மனக் கட்டுப்பாடு - தவம்.

 


மனக் கட்டுப்பாடு - தவம்.

-----

உலகில் எதை வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். மனதை மட்டும் அடக்குவது அவ்வளவு எளிதில் இயலாத காரியம். 

"கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;

        கரடி வெம்புலி வாயையும்

      கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;

        கட்செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

         வேதித்து விற்று உண்ணலாம்;

      வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

        விண்ணவரை ஏவல் கொ(ள்)ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்றொரு

        சரீரத்தினும் புகுதலாம்;

      சலம் மேல் நடக்கலாம்;  கனல் மேல் இருக்கலாம்;

        தன் நிகர்இல் சித்தி பெறலாம்;

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

        திறம் அரிது, சத்தாகி என்

      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

        தேசோ மயானந்தமே".

என்பது தாயுமான அடிகளார் அருளிய பாடல்.

தாயுமான அடிகளார்,  "சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!" என்று புலம்புகிறார். "எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும், என் இதயமும் ஒடுங்கவில்லை; யான் என்னும் அகந்தைதான் எள்ளளவும் மாறவில்லை" என்றும் இரங்குகிறார். "உள்ளம் எனது வசம் நின்றது இல்லை, என் தொல்லைவினை ஒல்லை விட்டிடவும் இல்லை" என்று வருந்தி கந்தகோட்டா முருகனிடம் இரங்குகின்றார் வள்ளல்பெருமான். "ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ, நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல" இறைவனை வேண்டுகின்றார் தாயுமான அடிகளார்.

எல்லாப் பயிற்சிகளையும் விட மனத்தை அடக்கும் பயிற்சியே சிறந்தது. உயிர் வாழ்க்கையின் பயன்,  அதனை மேலானதாக மாற்றுவதே ஆகும். இரும்பை உருக்கினால் எஃகு ஆகும். தங்கத்தை உருக்கினால் ஒளி உடையது ஆகிறது; அணிகலன் செய்யப்படுகின்றது. நிலமானது உழுதலின் மூலம் நெகிழ்ந்து பயனுடையது ஆகிறது. ஊனினை உருக்கினால் உள்ளொளி பெருகும். நெகிழ்ச்சியும் உருக்கமும் உறுதியும் உள்ள இடத்தில் இறைவன் விளங்கித் தோன்றுகின்றான். புன்புலால் யாக்கையோடு வாழும் வாழ்க்கையை அருளுணர்வு கொண்டு உருக்கினால் அது தவம் ஆகும்.

தமக்கு வந்த நோயினைக் கண்டு பதறாமல், அது நம்முடைய வினைப்பயனே என்று கருதி ஏற்று மகிழ்வுடன் அனுபவித்தல், பிற உயிர்களுக்கு எந்த வகையாலும் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவை தவத்தின் அடையாளம் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு." --- திருக்குறள்.

உற்றநோய் நோன்றல் என்பது மனத்தால் செய்யும் தவம். உயிர்க்கு உறுகண் செய்யாமை என்பது உடலால் செய்யும் தவம். அகமும் புறமும் ஒத்த தவமே சிறந்த தவம். புறத்தில் தவம் செய்பவரைப் போலக் காட்டிக் கொள்வது உண்மைத் தவம் ஆகாது. "பூனைக்கு இல்லை தவமும் தயையும்" என்று வெற்றிவேற்கை கூறும். பூனை கண்ணை மீடிக் கொண்டு இருந்தால், அது தவம் புரிகிறது என்று எண்ணக் கூடாது. எல்லாக் கதவுகளையும் அடைத்தால்தான் அதில் உள்ள பொருளைப் பாதுகாக்க முடியும். ஒரு கதவினை அடைத்து, மற்றொரு கதவினைத் திற்ந்து வைத்தால், பொருள் பாதுகாப்பு இல்லை. இதே போல் பொறிபுலன்கள் ஐந்தையும் அடைத்து, மனம் ஒன்றி இருந்து இறைவன் திருவடிகளை நினைந்தால் ஒழியத் தவம் கை கூடுவதில்லை. "மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து,  அமுதே ஊறி நின்று,  என் உள் எழு பரஞ்சோதி!" என்பது திருவாசகம்.

தவம் குறித்துப் பின்வரும் பாடல்களையும் காண்க.

"உயிர்நோய் செய்யாமை, உறுநோய் மறத்தல்,

செயிர்நோய் பிறர்கண் செய்யாமை - செயிர்நோய்

விழைவு வெகுளியினை விடுவான் ஆயின்

இழிவு அன்று இனிது தவம்." --- சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்யாமையும், தனக்குப் பிறரால் (தாம் செய்த வினையின் பயனாக) வரும் துன்பத்தை மறத்தலும், கோபத்தால் உண்டாகும் துன்பத்தைப் பிறரிடத்துச் செய்யாமையும், குற்றத்தைச் செய்யும் துன்பத்தைத் தருகின்ற  அவாவும்  கோபமும் ஆகிய இவற்றை  விட்டுவிடுவானே யானால்,  அவனால் செய்யப்படும் அந்தத் தவமானது  தாழந்தது அன்று, இனிமை உடையதாகும்.

"ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள் உடையத்

தாக்க அருந் துன்பங்கள் தாம் தலை வந்தக்கால்,

நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்

காக்கும் திருவத் தவர்."    ---  நாலடியார்.

இதன் பொருள் ---

முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, போக்குதற்கு அரிய துன்பங்கள் தம்மிடம் வந்து அடைந்தால், எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, துறவு ஒழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறு உடையவராவர். (இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.)

"தூய்மை உடைமை துணிவாம், தொழில் அகற்றும்

வாய்மை உடைமை வனப்பாகும், - தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை, மூன்றும்

தவத்தில் தருக்கினார் கோள்." --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

மனத் தூய்மையினை உடையராய் இருத்தலும்; மெய்நூல்களாலே துணியப்பட்ட  நற்செய்கையை விரிக்கின்ற உண்மை உடையவனாய் இருத்தலும்;  மங்கையருடைய அழகாகிய  தீமையைத் தருவதனை  மனத்தால் நினையாமையும் வாயால் சொல்லாமையும் ஆகிய இம் மூன்றும் தவத்திலே  செருக்கி நின்றவர்களுடைய கொள்கை ஆகும். 

துன்பம் உயிரைச் சுடுவதில்லை. உயிரைப் பற்றி இருக்கின்ற குற்றத்தினையே சுடும். மருத்துவர் கையை அறுப்பது இல்லை. கையில் உண்டாகிய குற்றம் ஆகிய கட்டியினை அறுப்பார். கட்டியை அறுக்கும்போது உண்டாகும் துனபத்திற்கு அஞ்சி பருத்துவரிடம் செல்லாமல் இருக்க முடியாது. அதுபோலவே, துன்பத்திற்கு அஞ்சித் தவம் செய்யாமல் இருக்க முடியாது. துன்பம் பொறிபுலன்களின் வழி வந்தாலும், அல்லது வேறு எவ்வழியில் வந்தாலும் சரி, அந்தத் துன்பத்தினைத் தாங்கிக் கொண்டு தடுமாறாமல் நோற்பதே தவம் ஆகும். அப்படிச் செய்வாரிடத்தில் திருவருள் மேலோங்கி வெளிப்பட்டு நிற்கும்.

விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச் சோதியாய் மாமணிச் சோதியாய் உள்ளான். அப்படியிருந்தும் நம் கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பியவருக்கு அந்தச் சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு என்னும் கோலை நட்டு, உணர்வு என்னும் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்று அருளுவான் என்கிறார் அப்பர் பெருமான். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும். கடைய மணியில் ஒளி தோன்றும். 

"விறகில் தீயினன்; பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே."     --- அப்பர். 

கடைதல் என்னும் முயற்சி இல்லையானால், பயன் இல்லை. அதற்கு உடலையும் உள்ளத்தையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவே தவம். 

களத்து மேட்டில் நெல்லைத் தூற்றுபவர்கள், நெல்லின் மீது கொண்ட கருணை காரணமாகத் தூற்றுவதில்லை. தம்முடைய பயன் கருதியே தூற்றுகிறார்கள். அதுபோலத் தவம் செய்தால், செய்பவருக்குப் பெருமையே தவிர, தவத்திற்குப் பெருமை இல்லை. தவத்தினால் கடவுளுக்குப் பயனில்லை. மனிதனுக்கே பயன்.

"பொன்னால் பிரயோசனம் பொன் படைத்தாற்கு உண்டு; பொன்படைத்தோன்

தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு? அத் தன்மையைப் போல்

உன்னால் பிரயோசனம் வேணது எல்லாம் உண்டு; உனைப்பணியும்

என்னால் பிரயோசனம் ஏது உண்டு? காளத்தி ஈச்சுரனே."

என்பார் பட்டினத்து அடிகளார்.

தவம் செய்வோர் சிலர் ஆரவாரத்திற்காகச் செய்வர். நவத்திற்கு உரிய புறக் கோலத்தோடு, புதரும் புற்றும் மூடி மறைக்கும் வரையில் ஊண் உறக்கம் இன்றித் தவம் செய்வர். ஆயினும், "நான் தவம் செய்கிறேன்" என்ற உணர்வோடு செய்வர். அவர்களுடைய தவம் பயன் அற்றது.

தவநெறியில் பயிலப் பயில ஒருவிதமான ஆற்றல் உண்டாகும். சிலர் தவத்தில் சிறிது வளர்ந்தவுடன் சித்துகள் விளையாடுவர். அதனாலும் தவம் அழிந்து அவம் பெருகும். தவத்திற்கு 'நான்' என்ற அகப்பற்றும், 'எனது' என்ற புறப்பற்றும் அறவே நீங்கவேண்டும். இவையிரண்டும் அழியாத வரையில் தவத்தினால் பயனில்லை. புராணங்களில் வருகிற அசுரர்கள் அனைவருமே சிறந்த தவம் செய்தவர்கள். இராவணன், சூரபதுமன், இரணியன் முதலாயினோர் சிறந்த தவம் செய்தாலும், 'நான்' என்னும் செருக்கினால் தவத்தை இழந்தனர்; தண்டனைக்கு ஆளாயினர்.

கண்டதை எல்லாம் இச்சித்து, தன்னுயிரைத் துன்பத்திற்கு ஆளாக்காமல், தன் உரிமையாக்கிக் கொண்டவரை ஏனைய உயிர்கள் எல்லாம் தொழும். 

"தன் உயிர் தான் அறப் பெற்றானை, ஏனைய 

மன் உயிர் எல்லாம் தொழும்" 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். தொழுதற்குக் காரணம் சார்பினாலே தானும் நலம் பெறலாம் என்பதே ஆகும். தானே ஆற்றினில் நீந்த முடியாதவர், படகின் துணைகொண்டு நீந்திக் கரை சேர்தலைப் போல, தவத்தில் சிறந்தாரைத் துணையாகக் கொண்டு மற்றவரும் பயன் பெறலாம். அப்பர் பெருமானைத் துணையாகக் கொண்டு அப்பூதியடிகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் துணையாகக் கொண்டு பெருமிழலைக் குறும்ப நாயனாரும் உய்தி பெற்றமை உணரத் தக்கது. மேலும் தன்னுயிர் தான் அறப் பெற்றவர் என்பதற்கு 'நான் என்ற சுட்டுணர்வு அழிதல்' என்றும் பொருள் கொள்ளலாம். 'நான்' என்ற சுட்டுணர்வு அழிந்தவர்கள் உலகத்தை வாழ்விக்கும் உத்தமர்கள். அவர்களால் உலக உயிர்கள் இன்பநலம் பெறும். ஒரு படகின் வழி, பலர் கரையேறுதலைப் போல, ஒரு ஞானத் தபோதனர் மூலம் எண்ணில்லாத உயிர்கள் உய்தி பெறலாம்.

மனிதன் தன்னுடைய அகப்பற்று, புறப்பற்றுகளை ஒவ்வொன்றாக விட்டொழிக்க வேண்டும். விட்டொழிப்பது என்றால், முற்றிலும் விட்டு விலகுவது அல்ல. தவத்தின் தொடக்கத்தில் இது சாத்தியம் ஆவதும் அல்ல. பொருள்களை பேராசையுடனும்,  விகற்ப உணர்வுடனும் பார்க்காமலும், தேடாமலும் இருக்கவேண்டும். தான் அனுபவிக்கும் இன்பத்தை மற்றவர்களும் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் முகிழ்க்க வேண்டும். மற்றவர்கள் அனுபவித்து மகிழ்வதைப் பார்த்துத் தானும் மகிழப் பழகிக்கொள்ள வேண்டும். பிறர் மகிழ்வுக்காகத் தன்னுடைய மகிழ்வை விட்டுக் கொடுக்கப் பழக வேண்டும். இத்தகு பழக்கம் வளர்ந்து,  உறுதி பெறுவதற்கு அடிப்படையான நம்பிக்கை ஒன்று தேவை. அதாவது எல்லாம் வல்ல இறைவன் எல்லா உயிர்களிடத்தும் தங்கியிருக்கிறான். அந்த உயிர்கள் மகிழும் பொழுது இறைவனும் மகிழ்கின்றான் என்னும் நம்பிக்கை உண்டாக வேண்டும். 

தவம் செய்பவர்கள் இறைவனின் தண்ணருளை வாங்கிப் பிறரும் மகிழத் தருபவர்கள். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர்கள். மகவு எனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுபவர்கள். தனக்கென எதையும் வேண்டாதவர்கள். வறுமை என்பது, செல்வம் இன்மை அல்ல. எவ்வளவு இருப்பினும் "போதாது, போதாது” என்று மேலும் தேடுவதுதான் வறுமை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவுதான்.

இவ்வுலகத்தில் மக்கள் அடையும் செல்வமும், தேவலோகத்தில் தேவர்கள் அடைந்துள்ள அமுதம்,  கற்பகத் தரு, சிந்தாமணி முதலாகிய செல்வங்களும்,  ஒன்றை வைத்து மற்றொன்றை ஆராய்ந்து பார்த்தால், ஒன்றினுக்கு ஒன்று கீழ்ப்படுதலும், மேம்படுதலும் ஆகிய இரண்டு தகுதிகளை உடையனவே. மக்களுக்கு உள்ளேயும் ஒருவர் செல்வம் மற்றவர்க்குக் கீழாதலும், மேலாதலும் உண்டு. தேவர்களுள்ளேயும் பிரமனது செல்வத்தை நோக்க, இந்திரனது செல்வம் கீழானது எனப்படும். அல்லாமல், இவை யாவும் நிலையான இன்பத்தைத் தராது.  துன்பத்திற்கு இடமாகிய பிறப்பினையே தருவன ஆகும். பிறப்பினையும், அதனால் சாருவதாகிய துன்பத்தையும் தருவது ஆசையே. ஆசையை அறுத்துவிட்டால், பிறப்பு இல்லை. அதனால் வரும் துன்பமும் இல்லை. எனவே, ஆசையை அறுத்தல் பெரும் செல்வமாகும். அச் செல்வத்திற்கு, இவ்வுலகச் செல்வங்களும்,  விண்ணுலகச் செல்வங்களும் ஈடாகா. எனவே, "வேண்டாமை அன்ன விழுச் செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயனார். அது இந்த உலகத்திலும் இல்லை, அந்த விண்ணுலகத்திலும் இல்லை என்றார். விருப்பு வெறுப்பு அற்று இருத்தலே மேலான தவம்.

"சிதம்பர மும்மணிக் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் இதனை மிக அழகாகக் காட்டிப் பாடி உள்ளார்.

"கொடியும் முரசும் கொற்றவெண் குடையும்

பிறர்கொளப் பொறாஅன், தானே கொண்டு

பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கி,

செவியிற் கண்டு, கண்ணில் கூறி,

இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்


மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித்

தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற,

இழப்புறு விழுமம் எய்தி, அழுக்கறுத்து

மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ

அயிற்சுவை பெறாயன், துயிற்சுவை யுறாஅன்,


மாண்இழை மகளிர் தோள் நலம் கொளாஅன்,

சிறுகாற்று வழங்காப் பெருமூச்சு எறிந்து,

கவலை உற்று அழிவதூஉங் காண்டும், விறகு எடுத்து

ஊர்தொறும் சுமந்து விற்று, கூலிகொண்டு,

புற்கையும் அடகும் மாந்தி, மக்களொடு


மனையும் பிறவும் நோக்கி, அயன்மனை

முயற்சியின் மகனை இழித்தனன் எள்ளி,

எனக்கு இணை இலை என இனையன் மற்றொருவன்

மனக்களிப்பு உறீஇ மகிழ்வதூஉம் காண்டும், அதனால்

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,

அல்கா நல்குரவு அவா எனப்படுமே." 

இதன் பொருள் ---

      அரசன் ஒருவன்,  தன்னுடையதை விட, பிற அரசனுடைய செல்வம் மிகுந்து இருப்பதாக எண்ணினான். தன்னிடத்தில் உள்ள பொருளை இழந்தால் உண்டாகக் கூடிய துன்பத்தை, அதை இழக்காது உள்ளபோதே வருவித்துக் கொண்டான். பொறுமையை அவன் இழந்து, பொறாமை வடிவம் ஆயினான். மேலான செல்வத்தைப் பெறுவதற்கு உரிய வழிகளை ஆராய்ந்தான். அது அவனுக்குக் கவலையையே உண்டாக்கியது. உண்டு மகிழ்ந்து இருந்ததையும், உறங்கி மகிழ்ந்து இருந்ததையும் மறந்தான். தனது மனைவியிடத்து அடையும் மகிழ்ச்சியையும் மறந்தான். அவன் விடுவதோ பெருமூச்சு. ஆனால் வழங்குவதோ சிறுகாற்று. எவ்வளவு முயன்று பெருமூச்சு எறிந்தாலும், அது பெருங்காற்று ஆகாது.  இப்படிக் கவலையினாலேயே ஒரு பெருஞ்செல்வத்தன் அழிவதும் உண்டு.

      நாள்தோறும் விறகு வெட்டிக் கட்டிச் சுமந்து கொண்டு போய், ஊர்தோறும் விற்றுக் கூலி வாங்கிக் கொண்டு, அதனைக் கொண்டு, புல்லரிசிக் கூழும் இலையுணவும் உண்டு மகிழ்வான். தனித்து உண்ணமாட்டான். மனைவி மக்களுடன் உண்டு களிப்பான். தன் வீட்டு நிலையை, அயல் வீட்டு நிலையோடு எண்ணிப் பார்ப்பான். தன் முயற்சியையும், அதன் விளைவால் தனக்கு உண்டாகும் பயனையும் எண்ணுவான். இந்த நிலைமை அயல் வீட்டானிடத்தில் இல்லை என்பதையும் அறிவான். எனக்கு இணையாக யாரும் இல்லை என்று எண்ணி மனமகிழ்ச்சி அடைந்து ஒரு ஏழையானவன் இருப்பதும் கண்டோம். அதனால், செல்வம் என்பது ஒருவனுடை சிந்தை நிறைவு ஆகும். குறையாத வறுமை என்பது அவா உடைமை ஆகும்.

தவம் செய்வோருக்கு நிறைநலம் மிக்க ஒழுக்கம் வேண்டும். சிலர் பழக்கத்தினால் புறத்தே உள்ள ஐம்பூதங்கள் ஆகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவற்றில் உடலைப் பழக்கி, அவற்றினால் உண்டாகும் துன்பத்தினில் வெற்றி பெறுவர். அதாவது நீரில் பலகாலும் தோய்தல், நிலத்தில் கிடத்தல், நெருப்பில் நடத்தல், விண்வழிச் செல்லுதல், காற்றின் திசையினை மாற்றுதல் ஆகிய சாதனைகளில் வெற்றி பெறுவர். ஆயினும் அகத்து உறுப்புகளில் ஒட்டியிருக்கும் ஆசை நீங்காது வாழ்வர். இவர்தம் எளிய நிலையினைப் பார்த்து அவர்தம் உள்ளே ஒன்றித்துக் கலந்து நிற்கும் ஐம்பூதங்கள் நகைக்கும் என்பதனை,

"வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம், பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்"

என்றார் திருவள்ளுவ நாயனார். தவம் விரும்பத் தக்கதுதான். முறையாக வாழும் திறனற்றவர்கள் உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தவவேடத்தினை மேற்கொள்வர். இதனைத் திருவள்ளுவர் மிகவும் கடுமையாகக் கடிந்து பேசுகின்றார். பசுவானது  புலித்தோலைப் போர்த்துக்கொண்டு மேய்தல் போன்றது,  தவவேடம் பூண்டோர் பாமர மக்களை வஞ்சித்துக் காணிக்கை என்ற பெயரால் பொருள் பறிப்பது. புதரில் மறைந்து நின்று ஒன்றும் அறியாத புள்ளினை வீழ்த்துகிறான் வேடன். அதுபோலக் கயவன், தவவேடத்தில் மறைந்து ஒன்றும் அறியாத பாமரமக்களைத் தன் வலையில் வீழ்த்துகின்றான் என்று திருவள்ளுவர் கண்டிக்கிறார். பற்றற்றார் போலக் காட்சியளித்து பற்று நீங்காதவர்கள் பாவம் செய்கிறார்கள். அப்பாவத்தால் பின்னர் இரங்கிக் கவலைப்படுவதற்கு உரியவர் ஆகின்றனர் என்பதை,

"பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம், எற்றுஎற்று என்று

ஏதம் பலவும் தரும்"

என்று நிறுவுகிறார் திருவள்ளுவ நாயனார். புறத்துறவு எளிதில் கை கூடக்கூடிய ஒன்று. புறத்துறவு என்பது வெறும் கோலத்தினை மட்டுமே காட்டுவது. சில நாட்கள் சும்மா வாழ்ந்தாலே  தலைமுடி நீண்டு, தாடி வளர்ந்து உடல் துறவுக் கோலத்தை அடைந்து விடும். அதற்கு மேல் காவி ஆடை மட்டுமே தேவையிருக்கும். மழித்தலோ, அன்றி நீட்டலோ செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையாகப் பேணுதல் இல்லாமையால் உரோமங்கள் உதிர்தலும் உண்டு. எவ்வளவு பேணினாலும், சிலருடைய தலை தானாகவே வழுக்கை ஆவதைப் பார்க்கின்றோம். வேடம் கருதி, அதற்கான முயற்சியை மேற்கொண்டு மழித்தலையும் நீட்டலையுமே திருவள்ளுவ நாயனார் மறுக்கின்றார். இதனை,

"மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்"

பழித்தது ஒழித்து விடின்"

என்னும் திருக்குறளால் அறியலாம்.

விளக்கு சுடர்விட்டு எரிகிறது. ஆயினும், அதன் நடுவே ஒரு கறுப்பு உண்டு. அதுபோல, பொய்த் தவவேடம் பூண்டு, மனத்தில் கறுப்பு வைத்து வந்தான் என்று முத்தநாதன் வருகையைச் சேக்கிழார் வர்ணிக்கிறார். " மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்  பொய்தவ வேடம் கொண்டு  புகுந்தனன் முத்த நாதன்" என்பது சேக்கிழார் அருள்வாக்கு. திருவள்ளுவர் இதனை ஒரு காட்சியினாலே விளக்குகின்றார். குன்றிமணி நல்ல சிவப்பு நிறம் உடையது; ஆயினும், அதன் மூக்கில் கறுப்பு இருக்கிறது. அதுபோலத் தவவேடத்தில் அகம் கறுத்த மனிதர்கள் வாழ்வதைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார். வடிவத்தால் செவ்விய தன்மை தவத்திற்கு அவசியம் இல்லை. உள்ளத்தில் செம்மை வேண்டும். 

அம்பின் வடிவம் நேரானதே ஆயினும் அதனால் விளையும் பயன் கொடிதே. யாழின் வடிவம் கோணலானது. ஆயினும் அதன் பயன் பலர்கேட்டு மகிழும் இசையமுது ஆகும். ஆதலால், வேடத்தால் பயன் இல்லை. நெஞ்சால் துறந்து, துாய தவம் இயற்றுதலே உண்மையான தவம். தவம் செய்யும் இயல்பு இல்லாதோர், வேடத்தை மாத்திரம் புனைந்துகொண்டு,  நாடகத்தால் அடியார்போல் நடிப்பது நாட்டுக்குக் கேடு. மனிதகுலத்துக்குத் தீங்கு. மேலும் தமக்கு வகுத்துள்ள கடமைகளைச் செய்வதே தவம் என்றும் திருவள்ளுவ நாயனார் கூறுகிறார். "தவம் செய்வார் நம் கருமம் செய்வார்" என்பது அவர் வாக்கு. "தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்" என்று அடியார்களைச் சிறப்பித்துத் திருமுருகாற்றுப்படை கூறும். மனக் கட்டுப்பாடுதான் தவ உளர்ச்சியைத் தரும். திருவள்ளுவ நாயானர் காட்டும் தவநெறி பெருகி வளர வேண்டும்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...