பொது --- 1059. மன கபாட

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மன கபாட (பொது)


முருகா! 

அடியேனை ஆண்டு அருள் புரியவேண்டும்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


மனக பாட பாடீர தனத ராத ராரூப

     மதன ராச ராசீப ...... சரகோப


வருண பாத காலோக தருண சோபி தாகார

     மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக்


குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான

     குறைய னேனை நாயேனை ...... வினையேனைக்


கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத

     குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே


அநக வாம னாகார முநிவ ராக மால்தேட

     அரிய தாதை தானேவ ...... மதுரேசன்


அரிய சார தாபீட மதனி லேறி யீடேற

     அகில நூலு மாராயு ...... மிளையோனே


கனக பாவ னாகார பவள கோம ளாகார

     கலப சாம ளாகார ...... மயிலேறுங்


கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


மன கபாட, பாடீர தன, தராதரா ரூப,

     மதன ராச ராசீப, ...... சரகோப


வருண பாதக அலோக, தருண சோபித ஆகார,

     மகளிரோடு சீராடி, ...... இதம் ஆடிக்


குனகுவேனை, நாணாது தனகுவேனை, வீணான

     குறையனேனை, நாயேனை, ...... வினையேனை,


கொடியனேனை, ஓதாத குதலையேனை, நாடாத

     குருடனேனை, நீ ஆள்வது ...... ஒருநாளே?


அனக வாமன ஆகார முநிவராக மால்தேட,

     அரிய தாதை தான் ஏவ, ...... மதுரேசன்


அரிய சாரதா பீடம் அதனில் ஏறி, ஈடேற

     அகில நூலும் ஆராயும் ...... இளையோனே!


கனக பாவன ஆகார, பவள கோமள ஆகார,

     கலப சாமள ஆகார ...... மயில் ஏறும்


கடவுளே! க்ருபாகார! கமல வேதனாகார!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

அனக வாமனாகார முனி, வராக மால் தேட --- பாவமற்ற குறுமுனிவராக, வராகமாக அவதாரம் செய்த திருமால் (சிவபரம்பொருளின் திருவடியைப் பன்றி உருவெடுத்துத்) தேட, 

அரிய தாதை மதுரேசன் தான் ஏவ --- அவருக்கு எட்டாதவராய் நின்ற தேவரீரது தந்தையாகிய மதுரைச் சொக்கநாதரால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட

அரிய சாரதாபீடம் அதனில் ஏறி --- அருமையான தமிழ்ச் சங்கப் பலகையில் ஏறி இருந்து,

ஈடேற அகில நூலும் ஆராயும் இளையோனே --- உலகமக்கள் ஈடேற்றம் பெறும்படியாக அனைத்து நூல்களையும் ஆராய்ந்த இளம்பூரணரே!

கனக பாவனாகார --- பொன்னார் மேனியரே!

பவள கோமளாகார --- பவளம் போன்ற அழகிய திருமேனியரே! 

கலப சாமளாகார மயில் ஏறும் கடவுளே --- தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே!

க்ருபாகார --- அருளுக்கு உறைவிடமானவரே!

கமல வேதனாகார --- உயிர்களின் இதயத் தாமரையில் விளங்கும் ஞான சொரூபரே!

கருணை மேருவே --- கருணையில் மேருமலையைப் போன்று உயர்ந்தவரே! 

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

மன கபாட --- மூடப்பட்ட வஞ்சக மனம் உள்ளவர்களும்,

பாடீர தன தராதரா ரூப ... சந்தனக் குழம்பு பூசி, மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும்,

மதன ராச ராசீப சரகோப -- மன்மத ராசனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி,

வருண பாதக அலோக --- குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் பொருளுக்காக எல்லாரோடும் சேர்பவர்களும்,

தருண சோபித ஆகார --- இளமை வாய்ந்த உடலைக் காட்டிக் கொண்டு இருப்பவருமான

மகளிரோடு சீராடி இதமாடிக் குனகுவேனை --- பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் கொஞ்சிப் பேசுபவனும்,

நாணாது தனகுவேனை --- நாணம் இன்றிச் சரசம் செய்பவனும்,

வீணான குறையனேனை --- வாழ்நாளை வீணாக்கும் குறையை உடையவனும்,

நாயேனை --- நாயினும் இழிந்தவனும்,

வினையேனை --- வினையைப் பெருக்குபவனும், 

கொடியனேனை ---  பொல்லாதவனும்,

ஓதாத குதலையேனை --- தேவரீரது திருப்புகழை ஓதாத, அறிவில்லாதவனும், 

நாடாத குருடனேனை --- தேவரீரை உள்ளக் கண்ணால் கண்டு வணங்காத குருடனும் ஆன அடியேனையும்,

நீ ஆள்வது ஒருநாளே --- தேவரீர் ஆண்டு அருளும்படியான ஒரு நாள் உண்டாகுமா?


பொழிப்புரை

பாவமற்ற குறுமுனிவராக, வராகமாக அவதாரம் செய்த திருமால் (சிவபரம்பொருளின் திருவடியைப் பன்றி உருவெடுத்துத்) தேட அவருக்கு எட்டாதவராய் நின்ற தேவரீரது தந்தையாகிய மதுரைச் சொக்கநாதரால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அருமையான தமிழ்ச் சங்கப் பலகையில் ஏறி இருந்து, உலகமக்கள் ஈடேற்றம் பெறும்படியாக அனைத்து நூல்களையும் ஆராய்ந்த இளம்பூரணரே!

பொன்னார் மேனியரே!

பவளம் போன்ற அழகிய திருமேனியரே! 

தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே!

அருளுக்கு உறைவிடமானவரே!

உயிர்களின் இதயத் தாமரையில் விளங்கும் ஞான சொரூபரே!

கருணையில் மேருமலையைப் போன்று உயர்ந்தவரே! 

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

மூடப்பட்ட வஞ்சக மனம் உள்ளவர்களும், சந்தனக் குழம்பு பூசி, மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மன்மத ராசனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் பொருளுக்காக எல்லாரோடும் சேர்பவர்களும், இளமை வாய்ந்த உடலைக் காட்டிக் கொண்டு இருப்பவருமான பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் கொஞ்சிப் பேசுபவனும், நாணம் இன்றிச் சரசம் செய்பவனும், வாழ்நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயினும் இழிந்தவனும், வினையைப் பெருக்குபவனும்,  பொல்லாதவனும், தேவரீரது திருப்புகழை ஓதாத, அறிவில்லாதவனும்,  தேவரீரை உள்ளக் கண்ணால் கண்டு வணங்காத குருடனும் ஆன அடியேனையும், தேவரீர் ஆண்டு அருளும்படியான ஒரு நாள் உண்டாகுமா?


விரிவுரை


மன கபாட --- 

கபாடம் - கதவு. இங்கே மூடப்பட்ட கதவைக் குறிக்கும். பொதுமகளிர்க்கு அருளைக் கருதாது பொருளையே கருதுகின்ற மனம் இருக்கும். வந்த பொருளும் போகும் வழி இல்லாமல் அடைபட்டுக் கிடக்கும்.

பாடீர தன தராதரா ரூப ---

பாடீரம் - சந்தனம்.

தனம் - முலைகளை. தராதரம் -- ஏற்றத் தாழ்வு, ஏற்ற இறக்கம்.

மதன ராச ராசீப சரகோப ---

மதன ராசன் - மன்மதன். 

ராசீவம் - தாமரை. 

தருண சோபித ஆகார --- 

தருணம் - இளமை.

மகளிரோடு சீராடி இதமாடிக் குனகுவேனை --- 

குனகுதல் - கொஞ்சிப் பேசுதல்.

நாணாது தனகுவேனை --- 

தனகுதல் - சரசம் செய்தல். 

ஓதாத குதலையேனை --- 

குதலை - அறிவில்லாதவன்.

நாடாத குருடனேனை --- 

நாடாத குருடு - இறைவன் திருமேனியைக் கண்ணாரக் கண்டு வணங்காத குருட்டுத் தன்மை ஒன்று. இறைவன் உள்ளக் கண்ணால் கண்டு அறிவால் வணங்காத அறிவுக் குருட்டுத் தன்மை இன்னொன்று.

அனக வாமனாகார முனி ---

அனகன் - பாவமற்றவன்.

பாவமற்ற குறுமுனிவன் ஆகிய வாமனராக அவதாரம் புரிந்தவர் திருமால்.

திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம், ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது.  ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

"தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்

பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்

மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்

சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே."

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

"காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்."

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ? கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்!

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே."

"எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோ? தகைவுஇல் வெள்ளி!

கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்."

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.

வராக மால் தேட --- 

\வராக அவதாரம் புரிந்தவர் திருமால்.

திதியின் மக்கள் இருவர். இரணியன் இரணியாட்சன். இளைஞனாகிய இரணியாட்சன் பூமியை எடுத்துக் கடலில் அழுத்தினான். நிலமக்கள் துன்புற்றதனால் திருமால் வராக அவதாரம் எடுத்துக் கடலில் அழுந்திய பூதலத்தை இரு கொம்புகளால் ஏந்தி மேலே கொணர்ந்து நிலை நிறுத்தினார்.

மால் தேட அரிய தாதை மதுரேசன் --- 

நாராயணரும் நான்முகனும், பன்றியும் அன்னமும் ஆகிப் பலகாலும் தேடியும் அவர்களுடைய கண்களுக்குக் காண ஒண்ணாமல் அழல் உருவாய் சிவமூர்த்தி நின்றனர். அதனால் அது அண்ணாமலை எனப் பெற்றது.

"மேல்உற எழுந்தும், மிகு கீழ்உற அகழ்ந்தும்,

மாலும் இருவர்க்கு அரியார் ஒருவர்" --- பெரியபுராணம்.


மால் அயன் அடிமுடி தேடிய வரலாறு. அதன் உட்பொருள்.

(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7) பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

அரிய சாரதாபீடம் அதனில் ஏறி ஈடேற அகில நூலும் ஆராயும் இளையோனே --- 

சாரதா - கலைமகள். சாரதா பீடம் - மதுரையில் இருந்த அருமையான தமிழ்ச் சங்கப் பலகை.

மதுரையில் கலைவாணியின் கூறாக உள்ள ஆகார முதல் ஹாகாரம் இறுதியாகிய எழுத்து நாற்பத்தெட்டும், பிரமதேவரின் கட்டளைப்படி மனிதர்களாய்ப் பிறந்து தமிழிலே தலைமைப் புலமை கொண்டன. இந்த நாற்பத்தெட்டு புலவர்களும் பாண்டியனது சபையிலிருந்த புலவர்களை வென்று பாண்டியனுடைய ஆதரவில் மதுரைத் திருக் கோயிலுக்கு வடமேற்றிசையில் சங்க மண்டபத்தில் வீற்றிருந்தார்கள். இவர்களுடைய வேண்டுகோளின்படி மதுரைச் சோமசுந்தரக் கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப் பலகையைத் தந்தருளினார். அது ஒரு முழச் சதுரம் உடையது. உண்மைப் புலவர்கள் இருப்பதற்கு மாத்திரம் ஒரு முழம் வளர்ந்து இடம் தரும். அப்புலவர்களின் விருப்பத்தின்படி சிவபெருமானும் ஒரு புலவராய் அப்பலகையில் நடு நாயகமாய் வீற்றிருந்தார். அவருடன் சேர்த்து நாற்பத்தொன்பது புலவர்கள் சங்கப் புலவர்கள்.

"சதுரமாய் அளவு  இரண்டு

சாணது இப் பலகை அம்ம!

மதியினும் வாலிது ஆகும்,

மந்திர வலியது ஆகும்,

முதியநும் போல்வார்க்கு எல்லாம்

முழம்வளர்ந்து இருக்கை நல்கும்

இது நுமக்கு அளவு கோலாய்

இருக்கும் என்று இயம்பி ஈந்தார்."    -- திருவிளையாடல் புராணம்.

இதன் பொருள் ---

சதுர வடிவினதாய் இரண்டு சாண் அளவு உள்ளதாகிய இந்தப் பலகை, சந்திரனிலும் வெள்ளியதாகும்;  மந்திரவலியை உடையது ஆகும். அறிவால் முதிய நஉம்மைப் போன்றார்க்கு எல்லாம், ஒவ்வொரு முழமாக வளர்ந்து இருக்கை அளிக்கும். இப்பலகை, உங்களுக்கு ஓர் அளவு கருவியாக இருக்குமென்று கூறி (அதனைத்) தந்தருளினார்.

"நாமகள் உருவாய் வந்த

நாவலர் தமக்கு வெள்ளைத்

தாமரை அமளி தன்னைப்

பலகையாத் தருவது என்னக்

காமனை முனிந்தார் நல்கக்

கைக்கொடு களிறு தாங்கும்

மாமணிக் கோயில் தன்னை

வளைந்துதம் கழகம் புக்கார்." -- திருவிளையாடல் புராணம்.

இதன் பொருள் --- 

கலைமகள் வடிவாக வந்த அப்புலவர்களுக்கு, வெள்ளைத் தாமரை ஆகிய தவிசினை ஒரு பலகையாகச் செய்து தருவதுபோல, மன்மதனை எரித்த இறைவர் தந்தருள, அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு,  யானைகள் சுமக்கும் பெரிய மணிகள் அழுத்திய திருக்கோயிலை வலம் வந்து, தமது அவையில் புகுந்தனர்.

இந்தச் சாரதா பீடத்தில் முருகவேள் சிவபிரான் திருவுள்ளப்படி - அமர்ந்து, சங்கப் புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தைத் தீர்த்தருளிய வரலாற்றை

"ஏர்ஆரும் மாட கூட மதுரையில்

     மீது, ஏறி, மாறி ஆடும் இறையவர்,

          ஏழ்ஏழு பேர்கள் கூற வருபொருள் ...... அதிகாரம்,

ஈடுஆய, ஊமர் போல வணிகர் இல்

     ஊடுஆடி, ஆல வாயில் விதிசெய்த

          லீலா! விசார! தீர! வரதர! ...... குருநாதா!"

என்று அடிகளார் "சீரான கோல" எனத் தொடங்கும் திருப்புகழில் கூறி உள்ளார்.


சங்கப்புலவர் கலகம் தீர்த்த வரலாறு


“தென்னாடு டைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவாபோற்றி”

என்ற மணிவாசகத்தால் புகழ் பெற்ற தென் தமிழ்நாட்டின் தலைநகர் மதுரை. அதன் பெருமை எம்மால் அளக்கற்பாற்றோ?

அம்மதுரை மா நகரத்தை வம்சசேகர பாண்டியனது புதல்வன் வம்ச சூடாமணி என்னும் பாண்டியன் அரசு புரிவானாயினான். நாள்தோறும் அம்மன்னர் பெருமான் சண்பகமலர்கள் கொண்டு சோமசுந்தரப் பெருமானை யருச்சிக்கும் நியமம் பூண்டிருந்தனன். அதனால் அவற்குச் சண்பக பாண்டியன் என்னும் பேரும் போந்தது. அறநெறி வழாது அவன் அரசு புரியுங்கால் கிரக நிலை மாற்றத்தால் மழையின்றி, மக்கள் தடுமாற்றமடைந்தனர். பன்னிரு வருடம் பஞ்சத்தால் உலகம் வாடியது. அது காலை ஆங்காங்குள்ள தமிழ்புலவர்கள் பசியால் வருந்தி ஒருங்கு கூடி பாண்டியனை யடுத்தனர். பாண்டியன் அவர்களை அன்னைபோல் ஆதரித்துப் போற்றினன்.

பின்னர் மன்னன் அச்சங்கப் புலவர்களை அன்புடன் நோக்கி, “முத்தமிழ் வல்ல உத்தம சீலர்களே! இங்ஙனே எஞ்ஞான்று மிருந்து அமிழ்தினு மினிய தமிழ் நூல்களை ஆய்மின்” என்றனன். புலவர் “புரவலர் ஏறே” ஐந்திலக்கணங்களுள் பொருள் நடுநாயகமாக மிளிர்வது. எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் பொருள் மாட்டன்றே? அப்பொருள் நூலின்றி யாங்கள் எவ்வாறு ஆய்வோம்?” என்று வருந்திக் கூறினார்கள். அரசன் ஆலவாய் அண்ணல் ஆலயத்தேகி, “தேவ தேவா! இக்குறையை தேவரீரே நீக்கியருளல் வேண்டும்; தமிழும் தமிழ்நாடும் தழைக்கத் தன்னருள்புரிவீர்.” என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வெள்ளம் பெருக முறையிட்டனன். அன்பர் கருத்தறிந்து அருளும் எம் சொக்கலிங்கப் பெருமான், இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் நூலையருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தருளினார்.

வடமொழி பாணினியால் செய்த வியாகரணத்தை உடைத்து; அப்பாணியினினும் பல்லாயிரமடங்கு மகத்துவம் உடையவரும், கரத்தைச் சிறிது கவிழ்த்தலால் விந்தகிரியையும், நிமிர்த்தலால் ஏழ்கடலையும் அடக்கிய பேராற்றலும் பெருந்தவமும் உடையவருமாகிய அகத்திய முனிவரால் செய்யப் பெற்ற இலக்கணமே அன்றி, சிவமூர்த்தியார் செய்தருளிய இலக்கணத்தையும் உடையது இத்தமிழ் எனின் இதன் பெருமையையும் அருமையையும் அளக்க வல்லவர் யாவர்? அதனைத் தாய் மொழியாகக் கொண்ட எமது புண்ணியப் பேற்றைத்தான் அளக்க முடியுமோ?

அறுபது சூத்திரங்களை உடையது இறையனார் அகப்பொருள். திருவலகிடச் சென்ற அந்தணர் அதனைக் கண்டு எடுத்தேகி அரசனிடம் அளித்தனர். அவன் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்து, அதன் பொருள் எளிதில் விளங்காமையின் புலவர்களை நோக்கி, “இதற்கு உரை செய்மின்” என்று வேண்டினன். அங்ஙனமே நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பதின்மரும் உரை செய்தனர். பிறகு அவர்களுக்குள் தங்கள் தங்கள் உரைகளே சிறந்தன என்று கலகம் உண்டாயிற்று. “இவர்கள் உரைகளை ஆய்ந்து இதுவே சிறந்தது என்று முடிவு கூறுவதற்கு இவரினும் சிறந்த கல்வி கரைகண்ட புலவர் யாண்டுளார்? என் செய்வேன்? ஆண்டவனே! தேவரீரே இக்கலகத்தை நீக்கி அருள்செய்ய வேண்டும்” என்று தென்னவனாகிய மன்னவன், முன்னவன் திருமுன் முறையிட்டனன்.

“வேந்தனே! இவ்வூரிலே உப்பூரிகுடி கிழார் மகனாவன் உருத்திரசன்மரை அழைத்துவந்து உரை கேட்பின் மெய்யுரை அவன் தெரிக்கும். அந்தப் பிள்ளை குமார சுவாமியாகும். மெய்யுரைக்குக் கண்ணீர் சொரிந்து உடல் கம்பித்து ஆனந்தமடைவன்” என்று அசரீரி கூறிற்று. (அசரீரி கூறியதாக அந்நூலுக்கு உரைகண்ட நக்கீரர் பாயிரத்தில் கூறினர். இனி திருவிளையாடற் புராணத்துள் பெருமான் புலவர்போல் வந்து கூறியதாகவும் தனபதி என்னும் வணிகனுக்கும் குணசாலினிக்கும் மகனாகி வளர்ந்தார் என்றும் கூறும்).

அதுகேட்ட புரவலனும் புலவரும் விம்மிதமுற்றுத் திருவருளைப் புகழ்ந்து, வணிகர் திருமனையில் அதரித்து வளரும் உருத்திர ஜன்மரிட மேகினர். அந்தக் குழந்தை, செங்கண்ணன்; புன்மயிரன்; ஐயாட்டைப் பருவத்தன்; மூகை போல் ஒன்றும் பேசலன்; இதத்தகு முழுது உணர் புலவனாம் முருகக் குழந்தையை அனைவரும் வணங்கி முறைப்படி அழைத்து வந்து, சங்கப்பலகையிலிருந்து வாச நீராட்டி வெண்துகில் வெண்மலர், வெண்சாந்தி முதலியவற்றால் அலங்கரித்து, போற்றிசெய்து புலவர் யாவரும் தத்தம் உரைகளை வாசித்தனர். உருத்திரசன்மராம் கந்தக் கடவுள் அவ்வுரைகளைக் கேட்டு வரவாராயினார். சிலர் சொல் வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார். சிலர் சொல்லழகைப் புகழ்ந்தார். சிலர் பொருளாழத்தை உவந்தார். சிலர் பொருளை பெறுத்தார் கபிலர், பரணர் என்னும் புலவர்கள் வாசிக்கும்போது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை யசைத்னர்; மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் தம்முரையை வாசித்தபோது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து மெய் புளகித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து இதுவே உண்மை யுரையென விளக்கியருளினார். பாண்டியனும் பாவலரும் மெய்யுரை பெற்றேமென்று கழி பேருவகை யுற்றனர்.


"நுழைந்தான் பொருளுதொறும் சொல்தொறும், நுண்தீஞ்  சுவையுண்டே

தழைந்தான் உடல், புலன்ஐந்தினும் தனித்தான், சிரம்பனித்தான்

குழைந்தான்,விழி வழிவேலையுள் குளித்தான் தனையளித்தான்

விழைந்தான் புரி தவப்பேற்றினை விளைந்தான் களி  திளைத்தான்."  --- திருவிளையாடற்புராணம்

இனி, முருகவேள் உருத்திசன்மராக வந்தார் என்பது பற்றிச் சிறிது கூறுதும். ஓலமறைகள் அறைகின்ற ஒருவனும், மூவருங்காணாத முழுமுதல்வனும் ஆகிய முருகவேள் உருத்திரசன்மராக வந்தார் என்பது அவருடைய முழு முதற்றன்மைக்கு இழுக்கன்றோ? எனின், இழுக்காகாது. முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திர ஜன்மராக அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், ஞானசம்பந்தராகவும் வந்ததையும் அங்ஙனமே சீகண்டருத்திரர், வீரபத்திரர், வைரவர், ஆகியோர் செயல்களைப் பரவசித்தின் செயலாக ஏற்றித் தேவார திருவாசகங்கள் கூறுவதனால் பரசிவத்திற்கு இழுக்கில்லை. அது போல், அபரசுப்ரமண்யர்கள் திருஞானசம்பந்தராகவும் உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும் வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது. இதனைக் கூர்த்த மதி கொண்டு நுனித்து உணர்ந்து ஐயந்தெளிந்து அமைதியுறுக.

“திருத்தகு மதுரைதனில் சிவன்பொருள் நிறுக்கும் ஆற்றால்

உருத்திர சருமனாகி உறுபொருள் விரித்தோன்‘ --- கந்தபுராணம்


“செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி

    செந்தில் பதிநகர் உறைவோனே” --- (வஞ்சத்துடன்) திருப்புகழ்

கமல வேதனாகார --- 

கமலம் - இதயக் கமலத்தைக் குறிக்கும்.

வேதனம் - அறவிவு. இங்கே ஞானத்தைக் குறிக்கும்.


கருத்துரை


முருகா! அடியேனை ஆண்டு அருள் புரியவேண்டும்.
No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...