பொது --- 1067. பருதியாய்ப் பனி

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பருதியாய்ப் பனி (பொது)


முருகா! 

தேவரீரது திருவடியை வழிபட்டு ஈடேற அருள்வாய்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்

     பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம்


பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி

     னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச்


சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட

     ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான


தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்

     சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ


திருத ராட்டிர னுதவு நூற்றுவர்

     சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத்


திலக பார்த்தனு முலகு காத்தருள்

     சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே


குருதி வேற்கர நிருத ராக்ஷத

     கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா


குலிச பார்த்திப னுலகு காத்தருள்

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


பருதியாய், பனி மதியமாய், படர்

     பாராய், வானாய், நீர், தீ, காலாய், ...... உடுசாலம்


பலவுமாய், பல கிழமையாய், பதி-

     னால் ஆறு ஏழா மேல் நாளாய், ...... ஏழ் உலகாகி,


சுருதியாய், சுருதிகளின் மேல் சுடர்

     ஆய், வேதா ஆய், மால் ஆய், மேலே ...... சிவம் ஆன,


தொலைவு இலாப் பொருள், இருள் புகாக் கழல்

     சூடா நாடா ஈடேறாதே ...... சுழல்வேனோ?


திருதராட்டிரன் உதவு நூற்றுவர்

     சேண் நாடு ஆள்வான், நாள் ஓர் மூவா ...... றினில் வீழ,


திலக பார்த்தனும் உலகு காத்து அருள்

     சீர் ஆமாறே தேர்ஊர் கோமான் ...... மருகோனே!


குருதி வேல்கர! நிருத ராட்சத

     கோபா! நீபா! கூதாளா! மா ...... மயில்வீரா!


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

திருதராட்டிரன் உதவு நூற்றுவர் --- திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதிகள் நூற்றுவரும்

சேண் நாடு ஆள்வான் நாளே ஓர் மூவாறினில் வீழ --- வீரசுவர்க்க பூமியை ஆளும்படியாக பதினெட்டு நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும்,

திலக பார்த்தனும் உலகு காத்தருள் --- சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளுகின்ற

சீர் ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே --- சிறப்புப் பொருந்துமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தய பெருமான் ஆகிய திருமாலின் திருமருகரே!

குருதி வேல்கர --- அரக்கர்களின் இரத்தத்தில் தோய்ந்த வேலைக் திருக்கரத்திலே ஏந்தியவரே!

நிருத ராட்சத கோபா --- அரக்கர்களைக் கோபித்தவரே!

நீபா கூதாளா --- கடப்ப மாலையையும், கூதாள மாலையையும் அணிந்தவரே!, 

மா மயில்வீரா --- அழகிய மயில் வீரனே,

குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே --- வச்சிராயுதத்தை உடைய அரசன் ஆகிய இந்திரனின் உலகத்தைக் காத்தருள் புரிந்த தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- செவ்வேள் பரமரே!

வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

பருதியாய் --- கதிரவன் ஆகி, 

பனி மதியமாய் --- குளர்ந்த சந்திரன் ஆகி, 

படர் பாராய் --- பரந்த பூமியாகி,

வானாய் நீர் தீ காலாய் உடுசாலம் பலவுமாய் --- ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நட்சத்திரங்கள் பலவுமாகி,

பல கிழமையாய் --- ஏழு கிழமைகள் ஆகி, 

பதினால் ஆறு ஏழா மேல் நாளாய் --- 14+6+7 ஆகிய 27 சிறந்த நட்சத்திரங்களாகி,

ஏழுலகாகி --- ஏழு உலகங்கள் ஆகி, 

சுருதியாய் --- வேதங்கள் ஆகி, 

சுருதிகளின் மேல் சுடராய் --- வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி,

வேதாவாய் --- பிரமதேவனாய்,

மாலாய் --- திருமால் ஆகி,

மேலே சிவமான ---  மேற்பட்ட மங்கலப் பொருளான சிவம் ஆகி,

தொலைவு இலாப் பொருள் --- அழிவற்ற பொருளாகி,

இருள் புகாக் கழல் --- அதன் அஞ்ஞான இருள் புகமுடியாத திருவடியை

சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ? --- அடியேனது முடிமேல் சூடாமலும்,  அதனை உள்ளத்தால் நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ?

பொழிப்புரை

திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதிகள் நூற்றுவரும் வீரசுவர்க்க பூமியை ஆளும்படியாக பதினெட்டு நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், சிறந்த அருச்சுனன் உலகை ஆண்டு காத்து அருளுகின்ற சிறப்புப் பொருந்துமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தய பெருமான் ஆகிய திருமாலின் திருமருகரே!

அரக்கர்களின் இரத்தத்தில் தோய்ந்த வேலைக் திருக்கரத்திலே ஏந்தியவரே! அரக்கர்களைக் கோபித்தவரே!கடப்ப மாலையையும், கூதாள மாலையையும் அணிந்தவரே!  அழகிய மயில் வீரரே!வச்சிராயுதத்தை உடைய அரசன் ஆகிய இந்திரனின் உலகத்தைக் காத்தருள் புரிந்த தலைவரே! கடவுளே! செவ்வேள் பரமரே! தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

கதிரவன் ஆகி, குளர்ந்த சந்திரன் ஆகி, பரந்த பூமியாகி, ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நட்சத்திரங்கள் பலவுமாகி, ஏழு கிழமைகள் ஆகி, வ14+6+7 ஆகிய 27 சிறந்த நட்சத்திரங்களாகி, ஏழு உலகங்கள் ஆகி,  வேதங்கள் ஆகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி, பிரமதேவனாய், திருமால் ஆகி, மேற்பட்ட மங்கலப் பொருளான சிவம் ஆகி, அழிவற்ற பொருளாகி, அதன் அஞ்ஞான இருள் புகமுடியாத திருவடியை அடியேனது முடிமேல் சூடாமலும்,  அதனை உள்ளத்தால் நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ?

விரிவுரை

இறைவன் எல்லாமாய் உள்ள நிலையை அப்பர் பெருமான் நின்ற திருத்தாண்டகம் என்னும் பகுதியில் அழகுபடக் கூறி உள்ளது காண்க.

"இருநிலனாய், தீயாகி, நீரும் ஆகி

இயமானன் ஆய், எறியும் காற்றும் ஆகி,

அருநிலைய திங்களாய் ஞாயிறு ஆகி,

ஆகாசமாய் அட்ட மூர்த்தி ஆகிப்

பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி,

நெருநலையாய், இன்றாகி, நாளை ஆகி,

நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே".

இதன் பொருள் ---

பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .


"மண்ணாகி, விண்ணாகி, மலையும் ஆகி,

வயிரமுமாய், மாணிக்கம் தானே ஆகி,

கண்ணாகி, கண்ணுக்கோர் மணியும் ஆகி,

கலையாகி, கலைஞானம் தானே ஆகி,

பெண்ணாகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி,

பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி,

எண்ணாகி, எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி,

எழும் சுடராய் எம் அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும், வயிரமாகியும், மாணிக்கமாகியும்,  கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும், நூலறிவு ஆகியும், பெண் ஆகியும், பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும், எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும், அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் , எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .


"கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி,

காவிரியாய், கால்ஆறாய், கழியும் ஆகி,

புல்லாகி, புதல் ஆகி, பூடும் ஆகி,

புரம் ஆகி, புரம் மூன்றுங் கெடுத்தான் ஆகி,

சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி,

சுலா ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,

நெல் ஆகி, நிலன் ஆகி,  நீரும் ஆகி,

நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

மலையாகியும், களர்நிலம் ஆகியும், காடு ஆகியும், ஆறு ஆகியும், வாய்க்கால் ஆகிய வழி ஆகியும், கடற்கரைக் கழி ஆகியும், புல் ஆகியும், புதர் ஆகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவு ஆகியும், சொல் ஆகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்கு வரவுக்கு வேண்டிய இடம் ஆகியும், நிலன் ஆகியும், நீர் ஆகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும், எம்பெருமான் நெடுகப் பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .


"காற்று ஆகி, கார்முகில் ஆய், காலம் மூன்றாய்,

கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,

கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல்களிறும் ஆகி,

குரைகடலாய், குரைகடற்கு ஓர் கோமானும் ஆய்,

நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி,

நீள்விசும்பாய், நீள்விசும்பின் உச்சி ஆகி,

ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி,

எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

காற்றாகியும் , கரியமேகம் ஆகியும், இறப்பு நிகழ்வு எதிர்வு எனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறு அணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவன் ஆகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .


"தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி,

திசை ஆகி, அத்திசைக்கு ஓர்தெய்வம் ஆகி,

தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி,

தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி,

காயாகி, பழமாகி, பழத்தில் நின்ற

இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி,

நீயாகி, நானாகி, நேர்மை ஆகி,

நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும், நுண்மை ஆகியும், நீண்ட ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .


"அங்கமாய், ஆதியாய், வேதம் ஆகி,

அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகி,

பங்கமாய்ப் பலசொல்லும் தானே ஆகி,

பால்மதியோடு ஆதியாய், பான்மை ஆகி,

கங்கையாய், காவிரியாய், கன்னி ஆகி,

கடலாகி ,மலையாகி, கழியும் ஆகி,

எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி,

எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களே அன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி (குமரித்துறை) போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும், ஏறு ஊர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .


"மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி,

மறிகடலும் மால்விசும்பும் தானே ஆகி,

கோதா விரியாய், குமரி ஆகி,

கொல்புலித்தோல் ஆடைக் குழகன் ஆகி,

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி,

யாதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி,

அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே."

இதன் பொருள் ---

மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும், ` யாது நிகழினும் நிகழ்க` எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும், நெருப்பின் நிறம் போலும் நிறம் உடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்


"ஆவாகி, ஆவினில் ஐந்தும் ஆகி,

அறிவு ஆகி, அழல் ஆகி, அவியும் ஆகி,

நாவாகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி,

நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி,

பூவாகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி,

புக்குளால் வாசமாய் நின்றான் ஆகி,

தேவாகித் தேவர் முதலும் ஆகிச்

செழுஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்ற வாறே.

இதன் பொருள் ---

பசுவும் பசுவினிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும், வேள்விக்கு உரியன அறியும் அறிவும், வேள்வித் தீயும், அத்தீயுள் பெய்யும் உணவும் ஆகியும், நாவும், நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்கு உரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


"நீர் ஆகி, நீள அகலம் தானே ஆகி,

நிழல் ஆகி, நீள்விசும்பின் உச்சி ஆகி,

பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி,

பெருமதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,

ஆரேனும் தன் அடைந்தோர் தம்மை எல்லாம்

ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்

பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி,

பரஞ்சுடராய்ச் சென்று அடிகள் நின்ற வாறே.

இதன் பொருள் ---

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னை அடைந்தார் யாராயினும் அவர் எல்லாரையும் ஆட்கொள்ள வல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும், புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக் குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப் பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும், விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்


"மால் ஆகி, நான்முகனாய், மாபூதம் ஆய்,

மருக்கமாய், அருக்கமாய், மகிழ்வும் ஆகி,

பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி,

பரப்பு ஆகி, பரலோகம் தானே ஆகி,

பூலோக புவலோக சுவலோகம் ஆய்,

பூதங்களாய், புராணன் தானே ஆகி,

ஏலாதன எல்லாம் ஏல்விப்பான் ஆய்,

எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்ற வாறே."

இதன் பொருள் ---

திருமாலும், நான்முகனும் ஆகியும்  பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும் ஆகியும், எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவ லோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்கு உரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

ஐம்முகச் சிவமும், அறுமுகச் சிவமும் ஒன்றே. ஆதலால், அப்பர் பெருமான் பாடிய அனைத்தும் முருகப் பெருமானுக்கும் பொருந்தும் என அறிக.


இருள் புகாக் கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ?  --- 

இருள் - அறியாமை, அஞ்ஞானம். அதனால் உண்டாகும் துன்பம்.


திருதராட்டிரன் உதவு நூற்றுவர்..... சீர் ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே --- 

பாரதப் போருக்கு முன்னர் கண்ணனின் துணை வேண்டி, அருச்சுனனும், துரியோதனனும் கண்ணனைக் காணச் சென்றனர். "போரில் ஆயுதம் எடுக்க வேண்டாம்"  என்னும் துரியோதனன் வேண்டுதலுக்குக் கண்ணன் சம்மதித்தான்.  அருச்சுனனை நோக்கி, "நான் போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆதலால், ஆயுதம் இல்லாமல் நான் உனக்குச் செய்யக் கூடிய உதவியைக் கேள்" என்றான். அருச்சுனன், கண்ணனைப் பணிந்து, "கண்ணா! நீ எனது தேரை ஓட்டினால், நான் எத்தகைய பகைவரையும் வெல்வேன்" என்றான். அவ்வாறே, கண்ணன் அருச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்து பாரதப் போரை முற்றுவித்தான். எல்லாம் வல்ல கண்ணன், தனது அன்பனாகிய அருச்சுனனது வேண்டுகோளுக்கு இணங்கி, தேரினைச் செலுத்திய எளிமையை அருணை வள்ளலார் இங்குக் கூறுகின்றார்.


"முடை கமழ் முல்லை மாலை 

முடியவன்தன்னை, 'போரில்

படை எடாது ஒழிதி!' என்று 

பன்னக துவசன் வேண்ட,

நெடிய மா முகிலும் நேர்ந்து, 

'நினக்கு இனி விசய! போரில்

அடு படை இன்றிச் செய்யும் 

ஆண்மை என்? அறைதி!' என்றான்."


"செரு மலி ஆழி அம் கைச் 

செழுஞ் சுடர் நின்று, என் தேரில்

பொரு பரி தூண்டின், இந்தப் 

பூதலத்து அரசர் ஒன்றோ?

வெருவரும் இயக்கர், விண்ணோர், 

விஞ்சையர் எனினும், என் கை

வரி சிலை குழைய வாங்கி, 

மணித் தலை துமிப்பன்!' என்றான்." --- வில்லிபாரதம்.


கருத்துரை

முருகா! தேவரீரது திருவடியை வழிபட்டு ஈடேற அருள்வாய்.


No comments:

Post a Comment

மனமே! இப்படி இருந்தால் எப்படி?

  மனமே! இப்படி இருந்தால் எப்படி? ----- பல படிகளில் ஏறிய பிறகே  உயர்ந்த மாடியை அடைய முடியும். முயற்சி மெல்ல மெல்ல அதிகமாக ஆக, அதனால் ஏற்படு...