும் கண்டு உணர்ந்த தலைவர்கள் ஆகிய முனிவர்களும்,

வான்நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே --- வானில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பாராட்டுவதில் மகிழ்பவரே!

அரவினோடு மாமேரு --- பாம்பரசன் ஆகிய ஆதிசேடனோடு, சிறந்த மேருமலையும்,

மகர வாரி --- மகர மீன்கள் வாழ்கின்ற கடலும்,

பூலோகம் அதிர --- மண்ணுலகமும் அதிரும்படியாக,

நாகம் ஓர் ஏழு பொடியாக --- ஏழு மலைகளும் பொடியாக,

அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட --- பேய்களும், பூதங்களும், மாகாளியும் போர்க்களத்தில் கூத்தாட,

அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே ---   அசுரர்கள் மடியவும் வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை --- இரத்தம், மூளை, சதை ஆகியவற்றோடு தாநாற்றம் அறாத தோலினால் மூடப்பட்டுள்ள குடிசையும், 

கோழை மாசு ஊறு குழி --- கோழையும், பிற அழுக்குகளும் ஊறுகின்ற குழியும் ஆகிய இந்த உடல்,

நீர் மேல் குமிழி போல நேராகி அழியு(ம்) --- நீர் மேல் தோன்றுகின்ற குமிழி போல் உடனே அழியும்,

மாயை ஆதார(ம்) --- தோன்றி அழியக் கூடிய மாயா காரியம் ஆனது. 

குறடு --- இறைச்சி கொத்துகின்ற பட்டடை மரத்துண்டு,

பாறு நாய் கூளி பலகாகம் பருகு காயமே பேணி ---  பருந்துகளும், நாய்களும், பேய்களும், பல காகங்களும் பருகுகின்ற இந்த உடலைப் பாதுகாத்து,

அறிவிலாமலே --- அறிவு சிறிதும் இல்லாமல்,

வீணில் படியின் மூழ்கியே --- வீணாக இந்த உலக வாழ்வில் முழுகி இருக்கும் (அடியேனுக்கு)

போது தளிர் வீசிப் பரவு --- மலர்களையும், தளிர்களையும் தேவரீருக்கு இட்டு வழிபடுகின்ற, 

நாடக ஆசார கிரியையாளர் காணாத --- நடிப்பு ஒழுக்கத்தில் மிகுந்த கிரியைகளை உடையவர்களால் காணமுடியாத,


பரமஞான வீடு ஏது புகல்வாயே --- மேலான ஞானவீடு எது என்பதை உணர்த்தி அருள வேண்டும்.


பொழிப்புரை

நெருப்பான திருமேனியில், திருநீறு விளங்குகின்ற பரமர் ஆகிய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் வாழ்கின்றவரும், இமயமலை மகளாகியவரும், சிறந்த சூலாயுத்ததை உடையவரும் ஆகிய உமாதேவியார் ஈன்ற குழந்தையே!

எழுவகைப் பிறவிகளின் முடிவையும் கண்டு உணர்ந்த தலைவர்கள் ஆகிய முனிவர்களும், வானில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பாராட்டுவதில் மகிழ்பவரே!

பாம்பரசன் ஆகிய ஆதிசேடனோடு, சிறந்த மேருமலையும், மகர மீன்கள் வாழ்கின்ற கடலும், மண்ணுலகமும் அதிரும்படியாக, ஏழு மலைகளும் பொடியாக, பேய்களும், பூதங்களும், மாகாளியும் போர்க்களத்தில் கூத்தாட, அசுரர்கள் மடிய வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

இரத்தம், மூளை, சதை ஆகியவற்றோடு தாநாற்றம் அறாத தோலினால் மூடப்பட்டுள்ள குடிசையும், கோழையும், பிற அழுக்குகளும் ஊறுகின்ற குழியும் ஆகிய இந்த உடல், நீர் மேல் தோன்றுகின்ற குமிழி போல் உடனே அழியும். தோன்றி அழியக் கூடிய மாயா காரியம் ஆனது. இறைச்சி கொத்துகின்ற பட்டடை மரத்துண்டு. பருந்துகளும், நாய்களும், பேய்களும், பல காகங்களும் பருகுகின்ற இந்த உடலைப் பாதுகாத்து, அறிவு சிறிதும் இல்லாமல், வீணாக இந்த உலக வாழ்வில் முழுகி இருக்கும் அடியேனுக்கு மலர்களையும், தளிர்களையும் தேவரீருக்கு இட்டு வழிபடுகின்ற,  நடிப்பு ஒழுக்கத்தில் மிகுந்த கிரியைகளை உடையவர்களால் காணமுடியாத, மேலான ஞானவீடு எது என்பதை உணர்த்தி அருள வேண்டும்.


விரிவுரை


குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை --- 

இவ்வுடம்பை நிலைபேறு உள்ளதாகவும், மிகச் சிறந்த பொருளாகவும், அழகிய அற்புதப் பிண்டமாகவும் கருதி, உடம்பைப் பேணுவதிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்து, அவமே அழியும் அறிவிலிகள், தெளிந்து தேறி உடம்பின் அசுத்தத்தையும், நிலையின்மையையும் உணர்ந்து, உடம்பு உள்ள போதே உடம்புக்குள் உறையும் உத்தமனைக் காண முயற்சிக்க வேண்டும் என்ற குறிப்பில் நமது சுவாமிகள் உடம்பின் அருவருப்பைக் கூறுகின்றார்.

உதிரம், தசை, எலும்பு, தோல், நரம்பு, புழு, சீதம், குடல், கொழுப்பு, மயிர், மூளை முதலியவைகள் சேர்ந்து ஒரு உடம்பாக அமைந்துள்ளது.

இதன் அருவருப்பை நமது இராமலிங்க அடிகள் கூறுமாறு காண்க.


புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில் புகுந்து

நான் இருக்கின்ற புணர்ப்பும்

என்பொலா மணியே, எண்ணிநான் எண்ணி

ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு

மயங்கிஉள் நடுங்கி ஆற்றாமல்,

என்பெலாம் கருக இளைத்தனன், அந்த

இளைப்பையும் ஐய நீ அறிவாய். ---  திருவருட்பா.


கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து

தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்

ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,

மால் கொடுத்து, ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே. 

                                                            --- திருஞானசம்பந்தர்.

இருகால் கொடுத்து, இருபாலும் இருகை ஏற்றி, எலும்புகளாகிய கழிகளை நிரைத்து, இறைச்சியாகிய கூரை வேய்ந்து, உதிரமாகிய நீரால் தோல் படுத்துச் சுவர் எடுத்து, பொருத்தம் உடையதாக இரண்டு வாசலை அமைத்தும்,  அச்சுவர்களில் ஏழு பலகணிகளை வைத்தும் ஒரு வீடு கட்டி, அதில் ஆவியை வாழவைத்து, அதற்கு வேண்டிய செல்வமாக மால் (மயக்கம், காற்று, வேட்கை) கொடுத்தார் மாமறைக்காடனார்.


கோழை மாசு ஊறு குழி ---

கோழை - கபம். மாசு - அழுக்குகள். 


நீர் மேல் குமிழி போல நேராகி அழியு(ம்) --- 

"நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம்   

நீரில் சுருட்டும் நெடுந்திரைகள், - நீரில்   

எழுத்தாகும் யாக்கை, நமரங்காள்! என்னே   

வழுத்தாதது எம்பிரான் மன்று?"

என்பது குமரகுருபர அடிகள் அருளிய நீதிநெறி விளக்கம்.

ஆன்மாக்கள் இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதற்கு இளமைப் பருவம் வாய்த்தது. அதற்குச் சாதனமாக அமைந்தவை செல்வமும், உடம்பும். இளமைப் பருவத்தை அடைந்து, பொருளைத் தேடிப் பாடுபட்டு, தொகுத்து பொருளை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே, உடம்பை விடுகின்றோம். இளமை தோன்றி அழிவதால், நீரில் தோன்றும் குமிழியை இளமை என்றார். நீரில் அலைகள் தோன்றும் போது சிறிது சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, வரவரச் சுருங்குவது போல, செல்வமும் சிறிது சிறிதாக ஈட்டப்பட்டு, பின் பெருகி வளர்ந்து, இறுதியில் அழிந்து போவதால், அதை நீரில் தோன்றும் அலைகளைப் போன்றது என்றார்.  நீரில் எழுதிய எழுத்து, அப்போதே அழிவதால், உடம்பை நீரில் எழுதிய எழுத்து என்றார்.

புல்லறிவு படைத்தவர்கள் கண்டவுடனே மயங்குவது இளமையே என்பதால், அதனை முன்னே வைத்து, நீரில் உடனே தோன்றி மறையும் குமிழியைக் காட்டினார்.  குமிழியானது பளபள என மின்னிக் காணப்பட்டு, சிறிது நேரத்தில் பொட்டென அழிவது போல், இளமையும் தொடக்கத்தில் மிகவும் அழகு உடையதாய் இருந்து, சிறிது காலத்தில் அழிந்து ஒழிவதால், இளமையை நீர்க்குமிழி என்றார். 

இளமைப் பருவத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்குத் துணையாக அமைவது செல்வமே. ஆதலால், அதனை இளமையின் பின் வைத்து, காற்றின் வேகத்தால் சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, இறுதியில் ஒன்றும் இல்லாது அழிவதைப் போன்ற அலைகளைக் காட்டினார். நீரில் அலைகள் பலமுறையும் தோன்றி, அழிவதும் அல்லாமல், ஓரிடத்தில் நில்லாது, பல இடத்திலும் சென்று, மறிந்து மறிந்து விழுந்து அழிவதைச் செல்வத்துக்குக் காட்டினார்.

இளமை, செல்வம் இரண்டும் போன பின்பு உடம்பும் விழுவதால், அதனை நீர்மேல் எழுத்து என்றார். நீரில் எழுதிய எழுத்தானது எழுதிய போதே அழிந்து போகும். எழுதிய இடமும் தெரியாது. மக்கள் உடம்பும், விரைந்து அழியும் தன்மையை உடையது. அழிவதோடு அல்லாமல் இருந்த இடமும் தெரியாது ஒழியும்.

எனவே, இளமையில் கற்கவேண்டிய நூல்களைக் கற்று, நல்லறிவு பெற்று, முயன்று தேடிய செல்வத்தைத் தாமும் துய்த்துப் பிறர்க்கும் உதவி, அழிந்து போகக் கூடிய உடம்பால் ஆன பயனைப் பெற, இறைவனைத் தொழுது உய்யவேண்டும். 

1நிலையில்லாத இளமை, செல்வம், உடம்பு ஆகியவற்றைப் பெற்று, நிலையான இன்பத்தைத் தரக்கூடிய இறைவனைத் தொழுது உய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நீரில் குமிழி இளமை என்பதை, நாலடியார் பின்வரும் செய்யுளால் வலியுறுத்தும்.

"படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்

கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி, - தடுமாற்றம்

தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை

நேர்ப்பார் யார்? நீளி நிலத்தின் மேல்".

பெய்கின்ற பெருமழை நீரில் பலகாலும் தோன்றி மறைகின்ற நீர்க்குமிழிகளைப் போல், மனித உடலானது பலமுறையும் பிறந்து பறந்து இறக்கும் தன்மை உடையது. இதை உணர்ந்து, இந்த உலகில் பிறந்து பிறந்து தடுமாற்றத்தை அடைகின்ற நிலையை ஒழிக்கவேண்டும் என்னும் உறுதியான அறிவு உள்ள பெரியோருக்கு நிகரானவர்கள் இந்த உலகில் யார் இருக்கின்றார்கள். யாரும் இல்லை என்பது கருத்து.


மாயை ஆதார(ம்) --- 

உலகத்து உயிர்களும், உலகப் பொருள்களும் மாயா காரியமானவை.


பாறு நாய் கூளி பலகாகம் பருகு காயமே பேணி ---  

பாறு - பருந்து. கூளி = பேய்.

இந்த உடம்பு நிலையானது என்று எண்ணி, இதனை அருமையாக வளர்க்கின்றோம். பேணிப் பாதுகாக்கின்றோம். நிலையற்ற இந்த உடம்பு என்றாவது ஒருநாள அழிந்து விடப் போகின்றது. நாய், நரி, பருந்து முதலானவைகளுக்கு இரையாகப் போகின்றது என்றனர் முன்னோர். மண்ணுண்டு போகப் போகின்றது அல்லது எரியுண்டு அழியப் போகின்றது இந்த உடல்.


எரிஎனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும், இந்தமண்ணும் 

சரிஎனக்கு என்னும், பருந்தோ எனக்கு என்னும், தான்புசிக்க

நரிஎனக்கு என்னும்,புன் நாய்எனக்கு என்னும், இந் நாறு உடலைப்

பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறு எனக்கே" 


என்று பட்டினத்து அடிகளார் பாடுமாறு காண்க.


அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே --- 

மெய்யறிவு சிறிதும் இல்லாமல்,  படியில் - உலக வாழ்வில்.


போது தளிர் வீசிப் பரவு நாடக ஆசார கிரியையாளர் காணாத --- 

முன்னர் ஒரு திருப்புகழில் சரியையாளர் காண முடியாதது என்றார். இங்கே கிரியையாளர் காண முடியாதது என்கின்றார்.

ஆசாரம் - ஒழுக்கம். நாடக ஆசாரம் - நடிப்பான ஒழுக்கம். போல ஒழுக்கம்.

"நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து" என்பார் மணிவாசகப் பெருமான்.


எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மாசூலி தரு பாலா --- 

எரியின் மேனி -  "தழல்சேர்தரு திருமேனியர், சசிசேர்சடை முடியர்" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

நெருப்பான மேனியர் என்பார் பட்டினத்து அடிகள்.


வான்நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே --- 

இசை - புகழ். "இசைபட வாழ்தல்" என்பது திருக்குறள். 

'பாராட்ட' என்னும் சொல் 'பாராட' எனக் குறுகி வந்தது.


கருத்துரை

முருகா! ஞான வீட்டினை அருள்வாய்


No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...