பொது --- 1066. கவடு கோத்தெழும்

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கவடு கோத்தெழும் (பொது)


முருகா! 

வீட்டின்பத்தை அடியேனுக்கு அருள்வாய்


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


கவடு கோத்தெழு முவரி மாத்திறல்

     காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட


கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன

     கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன்


தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்

     தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத்


தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச

     தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே


சுவடு பார்த்தட வருக ராத்தலை

     தூளா மாறே தானா நாரா ...... யணனேநற்


றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது

     ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக்


குவடு கூப்பிட வுவண மேற்கன

     கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே


குலிச பார்த்திப னுலகு காத்தருள்

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


கவடு கோத்து எழும் உவரி மா திறல்

     காய்வேல் பாடேன், ஆடேன், வீடு ...... ஆனதுகூட


கருணை கூர்ப்பன, கழல்கள் ஆர்ப்பன,

     கால்மேல் வீழேன், வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன்,


தவிடின் ஆர்ப்பதம் எனினும் ஏற்பவர்

     தாழாது ஈயேன், வாழாதே சா ...... வது சாலத்


தரமும், மோக்ஷமும் இனி என் ஆக்கை 

    சதா ஆமாறே, நீதான் நாதா ...... புரிவாயே.


சுவடு பார்த்து அட வரு கராத் தலை

     தூள் ஆமாறே தான், ஆ நாரா ...... யணனே,நல்


துணைவ, பாற்கடல் வனிதை சேர்ப்ப, 

     துழாய் மார்பா, கோபாலா, காவாய் ...... எனவே, கைக்


குவடு கூப்பிட உவண மேல், கன

     கோடு ஊதா, வானே போது ஆள்வான் ...... மருகோனே!


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

சுவடு பார்த்(து) அட வரு கராத்தலை தூள் ஆமாறே தான் --- யானை வருகின்ற குறியைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு

ஆ நாராயணனே --- ஆ! நாராயணமூர்த்தியே!

நல் துணைவ --- நல்ல துணைவனே!

பாற்கடல் வனிதை சேர்ப்ப --- பாற்கடலில் உதித்த இலக்குமிதேவியின் கணவனே,!

துழாய் மார்பா --- திருத் துழாய் மாலையை அணிந்த திருமார்பா!

கோபாலா --- பசுக்களைக் காத்தவரே! 

காவாய் எனவே கைக்குவடு கூப்பிட --- காப்பாற்று என்று துதிக்கையின் உடைய, மலை போன்ற யானை கூப்பிட,   

உவண மேல் கனகோடு ஊதா ---  கருடன் மேல் ஏறி,  அழகான பாஞ்சன்னியம் என்னும் சங்கினை ஊதி, 

வானே போது ஆள்வான் மருகோனே --- வான் வழியாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் திருமருகரே! 

குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே --- வச்சிராயுதத்தை உடைய இந்திரனின் உலகத்தை காத்தருளிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- செவ்வேள் பரமரே! 

வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! பெருமாளே.

கவடு கோத்து எழும் உவரி மா --- கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து கடலின் நடுவிலே தோன்றிய மாமரத்தின்,

திறல் காய் வேல் பாடேன் ஆடேன் ---  வலிமையை அழித்த வேலாயுதத்தைப் புகழ்ந்து நான் பாடுகின்றேனில்லை, ஆடுகின்றேனில்லை.

வீடு ஆனது கூட --- வீட்டின்பத்தைக் கூடுமாறு,

கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால்மேல் வீழேன்  ... கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான தேவரீரது திருவடிகளில் விழுந்து வணங்குகின்றேனில்லை, 

வீழ்வார் கால் மீதினும் வீழேன் --- தேவரீரது திருவடிகளை விழுந்து வணங்குகின்ற அடியார்கள் திருவடிகளிலும் அடியேன் விழுந்து வணங்குகின்றேனில்லை,

தவிடின் ஆர்ப்பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் --- தவிடு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் ஈவதும் இல்லை. 

வாழாதே சாவது சாலத் தரமும் --- இவ்வாறு வாழ்வதை விட சாவதே மேலானது. 

மோட்சமும் இனி என் ஆக்கை சதா ஆமாறே --- இந்த உடலில் வாழ்கின்ற ஆக்கையை விட்டு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெற்று இருக்குமாறு,

நாதா --- அடியேனது தலைவரே!

நீ தான் புரிவாயே ---  தேவரீர் தான் அருள் புரியவேண்டும். 

பொழிப்புரை

ஆ! நாராயணமூர்த்தியே! நல்ல துணைவனே! பாற்கடலில் உதித்த இலக்குமிதேவியின் கணவனே,! திருத் துழாய் மாலையை அணிந்த திருமார்பா! பசுக்களைக் காத்தவரே!  காப்பாற்று என்று துதிக்கையின் உடைய, மலை போன்ற யானை கூப்பிட, யானை வருகின்ற குறியைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு, கருடன் மேல் ஏறி,  அழகான பாஞ்சன்னியம் என்னும் சங்கினை ஊதி,  வான் வழியாகப் பறந்து வந்து காத்தருளிய திருமாலின் திருமருகரே! 

வச்சிராயுதத்தை உடைய இந்திரனின் உலகத்தை காத்தருளிய தலைவரே! கடவுளே! செவ்வேள் பரமரே!  தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! பெருமாளே.

கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து கடலின் நடுவிலே தோன்றிய மாமரத்தின் வடிவிலே தோன்றிய சூரபதுமனின் வலிமையை அழித்த வேலாயுதத்தைப் புகழ்ந்து நான் பாடுகின்றேனில்லை, ஆடுகின்றேனில்லை. வீட்டின்பத்தைக் கூடுமாறு, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான தேவரீரது திருவடிகளில் விழுந்து வணங்குகின்றேனில்லை, தேவரீரது திருவடிகளை விழுந்து வணங்குகின்ற அடியார்கள் திருவடிகளிலும் அடியேன் விழுந்து வணங்குகின்றேனில்லை, தவிடு அளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் ஈவதும் இல்லை. இவ்வாறு வாழ்வதை விட சாவதே மேலானது. இந்த உடலில் வாழ்கின்ற ஆக்கையை விட்டு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெற்று இருக்குமாறு, அடியேனது தலைவரே! தேவரீர் தான் அருள் புரியவேண்டும். 

விரிவுரை

கவடு கோத்து எழும் உவரி மாத் திறல் காய் வேல் பாடேன் ஆடேன் --- 

கவடு - கிளை.

முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

"நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்."


"தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்."--- கந்தபுராணம்.

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

"ஏயென முருகன் தொட்ட

இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும்

அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீஅழல் சிகழி கான்று

சென்றிட அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும்

வல்விரைந்து அகன்றது அன்றே." --- கந்தபுராணம்.

அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

"திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்".---  வேல் வகுப்பு.

சூரபன்மன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் நிழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். 

"வன்னியின் அலங்கல் கான்று 

வான்தழை புகையின் நல்கிப்

பொன்னென இணர்கள் ஈன்று 

மரகதம் புரையக் காய்த்துச்

செந்நிற மணிகள் என்னத் 

தீம்பழங் கொண்டு கார்போல்

துன்னுபல் கவடு போக்கிச் 

சூதமாய் அவுணன் நின்றான்.".      --- கந்தபுராணம்.

அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

"புங்கவர் வழுத்திச் சிந்தும்

பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி,

அருள்உருக் கொண்டு, வான்தோய்

கங்கையில் படிந்து மீண்டு,

கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை

எய்திவீற்று இருந்தது அன்றே." --- கந்தபுராணம்.

சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.

"தாவடி நெடுவேல் மீளத்

தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு

மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி

சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி

அமர்த்தொழில் கருதி வந்தான்."

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான்.  அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.


"மருள்கெழு புள்ளே போல

வந்திடு சூரன், எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த

ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி

நின்றனன், சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன்

ஆகிய இயற்கை யேபோல்."


"தீயவை புரிந்தா ரேனும்

முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத்

தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ,

அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ

வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்."


..... ..... ..... "சகம்உடுத்த

வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!".   --- கந்தர் கலிவெண்பா.

சூரனை மாய்த்து அருளிய கந்தக் கடவுளின் திருக்கையில் விளங்கும் வேல் ஞானசத்தி ஆகும். அந்த வேலைப் பாடுவதும் வணங்குவதும் அடியார்களுடைய செயல்களாக அமைந்து உள்ளன. கந்தர் அனுபூதியில், முதல் பாடலில், "ஆடும் பரி வேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்" என்றார் அடிகளார் வேல் வகுப்பு அடிகளார் அருளியது. வேல் விருத்தம் அடிகளார் அருளியது.

"வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் கந்த" என்றார் அடிகளார் ஒரு திருப்புகழில்.

வேலின் சிறப்பு குறித்து, திருமுருகாற்றுப்படை வெண்பா ஒன்று பின்வருமாறு கூறும்.


"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட

தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

தொளைத்தவேல் உண்டே துணை."


வீடு ஆனது கூட கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால்மேல் வீழேன் --- 

பிறவிகளில் உயர்ந்ததான மனிதப் பிறவியை எடுத்த பின்னர், மீண்டும் பிறவிக்கு வருவதை ஒழித்து, வீட்டின்பத்தைப் பெற முயலுதல் வேண்டும். அதனை அருள்வது இறைவன் திருவடியே. ஆதலால், முருகப் பெருமானது திருவடிகளை வந்திக்க வேண்டும். 


வீழ்வார் கால் மீதினும் வீழேன் --- 

உலகிலே உள்ள உயிருள்ளதும் உயிரற்றதுமான பொருள்களில் எல்லாம் பெரியது எது என்று முருகப் பெருமான் கேட்க, பெரியது எது என்பதை ஔவைப் பிராட்டியார் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்----

"பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்,

பெரிது பெரிது புவனம் பெரிது,

புவனமோ நான்முகன் படைப்பு,

நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்,

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்,

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்,

குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்,

கலசமோ புவியில் சிறுமண்,

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்,

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்,

உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்,

இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்,

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே."

     ஔவைப் பிராட்டியாரின் அருள்வாக்கின்படி ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகிய இறைவனைத் தமது இதயக்கோயிலில் வைத்துப் பூசிக்கும் தொண்டர்கள் பெருமைதான் பெரியது. அவர்கள்தான் பெரியவர்கள்.

     பாம்பன் சுவாமிகள், முருகப் பெருமானுக்குத் திருக்கோயில் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலையம்பதி என்றாலும், அடியார்களின் நெஞ்சமே எப்போதும் இருப்பு ஆகும் என்னும் பொருள்படப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

"தமருகத்தை மூவிலையை எழில்பிணையைப்

பிடித்த திருச் சயமாதேவன்

அமர்கயிலைப் பதிஎமக்குத் திருக்கோயில்,

என்னினும், எம் அடியார் நெஞ்சே!

எமதுஇருப்பு என்று எஞ்ஞான்றும் இருந்து, எங்கு-

மேநிறைந்த இறையே! இந்தக்

குமரகுரு தாசனைக்கை விட்டுவிடா-

மல் காத்துக் கோடி அன்றே."

     "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானைத் திருமுதுகுன்று உடையான்தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே" என்றும் அப்பர் பெருமான் பாடியருளி உள்ளார். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அறநெறியார்க்கே" என்றும் பாடி உள்ளார். எனவே, இறைவனை நாளும் இதயக் கமலத்தில் வைத்துப் பூசிக்கும் அடியார்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு பெருமான் எழுந்தருளி உள்ளார்.

     "மலர்மிசை ஏகினான் மாணடி" என்றார் திருவள்ளுவ நாயனார். பரிமேலழகர் பெருமான் "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு சேறலின்" என்று சமயம் கடந்த ஓர் உண்மையை நிலைநாட்டினார்.

     எனவே, ஔவைப் பிராட்டியார் நமக்குக் காட்டியபடி, தொண்டர்களிடத்தில் இறைவன் அடக்கம் பெற்றுள்ளதால், இறைவனைத் தம் மனத்தகத்தே கொண்ட அடியவர்களின் திருவடி, நமது தலைமேலே பொருந்துமானாலே, பிரமனுடைய எழுத்தானது அழிந்து போகும் என்று பாம்பன் சவாமிகள் பின்வருமாறு பாடி உள்ளார்....

"பெரிதினுக்கு எல்லாம் பெரிய சிவன் அடியார்

உள் அடக்கம் பெறுவான் என்னா,

அரிய ஔவை சொன்னபடி, நின்அடியருள்

அடக்கம் ஆவாய்! அன்னோர்

திருவடியை அடிமை முடி பொருந்தும் எனில்,

பிரமலிபி சிதைவு ஆகாதோ?

சரவண சண்மய துரிய அமலசிவனே!

கருணை தாராய் மன்னோ."

     தமது தந்தையாகிய பரம்பொருளுக்கே குருவாக உபதேசம் செய்தவன் முருகப் பெருமான் என்பதை மனத்தில் உன்னி, "குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா" என்று அருணகிரிநாதப் பெருமான் பாடினார். அவருடைய வேண்டுகோளையும், ஏக்கத்தையும் கண்ட முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கும் குருவாக எழுந்தருளி உபதேசம் செய்தார். "உபதேச மந்திரப் பொருளாலே, உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ, செபமாலை தந்த குருநாதா, திருஆவினன்குடிப் பெருமாளே" எனத் தமக்கு உபதேச மந்திரத்தை அருளியதோடு, செபமாலையும் தந்த பெருமானின் எல்லை இல்லாக் கருணையைப் போற்றிப் பாடுகிறார். அகத்திய முனிவருக்கும் முருகப்பெருமானே குருநாதன். ஆனால் முருகப் பெருமானுக்கு குரு என யாரும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒப்பும் உயர்வும் அற்ற, பரம்பொருளின் திருவடிகளைத் தமது இதயத்திலே தரித்துக் கொண்ட, பெருமைக்கும் வழிபாட்டுக்கும் உரிய அடியவர்களின் திருவடிகளைத் தியானித்தல் செய்தாலே உயிர்க் குற்றங்கள் யாவும் ஒழிந்து போகும். பிறப்பதும் இறப்பதும் ஆகிய தொழில் அற்றுப் போகும் என்பதை உணர்ந்து நாம் ஈடேறக் கருணைத் திருவுள்ளம் கொண்ட பாம்பன் சுவாமிகள் பின்வரும் அருட்பாடலைத் தந்து உள்ளார்.

"இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருட்

குருஎன உற்று இருந்தாய் அன்றி,

உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத--

லால், உன்அடி உளமே கொண்ட

கனத்த அடியவருடைய கழல்கமலம்

உள்ளுகினும் கறைபோம், ஈண்டு

செனிப்பதுவும் மரிப்பதுவும் ஒழிந்திடுமே,

குறக்கொடியைச் சேர்ந்திட்டோனே."

     எனவே, முருகப் பெருமானின் அருளால் அவனது திருவடிகளைச் சூடும் பேறு கிடைக்குமாயின், பிரமன் நமது தலையில் எழுதிய எழுத்தானது அழிந்து போகும். அதற்கும் மேலாக அவனது அருள்பெற்ற அடியவர்களின் திருவடிகள் நமது தலையில் பொருந்துமானாலும், அடியவர்களின் திருவடிகளைத் தியானித்தாலுமே கூட, பிரமலிபியானது அழிந்து போகும் என்பதை அறிந்து நமது உள்ளம் மகிழ்கிறது. கழல் கமலம் உள்ளுவதைத் தான், தெளிவு குருஉரு சிந்தித்தல் என்றார் திருமுல நாயனார்.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்,

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே."

     குருவின் திருமேனியைக் காணுவது, அவருடைய திருநாமத்தை, இறைவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து அல்லது அவரவர் கொள்ளுகின்ற மந்திரங்களுக்கு ஒப்பக் கொண்டு, எப்போதும் சொல்லுவது, அவர் திருவாயில் இருந்து பிறக்கும் அருளாணைகளைக் கேட்பது (அதன்வழி நடக்கத் தலைப்படலும்), குருவின் திருவுருவத்தைச் சிந்தித்துக் கொண்டு இருத்தல் ஆகியவை தெளிவு எனப்பட்ட மெய்யுணர்வைப் பெறுதற்குரிய உபாயங்கள். ஐயஉணர்வும், திரிபு உணர்வும் ஆன்மாவுக்குத் தெளிவைத் தராது. அதனால்தான் ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, மெய்யுணர்வைத் தரவல்லது ஞானம் எனப்பட்டது. குரு என்பவர் நம்மைப் போல, மானிடச்சட்டை தாங்கி இருந்தாலும், அவரை நம்மவரில் ஒருவராக எண்ணுவது ஆணவ மலச்சார்பினால் நிகழும். அவர்களுக்கு உண்மை ஞானம் விளங்காது.


தவிடின் ஆர்ப்பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் --- 

"தர்மம் சர" என்று வேதத்தின் தொடக்கத்திலும், "அறம்செய விரும்பு" என்று ஆத்திசூடியின் தொடக்கத்திலும், தருமமானது வற்புறுத்தி உபதேசிக்கப்பட்டது. உயிர்க்கு உறுதுணையாக என்றும் நின்று உதவுவது அறம் ஒன்றே ஆகும். "பொன்றுங்கால் பொன்றாத் துணை" என்பார் திருவள்ளுவ நாயனார்.

வறியவர்க்கு வழங்குவது மிகமிகச் சிறந்த புண்ணியம். வறியவர் வயிற்றில் விழுந்த ஒரு அரிசி, மறுபிறப்பில் ஒரு பொற்காசாக வந்து உதவும்.

"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃதுஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி." ---  திருக்குறள்.

எப்போதும் தரும சிந்தையுடன் இருத்தல் வேண்டும். இயல்பு உள்ளவர்கள் நிரம்பவும் அறம் செய வேண்டும்.

கோச்செங்கட்சோழன், சுந்தரமாற பாண்டியன், சேரமான் பெருமாள் முதலிய மன்னர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்த அரண்மனை, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் முதலியன ஒன்றேனும் இல்லை. ஆனால், அவர்கள் செய்த அறச் செயல்களாகிய திருக்கோயில்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. அழியாமல் நிற்பது அறம் ஒன்றே ஆகும்.

உலக முழுவதும் ஒடுங்கிய போது, அறம் ஒன்றே ஒடுங்காது விடை வடிவாக நின்று இறைவனைத் தாங்கியது. உலகங்களை எல்லாம் தாங்கும் இறைவனையும் தாங்கும் ஆற்றல் அறத்திற்கு உண்டு.

இறைவனுக்கு அறவன் என்ற திருநாமமும் உண்டு. காரைக்கால் அம்மையார் இறைவனை, "அறவா" என்று விளிக்கின்றார்கள். "அறவாழி அந்தணன்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறக் கடலாகிய ஆண்டவனை அடைவதற்கு வழி அறமே ஆகும்.

இயல்பு இல்லாதவர்கள் ஒல்லும் வகையால் இம்மி அளவேனும் அறம் செய்தல் வேண்டும்.

"அவர் ஒருவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார். அவர் பணத்தையும் ஒருவருக்குத் தர மாட்டார்" என்று சிலரைச் சுட்டி உலகம் சொல்லும். அப்படிப்பட்டவர்கள் இருப்பதை விட மறைவது நல்லது. எனெனில், கல்லும் ஆலயம் ஆகின்றது. கட்டம் (மலம்) வயலுக்கு உரமாகின்றது. புல்லும் கூட்டுவதற்கு ஆகின்றது. நாய் வேட்டைக்கு உதவுகின்றது. கழுதை பொதி சுமந்து உபகரிக்கின்றது. எட்டியும் மருந்துக்கு ஆகின்றது. துரும்பும் பல்குத்த உதவுகின்றது. மனிதனாகப் பிறந்து ஒருவருக்கும் உதவாமல் இருப்பானாயின், அவன் இருப்பதனால் பயனில்லை.  


"பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை; பிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை; இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததுஎன்று கொடுக்கஅறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!"


"நாயாய் பிறந்திடில் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சி ஏகம்பனே!" ---  பட்டினத்தார்.


"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள்உப காரம் ஆகும்;

சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,

மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என்உண் டாமே?" --- தண்டலையார் சதகம்.

ஆதலினால், மிகமிகக் குறைந்த அளவிலாவது ஒவ்வொருவரும் வறியார்க்கு உதவுதல் வேண்டும். உதவுவதற்கு ஆற்றல் இல்லையேல், உதவவேண்டும் என்ற நினைவாவது இருக்கவேண்டும்.  அந்த நினைவும் பனையளவு இல்லையேனும், தினையளவாவது இருத்தல் வேண்டும்.

தினை திறிய தானியம். ஆதலினாலேயே, "பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி" என்று அடிகளார் கல்லும் கரையுமாறு உபதேசிக்கின்றார்.


தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். ---  திருக்குறள்.


வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்குஎன்றும்

நொய்யில் பிளவுஅளவு ஏனும் பகிர்மின்கள், உங்கட்குஇங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.  ---  கந்தர் அலங்காரம்.


எமதுபொருள் எனுமருளை இன்றி, குன்றிப்

     பிளவளவு தினையளவு பங்கிட்டு உண்கைக்கு

     இளையுமுது வசைதவிர, இன்றைக்கு அன்றைக்கு... எனநாடாது

இடுககடிது எனும்உணர்வு பொன்றிக் கொண்டிட்

     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு

     எனஅகலு நெறிகருதி நெஞ்சத்து அஞ்சிப் ......பகிராதோ..  --- (அமுதுததி) திருப்புகழ்.


வாழாதே சாவது சாலத் தரமும் --- 

"ஈதல், இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு" 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

"தோன்றின் புகழொடு தேஓன்றுக, அஃது இல்லார்

தோன்றலின் தோன்றாமை நன்று"

எனவும் கூறி அருளினார்.

வாழ்வது என்பது தன்னிடத்து உள்ளதைப் பிறருக்கு உதவி அதனால் உண்டான புகழோடு வாழ்தலைக் குறிக்கும். அவ்வாறு புகழோடு வாழாமல், ஒரு மனிதன் உயிர் வாழ்ந்து கொண்டு இருத்தலை விடச் சாவது மேல்.

சுவடு பார்த்(து) அட வரு கராத்தலை தூள் ஆமாறே தான், ஆ நாராயணனே! காவாய் எனவே கைக்குவடு கூப்பிட உவண மேல் கனகோடு ஊதா, வானே போது ஆள்வான் மருகோனே........ --- 

கஜேந்திரம் என்னும் யானைக்குத் திருமால் அருள் புரிந்த வரலாற்றை அடிகளார் கூறி அருளினார்.

யானைக்குத் திருமால் அருளிய வரலாறு

திருப்பாற் கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமை தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது; கஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

கருத்துரை

முருகா! வீட்டின்பத்தை அடியேனுக்கு அருள்வாய்



No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...