பரபரப்பு வேண்டாம்.

 

பரபரக்க வேண்டாம்

----

இன்று, எங்கும் பரபரப்பு! எதிலும் பரபரப்பு! இறைவன் முன்னே அவன் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவதில் கூடப் பரபரப்பு. அருச்சனை என்பது அவரவர் விருப்பம் ஆகிவிட்டது. அருச்சனை தொழிலாகிவிட்டது. குறைந்த நேரத்தில் நிறையப் பொருளை ஈட்ட வேண்டுமென்றால், அருச்சனையைச் சாங்கோ பாங்கமாகச் செய்துகொண்டு இருக்க முடியாது. நிகழ்வை யாராவது படம் பிடிக்கின்றார்கள் என்றால், கொஞ்சம் பொறுமையாகச் செய்யப்படும். உபயதாரர் அவசரம் என்றால், அவசரமாக முடிக்கத்தான் வேண்டும். அப்படியே அருச்சகர் பொறுமையாகச் செய்தாலும் செய்துகொள்ள வந்தவர் அடுத்த வேலைக்குப் போகப் பரபரத்துக் கொண்டிருப்பார். இறைவன் சந்நிதியில் இருந்து கொண்டே நீண்ட நேரம் தேவையற்ற சொற்களைப் பேசிக் காலம் கழிப்பதில் இருக்கின்ற விருப்பம், பொறுமையாக அருச்சனை புரிவதில் இருப்பது இல்லை. வழிபாடு என்று வந்துவிட்டால் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற போக்கே நடைமுறையில் பெரும்பாலும் உள்ளது.

ஒரு செய்தியினைக் கேட்டு, அதற்கு உரியவர்களோடு கலந்து, ஆராய்ந்து பேசி முடிவெடுக்க மனம் இல்லை. இங்கேயும் பரபரப்பு. ‘இப்படிச் சொன்னாயாமே!’ அப்படிச் சொன்னாயாமே! என்ற ஆவேசப் பேச்சுக்களால் அமளி. தகுதியை வளர்த்துக் கொள்ளக் கொள்ள உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. போட்டிக்கு யாரேனும் வந்து விடக் கூடாதே என்னும் முனைப்பு. உரிமை உணர்வில் ஒரே பரபரப்பு. தகுதியைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்க மனமு துணிவதில்லை. செய்தித் தாள்களில் சில வரிகளே வருகின்றன. பேசியவர்  கருத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இருக்காது. உடன்பாடும் இருக்காது. உண்மை கேட்டு எழுத நேரமில்லை. ஆனால் ஊர்க் கதை எல்லாம் பேச நேரம் உண்டு. எங்கும் எதிலும் பரபரப்பு. எத்தனையோ வகையில் பரபப்பு! 

பரபரப்பு உடையவர் பண்பாளர் ஆக முடியாது. பத்தி உணர்வு என்று வந்துவிட்டால், பரபரப்பு கூடவே கூடாது.

"பரபரக்க வேண்டா, பலகாலும் சொன்னேன்;

வரக்கண்டு ஆராய் மனமே! _ ஒருவருக்கும்

தீங்கு நினையாதே; செய்நன்றி குன்றாதே;

ஏங்கி இளையாது இரு." --- சிவபோக சாரம். 

ஒன்றை விரைந்து துணியக் கூடாது. அமைந்து இருந்து ஆராய்தல் வேண்டும். பிறருக்குத் தீங்கு நினைக்கக் கூடாது. பிறர் செய்த நன்றியையும் மறவாது இருத்தல் வேண்டும். ஒன்றைப் பெற விரும்பி, அந்த விருப்பத்தால் மனம் சிதைந்து மெலிவு அடையாமலும் இருக்கவேண்டும் என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

"பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார்" என்கிறார் மணிவாசகப் பெருமான். பரப்பு என்னும் சொல் 'பப்பு" என்று வந்தது. "மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித் தளையை அறுத்தவராய் உள்ளவர்கள்" என்பது இதன் பொருள். மன விரிவு அற்று, மனம் குவிந்து நிற்பது நன்மையைத் தரும்.

திருஞானசம்பந்தப் பெருமானும் கூடப்  பரபரப்பு கூடாது என்கிறார். பரபரப்பு கூடாது என்பது மட்டுமல்ல. பரபரப்புக்கு உரிய சூடு ஆற வேண்டும் என்கிறார். ஆக்கின சூட்டில் அள்ளித் தின்ன முடியாது.  உள்ளமும் ஆற அமர நிதானித்து எண்ணிப் பழகும் இயல்பைப் பெற்றால் பகை வராது - பண்பு வளரும் -  பத்தியும் வளரும்.

பத்திமை கொண்ட வாழ்க்கை தூயது. இனிமை நலம் மிக்கது. சழக்குகளைக் கடந்தது.  மகவு எனப் பல்லுயிரும் ஒக்கப் பார்க்கும் அருட்கருணை உடையது. உண்மையான பத்திமை உணர்வு விளங்கினால் வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. விருப்பு வெறுப்பு இல்லை. அதனால்  பகையில்லை. பூசல்கள் இல்லை. பண்பட்ட நிலத்தில் விளைச்சல் பெருகி உயர்வதைப் போல, பத்திமை உணர்வு உள்ள சமுதாயத்தில் அன்பு பெருகும் - அருள் வளரும்.

பத்திமை வாழ்வு உள்ளத்தோடு பொருந்தியது. அது வேடத்தின்பால் பட்டது அல்ல. உள்ளதோடு பொருந்தி இருப்பது வெளியில் தெரியாது. பயன்படும் போதுதான் தெரியும். பயிரின் வளப்பத்தைக் கொண்டே மண்ணின் வளத்தை அறிகிறோம். பத்திமை வாழ்வு உடலோடு தொடர்புடைது அல்ல. பத்திமை வாழ்வுக்கு நிலைக்களம் மனம். உடல் ஒரு வாயில். உள்ளத்தில் பத்தி தழைத்தால் உலகம் தழைக்கும்.  ஆனால், இக்காலத்தில்  பத்திமை வாழ்க்கையின் வடிவங்களே ஆக்கிரமிப்பு செய்து உள்ளன. பத்திமை உணர்வு இல்லை. சடங்குகளே மிஞ்சி வளர்கின்றன. அடியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலரிடையே இன்று பூசல் நிறைந்து இருக்கின்றதைக் காணலாம்.

பத்திமை உணர்வுக்குக் கள்ளத்தனம் கூடாது. கள்ளத்தனத்தால் ஒருவரை ஒருவர் வஞ்சிப்பதை ஆன்மீக அமைப்புகளில் காணலாம். உதடு சிரிக்கிறது. உள்ளமோ பற்றி எரிகிறது. முகம் முகமன் உணர்வைக் காட்டுகிறது. ஆனால் முதுகுக்குப் பின்புறம் பேசப்படுகின்றது. பாராட்ட மனம் இல்லை. ஆனாலும், பாராட்டு விழாக்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. பாராட்டுவதிலும் கூட இன உணர்வு தலைதூக்கி நிற்கிறது. பிறர் உயர்வு கண்டு மகிழ மனம் இல்லை. தமது இனத்தவர் என்றால் மனம் மகிழ்கிறது. தகுதி வாய்ந்தவர் பிற இனத்தார், தமக்கு வேண்டாதவர் என்றால் மனம் குவிகிறது. ஏதேதோ பேசப்படுகிறது. இந்தக் கருத்து மாறுதல்கள் - தவறுதல்கள் திருத்தப்படக் கூடியவைதான். ஆனால் கருத்து மாறுதல்கள் வஞ்சகத்திற்கு வித்தாக அமைவதைக் காணலாம். கள்ளம் ஒழிந்தால்தான் கடவுளைக் காணலாம். உள்ளத்தில் கரவு கூடாது. கரவு ஆகிய கல்வி உளார்பால் சென்று இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?" என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான். "கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை, கரவார்பால் விரவாடும் பெருமானை" என்றார் அப்பர் பெருமான். "கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்" என்றும் அவர் பாடினார். கரவு பத்திமைக்குப் பகையானது என்பதை அறியலாம்.

சொல், மிக உயர்ந்தது. சொல்லே மனித உலகத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. சொல்லே உணர்வைத் தூண்டுகிறது. சொல்லே உள்ளன்பை வளர்க்கிறது. உறவினை வளர்க்கிறது. சொல்மாலைதான் பரம்பொருளின் திருவருளையும் பெறத் துணை புரிகிறது. இத்தகு ஆற்றல் மிக்க சொல்லை இன்றைக்கு நெறி தெரிந்து பயன்படுத்த வேண்டும்.  சொல்லில் நிகழ்ந்த சோர்வுதான் கோவலனின் உயிரைக் கொண்டது. நீதியில் சிறந்த நெடுஞ்செழியனை அநீதிக்கு ஆளாக்கியது. நெடுமாற பாண்டியனின் சொல்தான் அவனுக்கு வெப்பு நோயாக வந்து சேர்ந்தது. பல்லவ மன்னனின் சொற்சோர்வு அப்பர் பெருமானுக்கு பெரும் கொடுமைகளைப் புரியக் காரணமாக அமைந்தது. சொற்களைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினாலும் குறைந்த அளவு சொற்களின் கடுமையையாவது குறைக்க வேண்டும். சிலரது சொற்கள் நெஞ்சைச் சுடுகின்றன. உணர்வைச் சுட்டு அழிக்கின்றன. இங்ஙனம் சுடும் சொற்கள் பேசுவோர், திருநீறு பூசி, அக்க மணிகளை அளவில்லாமல் அணிந்தவர்களிலும் இருக்கிறார்கள். அன்பே சிவம் என்று இவர்கள் பேசுவார்கள். "வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இல்லாச் சமண்" என்றும் பாடுவார்கள். ஆனால், இவர்களுடைய சொல் வெஞ்சொல்லாக இருக்கும். சொற்கள் ஈரக் கசிவு உடையனவாக இருக்கவேண்டும். ஈரம் அற்ற, வெப்பம் நிறைந்த சொற்கள் ஒருபொழுதும் பயன் தரா. பத்தி நெறிக்கு வெஞ்சொல் பகை.

மனித வாழ்க்கை செயல்களை உயிர்ப்பாகக் கொண்டது. செயற்படாத உலகம் செம்மை நெறியில் சேர முடியாது. தொழிற்படாத உலகம் தொல்லை இரும்பிறவிக் கடலைக் கடத்தல் முடியாது. செயல்பட வேண்டும். ஆனால் காம உணர்வோடு செயல்படுதல் கூடாது. காம உணர்ச்சியால் காரியத்தில் நாட்டம் செல்லாது. ஒருத்தி உளமார நேசிக்காமல், அவளிடத்தில் நலம் காண முடியாது. உடலின்பம் ஒன்றையே கருதிப் பெண்டாளுதல் காமம். இந்தக் காமம் இன்பத்தை வழங்காது. மாறாக துன்பத்தைத் தரும். 

பொருள், மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பிறரை உண்பித்தும், தான் உண்டும் மகிழப் பொருள் தேவை. இதற்குப் பொருள் தேடாமல்,  ‘பொருளாளனாக வேண்டும் என்பதற்காகவே  பொருள் தேடுதல் காமம் ஆகும். நட்பு உலகத்தில் மிக உயர்ந்தது. அவரிடம் நட்புக் கொண்டால் இன்னது கிடைக்கும், இன்ன நலம் விளையும் என்று கருதி,  நட்புப் பூணுதல், நட்பு அல்ல.  அதுதான் காமம். காமம் என்பது பயனின்றி இயங்கும் ஓர் உணர்ச்சி. அது தன்னலத்தைச் சுற்றியே வலம் வந்துகொண்டு இருக்கும். காம உணர்வு உடையவருக்குப் பிறரைப் பற்றிய கவலையே இருக்காது. ஏதாவது செய்தாலும் காம விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வார்களே தவிர, பிறருக்குப் பயன்படச் செய்யார்.  இந்த  காமம் என்னும் அரக்கன் ஒருவனை இடமாகக் கொண்டு முதலில் இயங்கினாலும், பின்னே வளர்ந்து அவனையே மடக்கி, அவனை அணு அணுவாக அழித்து ஒழிக்கும். இத்தகைய காம உணர்வு மனித உலகத்தை அரித்து உருக்குலைக்கும் என்புருக்கி நோய் ஆகும்.

காதலித்து வீட்டில் இன்புற்று வாழவேண்டும். அப்படி இருந்தால்தான், "ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கும்" இது காமம் அல்ல. அறம் ஆகும். இல்லறம் அல்லது நல்லறம் அன்று. செல்வச்செருக்கு,  தன்முனைப்பு, மக்கட்பணி மறத்தல் காமத்தின் சின்னங்கள். துவராடையைத் தரித்துக் கொள்வது மட்டுமே துறவாகாது. நெஞ்சில் சந்து பொந்துகளிலும் சம்பிரதாயம் என்ற பெயரில் கூட, ‘நான்’, ‘எனது’  என்ற செருக்கு ஒட்டி இருக்கக் கூடாது. இத்தகு துறவுதான் தூய உலகத்தை வழி நடத்தும் அறம். இறைவன் திருவடியைக் காதலித்து அருச்சனை செய்யவேண்டும். ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று அருச்சனை செய்வது காமம். ‘நாதன்தாள் வாழ்க’ என்று அருச்சிப்பது காதல், பக்தி.

மனிதனின் வீழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அவனது மனமே காரணம். மனத் தூய்மையே அனைத்து அறங்களுக்கும் அடிப்படை. "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார். மனத்தில் அழுக்கு இல்லாமல் இருத்தல் என்னும் இயல்பையே வரையறையாக உடையது அறம். மனத்தூய்மை இல்லாமல் செய்யும் செயல்கள் ஆரவாரத் தன்மையை உடையன என்கின்றது திருக்குறள். "அற மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா"  என்று "இன்னா நாற்பது" என்னும் நூல் கூறுகிறது. அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் சொல்லுகின்ற கடுஞ் சொல்லும்  துன்பமாம். 

பத்தி நெறியில் நிற்போர் நெற்றி நிறைய நீறு தாங்கினால் போதாது.  பூசும் நீறுபோல் உள்ளும் புனிதம் இருக்கவேண்டும். இந்த மனத் தூய்மை எளிதில் கிடைத்துவிடாது. மனத்துய்மை இல்லாதாரிடத்தில் தன்முனைப்பு மிகுந்து இருக்கும். உயர்வு மனப்பான்மை குடிகொண்டு இருக்கும். "வாழ்வு எனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி, தாழ்வு எனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது" என்கிறது மெய்கண்ட சாத்திரம். "பணியுமாம் என்றும் பெருமை" என்றும், "எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல்" என்றும் திருவள்ளுவ நாயனார் கூறினார்.

ஆணவப் போக்கு ஆட்சி செய்தல் பத்தி நெறிக்கு ஊறு விளைவிக்கும். சிலர் ஆணவத்தோடு எப்பொழுதும் ஒருவழிப் பயணமே செய்வர். இது மனத் தூய்மையின்மையின் அடையாளம். பத்திமை வளர வேண்டிய இடம் மனம். பயிர் வளர்தற்குரிய நிலத்தைப் பண்படுத்தாமல் பயிரை வளர்க்க முடியாது. "மனம் என்னும் புனத்தை வறும்பாழ் ஆக்கி" என்பார் பட்டினத்து அடிகள். மனமானது பாழ் நிலமாக இருந்தால், அதிலே நல்ல பயிரை வளராது. பழமரம், பயன்மரம் வளராது. காடு மூடிக் கடுமைதான் வளரும். அங்கே நச்சுமரம் முளைக்கும். மனம் திருந்தித் தூய்மை அடையாமல் பத்திமை வாழ்க்கை வாழ்வது முடியாது. பத்திமை வேடம் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். பஜனை செய்யலாம். ஆனால் அது பத்திமை வாழ்க்கை ஆகாது.

இறைவனை ஒன்றிய உணர்வுடன் ஏத்தி வழிபடுதல் வேண்டும். அலையும் மனம் கூடாது. வழிபடும் கடவுள் வடிவங்கள் பலவாக இருத்தல் கூடாது. "அத் தேவர் தேவர் அவர் தேவர் தேவர் என்று பொய்த்தேவு பேசி அலைதல் கூடாது. நீண்ட நேரம் வழிபாடு செய்வதாலும் பெருமை கூடி விடாது. ஆரவாரச் சடங்குகளால் வழிபாடு சிறந்து விடாது. வழிபாட்டுக்கு ஒன்றிய மனம் தேவை. இறைவன் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்; பொருந்த வேண்டும். அதுவே வழிபாடு!

இறைவன் திருநாமத்தை நல்லவாறு சொல்லி வாழ்த்த வேண்டும். சிலர், நல்லவாறும் வாழ்த்த மாட்டார்கள். ‘பகைவர்களை அழித்து எனக்கு அருள் செய்க’ என்று வேண்டுவார்கள். அது உண்மையான பத்திநெறி ஆகாது. அவர்களுக்கு இறைவனும் அருள் பாலிக்க மாட்டான். நல்லனவற்றை எண்ணி, நல்லனவற்றைப் பேசி, நல்ல வண்ணம் நன்று உடையானாகவும், தீயது இல்லாதவனாகவும் இருக்கின்ற இறைவனை வாழ்த்துதலே வழிபாடு ஆகும்.

இங்ஙனம் பரபரப்பு இன்றி, கள்ளத்தனம் ஒழிந்து, காம உணர்வு உடைய செயல்களிலிருந்து விடுதலை பெற்று, மனம் தூய்மை உடையவராகி இறைவன் திருவடிகளிடத்தில் அன்பு காட்டுதலையே பற்றாகக் கொண்டு ஒன்றிக் காதலித்து நல்லவாறே ஏத்தி வழிபட்டாலும் இறைவன் அருள் முழுநிலையில் முதிர்ந்து வெளிப்பட்டுவிடுவதில்லை. உயிரின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறுதான் இறைவன் அருள் கிட்டும். அருளை வேண்டிநவாறே வழங்கினாலும் பயன்படுத்தும் தகுதியிருக்காது என்பதனால்,  இறைவன் வளர்த்து வளர்த்தே வழங்குவான். கண்ணப்பன் அன்பினை வளர்க்க ஆறு நாள் தேவைப்பட்டது. ஆனால், பலகாலம் பூசனை செய்த சிவகோசாரியார் வளரவில்லை. கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை" என்று வாயாரப் பாடுகிறோம். வாயாரப் பேசுகிறோம். பேசுவதாலும் பாடுவதாலுமே அருள் கிடைக்கும் என்று நப்பாசை வைத்துத் திரிகிறோம். கண்ணப்பர் ஆக நாம் சிறிதளவும் முயற்சி செய்வது இல்லை. கண்ணப்பர்களை வளர்க்கவும் நாம் விரும்பவில்லை. வேடதாரிகளையே பெரிதும் போற்றுகின்றோம். மனிதனின் ஆன்மத் தகுதிக்கு ஏற்றவாறே இறையருள் கிடைக்கும்.

பத்திமை வாழ்வு எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பது குறித்து, 

"ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய

சொல்லை ஆறி, தூய்மைசெய்து, காமவினை அகற்றி,

நல்லவாறே உன்தன் நாம்ம நாவல் நவின்று ஏத்த

வல்லவாறே வந்து நல்காய்! வலிவலம் மேயவனே."

என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருமையாகப் பாடிக் காட்டினார்.

இதன் பொருள் ---

திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் சிறிதும் இன்றி, வெஞ்சொல் தவிர்ந்து, உள்ளத் தூய்மையோடு,  காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உமது திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.

ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு. No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...