கற்ற மேலோர்க்கு எங்கும் பெருமை

 


கற்ற மேலோர்க்கு எங்கும் பெருமை

-----

உயிரானது, ஞானேந்திரியங்கள் அல்லது அறிகருவிகள் எனப்படும் ஐந்து பொறிகளைக் கொண்டு புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐம்புலன்களைப் பொதுவாக அறியும். புலன் என்றால், அறிவுடைமை, அறிவுக் கூர்மை, வெளிப்படக் காண்பது என்று பொருள். பொதுவாக அறிதல் என்றால் என்ன?  தொலைவில் ஒருவர் வருகிறார். முதலில் நம் கண்களுக்கு ஏதோ ஓர் உருவம் என்ற அளவில் மட்டுமே தெரிகிறது. பிறகு அவர் நெருங்கி வரவர அவரைப் பற்றிய விவரங்கள் தெரிகின்றன. அவரது பெயர் இன்னது என்று விளங்குகிறது. அவரது நிறம் தெரிகிறது. தலையில் உள்ள வழுக்கை தெரிகிறது. அவர் அணிந்துள்ள சட்டைப் பையில் வைத்திருக்கும் பணம் அல்லது படம் கூடத் தெரிகிறது. அவரது நடையின் வேகமும் தெரிகிறது. இக்காட்சியில் முதலில் நம் கண்களுக்குத் தெரிந்தது இது ஓர் உருவம் என்ற அளவில் மட்டும்தான். இதுவே பொதுவாக அறிதல் என்பதாகும். பின்னர் பெயர், நிறம், தலையின் அமைப்பு, அணிந்துள்ள சட்டை, நடக்கும் பாங்கு முதலிய விவரங்கள் சிறப்பாகப் புலப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அவர் இன்னார் என்று வேறுபடுத்தி அறிகின்றோம். இது சிறப்பாக அறிதல் ஆகும். இதனால் அறிவில் இரண்டு வகை உண்டு என்பது புலனாகும். ஒன்று பொருள்களைப் பொதுவாக அறிதல், மற்றொன்று பொருள்களைச் சிறப்பாக அறிதல்.

செவி முதலிய ஞானேந்திரியங்கள் பொருள்களைப் பொதுவாக அறியுமே அல்லாமல், சிறப்பாக அறியமாட்டா. செவி இது ஓர் ஓசை என்று மட்டுமே அறியும். தோல் இது ஓர் ஊறு என்று மட்டுமே என்று அறியும். கண் இது ஓர் உருவம் என்று மட்டுமே அறியும். நான்கு இது ஓர் சுவை என்று மட்டுமே அறியும். மூக்கு இது ஓர் மணம் என்று மட்டுமே அறியும்.

எனவே, உயிரானது ஞானேந்திரியங்களால் அல்லது அறிகருவிகளால் அல்லது பொறிகளால் புலன்களைப் பொதுவாகவே உணரும் என்று சொல்லலாம். வேறுபாடுகள் தெரிந்து இது இன்ன பொருள் என்று சிறப்பாக அறிதல் மனம் முதலிய அந்தக்கரணங்களின் செயற்பாட்டினால் விளைவதாகும். 

செவி என்னும் அறிகருவியின் மூலமாக ஓசை என்னும் புலனையும். தோல் என்னும் அறிகருவியின் மூலமாக ஊறு என்னும் புலனையும், கண் என்னும் அறிகருவியின் மூலமாக ஓளி என்னும் புலனையும், நாக்கு என்னும் அறிகருவியின் மூலமாக சுவை என்னும் புலனையும், மூக்கு என்னும் அறிகருவியின் மூலமாக மணம் என்னும் புலனையும் மனமானது அறிந்து கொள்ளும். 

மனம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், உயிரானது மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் நான்கு உட்கருவிகளைக் கொண்டே புறத்தே காணும் பொருள்களைப் பற்றி சிறப்பாக அறிந்து கொள்ள முடியும். புறத்தே உள்ள ஒரு புலனை அதற்கு உரிய பொறியானது கவர்ந்து தர, மனம் அதனைப் பற்றும், மனம் பற்றியதனை புத்தி இது இன்னது என்று நிச்சயிக்கும் அகங்காரம் இச்செயல்களுக்கு அடி நிலையாக அமைந்து முன்னும் பின்னும் 'நான் செய்வேன்' என முந்தி எழும் சித்தம் அப்பொருளைப் பற்றி மீள மீளச் சிந்திக்கும். ஒன்றைப் பற்றி இது அதுவாகுமோ,  இதுவாகுமோ என்று பல வகையில் ஐயுறும். இங்ஙனம் ஐயுறுவதற்குக் கருவியாக உள்ளது மனமாகும்.

உயிரானது புத்தியைப் பற்றி நின்று அப்பொருளின் பெயர், இனம், குணம், தொழில் முதலியவற்றை உணருமாற்றால் இஃது இன்னதே என்று துணியும். இவ்வாறு துணிவதற்குக் கருவியாவது புத்தியாகும். எச்செயலிலும் உயிரானது முனைத்து எழுவதற்குக் கருவியாக விளங்குவது அகங்காரம் ஆகும். இது ஆங்காரம் என்றும் வழங்கப்பெறும். எனவே மனம் ஒரு காட்சியைப் பற்றும் பொழுதும். புத்தி அதனை இன்னது என்று நிச்சயிக்கும் பொழுதும், ஆன்மா இடையிடையே அகங்காரத்தைப் பற்றி எழும். புத்தி நிச்சயித்த பின்பும் அகங்காரத்தின் செயற்பாடு வேண்டி உள்ளது. நிச்சயித்தலின் பயன் அப்பொருளில் ஆன்மா அழுந்தி அனுபவிப்பதுதான். அதற்கும் உயிரானது நான் இதனை அனுபவிப்பேன் என்று அகங்காரத்தைப் பற்றி எழவேண்டும். 

அழுந்தி அறிதலே அனுபவம் அல்லது நுகர்ச்சி எனப்படுகிறது. ஆன்மா தான் நிச்சயித்த பொருளின் தன்மைகளை எல்லாம் மீள மீளப் பலவாறு சிந்திக்கும்போதே அப்பொருளில் அழுந்தும் நிலை உண்டாகும். அவ்வாறு உற்று உற்றுச் சிந்திப்பதற்குக் கருவியாய் இருப்பது சித்தம் ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு பொருளைப் பற்றுவது மனம். நிச்சயிப்பது புத்தி. நான் என்று எழுவது அகங்காரம். பொருளைப் பற்றிச் சிந்திப்பது சித்தம். நன்கு தெரிந்த ஒன்றைப் பற்றி மீள மீளச் சிந்திப்பதாலேயே இன்ப துன்ப நிகழ்வு உண்டாகிறது.

மனம் எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றியே இயங்கிக் கொண்டு இருக்கும். அது எப்போதும் சும்மா இருப்பது இல்லை. மனம் ஒன்றைப் பற்றினால்தால் மற்ற அந்தக் கரணங்கள் ஆகிய புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை தொழிற்படும். மனம், கண்ணின் மூலமாக ஒன்றைக் காணும். காதின் வழியாக ஒன்றைக் கேட்கும். உடம்பின் (தோலின்) வழியாக ஒன்றை உற்று அறியும். நாக்கின் வழியாக ஒன்றின் சுவையை அறியும். மூக்கின் வழியாக ஒன்றின் மணத்தை அறியும். 

கண் நல்லவற்றையே காணவேண்டும். காது நல்லவற்றையே கேட்கவேண்டும். உடம்பு நல்லவற்றையே தொட்டு அறிய வேண்டும். நாக்கு நல்ல சுவையையே அறிதல் வேண்டும். மூக்கு நன்மணத்தையே நுகரவேண்டும், என்றால் புத்தி செயல்பட வேண்டும். எனவேதான், ஒருவருடைய செயலில் வேறுபாடு காணும்போது, 'புத்தி இருக்கிறதா' என்று கேட்கிறோம்.

அந்த புத்தி நல்லபுத்தியாக விளங்கவேண்டும் என்றால், அறிவு நூல்களைப் பயிலுதல் வேண்டும். மனம் என்பது ஏதவாது ஒன்றைப் பற்றியே இருக்கும் என்று மேலே கண்டோம். மனம் என்பது ஒரு கொடியைப் போன்றது. கொடியானது ஏதாவது ஒன்றைத் தாவினால்தான் படரமுடியும். படர்வதற்கு உதவுவது சந்தன மரமாகவும் இருக்கலாம். எட்டி மரமாகவும் இருக்கலாம். கொடியாகிய ஓர் அறிவு உயிருக்கு அது போதும். ஆனால், ஆறறிவு உயிருக்கு அது பற்றுகின்ற பொருள் நல்லதாக அமைய வேண்டும். "தாவிப் பரடக் கொழு கொம்பு இல்லாத் தனிக்கொடி போலப் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று அருணகிரிநாதர் பாடி இருத்தல் காணலாம். "கொம்பர் இல்லாக் கொடி போல் அலமந்தனன்" என்பார் மணிவாசகப் பெருமான். நல்ல நூல்களைப் பற்றிப் பயின்றால் நல்லறிவு (நல்ல புத்தி) விளங்கும். அல்லாத நூல்களைப் பயின்றால், அல்லாத புத்தியே விளங்கும். நல்ல நூல்களைப் பயின்றால் சிறப்பு உண்டு. அல்லாத நூல்களைப் பயின்றால் சிறப்பு ஏதும் இல்லை.

பூனை வீட்டிற்குள்ளே இங்கும் அங்குமாகத் திரிந்து கொண்டு இருக்கும். அதைக் கட்டி வைப்போரைக் காணமுடியாது. அது பாலையும் குடிக்கும். எலியையும் பிடித்துத் தின்னும். பாலை விட, எலியையும், கரப்பையுமே மிகவும் விரும்பும். பூனைக்கு எவ்விதமான சிறப்பையும் யாரும் செய்வதில்லை. யானையை வீட்டிற்கு வெளியே கட்டியே வைத்து இருப்பார்கள். ஆனால், அதற்குத் தேவையான உணவு வகைகளைத் தெரிந்து காலந்தோறும் அளிப்பார்கள். நிகழ்ச்சிகளின் போது யானைக்கு உரிய சிறப்பினையும் செய்வார்கள். இங்கே, பூனை என்பது கல்வி அறிவு அற்றோரைக் குறிக்கும். யானை என்பது கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தோரைக் குறிக்கும். யானைக்கு எங்கிருந்தாலும் சிறப்பு. பூனைக்கு இல்லை.

"வேத்து அவை காவார் மிகன்மக்கள், வேறுசிலர் 

காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார், - மாத்தகைய 

அந்தப் புரத்தது பூஞை, புறங்கடைய 

கந்துகொல் பூட்கைக் களிறு." 

என்பது குமரகுருபர அடிகளார் அருளிய "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் ஒரும் ஒரு பாடல்.

இதன் பொருள் ---

வேத்து அவை காவார் மிகன் மக்கள் - அரசவையைச் சேர்ந்து இருந்தால்தான் பெருமை என்று எண்ணி, அந்த அரசவையை அடையக் காத்துக் கொண்டு கற்றறிந்த மேலோர் இருக்கமாட்டார்கள்; (எனினும் உரிய சிறப்புக்களை அடையப் பெற்று மகிழ்ந்து இருப்பர்)  வேறு சிலர் - மேன்மக்கள் அல்லாத கீழ்மக்கள் அரசவையைக் காத்துக் கிடந்தாலும் அதுகொண்டு மனமகிழ்வு அடையமாட்டார்கள்.   மாத் தகைய பூஞை - பெரும் தகுதி வாய்ந்த, அந்தப்புரத்தது - அந்தப் புரத்திலேயே (வீட்டின் உள்ளேயே) உலாவித் திரியும் இயல்பை உடைய பூனையானது, அச்சமின்றி உணவுபெற்று மகிழும் பெருமையை அடையாது.  (ஆனால்) புறங்கடைய - கடைவாயிலைக் கடந்து உள்ளே செல்லாமல்) நிற்கும் இயல்பினை உடைய, கந்துகொல் பூட்கைக் களிறு - கட்டுத் தறியை முறித்து அழிக்கும்,  வலிமை வாய்ந்த யானை (தனக்குத் தேவையான உணவு முதலியனவற்றை அளிக்கப் பெற்றுப் பெருமையுடன் மகிழ்ந்து இருக்கும்)

அந்தப்புரம் என்பது, கோட்டையின் உட்புறத்தையும் குறிக்கும். உள்வீட்டையும் குறிக்கும். அந்தப்புரத்தில் உள்ள பூனை தான் விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் உண்ண முடியாது. பிறர் சோர்வு அறிந்து, யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு வேண்டிய உணவைத் திருடி உண்ணும். பிறர் காணக்கூடுமோ என்னும் அச்சத்தோடு உண்ணும். அந்தப் பூனை அந்தப்புரத்தில் இருந்தாலும் வேறு எதற்கும் பயன்படாது. உணவைத் தவிர வேறு எந்த உயர்வையும் அந்தப்புரத்தில் இருக்கும் பூனையானது பெறாது. ஆனால், கோட்டைக்கு வெளியில் (வீட்டிற்கு வெளியில்) விலங்கிட்டுக் கட்டப்பட்டு இருக்கும் யானையானது, தனக்கு வேண்டிய உணவு வகைகளைக் காலந்தோறும் தவறாமல் பெற்று மகிழ்ந்து இருக்கும். உரிய சிறப்புக்களையும் பெற்றுக்கொள்ளும்.

கல்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்து விளங்கும் மேலோர், அதிகாரத்தில் உள்ளோர் அருகில் இல்லாமல் இருந்தாலும் தமக்கு உரிய சிறப்பைப் பெற்று மகிழ்ந்து இருப்பர். கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறவாத கீழ்மக்கள் அதிகாரத்தில் உள்ளோரின் அருகில் இருந்தாலும் எவ்விதச் சிறப்பையும் பெறமாட்டார்.

அதிகாரப் பதவியில் உள்ளோர்க்கும், அவரை அண்டி இருப்போர்க்கும் அவரவர் இருக்கும் இடத்தில்தான் சிறப்பு.  கற்றறிந்த மேலோர்க்கு அவர் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதைப் பின்வரும் பாடல்களைக் கொண்டும் தெளிந்து கொள்ளலாம்.

"மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை, கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு."

என்பது ஔவைப் பிராட்டியார் அருளிய "மூதுரை".

இதன் பொருள் ---

மன்னனும் - அரசனையும், மாசு அறக் கற்றோனும் - கசடு அறக் கற்ற புலவனையும், சீர் தூக்கின் - ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்பு உடையன் ஆவான்; மன்னற்கு - அரசனுக்கு, தன் தேசம் அல்லால் - தன் நாட்டில் அல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு இல்லை - சிறப்பு இல்லையாகும்; கற்றோற்கு -  கற்றிறந்தவர்க்கோ, சென்ற இடம் எல்லாம் சிறப்பு - அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.

"பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி

மன்னும் அறிஞரைத்தாம் மற்று ஒவ்வார் - மின்னும்அணி

பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்

காணும் கண்ஒக்குமோ காண்."

இதன் பொருள் ---

பொன்னே - திருமகளைப் போல்பவளே! மின்னும் அணி பூணும் பிற உறுப்பு -  ஒளிமிகுந்த அணிகலன்களைப் பிற உறுப்புக்கள் அணிந்து கொண்டாலும்,  அது புனையாக் காணும் கண் ஒக்குமோ - அணிகலன்கள் ஏதும் இல்லாத கண்ணுக்கு அவை நிகராகுமா? (ஆகமாட்டா, அதுபோல) பொன் அணியும் வேந்தர் -  பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொள்ளும் வேந்தர்கள்,  புனையா - அணிகலன்கள் ஏதும் அணியாத, பெரும் கல்வி மன்னும் அறிஞரைத் தாம் ஒவ்வார் - பெரும் கல்வி நிறைந்த அறிஞர்களுக்கு ஒப்பாகமாட்டார்கள்.

பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த பிற உறுப்புக்கள் ஒருவனுக்கு இருந்தாலும், அவனுக்குக் கண் இல்லையானால் சிறப்பு இல்லை. அதுபோல, பொன் அணி அணிந்த அரசர்கள் புலவர்கட்கு ஒப்பாக மாட்டார்கள்.

கல்வி அறிவினால் ஒருவனுக்குச் சிறப்பு உண்டு. கற்றோர்க்கு வரும் உறுதிப் பொருளைக் கூறுகின்ற பின்வரும் பாடல், கல்வி அறிவினை எவ்வாறு பெறுதல் வேண்டும் என்றும் கூறுகிறது.

"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், 

பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே! 

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும், 

சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; 

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், 

'மூத்தோன் வருக என்னாது, அவருள் 

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும், 

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், 

கீழ்ப்பால் ஒருவன் கற்பின், 

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே."

இதன் பொருள் ---

கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும்போது வேண்டிய உதவிகளைச் செய்தும், வேண்டும் பெருள்களைத் தந்தும், அதனால் நேரும் இழப்பு வருத்தம் முதலிய நிலைகளைக் கண்டு மனம் வேறுபடாதும், முயற்சியுடன் அனைவரும் கற்ற அறிவுடையவராகி மேம்படுதலே நன்று ஆகும். அதனால், சிறப்பும் அறிவும் நூல்பயிற்சியும் பெற்று இவ்வுலகத்து வாழ்விலும் உயரலாம். ஒரு தாய் ஒரு வயிற்றில் பிறந்த பல பிள்ளைகளுள் அவரவர் பெற்றுள்ள கல்விச் சிறப்பின் காரணமாகத் தாயும் தன் பாசத்திலே ஓரளவிற்கு வேறுபடுவள். வீட்டில் மட்டும் அல்ல, வெளியிலும் கூட, ஒரு குடியில் பிறந்தவர்களில், மூத்தோனை வருக என்று அழைத்துச் சிறப்புச் செய்யமாட்டான் அரசன்.  அறிவுடையோனையே வருக என்று அரசனும் தேடிச் சென்று கேட்பான். இதுமட்டும் அல்ல. வேறு வேறு வகையாகச் சொல்லப்படுகின்ற மக்களுள்ளும், கீழ்நிலையில் உள்ளான் ஒருவன் கல்வி கேள்விகளிலே வல்லானாக இருந்தால், மேல்நிலையில் உள்ளவனும் அவனிடம் பணிந்து கற்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவான். 

எனவே, இத்தகு சிறப்பினை நல்கும் கல்வியைக் கற்பிக்கின்ற ஆசிரியருக்கு ஊறுபாடு நேர்ந்தவிடத்து உதவியும், மிக்க பொருளைக் கொடுத்தும், கற்றுத் தெளிதல் அவசியம். எந்த நூல்களைக் கற்றுத் தெளிதல் வேண்டும் என்னும் வினாவிற்குப் பின்வரும் விடையைக் காணலாம்.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல, நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்கும் காலத்தில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால், உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். கற்ற வழியில் நிற்றலும் வேண்டும். கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.

இதனால், கல்வி என்பது தலைமைப் பொறுப்பில் உள்ள அரசனுக்கு மட்டுமல்லாது, மக்கள் அனைவரும் கற்கவேண்டிய நூல்களைக் கற்கவேண்டும் என்பதும், கற்கும் முறை இது என்பதும், முறைப்படி கற்ற பின்னர் ஒழுகும் முறை இது என்பதும் அறிவிக்கப்பட்டது. கல்வி என்பதை, அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக்கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனையும் தரும் நூல்களைப் பயிலுதல் வேண்டும். மக்கள் பிறப்பு சில்நாள், பல்பிணி, சிற்றறிவு உடையவை என்பதால், அவர் எவ்வாறு கற்றல் வேண்டும் என்பது, பின்வரும் நாலடியார் பாடல்களால் தெளியப்படும்.

"கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே, நீர் ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து."   

இதன் பொருள் ---

கல்வி கரை இல --- கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில --- ஆனால், கற்பவருடைய வாழ்நாட்களோ சில ஆகும்; மெல்ல நினைக்கின் பிணி பல --- சற்று அமைதியாக நினைத்துப் பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாய் இருக்கின்றன; தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து --- நீர் நீங்கப் பாலை உண்ணும் பறவையைப் போல, அறிஞர்கள் பொருத்தம் உடைய நூல்களைத் தெரிந்து அவற்றைத் தெளிவு கொள்ள ஆராய்ந்து கற்பார்கள்.

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்."

இதன் பொருள் ---

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவது எல்லாம் --- அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பது, கலகல கூவும் துணையல்லால் --- கலகல என்று இரைந்து ஆரவாரம் செய்யும் அளவே அல்லால், கொண்டு தடுமாற்றம் போம் துணை அறிவார் இல் --- அவ் வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் யாரும் இல்லை.

"இற்றைநாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" என்றும்,  "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும்.

"இருக்கு ஆதி மறைமுடிவும், சிவாகமம் ஆதி

இதயமும் கைகாட்டு எனவே, இதயத்து உள்ளே

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான்

     ஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்."

இதன் பொருள் ---

மந்திரங்களைத் தன்னகத்தே உடைய மறைகளின் முடிவும், சிவ வழிபாட்டினைத் தன்னகத்தே உடைய சிவாகமம் முதலியவற்றின் உள்ளுறைக் கருத்தும் அறிவு அடையாளத் திருக்கைக் காட்டு எனவே, திருவருளால் ஒருமுறை தங்கள் உள்ளத்தின்கண் தெளிந்த நல்லார் தமக்கு எப்போதும் நீங்காத சிவப் பேரின்பப் பெருக்கு விளையா நிற்கும்.

எனவே, ஆரவாரத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் மட்டுமே பயன் தரும் உலகநூல்களைக் கற்பதோடு, உள்ளத்தில் உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்குதற்குப் பயன்படும் அறிவு நூல்களையும் அருள் நூல்களையும் கற்றுத் தெளிதல் வேண்டும். 






No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...