சிவயோகிகள் காலத்தை வென்று இருப்பார்கள்

சிவயோகிகள் காலத்தை வென்று இருப்பார்

-----

உயிர் உடம்பை விட்டுப் போனால் மரணம் என்போம். இந்த உடம்பு இருக்கும் போதே சாவது ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில், "கோழை பலமுறை சாகின்றார்கள்" என்று சொல்வது வழக்கம். தனக்கு வருகிற துன்பத்துக்கு அஞ்சாமல், எதிர்த்து நின்று உறுதியோடு வாழ வகை தெரியாதவன் அச்சத்தினாலேயே ஒவ்வொரு கணமும் செத்துப் போகிறானாம். 'அவன் பயந்து பயந்து சாகிறான்'  என்று நாம் சொல்வதும் உண்டு. "அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே" என்பார் பாரதியார். பயம் உள்ளவனைச் செத்துப் போனவனுக்குச் சமானமாக ஏன் சொல்கிறோம்?

உடம்பு படைத்த அளவிலேயே ஒருவனை வாழ்கிறான் என்று சொல்ல இயலாது. பக்கவாதம் வந்தால் ஒருவனுக்குக் கை கால் சுவாதீனம் இல்லாமல் போய் விடுகின்றன. அவன் நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்தாலும் சுகமாக வாழ்ந்தான் என்று சொல்வது பொருந்தாது.  எனவே, வாழ்வது என்பது உயிரோடு இருப்பது அல்ல. எல்லா அங்கங்களும் குறைவறப் பெற்ற பயனை நன்றாக அனுபவித்தால் வாழ்வதாகச் சொல்லலாம். உடம்பை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ, அந்த வகையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. 

கை செய்ய வேண்டிய உத்தமமான வேலை எதுவோ அதைச் செய்தால்தான் கைகளைப் பெற்றதன் பயன். உடம்பிலுள்ள அங்கங்கள் எல்லாம் தத்தமக்கு உரிய ஒழுக்க முறையில் நின்று உத்தமமான செயல்களைச் செய்து வருதல் வேண்டும். உடம்பு இருந்தாலும், ஒருவனுக்குத் தீவினைப் பயனால் ஒரு கை குறையாக இருக்கிறது என்றால், மற்றவர்கள் இரு கையாலும் செய்யும் செயல்களை அவன் செய்ய முடியாது. கண் படைத்ததனால் உலகிலுள்ள பொருள்களின் வடிவம், நிறம், அழகான காட்சி ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து இன்புறுகின்ற அனுபவத்தை, கண் இல்லாதவன் பெற இயலாது. இறைவனுக்கு நல்ல அலங்காரம் செய்திருக்கிறார்கள் என்றால், காதாலே அந்தச் செய்தியைக் கேட்கலாம், கண்ணாலே கண்டு இன்புற முடியாது.  உயிரும் உடம்பும் ஒன்றி இருந்தால் மட்டும் வாழ்வதற்குப் போதுவதில்லை. உறுப்புக் குறைவாக இருந்தால் நன்றாக வாழ முடியாது. உறுப்புக்கள் எல்லாம் நன்றாக உள்ளவன் நன்றாக வாழ்கிறான் என்று சொல்லிவிட முடியுமா?

எல்லா உறுப்புக்களையும் கொண்டவன் வாழவும் வாழலாம்; தாழ்ந்தும் போகலாம். நல்ல மணம் வீசுகிற ஒர் இடத்திற்குப் போகிறவன் நறுமணத்தை அநுபவிக்கிறான். ஆனால் அவனது மூக்கே துர்நாற்றம் ஒன்றை நுகர்ந்தால், நாறுகின்றது என்று மூக்கைப் பிடித்துக் கொள்கின்றான்.  நல்லவற்றைப் புலன்கள் அனுபவிக்கும் போது மனிதன் இன்புறுகிறான். அல்லாதனவற்றை அனுபவிக்கும் போது வெறுப்புக் கொள்கிறான். ஆனால், விருப்பு வெறுப்பு இல்லாத நிலை ஒன்று உண்டு. விருப்பு என்றால் இலாபம். வெறுப்பு என்றால் நட்டம். இலாப நட்டம் இல்லாத சமநிலை ஒன்று உண்டு.

எல்லா அங்கங்களையும் முழுமையாகப் பெற்றிருப்பவன், அவற்றின் பயனை நன்கு உணர்ந்து, அவற்றுக்குரிய ஒழுக்க நெறியில் நின்று உத்தமமான காரியங்களைச் செய்யும்போது இலாபம் அடைகிறான். அதமமான வழியில் தன் உறுப்புக்களைச் செலுத்துகின்றவனுக்கு நட்டம் உண்டாகிறது. உறுப்பு இல்லாமையினால் உத்தமமான காரியத்தைச் செய்து இலாபம் அடையா விட்டாலும், அதமமான காரியத்தைச் செய்வதனால் வருகின்ற நட்டம் இல்லை. ஆகவே அவனுக்கு இலாபமும் இல்லை. நட்டமும் இல்லை. 

காது படைத்திருப்பதன் பயனாக நல்ல இனிமையான இறைவன் திருப்புகழைக் கேட்டால் இலாபம். கேட்கத் தகாதவற்றைக் கேட்டால் நட்டம். காது இல்லாதவனுக்கு எதையுமே கேட்க முடியாது. ஆகவே இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை.  வாய் படைத்திருப்பதன் பயனாக இறைவன் திருப்புகழைச் சொன்னால், பயனுள்ளவற்றைப் பேசினால் இலாபம். "இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு, இருள்சேர் இருவினையும் சேரா" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். இறைவன் புகழ் ஒன்றே பொருள்சேர்ந்த புகழ். சொல்லத் தகாதவற்றை, இனிமை அற்றவற்றை, பொய்யைச் சொன்னால் நட்டம். ஊமையால் எதையுமே சொல்ல முடியாது. ஆகவே இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை. 

ஆகவே, உறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற ஒருவன் எப்படி எப்படி அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறானோ அவ்வாறே நல்லன பொல்லாதன அமைகின்றன. காதில் அணிந்துகொள்ள வேண்டிய வயிரத்தை, வாயில் போட்டுக் கொண்டால் சிறந்த ஆபரணமாகத் திகழ வேண்டிய வைரம் நஞ்சாக மாறிவிடுகிறது. வயிரத்தை எப்படி உபயோகித்துக் கொள்ள வேண்டுமோ அப்படி உபயோகித்துக் கொள்ளாவிட்டால், அது கொல்லும் நஞ்சாகி விடுகிறது. 

ஞானேந்திரியங்கள் எனப்படும் அறிவுக் கருவிகள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் என்று சொல்லப்படும் தொழில் கருவிகள் ஐந்தும், ஆகப் பத்துக் கருவிகள் சேர்ந்த உடம்பு ஒரு கோட்டையைப் போன்றது. உயிர் என்ற அரசன் வாழ்வதற்காக இந்த உடம்பாகிய கோட்டையை, நாம் முற்பிறவிகளில் செய்த வினைப் பயனுக்கு ஏற்பப் படைத்துத் தந்திருக்கிறான் இறைவன். இந்த அற்புதமான கோட்டைக்கு ஒன்பது வாசலை வைத்தும் அனுப்பி உள்ளான். இந்தக் கோட்டையிலிருந்து ஆட்சி செய்யும் ஆன்மா என்னும் அரசனுக்கு, இரண்டு மந்திரிகள். ஒருவன் நல்ல மந்திரி. மற்றொருவன் கெட்ட மந்திரி. மனம் என்பது கெட்ட மந்திரி. புத்தி என்பது நல்ல மந்திரி. அரசன் எவ்வளவு திறமை உடையவனாக இருந்தாலும், தானே ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. மதிமந்திரிகள் மூலம்தான் செய்வான். மந்திரிகளின் அறிவைத் தனது அறிவுக்குத் துணையாகக் கொண்டவன் நல்ல அரசன். மந்திரியின் அறிவையே தன் அறிவாகக் கொள்ளுதல் கூடாது. சிறந்த அரசன் தனது அறிவாற்றலால் சிந்தித்து, மந்திரிகளோடும் ஆராய்ந்து, தான் செய்ய நினைத்த காரியம் சிறந்தது என்று முடிவு கண்டால், அதைச் செய்வான். செய்யத் தகாதவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவான். 

சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமபிரான், இராவணனோடு போர் புரிவதற்காகக் கடலைத் தாண்டிச் சென்றார். விபீடணன் வந்து இராமபிரானைச் சரண் அடைந்தான். சரண் அடைந்த அவனைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது அவருடைய எண்ணம். இருந்தாலும் அமைச்சர்களின் கருத்தையும் அறிய வேண்டும் என்று எண்ணினார். தம் கட்சியில் புதிதாகச் சேர்த்துக் கொள்ள விரும்புகிற விபீடணன், பகைவர்கள் கட்சியிலிருந்து வந்தவன்.  இராவணனுடைய சொந்தத் தம்பி. அவனைப் பற்றி எதுவுமே தெரியாதபோது அவனை ஏற்றுக் கொள்ளலாமா? இதைப் பற்றி விவாதிக்க மந்திரி சபையைக் கூட்டி ஆலோசித்தார். மந்திரிகளுக்கு மதிப்பு வைத்து அவர்களுடைய அறிவைத் தம் அறிவுக்குத் துணையாகக் கொண்டார். அவருக்கு நல்ல மந்திரியாக அனுமன் வாய்த்திருந்தான். 

ஆன்மாவாகிய அரசன் புத்தி, மனம் என்ற இரண்டு மந்திரிகளைக் கொண்டு எப்பொழுதும் வேலை செய்கிறான். புத்தி என்ற நல்ல மந்திரியின் வேலை அதிகமாக இருந்தால் உருப்படலாம். மனம் என்ற கெட்ட மந்திரியின் வேலை அதிகமாக இருந்தால் உருப்படாமல் போகலாம். புத்தி அதிகமாக வேலை செய்தால், மனம் புத்திக்கு அனுகூலமாக இருக்கும். மனத்தின் ஆற்றல் கூடுதலாக இருந்தால் புத்தி மடங்கிவிடும். 

உடம்போடு வாழ்கின்ற வாழ்க்கையில் புத்தி என்ற மந்திரியின் துணை, ஆன்மா என்ற அரசனுக்கு எப்பொழுதும் இருந்தால் உடம்பாகிய கோட்டைக்குள் இருக்கும் இந்திரியங்கள் எல்லாம் தத்தமக்குரிய நெறியில் நின்று ஒழுக்கம் மிக்க காரியங்களையே செய்யும். கோட்டைக்குள் பகைவர்கள் நுழைந்தால், நுழைய முடியாதபடி தாக்கி அரசனுக்கு எவ்விதமான ஊறும் வராதபடி காப்பாற்றுவான். 

நமக்குக் கிடைத்த இந்த உடம்பு சித்தர்களுக்குக் கிடைத்தது போல நீண்ட நாள் வாழும் உடம்பு அல்ல. தேவர்களுக்குக் கிடைத்துள்ள ஒளிமிக்க உடம்பும் அல்ல. வேதநூல் பிராயம் நூறு என்பார்கள். ஒரு மனிதன் நூறு ஆண்டு வாழலாம் என்று சொன்னாலும், குறுகிய காலமே வாழமுடியும். மிகக் குறைந்த காலத்துக்கு, மிகக் குறைபாடு உள்ள உடம்பைப் படைத்திருக்கும் மனிதர்களில் நல்லவர்கள், அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளாகவே செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்கிறார்கள். ஒருவேளை கூட வாழத் தெரியாதவன், "நான் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவோ காரியம் செய்து விடுவேன்' என்பான். தான் வாழும் ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ளதாகக் கழிப்பவன் நன்றாக வாழ்பவன்.

"ஒருபொழுதும் வாழ்வது அறியார், கருதுப 

கோடியும் அல்ல பல" 

என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு.

நமக்குக் கிடைத்திருக்கும் இந்த உடம்பு சில வாழ்நாளையும், பல பிணிகளையும் உடையது. "சின்னாள் பல்பிணி" என்பர் சான்றோர். பல குறைபாடுகளைப் பெற்றது. விரிந்து கொண்டே போகின்ற ஆசைகளின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம் வாழ்நாளின் அளவு மிகமிகக் குறைவு. அதற்குள்ளேயே, செய்ய நினைக்கிற காரியங்களில் ஒரு பகுதியையாவது செய்துவிட வேண்டும். உள்ளே போய் வருகின்ற காற்று எந்தக் கணமும் சுழல் மாறிப் போய் விடும். ஞானிகள் பலர் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது நமக்குத் தெரியாதது அல்ல. நமக்குத் தெரியாததை எவ்வளவு பேர் சொன்னாலும் விளங்காது. சாப்பிட வேண்டும் என்பது தெரிந்தும், மறந்து போய் உட்கார்ந்திருக்கிற தன் குழந்தையிடம் தாய்,  'நேரமாகி விட்டது; குளித்துவிட்டுச் சாப்பிட வா' என்று நினைப்பூட்டுவது போல, ஞானிகள் நமக்கு மரணம் உண்டு என்பதை நினைப்பூட்டுகிறார்கள். 

நம் மனம் பற்றுவதைப் பற்றிக் கொண்டே இருக்கும். ஒருவன் சொற்பொழிவு நடக்கிறதென்று தெரிந்து உள்ளே வந்து உட்கார்ந்தால், சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, அவன் மனம் தினமும் இங்கே வந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டுமென்று விரும்பும். ஆனால், திரையரங்குப் பக்கம் போனால் தினமும் சினிமாவுக்குப் போக வேண்டுமென்று அதைப் பற்றிக் கொள்ளும். இப்படிப் பற்றிக் கொண்டதையே பற்றுவது மனத்தின் சுபாவம். பற்றிக் கொள்வது நல்லதாக இருந்தால் நன்மை விளையும். தீயதாய் இருந்தால் தீமை உண்டாகும். படிக்கிற குழந்தை விஷமம் செய்து கொண்டே இருந்தால் கெட்டுவிடும் என்பதை உணர்ந்து, 'படி, படி’ என்று தாய் பிள்ளைக்கு அவன் செய்யவேண்டியதை நினைவூட்டுவாள். 

இறைவனை நினைந்து நினைந்து நெக்கு விட்டு உருகி வாழ வேண்டிய மக்கள், இறைவனை மறந்து செயல் புரிந்து வருவதைக் கண்டு அவர்களுக்கு இறைவனது நினைப்பு ஊட்டி,  "நீங்கள் விரைவில் இறந்து போய்விடுவீர்கள், உங்கள் வாழ்நாள் மிகக் குறைந்தது. இந்தக் குறுகிய காலத்தில் இறைவனது அருளைப் பெற வழி தேட வேண்டும்" என்று நினைப்பூட்டுகிறார்கள் அருளாளர்கள். 

நமக்குக் கிடைத்த காலத்தைத் தக்க வழியில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். காலத்தை நாம் கொல்ல வேண்டும், இல்லாவிட்டால் காலம் நம்மைக் கொன்றுவிடும்  என்பார்கள். அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற சில காலத்தில், ஒருவர் இளைத்துப் போவதையும், நோய்வாய்ப்படுவதையும், பின்பு மரிப்பதையும் கண்டிருக்கிறோம். காரணம், மிகவும் சுறு சுறுப்பாகப் பத்துமணி முதல் ஐந்துமணி வரையில் அலுவலகத்தில், தொழிலகத்தில் உழைத்துப் பழகிப்போன அவருக்கு, வீட்டில் அதே நேரத்தில் வேலை செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் உடம்பு வாழ்வதில்லை. அதற்கு வேலை கொடுக்க வழியில்லை. காலத்தைக் கொல்ல முடியாமல் தவிக்கிறார். காலன் அவரைக் கொன்று விடுகிறான். நாள் முழுவதும் உழைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது நேரம் போனது தெரியவில்லை. இப்போது வேலை இல்லை. 'பொழுது போகவில்லையே' என்று ஏங்குகின்றார். 

ஆரம்ப முதற்கொண்டே,  'நின்றும், இருந்தும், கிடந்தும் என்றும் சிவன்தாள் இணை நினைமின்கள்'  என்றபடி இறைவனுக்குத் தொண்டு என்ற வேலையை ஒழிவு ஏற்படும் நேரங்களிலே செய்து பழகியிருந்தாரானால்,  ஓய்வு பெற்ற காலத்தில் அந்த வேலையை முழுநேரமும் செய்வதற்கு அவரால் முடியும். வேலை இல்லையே என்று ஏங்க வேண்டிய அவசியம் இராது. வேலை செய்து கொண்டே இருந்த உடம்புக்கு வேலை இல்லை என்றால் அது வாடிவிடுகிறது. உள்ளம் வாடி விடுகிறது. உடம்போடு எத்தனை காலம் இருக்கின்றோமோ அத்தனை காலமும் அதற்கு வேலை கொடுக்கவேண்டும். 

மற்ற வேலைகளுக்கு இட எல்லை, கால எல்லை உண்டு. கால இட எல்லை இல்லாத பொருளை நினைக்கும் வேலைக்கும் கால எல்லையே இல்லை. இறைவனைத் தியானம் செய்யத் தலைப்பட்டால் காலம் போவதே தெரியாது. ஒய்வு பெற்ற பிறகு நினைக்கத் தொடங்கினால் எளிதில் அந்த முயற்சி பலிக்காது. மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோதே இந்த வேலையையும் இடையிடையே செய்து வந்தால், நீண்ட ஒய்வு கிடைக்கும்போது இதையே செய்யும் திறமை உண்டாகும். அதற்கு ஏற்ற பழக்கங்களை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன், முதல் பிடியை எடுத்து வாயில் போடும்போதே இறைவனை நினைக்கிறோம். எப்பொழுதுமே கடவுளை நினைந்து கொண்டிருக்கும் ஆற்றல் நமக்கு வராமல் இருக்கலாம். நாம் ஞானி அல்ல. ஆனால் நாம் செய்கின்ற காரியங்களிடையே அவனை நினைக்க வழி உண்டு. எந்தக் காரியம் செய்தாலும் இறைவனை நினைந்து தொடங்கும் வழக்கத்தை நம்மவர்கள் வைத்திருக்கிறார்கள். 

நம் நாட்டில் எல்லாக் காலத்திற்கும் பயன்படுகிற வேலை இறைவழிபாடு ஒன்றுதான். பலப்பல கோயில்களைக் கட்டி, ஆறுகால பூசையை ஏற்படுத்தி, அவரவர்களுக்கு எந்தக் காலத்தில் ஒழியுமோ அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க, துதிக்க வழிவகைளைச் செய்திருக்கிறார்கள். சொந்தமாக இறைவனை நினைந்து பாட நமக்கு ஆற்றல் இல்லை. பல்லாயிரக்கணக்கான அருட்பாடல்களை நாம் பாடி மகிழ, நமது பெரியவர்கள் அருளிச் செய்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒரு முறை படிப்பது என்றாலே நமக்கு ஆயுள் போதாது. இயன்ற அளவு அவற்றை ஆழ்ந்து ஓதி வந்தால், மன அமைதி உண்டாகும். 

இறைவன் படைத்து அருளிய உடம்பில் உள்ள உறுப்புக்களை அவன்பால் செலுத்தி, நல்லொழுக்க நெறியில் நிற்பதைச் சீலம் என்று சொல்வார்கள். உலகில் பிறந்துவிட்டதனால் கடமைகளைச் செய்ய வேண்டுமென்றாலும் அந்தக் கடமைகளுக்குப் புறம்பே நிற்கின்ற பரம்பொருளை எப்போதும் நினைப்பது நல்ல சீலம். வேலை இல்லாதபோது, பரம்பொருளையே அன்பர்கள் தியானம் செய்கிறார்கள். அத்தகையவர்கள் காலத்தை வீண் போக்குவது இல்லை. காலம் போகவில்லை என்று சொல்லாமல், காலம் போதவில்லையே என்பவர்களாக வாழ்கிறார்கள். 

நமது வீடுகளில் விழுகிற குப்பையை எடுத்துப் போய் வீதியில் கொட்டினால், துப்புரவுப் பணியாளர்கள் அவற்றைப் பெருக்கி எடுத்துப் போகிறார்கள். வீதியில் கொட்டாமல் அங்கே வைத்திருக்கிற தொட்டியில் கொட்டி வந்தால், அதில் உள்ள குப்பையை வந்து எடுத்துப் போகின்றார்கள். தொட்டியிலும் கொட்டாமல் வீட்டுப் புழைக் கடையில் குழிதோண்டிப் புதைத்து எருவாக்கிவிட்டால் அந்தத் தெருப் பக்கமே குப்பை வண்டிக்காரனுக்கு வேலை இல்லை. நாற்றம் அடிக்கும் குப்பை வண்டி அங்கே வராது. நமது உடம்பாகிய வீட்டில் மிகுதியான குப்பை கூளங்களை நாம் கொட்டி வைக்கிறோம். அதைச் சுத்தம் செய்ய எமன் வருகிறான். ஞானாக்கினியில் அந்தக் குப்பை கூளங்களை நாமே பொசுக்கிவிட்டால், அவன் வரவேண்டிய வேலை இல்லை. வீட்டிலும், தெருவிலும் குப்பை கூளங்களைப் போடாமல் தன் வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து விடுகிற காலம் ஒன்று இருந்ததை நம்மால் மறக்கமுடியாது. குப்பை வண்டிக்காரனுக்கு வேலை இல்லாமல் செய்வதைப் போல, எமனுக்கு வேலை இல்லாமல் செய்யும், உத்தியை அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்கின்றார். 

"நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் 

கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன 

சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே 

காலத்தை வென்று இருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே". 

என்பது அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒன்று.

வெறும் கர்மிகள் மரிப்பார். சிவயோகிகள் காலத்தை வென்று இருப்பார். சிவயோகிகள் குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார்கள். அந்தக் குருநாதன்  நீலமயில் ஏறிவரும் வள்ளி மணாளன். 

முருகனைச் சுமந்து வரத் தன் பெரிய மத்தகத்தைக் காட்டிக் கொண்டு வெள்ளை யானை காத்து நிற்கிறது. நான்கு கொம்புடைய யானை. அவனோ பறவையாகிய நீலச் சிகண்டியில் ஏறி வருகின்றான். அவனது தந்தையாகிய சிவபரம்பொருளும் அப்படித்தான் என்பதை, "அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட அயிராவணமே" என்பார் அப்பர் பெருமான். சிகண்டி = மயில். நீலச் சிகண்டி = நீலநிறம் பொருந்திய மயில். எந்த நேரத்திலும் முருகன் நீலச் சிகண்டியில் வருவான். எந்த நேரத்திலும் முருகன் கோலக் குறத்தியுடன் வருவான் என்கின்றார்.

முருகப் பெருமான் தனது இருதேவிமார்களாகிய வள்ளி, தேவயானையோடு வரமாட்டானா?  தேவயானை இந்திர லோகத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளைப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிய வாய்ப்பு இல்லை. வள்ளிநாயகி, நம்மைப்போல உலகத்தில் பிறந்து வாழ்ந்து, முருகனையே எண்ணி இருந்து, முருகனே வந்து அருளை வழங்கப் பெற்றவள். மிகப் பெரிய இடத்தில் உள்ளவர்கள், சாதாரணமாக எல்லோரிடத்திலும் கலந்து பழகமாட்டார்கள். தேவயானை அப்படிப்பட்டவள். ஆனால், வள்ளிநாயகி, இந்த பூவுலகில் அவதரித்து, எளிமையான குறவர்கள் கூட்டத்தில் வளர்ந்தவள். மக்கள் எல்லோரிடமும் பழகியவள்.

அவளைக் கோலக் குறத்தி என்கிறார். நாம் சரீர சம்பந்தமான அழகைப் பெரிதாக மதிக்கிறோம். ஆண்டவன் புற அழகை நினைக்கிறது இல்லை. குண அழகை, குணசௌந்தரியம் என்பர். வள்ளிநாயகியிடம் குண செளந்தரியத்தை முருகன் கண்டான். தன்னையே நாயகனாக வரித்து அவள் தவம் புரிந்துகொண்டு இருப்பதை, நாரதர் சொல்லக் கேட்ட முருகன், அவளது மன உறுதியைச் சோதிப்பவனைப் போல வேடனாக வந்தான். கிழவனாக வந்தான். அந்த உருவங்களை எல்லாம் எம்பெருமாட்டி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. "போ, என் அருகில் வராதே" என விரட்டி அடித்தாள். வள்ளிநாயகியின் கோபம் கூட முருகனுக்கு இன்பத்தைத் தந்தது. முருகன் தனது சோரூபத்தைக் காட்டியபோது, மனம் உருகி மகிழ்ந்தாள் வள்ளிநாயகி. 

அவள் எம்பெருமானை அடையாத வரையிலும் குறத்தியாக இருந்தாள். வனவிலங்குகளுடன் அவள் இருந்தாள். எம்பெருமானை அடைந்த பிறகு, நீலச் சிகண்டியின் மேலே எம்பெருமானின் அருகிலே கோலக் குறத்தியாக இருக்கிறாள். அடியார்களுக்கு அருள் புரியும் காலம் இதுதான் என்பது முருகனுக்கு இல்லை. அவன் எப்போதும் வருவான். அடியார்க்கு அருள் புரிவதுதான் அவனுக்கு வேலை. "தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே" என்று சிவபரம்பொருளைக் குறித்துப் பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

சிறந்த வள்ளல்களாக இருந்தவர்களுக்கு, இன்ன நேரத்தில் தான் கொடை வழங்க வேண்டும் என்ற வரையறை இல்லை. எந்த நேரத்தில் யார் வந்து தன்னை அடுத்து நின்றாலும், இல்லை என்னாமல் வாரி வழங்குபவர்கள் வள்ளல்கள். இக்காலத்தில் ஒருமுறை, ஒரு குறிப்பட்டி தொகையைக் கொடுப்பவர்களையே வள்ளல்கள் என்று போற்றித் துதிக்கும் அவலம் உள்ளது.

முருகன் வள்ளல்களில் பெரிய வள்ளல். அவனுக்கு இன்ன காலம் என்ற வரையறை இல்லை. அவனை எப்பொழுது வேண்டுமானாலும் பாடித் துதிக்கலாம். எதற்கும் ஒரு காலம் குறிப்பிட்டு வேலை செய்கின்ற நாம்,  இறைவனைத் துதிக்கவும் ஒரு குறிப்பிட்ட காலம் வேண்டுமே என எண்ண வேண்டாம். 

நீலவண்ணம் பொருந்திய மயிலின்மேல் ஏறும் பிரான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான். யார் அழைத்தாலும் வருவான். அவன் அருள் எல்லாக் காலத்திலும், எந்த இடத்திலும் கிடைப்பது மாத்திரம் அல்ல. எந்தப் பக்குவத்தில் இருந்தாலும் அவன் அருள் செய்வான். 'இறைவன் அருளைப் பெறுவதற்கு நான் எந்த விதமான பூசையையும் செய்யவில்லையே! எனக்கு அவன் அருள் எப்படிக் கிடைக்கும்?' என்று எண்ணவேண்டாம். நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்தக் கோலத்தில் இருந்தாலும், அவனை அழைத்தால் போதும். அவன் ஒடி வந்து நமக்கு அருள் செய்யக் காத்திருக்கிறான். 

"நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?" என்கின்றார் அருணகிரிதார் கந்தர் அனுபூதியில். முருகனே குருநாதன், உபதேசம் செய்கின்றவன். "தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி கோன் அன்று எனக்கு உபதேசித்து ஒன்று உண்டு”  என்று முன்பே சொல்லியிருக்கிறார். அந்தக் குருநாதன் வருவான், ஒரு சீலத்தைச் சொல்வான். 

குருநாதன் சொன்ன சீலம் அல்லது ஒழுக்கத்தை மெள்ளத் தெளிந்து அறிபவர் சிவயோகிகள். 'நமக்கு முருகன் ஒன்றும் உபதேசம் செய்யவில்லையே! அருணகிரிநாதர் அல்லவா உபதேசம் செய்கிறார்?' என்று நினைக்கலாம். கங்கை நீர் பலப்பல கால்வாய்களின் வழியாக வந்தாலும், அது கங்கை நீரே தவிர வேறு நீர் ஆகாது. கங்கைத் தண்ணீரை ஒரு சின்னச் செம்பில் மொண்டு கொண்டு வந்து வைக்கிறோம். எத்தனை காலம் ஆனாலும் அது கங்கையாகவே நம் வீடுகளில் இருக்கின்றது. உபதேசமும் அத்தகையதே. 

பரம்பரை பரம்பரையாக அது வந்து கொண்டிருக்கிறது. காலத்தினால் இடையறாமல் ஞானகுரு பரம்பரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. கங்கையில் இருக்கிற நீரும், நம் வீட்டில் இருக்கிற நீரும் ஒன்றே ஆவது போல, முருகன் எம்பெருமானுக்கு உபதேசம் செய்ய, அவர் முனி புங்கவர்களுக்கு உபதேசம் செய்ய, அவர்கள் வழிவழியாக மக்களுக்கு உபதேசம் செய்ய, அந்த உபதேச மொழி வந்து கொண்டே இருக்கிறது. குமரகுருபரன் சொன்ன மூல உபதேசமே இன்று பல கால்களாகப் பிரிந்து அருணகிரிநாதரைப் போன்ற அருளாளர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. 

"அருபரத்து ஒருவன் அவனியில் வந்து, 

குருபரன் ஆகி அருளிய பெருமையைச் 

கொள்கையைச் சிறுமை என்று இகழாதே" 

என்று மணிவாசகப் பெருமான் அற்புதமாகக் காட்டி அருள் புரிந்தார்.

எப்போதும் இறைவனை நினைத்து வாழ்வதே குருநாதன் சொன்ன சீலம். இந்தச் சீலத்தைக் கைக்கொண்டு வாழ்பவர்கள் சிவயோகிகள். சீலம் என்பது ஒழுக்கம். வாக்கினாலும் உடம்பினாலும் செயலாலும் அவ்வவற்றுக்கு உரிய ஒழுக்க நெறியில் நிற்பவர்கள் காலத்தை வென்று இருப்பார்கள். 

இரெயிலில் ஏறிப் படுத்த ஒருவர் பலநூறு மைல் தூரத்தை எவ்விதச் சிரமமும் இன்றி, கண்களில் எரிச்சல் இல்லாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டே கடந்து விடுகிறார். வாழ்க்கையிலே குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிந்த சிவயோகிகள் இறைவன் அருள் நினைவிலே தூங்கிக் காலத்தைச் சுகமாக வென்று, எவ்விதமான பயமும் துன்பமும் இன்றிக் காலனையே வென்றுவிடுகிறார்கள்.

யோகம் என்பது மனத்தை நிறுத்துதல். சித்த விருத்தியைத் தடுத்தல். வேகமாக ஓடுகின்ற உள்ளத்தை இறைவன் நாமத்தைச் சொல்லிச் சொல்லி நிறுத்தினால் அதுவே யோகம். "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க" என்றார் மணிவாசகப் பெருமான். குருநாதன் சொன்ன சீலத்தைக் கடைப்பிடித்து, மனத்தைத் தூயதாக வைத்து, அருள்நெறியில் ஒழுகுபவர்கள் சித்த விருத்தியை ஒழித்துக் காலத்தை வெல்வார்கள். 

குருநாதனிடம் உண்மையான பக்தியை வைக்காமல், அவன் சொன்ன சீலம் இன்னது என்று தெரியாமல், தமது மனம் போன போக்கிலேயே செய்பவர்கள் வெறும் கர்மிகள். அவர்களும் பயன் கருதிச் செயல் புரிவோரும் ஒரே வகையைச் சார்ந்தவர்களே. 

நீலமயிலின் மேல் ஏறிவரும் பெருமானும், எந்த வேளையிலும் அழகை உடைய குறத்தியாகிய வள்ளிநாயகியுடன் வருபவனுமாகிய குருநாதன் உலக மக்கள் உய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளிய ஒழுக்கத்தை மெல்லத் தெளிந்து உணர்பவர்களாகிய சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார்கள். அந்தச் சீலத்தை உணராமல் வெறும் கர்மத்தைச் செய்பவர்கள் மரிப்பார்கள். 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...