இரகசியம் வெளிப்பட்டது

 

இரகசியம் வெளியாகி விட்டது

-----

தமக்குத் தேவையானவற்றை, பணம் எவ்வளவு செலவழிந்தாலும், நல்லவையாகவே தேடிப் பிடித்து, வாங்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர் ஒருவர். புதிதாக வந்துள்ள அந்த ஊரில் புதிதாக வந்த கடையில் மிகவும் நல்ல பொருள்கள் இருக்கின்றன என்றும், அங்கே உயர்ந்த பண்டங்கள் கிடைக்கும் என்றும் ஊர்க்காரர்கள் சொல்லக் கேட்டார்.  மனிதருக்குக் காபியில் விருப்பம் அதிகம். எல்லோருக்குமே அந்த அமுத பானத்தில் விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. மிகவும் உயர்ந்த ரகமான காபிக் கொட்டையை வாங்கி உபயோகிப்பார். ஊர்க்காரர்கள் புதிய கடையைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது அவருக்குத் திருப்தி ஏற்பட்டது.  அந்தக் கடையில் விசாரித்தார். கடையின் உரிமையாளர்,  'நம்மிடம் எல்லாமே உயர்ந்த சரக்குத்தான். மட்டமான சரக்கே இந்தக் கடைக்குள் வராது. பணம் வாங்கிக் கொண்டுதானே வியாபாரம் செய்கிறோம்? சும்மாவா கொடுக்கிறோம்? நல்ல சரக்குக்குத் தக்கபடி பணம் கேட்டால், வேண்டியவர்கள் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறார்கள்' என்று சொன்னார்.

காபி பிரியர் அவரிடம் மறுபடியும் கேட்டார், 'உங்களிடம் இருக்கும் சரக்கு எல்லாம் நயமானவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். மற்ற இடங்களில் கிடைப்பவற்றை விட உயர்ந்தவையே இங்கே உள்ளன என்று நீங்கள்  சொல்கிறீர்கள். ஆனால் உயர்ந்த ரகத்திலும் மேல் கீழ் என்று தரம் இருக்கிறது அல்லவா? பணம் அதிகமாகக் கொடுத்தால் இருப்பவற்றுள் அருமையான பொருளைக் கொடுக்கலாமே. உங்களிடம் இருக்கும் காபிக் கொட்டையில் மிகவும் உயர்ந்த ரகத்தை எனக்குக் கொடுங்கள். என்ன விலையானாலும் கொடுக்கிறேன்' என்று சொன்னார். கடைக்காரர்,  'அப்படியே செய்கிறேன். என்னிடம் உள்ளவற்றில் சிறந்ததையே  தருகிறேன். ஆனால் இதை வெளியில் சொல்ல வேண்டாம். நமக்குள் இரகசியமாகவே  இருக்கட்டும். உங்களைப் போல் பணத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் யார் இருக்கிறார்கள்?' என்று சொல்லி நயமான காபிக் கொட்டையை அவருக்குக் கொடுத்தார். 

அதை வாங்கிக் கொண்டு சென்ற காபி பிரியர் அதைப் பயன்படுத்திப் பார்த்தார். உண்மையாகவே அது சிறந்ததாக இருந்தது. 'இந்தக் கடைக்காரர் நமக்கு மாத்திரம் நல்ல தரம் வாய்ந்த கொட்டையைக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். சில காலம் சென்றது. அவருக்கு ஊரில் உள்ளவர்கள் நன் றாகப் பழக்கமாகி விட்டார்கள். பல நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஒய்ந்த  வேளைகளில் அவர்கள் வீட்டுக்குப் போவதும் உரையாடுவதும் சிற்றுண்டி  அருந்துவதுமாக அவர்களுக்கும் அவருக்கும் பழக்கம் முதிர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு நண்பர் அவரைச் சிற்றுண்டிக்கு அழைத்திருந்தார். விருந்தின்போது காபி கொடுத்தார். அது மிகவும் நன்றாக இருந்தது. காபியின் தரத்தை அறிவதில்  வல்லவரான அவர்,  'நமக்குத்தான் நல்ல காபிக் கொட்டை கிடைக்கிறதென்று நினைத்தோம். கடைக்காரரோ நமக்கு மட்டும் இரகசியமாக அந்தக் கொட்டையைத் தருகிறார். இவருக்கு எங்கே இது கிடைத்திருக்கும்?' என்று சிந்தித்தார். அன்பரையே கேட்டுவிடலாம் என்றெண்ணி,  'காபி மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் வெளியூரிலிருந்து இந்தக் கொட்டையை வாங்கி வந்தீர்களா?' என்று கேட்டார். நண்பர் சொன்ன பதில் அவரைத் தூக்கி வாரிப் போட்டது. 'வெளியூருக்கு ஏன் போக வேண்டும்? நம்முடைய ஊரில் உள்ள புதிதாக கடையில் நல்ல சரக்காகக் கிடைக்கிறது. அந்தக் கடையில் வாங்கினது தான் இது' என்று நண்பர் கூறினார். பாவம் அந்த மனிதர் ஏமாந்து போனார். 

தமக்கு மாத்திரம் அந்த அற்புதமான கொட்டை கிடைக்கிறது என்றும், அதற்கு ஏற்ற விலையைத் தாம் ஒருவரே தரும் சக்தி உடையவர் என்றும், மற்றவர்கள் அதை வாங்க முடியாதென்றும் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். உடனே அவர் கடைக்காரரிடம் ஓடி வந்தார். 'ஐயா! உம்முடைய குட்டு வெளிப்பட்டு விட்டது” என்றார். "ஏன்? என்ன சமாசாரம்?' என்று கேட்டார். 'எனக்கு மாத்திரம் கொடுக்கிறீர் என்று நினைத்திருந்த காபிக் கொட்டை இந்த ஊர் முழுவதும் இருக்கிறதே! எனக்குக் கொடுத்த சரக்கையே எல்லோருக்கும் கொடுத்திருக்கிறீரே!' என்றார் காபிப் பிரியர். 'நான் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்து உயர்ந்த சரக்கை வாங்கிக் காத்திருக்க முடியுமா? உங்களைப் போலச் சில பேர் உத்தமமான சரக்குகளை வாங்குபவர்கள் இருப்பதனால் தான் நான் வாங்கி வைக்கிறேன். நீங்களும் அவர்களைப் போன்றவர்கள் என்று தெரிந்து அதை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களுக்கு கொடுத்ததைக் காட்டிலும் உயர்ந்ததை எங்காவது நீங்கள் கண்டிருந்தால் என்னைக் குறை கூறலாம். அப்படி இருக்க நியாயம் இல்லையே!' என்றார் கடைக்காரர்.

காபிப் பிரியர் 'உம்முடைய குட்டு வெளிப் பட்டு விட்டது' என்று சொன்னாரே, அது போலவே அருணகிரிநாதர் சொல்கிறார். அவரிடம் வியாபாரம் செய்த செட்டியார் முருகப் பெருமான். முருகனுக்குச் செட்டி என்பதும் ஒரு பெயர். 'செட்டி' என்ற சொல் 'செட்டு'  என்பதிலிருந்து பிறந்தது என்று சொல்வார்கள். சிரேஷ்டி என்ற வடசொல்லே 'செட்டி' ஆயிற்று என்றும் கூறுவார்கள். பிறர் பொருளையும் தம் பொருளைப் போல் பேணி, குறையப் பண்டத்தைக் கொடுக்காமல், கூட விலை சொல்லி வாங்காமல் வாணிகம் செய்கிறவர்கள் வணிகர்கள் என்று திருக்குறள் கூறுகிறது.  அத்தகைய வணிகர்கள், சமுதாயத்துக்கு உபகாரம் செய்யும் உத்தமமான தொண்டர்கள்; சிறந்தவர்கள். அவர்களைச் சிரேஷ்டிகள் என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. 

முருகனும் சிரேஷ்டமானவன். "தேவதேவ! தேவாதி தேவப் பெருமாளே!" என்று அவனுடைய சிரேஷ்டத்தைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.  'செட்டியப்பனை' என்று சிவபெருமானைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகையில் முருகனைச் செட்டி என்று குறிக்கிறார். திருப்புகழில், 'செட்டி எனும் ஓர் திரு நாமக்கார' என்று வருகிறது. இந்தச் செட்டியாரிடம் அருணகிரிநாதர், 'உம்முடைய இரகசியம் அம்பலமாகி விட்டது' என்று சொல்கிறார். 'கொட்டு மேளத்துடன் ஊர் அறிய வெளிப்பட்டு விட்டது' என்று கூறுகிறார். 

முருகன் அருணகிரிநாதருக்கு ஒர் உபதேசம் செய்தான். அதை மிகவும் இரகசியமாகச் செய்தான். அவர் பக்தித் திறத்தையும் பட்ட வேதனையையும் கண்டு, இனி அந்தத் துன்பத்தை அடையாத வகையை அருள வேண்டுமென்ற  விருப்பத்தால் அந்த  இரகசியத்தை அவர் காதில் மட்டும் கேட்கும்படி சொன்னார். அதை,"கின்னம் குறித்து அடியேன் செவி  நீ அன்று கேட்கச் சொன்ன குன்னம்" என்று குறிக்கிறார். கின்னம் என்பது  துன்பம். நான் படுகின்ற துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற பெருங்கருணையால், நீ வந்து அடியேனுக்கு எனது துன்பமும் கவலையும் போகும்படியாக உபதேசம் செய்தாய். என் செவி மாத்திரம் கேட்கும்படியாக அன்று ஒருநாள் அந்த இரகசியத்தைச் சொன்னாய்’ என்று அருணகிரியார் சொல்கிறார். 

அருணகிரியார் பல சமயங்களில் முருகனுடைய உபதேசத்தைப் பெற்றிருக்கிறார். "திருப்புகழ் பாடு" என்று முருகனே அவருக்குக் கட்டளையிட்டு அருளினான்.  "திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே" என்று பாடுகிறார்.  "உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைநது அருள் பெறுவேனோ?” என்று ஒரிடத்தில் சொல்கிறார். முருகன் குருநாதனாக எழுந்தருளி உபதேசித்ததைப் புலப்படுத்தியிருக்கிறார்.  

தனது செவியில் மட்டுமே கேட்கும்படியாக, தனது துன்பத்தைக் களைவதற்காக, அன்று சொன்ன இரகசியம், இன்று  மலைவாணர் ஊரில் வெளியாகி விட்டது என்கிறார். "குறிச்சி" என்பது மலைப் பகுதியாகிய குறிஞ்சி நிலத்து ஊருக்குப் பெயர். அந்தக் குறிச்சி இந்தக் குன்னத்தை (இரகசியத்தை) வெளிப்படுத்தி விட்டது என்கிறார். குரு மாணாக்கன் செவியில் கேட்கும்படியாக இரகசியத்தைச் சொல்கிறார். சொல்பவரும் கேட்பவனும் மாத்திரம் உணரும் வகையில் சொல்லப்படுவது  மந்திர உபதேசம். எனவே, அது  இரகசியம் எனப்படுகிறது. இரகசியம் என்றாலும் அது பலரும் அறிந்த ஒன்றுதான். உலகறிந்த இரகசியம் என்று சொல்லப்படுவது இதுதான். பலரும் அறிவது  இரகசியத்துக்கு மாறானது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். பலர் அறிவதனால் இரகசியத்தின் தன்மை மாறாது. எப்படி அறிகிறார்கள்  என்பதில் தான் அந்தத் தன்மை நிற்கிறது. அது சமயத்தில் ஒருவன் மட்டும் கேட்க உணர்த்துவதனால் அது இரகசியமாகிறது. ஆயிரம் பேருக்குக் கேட்கும்படியாக  மேடையின்மேல் நின்று ஒன்றைச் சொன்னால் அது இரகசியம் ஆகாது. ஆனால் அந்த ஆயிரம் பேரில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்துப் பிறர் அறியாதவண்ணம் சொன்னால், அது இரகசியம் ஆகிறது.

  இரகசியமாகக் குருநாதர் உபதேசம் செய்வது எதற்காக? உபதேசம் செய்யும் மந்திரத்துக்கு பெருமை இருக்கிறது. ஆனால், அதனால் உண்டாகும்  பயன் உபதேசம் செய்யும் குருவையும் உபதேசம் பெறும் மாணாக்கனின்  பக்குவத்தையும் பொறுத்தே இருக்கிறது. குருவானவர் மாணாக்கனுடைய பக்குவத்தை  நன்கு அறிந்தே உபதேசம் செய்வார். அந்த உபதேசத்தைப் பெற வேண்டும் என்று  ஏங்கிக் கிடக்கும் சீடனுக்கே அந்த உபதேசம் கிடைக்கும். மணிக்கவாசகர்,  இறைவன் தமது பக்குவத்தைப் பாராமல் உபதேசம் செய்தான் என்பதை  ஓர் உவமை மூலமாகச் சொல்கிறார். சின்னஞ்சிறு குழந்தையின் கையில் விளையாட்டுச் செப்புகளைக் கொடுக்கிறோம். மரத்தாலோ, வெண்கலத்தாலோ, இரும்பினாலோ ஆன செப்புக்களைக் கொடுப்பது வழக்கம். ஒரு செல்வர் தமது குழந்தைக்குப் பொற்கிண்ணம் ஒன்றையே விளையாடக் கொடுத்து விட்டார். அந்தக் குழந்தைக்கு அதன் பெருமை தெரியாது. அதையும் மற்ற செப்புகளுடனே வைத்து விளையாடும்; வீசி எறியும்; நசுக்கும்; யாரேனும் திருடிப் போனால் பறி கொடுத்து விட்டு நிற்கும். 'இறைவா! உன்னைக் குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போலக் கருதினேன் அல்லாமல், உன்னை அரியவன் என்று நான் எண்ணவில்லை' என்று பாடுகிறார் மணிவாசகர்.  “மழக் கை இலங்கு பொற்கிண்ணம் என்று அல்லால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்" என்று பாடுகிறார்.

பக்குவத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் ஏற்ற உப தேசத்தைச் செய்வது  குருநாதர்களின் வழக்கம். அந்த உபதேசம் அந்தச் சமயத்தில் அந்த மாணாக்கனுக்கே உரிய சிறப்பான உபதேசம். அவன் ஒருவன் மாத்திரம் கேட்கும்படி செய்வதாதலின் அது இரகசியம்.  அருணகிரிநாதர் தம்முடைய துன்பங்களை எல்லாம் எடுத்துக் கூறி முருகனிடம் முறையிட்டார். அந்தக் கின்னங்களை முருகன் கேட்டான். அவற்றை எண்ணி இரகசியமாக உபதேசம் செய்தான். அதை உணர்ந்த போது அருணகிரியாருக்கு, 'ஆகா இது என்ன அற்புதமான உபதேசம்!  ஈடேற முடியுமா என்ற ஏங்கி நின்ற எனக்கு ஏற்ற உபதேசம். முருகன் என்னிடத்தில் தனியான அன்பு கொண்டு இந்த இரகசியத்தை எனக்குச் சொன்னான். அவன் கருணையை என்ன என்று சொல்வது! இப்படி யார் அவனிடம் உபதேசம் பெற்றிருக்க முடியும்? நான் பெற்ற வேறு பெரும் பேறு; யாருக்கும் கிடைக்காத பேறு' என்று ஆனந்தக் கூத்தாடினார். 

முருகனுடைய இயல்புகளையும், திருவிளையாடல்களையும் அவர் ஆராய்ந்து உணரத் தலைப்பட்டார். அவன் வள்ளிநாயகியை மணந்துகொண்ட கருணைத் திருவிளையாடலைப்  பற்றி எண்ண எண்ண அவருக்கு உணர்ச்சி  மேலோங்கியது. முருகப் பெருமானுடைய பெருங் கருணைத் திறத்தைக் காட்டும் திருவிளையாடல் அது  என்பதை அவர் உணர்ந்தார். தமக்கு முருகன் எந்த உபதேசத்தை இரகசியமாக  அருளினானோ, எத்தகைய இன்ப அனுபவத்தை அவன் பெறச் செய்தானோ, அதே கருணைச் செயலை உலகமெல்லாம் உணரும்படி காட்டியதே வள்ளித் திருமணம் என்பதைத் தெளிந்தார். 

வள்ளிநாயகியின் நிலை, அவள் இயல்பு, அவளுக்கும் முருகனுக்கும் உள்ள பழைய உரிமை, வேடரிடையே அப்பெருமாட்டி குறத்தியைப் போல வாழ்ந்த வகை, தான் வளர்ந்த குலத்துக்கு உரிய மரபுப்படி அவள் முருகனிடம் அன்பு பூண்டது, மற்றக் குறப் பெண்களைப் போலக் கிளி ஒட்டித் தினை காவல் புரிந்தது ஆகிய முன் கதைகளை யெல்லாம் எண்ணிப் பார்த்தார். யோகமோ, ஞான விசாரமோ, நல்லவர் இணக்கமோ  இல்லாத அப்பெருமாட்டியை, அவள் இருந்த இடத்திற்கே உருமாறி வேடம் பூண்டு வந்து, அவளிடம் காதல் பூண்டவன் போல அலமந்து ஏங்கி இரந்து, கோலம் மாறிக் காட்டி, இறுதியில் ஆனையைக் காட்டி, அப்பெருமாட்டி உயிருக்கு அஞ்சித் தன்னைச்  சரணடையச் செய்து, ஆட்கொண்ட பெருங் கருணையை ஆழ்ந்து சிந்தித்தார். 

முருகன் தமக்கு உபதேசம் செய்து அருளனுபவம் வாய்க்கும்படி அருளிய செயலுக்கும், அந்த வரலாற்றுக்கும் ஒப்புமை இருப்பதாக உணர்ந்தார். வள்ளிநாயகியை முருகன் ஆட்கொண்ட வரலாறு முருகனுடைய கருணைச் சிறப்பைக் காட்டுவது. அந்தக் கருணையினால்தான் அவன் தம்மையும் ஆண்டு கொண்டான் என்பதை ஒப்பு நோக்கி  உணர்ந்தார். நமக்கு யாரும் அறியாத இரகசியமாக உபதேசித்து,  அனுபவம் பெற அருளியது இது என்று எண்ணியிருந்தோமே! அந்தக் காலத்தில் மலைவாணர் அறிய நடைபெற்ற வள்ளி திருமணத்திலேயே இந்தக் கருணை வெளியாகிக் கிடக்கிறதே! என்று வியந்தார். அதை வித்தகமாகச் சொல்லப் புகுந்தார். அந்த இரகசியத்தை மலை நாட்டு ஊர் வெளியாக்கி விட்டதாம். எப்படி வெளியாக்கியது? எதை வெளியாக்கியது?  இவற்றிற்கு நேர்முகமான விடைகளைப்  பாட்டில் குறிப்பாகப் பெற வைத்திருக்கிறார். 

"கொம்பும் குழலும் வேறு சின்னங்களும் முழங்கக் குறிஞ்சி நிலத்தவர்களாகிய  குறவர்களின் சிறு பெண்ணை முன்பு அவர்கள் ஊருக்கு வலியச் சென்று திருமணம் செய்து கொண்டவனே!" என்று முருகனைப் பாடித் துதிக்கிறார். முருகன் மலைமேல் ஏறி யாரும் அறிய வெளியிட்டானாம்.  ஐந்து முகமுடைய  சிவபரம்பொருள், ஆறுமுகமுடைய முருகனாக எழுந்தருளியதற்குக் காரணம் அந்த மணத்தில் வெளியாகியது. 

முருகன் தேவர்களுக்கெல்லாம் பெரிய தலைவன். தம்பிரான் என முருகனை வழங்குவர். தேவர்களுடைய வாழ்வுக்கு ஆதார பூதமானவன். அவனுக்குக் கந்தர்வ லோகத்தில் திருமணம் நடக்க வேண்டும். தேவர்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலையும் காட்டி, மண்டபம், பந்தல் முதலிய அமைப்புகளை நிறுவி அலங்காரம் செய்ய, தேவர்களும் ஞானியரும் குழுமிய அலங்காரப் பெரு மண்டபத்திலே திருமணம் நிகழ வேண்டும். தேவயானைக்கு அப்படித்தான் நடந்தது. 

ஆனால் வள்ளியம்மை திருமணம் மலை நிலத்துச் சிற்றுாராகிய குறிச்சியிலே நடந்தது. குறவரும் குறத்திமாருமே திருமணத்திற்கு வந்தார்கள். மணமகளோ குறிஞ்சிக் கிழவர் சிறுமி. தேவலோகத்தில் கல்யாணம் நடந்தால் ஒருபுறம் வேதம் முழங்கும். ஒரு பால் தேவதுந்துபி இயம்பும்.  ஒருசார் தும்புரு நாரதர் வீணை வாசிப்பார்கள். ஒருபுறம் நந்தியும் திருமாலும் முழவு இசைப்பார்கள். அரம்பையர்கள் ஆடுவார்கள்.  கின்னரர் கீதம் பாடுவார்கள். கந்தருவரும் வித்தியாதரரும் இன்னிசை எழுப்புவார்கள். இவற்றில் ஒன்றையும் விரும்பாமல் முருகன் ஓடிவந்தான். இங்கே  குறவர்கள் ஊது கொம்பை ஊதினார்கள், மூங்கிலைத் துளைத்த குழலை ஊதினார்கள்.  இன்னும் என்ன எனனவோ சின்னங்களை ஊதினார்கள். தேவலோகக் திருமணக் காட்சி எங்கே இந்த மலைக் காட்டுக் கல்யாணம் எங்கே! 

ஆனால் முருகன் அந்தக் கல்யாணத்தைத்தான் விரும்பி ஏற்றுக் கொண்டான். அந்தக் குறவர்களோடு கூடி தானும் ஒரு குறவனாய் வேடமிட்டுக் குதூகலம் அடைந்தான். தேவானையை இந்திரன் வலிந்து திருமணம் செய்து கொடுத்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி முருகன் தேவயானையை மணந்தான். இங்கே, தானே வலியச் சென்று தன் நிலையைக் குறைத்துக் கொண்டு குறவருக்கு ஏற்ற  குறவனாக நின்றான். மாமுனிவருக்கு உறவாகிய ஞானமூர்த்தி கொலை வேடனாக வந்தான். என்றும் இளையவனாகிய அவன் கிழவனாக வந்தான். கற்பகமர நீழலில் வாழும் வாழ்வை  இந்திரனுக்கு அருளிய வள்ளல் வேங்கை மரமாக நின்றான். வேடனாக வேடம் இட்டப்  பல்லைக் காட்டினான்; வேங்கை மரமாகப் பிரமித்து நின்றான். வள்ளிநாயகியைப் பற்றி நாரத முனிவர் கூறக் கேட்டதுமே, அவள் மீது காதல் கொண்டு, கூனிக் குறுகிக் கிழவனாக வந்தான். 

அருணகிரிநாதருக்குச் சொன்ன உபதேசம் எதுவோ, அதன் வெளியீடாக இருப்பது  வள்ளியம்மை திருமணம். அடியவரை ஆட்கொள்ளும் செயலும், அந்தத் திருமணச் செயலும்  ஒரே பயனை உடையவை. வெவ்வேறாகத் தோற்றினாலும் இரண்டும் முருகன் பெருங்கருணையை மேற்கொண்டு, தக்க பக்குவம் இல்லை என்றாலும், தன்னையே நினைத்து இருக்கின்ற அடியவர்பால், தானே வலியச் சென்று ஆட்கொள்வான் என்ற உண்மையை அருணகிரிநாதரை ஆட்கொண்ட அருட்செலும்,  வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த அருட்திரு விளையாடலும் காட்டுகிறது.  வள்ளிநாயகித் திருமணம், முருகன் ஆன்மாவை வலிய வந்து தடுத்தாட்கொள்ளும் கருணைத் திருவிளையாடல். 

வள்ளிநாயகி தவமுனிவருக்கும் மானுக்கும் பெண்ணாகப் பிறந்தவள். அதற்கு முன் அவள் திருமாலின் பெண். முருகனை மணக்கும் உரிமை உடையவள். ஆயினும் வள்ளிமலையில் நம்பிராசனுடைய பெண்ணாக வளர்ந்தாள். தான் குறமகள் என்றே எண்ணி வாழ்ந்தாள். குறமகளிருடைய பழக்க வழக்கங்களையே மேற்கொண்டாள்.  வேடர்களுக்கு நடுவே இருள் அடர்ந்த காடுகளில் யானையும் பிற விலங்கினங்களும்  திரியும் குறிஞ்சி நிலத்து ஊரில் வாழ்ந்தாள். தினைப் புனத்தில் அந்தப் பு ன்செய்த் தானியத்தைக் காவல் காத்துக் கொண்டு கிளி முதலியவற்றை ஒட்டினாள்.

ஆன்மாவும் இந்த நிலையில்தான் இருக்கிறது. இறைவனோடு ஒன்றி வாழும்  உரிமையை உடைய ஆன்மா. பிரபஞ்சமாகிய காட்டில் ஆணவம் என்னும் யானையும், காமம் கோபம் முதலிய விலங்கினங்களும் திரியும் சூழலில் ஐம்புலமாகிய வேடர்கள் இடையே  வாழ்கிறது. வள்ளிநாயகி குறவாணர் குல வழக்கத்தின்படி முருகனை எண்ணி அன்பு செய்தாள். வேறு வகையான சாதனம் ஒன்றும் அவள் பயிலவில்லை. அவள் உள்ளத்தில் உள்ள சிறிதளவு அன்பையே  பற்றுக்கோடாகக் கொண்டு, அவளை ஆட்கொள்ள, அவள் இருக்கும் இடம் எங்கே என்று தேடி வந்தான். 

பத்திநெறியில் புகும் ஆன்மாவுக்கு இன்னும் பக்குவம் நிரம்ப வேண்டும் என்று காத்திராமல் அருள் செய்வதற்கு முருகன் எழுந்தருளுவான்.  வள்ளிநாயகியினிடம் தனது திருவுருவத்தைக் காட்டி,  என்னை மணந்து கொள் என்றால்  அப்பெருமாட்டி உடனே வணங்கி முருகனிடம் ஈடுபட்டிருப்பாள். அவன் அவ்வாறு செய்யாமல் வேடனாகி வந்தான். வேங்கை மரமானான். கிழவனாக வந்து கெஞ்சினான். வள்ளிநாயகியின் அன்பைச் சோதிக்கச் செய்த திருவிளையாடல்கள் அவை. சோதனை வந்தால்தான், உள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல் வெளிப்படும். முருகன் காளைப் பருவ வேடனாகி வந்து நயந்தும் பயந்தும் பேசிய பேச்சுக்களிலே வள்ளி நாயகி  மயங்காமல் இருந்தாள். அதனால் வருந்தினவனைப் போல முருகன் பாவனை செய்தாலும்,  அவன் திருவுள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி கொண்டான். தமது சோதனைகளில் வள்ளிநாயகி வெற்றி பெறுகிறாள் என்று உணர்ந்து பெருமிதம் அடைந்தான்.

அன்புடைய அடியவரைத் தடுத்தாட்கொள்ள வரும் இறைவன் அவரைச் சோதிக்க முற்படுகிறான்.  சோதனையை இறைவன் அடியார்களிடம் செய்கிறான். சோதனையினால் அன்பருடைய அன்பு பின்னும் முறுகி உரம் பெறுகிறது. நன்றாகப் படித்த மாணாக்கன் தேர்வுக்கு அஞ்சாமல், தன் ஆற்றலைக் காட்டி வெல்வதைப் போல, உலகில் உண்டாகும் இடையூறுகளையெல்லாம் இறைவன் திருவருள் என்றே எண்ணிச்  சோதனைகளில் தேர்ச்சி பெறுகிறார் அடியவர். அப்போது இறைவன் போதனை செய்கிறான். இறைவன் பல நேரங்களில் நாம் அறிவு பெறும் வகையைக் காட்டுகிறான். அந்த அனுபவங்களினால்  தெளிவு பெறுவோமானால் நம் பக்குவம் உயர்கிறது. இல்லையானால் பிரபஞ்சச் சேற்றில் அமிழ்ந்து போக வேண்டியதுதான். 

வள்ளிநாயகிக்கு முன் விநாயகரை யானையாக வரச் செய்தான் முருகன். அந்த யானையைக் கண்டு அஞ்சி முருகா என்று கதறிக் கிழவனாக வந்த அவனைச் சார்ந்தாள். அப்போது முருகன் தன் திருவுருவத்தைக் காட்டி அருள் புரிந்தான். யானையைக் கண்டவுடன் வள்ளிநாயகிக்கு, அச்சம் உண்டாயிற்று. அவள் உள்ளத்தில் அப்போது முருகனுடைய நினைவு உச்சநிலையில் எழுந்தது. உயிருக்கு மோசம் வரும் என்ற உணர்வு வரும்போதுதான் இறைவனிடம் உரமான பக்தி எழும். "ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினை தீர்த்தருள்வாய்' என்று கந்தரலாங்காரத்தில் பின்னே ஒரு பாட்டில் அருணகிரிநாதர் பாடுகிறார். 

இறைவனைத் தவிர வேறு துணையில்லை என்பதை ஒருவன் மற்றச் சமயங்களில் தெளிவாக உணர முடிவதில்லை. மரணத் துன்பத்தை உள்ளவாறு அறிந்தால்தான் அந்த உணர்ச்சி ஏற்படும். வள்ளிநாயகிக்கு அத்தகைய உணர்வு வந்தபோது முருகன் ஆட்கொண்டான். வள்ளிநாயகி திருமணம் ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் திருமணம். வேறு வேறு வகையில் சாதனம் புரிந்து பக்குவம் உயர்ந்தால், இறைவன் திருவருளுக்கு ஆளாவது முறை. முருகனோ தன்னை நம்பின அடியவனிடம் பக்குவக் குறைபாடு இருந்தாலும் கருணை மிகுதியால் அவனை நாடி வந்து சோதனை செய்து ஏற்றுக் கொண்டு இன்பம் அருளுகிறான். பக்தனுக்குள்ள பக்குவக் குறைவை முருகனிடம் உள்ள கருணை மிகுதி பொருட்படுத்துவது இல்லை. இந்த அனுபவத்தை வள்ளிநாயகி பெற்றாள். அருணகிரிநாதரும் பெற்றார். 

மற்றவர்களைப் போலவே உலகியலில் உழன்ற அருணகிரிதாருக்கு முருகனிடத்தில் அன்பு முகிழ்த்தது. முருகன் பெருங்கருணை கொண்டு தடுத்தாட்கொண்டான். பலவகைச் சோதனைகளைச் செய்து பக்குவம் ஏற்றினான். அவர் செவி கேட்கும் வண்ணம் போதனை  புரிந்தான். அருணகிரிநாதர்  பெற்ற அருளனுபவத்தை அவர் ஒருவரே அறிவார். வள்ளிநாயகி பெற்றதை மலைநாட்டு ஊராகிய குறிஞ்சி முழுவதும் அறிந்தது.  முருகன் பெருங்கருணை உடையவன். பக்குவத்தில் குறைபாடு  இருந்தாலும் வலியவந்து  சோதனையால் பக்குவத்தை உண்டாகச் செய்து போதனையால் இன்ப அனுபவத்தை வழங்குவான் என்ற இரகசியத்தை அருணகிரிநாதர் அறிந்தார். அது தமக்கு மாத்திரம் தெரிந்த இரகசியம் என்று நினைத்தார். ஆனால், அது மலைநாட்டு ஊர் அறிந்த இரகசியம் என்பதைப் பின்பு உணர்ந்தபோது, 'முருகா, நீ எனக்குச் சொன்ன இரகசியத்தை, முன்பே குறிச்சி வெளியாக்கி விட்டதே' என்று முருகப் பெருமானைப் பார்த்தே சொல்கிறார். 


"கின்னம் குறித்து அடியேன் செவி  நீ அன்று கேட்கச்சொன்ன 

குன்னம், குறிச்சி வெளியாக்கி விட்டது; கோடுகுழல்

சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை 

முன்னம் குறிச்சியில்  சென்று  கல்யாணம் முயன்றவனே!"


என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார்.


இதன் பொருள் ---

ஊதுகொம்பும், புல்லாங்குழலும், திருச்சின்னங்க்ளும் ஒலிக்க, குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்கள் ஆகிய வேடர்களின் மகளாக வளர்ந்த வள்ளிநாயகியை, முற்காலத்தில் குறிஞ்சி நிலத்துக்கு உரிய சிற்றூருக்குப் போய் திருமணம் செய்து கொள்ள முயன்றவரே! அடியேனுடை துன்பத்தைத் திருவுள்ளத்தே குறிக்கொண்டு, அதனை நீக்கும் விதமாக அடியேனுடைய காதில் மட்டுமே கேட்குமாறு தேவரீர் அந்நாளில் உபதேசித்து அருளிய இரகசியம் மெய்ஞ்ஞான மலைமேல் உள்ள அருள் ஊரில் சுத்த பரவெளி ஆக்கிவிட்டது.








No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...