பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

 


பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

-----

சரியாக, 1981-ஆம் ஆண்டு நான் ஆஸ்துமா என்னும் ஒவ்வாமை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தேன். சைதையில் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்த டாக்டர். சுப்பிரமணியம் தான் எனக்கு மருத்துவர். இப்போதும் அந்த மருத்துவர் அடையாறு பகுதியில் மருத்துவம் பார்த்து வருகின்றார். நல்ல மருத்துவரோடு, நல்ல மனிதரும் கூட. வாரத்திற்கு இரண்டு முறையாவது அவரைப் பார்க்கும் நிலையில் இருந்தேன். மருந்துகளை எழுதித் தந்து அவற்றை உட்கொள்ளும் முறையையும், மேற்கொள்ள வேண்டிய பத்திய முறைகளையும் மிகத் தெளிவாகவே அவர் சொல்லி இருந்தார். ஒருமுறை அவர் என்னோடு மிகவும் சலித்துக் கொண்டார். "நான் சொல்லும் முறைகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லையானால், நான் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மருந்துச் சீட்டு தந்துகொண்டே இருக்கலாம். நிச்சயமாக நோய் தீராது" என்றார் அவர். நான் எனது வருத்தத்தைத் தெரிவித்தேன். "நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படித்தான் இருக்கின்றார்கள். மருந்து சாப்பிட்டால் போதும், பத்தியம் கொஞ்சம் தவறினால் கூடப் பரவாயில்லை என்று இருக்கின்றார்கள். நீங்கள் இனி அப்படி இருக்கக் கூடாது" என்றார்.

மருந்து மட்டும் எடுத்துக் கொள்வதாலோ பயனில்லை. மருந்துகளைக் காலம் தவறி, வேளை தவறியும் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. மருந்து உட்கொள்வதோடு, மருத்துவர் சொல்லுகின்ற உணவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஒருவனுக்கு நோய் வரும் வழிகள் அல்லது காரணங்கள், முன் செய்த வினை என்னும் பழவினை, மற்றும், இயற்கை, ஒட்டுவாரொட்டு, உணவு,  உடை, உறுப்புக் குறைவு என்னும் உறுப்பறை, வறுமை, பஞ்சம், அச்சம், போர் முதலியன ஆகும் என்றும் முன்னோர் சொல்லி உள்ளனர். 

அக்காலத்தில் சுற்றுப்புறச் சூழல் மிக நன்றாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. உடைப் பழக்கங்களும் பெரும்பாலும் ஊறுபாடு செய்வதாக அமைந்திருக்கவில்லை. உடம்பில் வாதம், பித்தம், சீதம் என்னும் மூன்றும் அவை அமைந்திருக்க வேண்டிய அளவில் இல்லாதபோது, நோய் உண்டாகும் என்பதால், "மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய முன்று" என்றார் திருவள்ளுவ நாயனார்.  அளவில் மிகுந்தாலும், அளவில் குறைந்தாலும், மருந்து நூலோர் வாதம் முதலாகக் கருதப்பட்ட வாதம், பித்தம், சீதம் என்னும் மூன்று ஆகிய நோய் ஒருவனுக்கு உண்டாகும்.

உணவுப் பழக்கங்களால் உண்டான நோய்க்கு மருந்து உண்டு. எனவே, "மருந்து" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து, உணவுப் பழக்கத்தையே மருந்தாகச் சொன்னார். தாக்கும் பகுதி பற்றி உள்ளநோய், உடல்நோய் என, நோய்கள் இருவகைப் படும்.

நோய் நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அறுப்பு, மந்திரம், மந்திரத் தூக்கம்(Hypnotism), வழிபாடு, இறும்பூது (miracle).  நம்பகம் (Faith) முதலியவனவாகப் பல திறப்படும். 

பழவினையால் வந்த நோய்க்கு மருந்து இல்லை என்பர். இறைவனால் ஊட்டப்பட்ட வினை காரணமாக  வந்த நோய் இறைவழிபாட்டால் மட்டுமே நீங்கும். 

மருந்து, இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேரும் தழையும் போல்வன இயற்கை. மாத்திரை போல்வன செயற்கை. 

நோய்கள், உணவு உடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

உணவு ஒவ்வாமையாவது, சுவை, மணம், ஆற்றல்களால் உடல் கூற்றோடும், கால இடங்களொடும் பொருந்தாமை. உடை ஒவ்வாமையாவது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை.  செயல் ஒவ்வாமை மிகையும் தகாமையும் ஆகும்.

"மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது

அற்றது போற்றி உணின்".

என்பதும் திருக்குறளே.

இதன் பொருள் ---

ஒருவன் தான் முன்னர் உண்ட உணவானது செரிமானம் ஆனதை அறிந்து, கடைப்பிடித்து, பின்னர் உண்பான் ஆகில், அவனுடைய உடம்புக்கு மருந்து என வேறு ஒன்று வேண்டியது இல்லை.

பெரும்பாலும் நோய்கள் எல்லாம் செரிமானம் ஆகாத உணவாலும் பொருந்தாத உணவாலும், மிகையான உணவாலுமே நேர்கின்றன.

எனவே, மருத்துவ முறைகளாலும், பத்திய முறைகளாலும் உடம்பிற்கு உண்டான நோய்கள் தீர வழி உண்டு என்பது தெளிவாகும்.

பரிகாரம் என்னும் சொல்லுக்கு,  நீக்குகை, கழுவாய், மாற்று உதவி என்பவற்றோடு, "மருத்துவம்" என்றும் பொருள் உண்டு. இதனால், மருத்தவர் "பரிகாரி" என்று நூல்களில் சொல்லப்பட்டார். 

பரிகாரம் என்பது மருந்து. அதைத் தருபவர் மருத்துவர். மருத்துவர் தரும் மருந்தால் மட்டுமே நோய் தீராது என்பதை மேலே பார்த்தோம். மருந்து உட்கொள்ளும் முறையும், உணவு போன்ற பிற நடவடிக்கைகளும் பத்தியம். மருந்தை உட்கொள்ளுவதால், நோயின் தாக்கம் தணிந்தது போல் தோன்றுமே ஒழிய, தீராது. நோய் தீர்க்கும் மருந்தை, காலம் தவறி உட்கொண்டாலும் நோய் தீராது. ஒருவேளை தவறிவிட்டது என்பதற்காக, அடுத்த வேளை இரட்டிப்பு அளவு மருந்து கொண்டாலும் தீராது. தீரவேண்டுமானால், மருந்தோடு பத்தியமும் காலமுறையில் இணையவேண்டும்.

பழவினை அல்லது முன்வினைகளால் வந்த நோய், வினை தீர்ந்தால் மட்டுமே தீரும். முற்பிறப்பில் செய்த வினைகளை இப்பிறப்பில் நுகர்ந்து கழிக்கிறோம். இனிமேலும் பிறப்பு வருவதற்குக் காரணமாக இருப்பது எது என்று கேட்டால், இப்பிறப்பில் வினையின் பயனை நுகரும் உயிர்கள், "நான்" என்னும் அகங்காரத்தோடு நுகர்கின்றன. அப்போது விருப்பும் வெறுப்பும் விளைகின்றன. இவற்றிலிருந்து "ஏறுவினை" என்றும் "ஆகாமியம்" தோன்றி அடுத்த பிறப்பிற்குக் காரணமாகின்றது. "நான்" என்னும் உணர்வே "நான் செய்தேன், பிறர் செய்தார்" என்ற எண்ணங்களைத் தோற்றுவித்து, அவை அடுத்த பிறப்பிற்கு வித்து ஆகின்றன. இவ்வாறு பிறர்க்கு நலமும் தீங்கும் விளைவிக்கும் வினை அல்லது கர்மமும் இரண்டு வகைப்படும். அறிந்து செய்யும் வினை (புத்திபூர்வ கர்மம்) அறியாது செய்யும் வினை (அபுத்திபூர்வ கர்மம்) என்பன அவை. அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும், அவற்றின் பயன் தப்பாது விளையும்.

வினைப் பயன்களை அனுபவிக்கும்போது விருப்பு வெறுப்புக்கள் தோன்றுகின்றன. அவை முயற்சியால் வருகின்றன. இன்பம் வரும்போதும் துன்பம் நேரும்போதும் இவை எனது வினைப் பயனால் நேர்ந்தன எனக் கருதுவது இல்லை. இன்பம் வந்தால் " நான் செய்தேன்" என்றும், துன்பம் நேர்ந்தால், "பிறர் செய்தார்" என்றும் கருதுவது உலகியல். இதனால் மேலும் வினை விளைவதால் "நான் செய்தேன், பிறர் செய்தார்" என்னும் அறிவுக்கோணலை, ஞானத் தீயால்  மட்டுமே வெதுப்பி அழித்தல் கூடும்.

இந்த சைவசித்தாந்தக் கருத்து, பகவத்கீதை நான்காம் அத்தியாயம், 37-ஆவது பாடலில் பின்வருமாறு காட்டப்பட்டு உள்ளது காண்க.

"யதை²தா⁴ம்ஸி ஸமித்³தோ⁴ऽக்³நிர்ப⁴ஸ்மஸாத்குருதேऽர்ஜுன|

ஜ்ஞாநாக்³னி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத் குருதே ததா² ||"

இதன் பொருள் --- 

அருச்சுனா! சுடர் விட்டு எரியும் தீயானது விறகுகளைச் சாம்பலாக்குவது போன்று, ஞானக் கனலானது கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.

வினைகள் இரு திறப்பட்டு, அறிந்து செய்யும் வினைகள் எனவும், அறியாது செய்த வினைகள் எனவும் நிற்கும். இவற்றால் பிறர்க்கு நலம் தீங்குகளை விளைவிக்கின்றோம். அவற்றின் விளைவு, புண்ணிய பாவங்கள் எனப்பட்டு,  தவறாமல் இறைவனால் ஊட்டப்படும் என்பதை அறிதல் வேண்டும். அவரவர் செய்த வினையின் பயனை, அவரவர்க்கு இறைவன் ஊட்டுவது, உயிர்கள் மீது வைத்த அளப்பரும் கருணையே ஆகும்.

புண்ணிய பாவங்கள் வருகின்ற விதம் குறித்தும், பாவத்தைப் போக்குகின்ற உபாயம் குறித்தும், "சிவப்பிரகாசம்" என்னும் மெய்கண்ட சாத்திரத்தில், அருள்நந்தி சிவாச்சாரியார் அருளியிருப்பதைக் காண்போம்.

"உற்றதொழில் நினைவு உரையின் இருவினையும் உளவாம்;

ஒன்று ஒன்றால் அழியாது; ஊண் ஒழியாது; உன்னில்

மற்று அவற்றில் ஒருவினைக்கு ஓர்வினையால் வீடு,

வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்

பற்றியது கழியும்; இது விலையால் ஏற்கும்

பான்மையும் ஆம்; பண்ணாது பலிக்கும்; முன்னம்

சொல்தரு நூல்வழியில் வரில், மிகுதி சோரும்;

சோராது அங்கு அது மேலைத் தொடர்ச்சி ஆமே".

இதன் பொருள் ---

உற்ற தொழில், நினைவு, உரையின் அருவினையும் உள ஆம் - உயிருக்குப் பொருந்தி வந்த உடம்பினைக் கொண்டு செய்யும் தொழிலாலும், மனத்தின் நினைவாலும், வாக்கின் சொல்லாலும் மேலே கூறப்பட்ட புண்ணிய பாவங்கள் இரண்டும் உண்டாகும்.  (அப்படி உண்டாகிய கர்மங்களில், ஒரு கர்மத்தைக் கொண்டு, ஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளலாமா? இரண்டு இரண்டாக அனுபவித்து விரைவில் கழித்துக் கொள்ளலாமோ? என்றால்) உன்னில் - ஆராய்ந்து பார்த்தால், ஒன்று ஒன்றால் ஒழியாது, ஊண் ஒழியாது - புண்ணியத்தால் பாவமும் போகாது, பாவத்தால் புண்ணியமும் கழியாது, (அப்படியானால் ஒருவர் செய்த கர்மங்களைப் போக்கிக் கொள்ள வழியே இல்லையோ? என்றால்) மற்று அவற்றின் ஒருவினைக்கு ஓர்வினையால் வீடு - அப்படிச் செய்யப்பட்ட கர்ங்களில் ஒரு கர்மத்தைக் கொண்டு ஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உபாயத்தை, வைதிக சமயம் பகரும் - வேதாகமங்கள் சொல்லுகின்றன. மரபில் ஆற்ற - வேதாமகங்கள் சொன்ன முறையிலே செய்தால், பற்றியது கழியும் - உயிர்களைப் பற்றிய கர்மங்கள் நீங்கும். (அப்படிச் செய்யாதவர்களுக்கு, கர்மத்தால் உண்டான குற்றங்கள் (தோஷங்கள்) நீங்கும் வழி என்ன? என்று கேட்டால்) இது விலையால் ஏற்கும் பான்மையும் ஆம் பண்ணாது பலிக்கும் --- இந்தக் குற்றங்கள் நீங்குவதற்குத் தானாகவே செய்துகொள்ளவில்லையானாலும், சில திரவியங்களைக் கொடுத்து, செய்ய வல்லவர்களைக் கொண்டு செய்வித்துக் கொள்வதால், தான் செய்யாது இருந்தாலும், தனக்குப் பலிக்கும். (இவ்வாறு செய்து உண்டான குற்றங்களைப் (தோஷங்களைப்) போக்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்க, செய்தது அழியாது என்று சொன்னது ஏது? என்றால்? அதாவது) முன்னம் சொல் தரு நூல் வழியில் வரின் மிகுதி சோரும் - முன்னே சொல்லப்பட்ட வேதாகமங்களின் முறையிலே ஒருவன் தான் செய்த குற்றத்திற்குத் (தோஷத்திற்குத்) தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும், அந்தக் குற்றத்தின் (தோஷத்தின்) கௌரவம் மாத்திரம் கெட்டு, குற்றம் (தோஷம்) நிற்கும். (அது என்னவென்றால், ஒருவன் பிரமஹத்தி, பசுவதை முதலாக உள்ள குற்றங்களைச் செய்துவிட்டு, அதற்குத் தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும், நரகவேதனைக்கு உள்ள கௌரவம் மாத்திரம் கெட்டுப் போகும். கொலைத் தோஷம் (கொலைக் குற்றம் நிற்கும். அப்படி நின்ற கொலைத் தோஷம் என்ன செய்யும்? என்றால்) சோராது அது அங்கு மேலைத் தொடர்ச்சி ஆமே - நீங்கிப் போகாத தோஷமானது, இன்னொரு பிறவியை எடுத்து அனுபவிக்க நிற்கும். ஆனபடியால், ஒரு கர்மத்தால், இன்னரு கர்மம் அழியாது என்பதை அறிதல் வேண்டும்.

ஒரு வினையால் மற்றொரு வினை அழியாது என்று சொல்லப்பட்டுள்ளதைக் கூர்ந்து நோக்கினால், வினைப் பயனை அனுபவித்துக் கழிப்பதே, வினை வராமல் காக்கும் முறை என்பது புலப்படும். ஆயினும் வைதிகசைவ மரபில் கழுவாய் செய்யப் பாவம் நீங்கும் எனப்படுகிறதே என்றால், புண்ணியத்தால் பாவத்தை ஒழிப்பது, விலை கொடுத்து நற்பயனை வாங்க முயல்வதற்கு ஒப்பாகும். ஆகம விதிப்படி கழுவாய் செய்தாலும் வினையின் கொடுமை நீங்குமே ஒழிய, வினையின் பயன் வேரறக் கழியும் என்பது உண்மை அல்ல. அப்படிக் கழியாது மிஞ்சி நின்ற வினைப்பயன் அடுத்த பிறவிக்கும் தொடர்புடையது ஆகும்.

கூர்ந்து நோக்கினால், ஒரு புண்ணியத்தால் மற்றொரு பாவம் கழிக்கப்படுவதில்லை  என்பதும், வினை நீங்குவதற்கு இறைவன் திருவருளே துணை நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகும். சமய குரவர்களான திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் ,இறைவன் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டவர்களுக்கு வினைகள் வேரோடு அறும் என்று பல இடங்களில் அறிவுறுத்தி அருளியுள்ளமையை  நன்றாக எண்ணிப் பார்த்தால், வினைகளை முற்றிலும் துடைப்பவன் இறைவனே என்பதும்,  பிராயச்சித்தம் என்னும் கழுவாய் அல்லது பரிகாரம் மூலம் விளைகள் அறுவதற்கு வழியில்லை என்பதும், அவரவர் வினையை அவரவர் அனுபவித்தே கழிக்கவேண்டும் என்பதும் தெளிவாகும்.

மேலும், பிராயச்சித்தம் அல்லது கழுவாய் அல்லது பரிகாரம் என்பது, அவ்வபோது செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு, அதன் விளைவில் இருந்து தப்பித்துக்கொள்ள அவ்வபோது செய்துகொள்வது அல்ல. உலகியல் முறையில் பார்த்தால் கூட, ஒருமுறை தவறு செய்தால் மன்னிப்புக் கிடைக்கும். தொடர்ந்து தவறு செய்துகொண்டு இருந்தால், மன்னிப்புக் கிடைக்காது. தக்க தண்டனையே கிடைக்கும்.

ஒருமுறை செய்தது தவறு என்று தெரிந்தால், அதற்காக வருத்தப்பட்டு, மீண்டும் அத்தகையதொரு தவறு மீளவும் தன்னிடம் நிகழாமல் ஒருவன் காத்துக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகின்றார். இறைவனிடம் வருந்தி முறையிட்டுவிட்டு, பாவ மன்னிப்புக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு, பிறகு மீண்டும் பாவத்தைச் செய்வது அறியாமை. அறமன்றங்களிலும் இச்செயல் உரிய பலனைத் தராது போகும். 

"எற்று என்று இரங்குவ செய்யற்க, செய்வானேல்,

மற்று அன்ன செய்யாமை நன்று."       --- திருக்குறள்.

" நான் செய்து செயல் எத்தகையது என்று பின்னர் வருந்தும்படியான செயலை ஒருக்காலும் செய்யாது இருக்கவேண்டும். ஒருக்கால் அறிவு மயங்கிச் செய்துவிட்டால், மீண்டும் அதுபோன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும்" என்கின்றார் நாயனார்.

ஊழ்வினை வந்த போது அறிவு மயங்கும். ஊழ்வலியால் அறிவு மயங்கி, ஒருவன் தீச் செயலைச் செய்துவிடுவானாயின், அது பின்னர் பயனை விளைக்கும் தோறும் துன்பம் மிகுந்து கொண்டே இருக்கும். அதை அனுபவித்தே கழித்தல் வேண்டும். அதை விடுத்து, இவ்விதம் செய்தால் இத் துன்பம் நேர்ந்தது என்று தனக்குத் தானே வருந்துவதால் பயனில்லை. வருந்திக் கொண்டு இருந்தால், இவன் பயனில்லாத செயல்களையே செய்து விட்டு வருந்துகின்றான்; மன உறுதி இல்லாதவன், தன் பழியைத் தானே தூற்றிக் கொள்கின்றான் என்று பிறரால் பழிக்க நேரும். எனவே, இரங்குதல் கூடாது.  செய்த தீய செயலால் வந்த துன்பத்தை அனுபவித்த பிறகும், அது போன்றதொரு செயலைப் பின்னும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...