காலையும் மாலையும் முன் நிற்கும்

 


காலையும் மாலையும் முன் நிற்கும்

-----

உள்ளத்தில் அன்பு மிக்க பெரியவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டி வந்தால் சில வழிகளைக் காட்டுவார்கள். ஏதேனும் ஒரு வழியை மட்டுமே காட்டினால், அந்த வழியிலே செல்லும் திண்மையும் தகுதியும் இல்லாதவர்களுக்கு அதனால் பயன் உண்டாகாது. எனவே, ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று பயன்படட்டும் என்ற கருணையோடு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைப் பெரியோர்கள் காட்டுவார்கள். 

மிகக் குறைந்த செல்வம் உடையவன் ஒருவனை அணுகினால் அவன் தன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பான். அப்படி இல்லாமல் வளவாழ்வு பெற்று, எல்லாப் பொருளும் தன் மாளிகையில் குவித்து வைத்திருக்கும் செல்வனை அணுகினால் அவன் வேண்டுவனவற்றை எல்லாம் கொடுப்பான். எதவுவாய் இருந்தாலும், கொடுப்பதற்கு மனம் இசைய வேண்டும். பொருள் இருந்தாலும் மனம் இல்லாவிட்டால் கொடுக்க இயலாது. மனம் இருந்தாலும் பொருள் இல்லாவிட்டால் அப்போதும் கொடுக்க இயலாது. ஆகவே இரண்டும் உடைய மக்களின் வழியாகத்தான் அவர்களைச் சார்ந்தவர்களுக்குப் பண்டங்களும் பணமும் கிடைக்கின்றன.

எவ்வளவு ஏழையான தாயாக இருந்தாலும் தன் செல்வ நிலைக்கு உட்பட்டுப் பலப்பல அணிகளையும், சுவைமிக்க பண்டங்களையும் தன் குழந்தைக்கு அளிக்கிறாள். அதைப்போல எமவாதனையில் இருந்து விடுதலை பெற, மக்களுக்குப் பல வழிகளைக் கருணைமிக்க அருளாளர்கள் காட்டுகிறார்கள். நம் சமயத்தில் பல வகையான வழிபாடுகள் இருப்பதற்குக் காரணம், பல தரப்பட்ட மக்களும் இறைவன் திருவருளுக்குப் பாத்திரமாக வேண்டுமென்ற கருணை நோக்கமே. ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மனப் பக்குவத்தை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி உபதேசம் செய்தவர்கள் நம் பெரியோர்கள். இறைவனது அருளால் இன்பப் பேற்றைப் பெற்று நின்ற அருணகிரிநாதரும் எல்லா மக்களும் எம்பெருமான் அருளால் இன்பத்துக்கு உரியவர்களாக வேண்டும் என்ற பெருங்கருணையோடு கந்தர் அலங்காரத்தில் பல வழிகளைச் சொல்கிறார். 

ஓர் உருவம் மனத்தில் பதிவு பெறவேண்டுமானால், பல முறை காணவேண்டியது அவசியம் அல்ல. ஒரே ஒருமுறை பெண்ணைப் பார்த்தவன், அவள் தனது காதலியாக வரப் போகிறவள் என்ற அறிவோடு பார்த்தான். கண்ணைக் கொண்டு பார்க்கும்போதே தன் கருத்தைக் கொண்டும் பார்த்தான். அதனால் ஒருமுறை பார்த்தாலும் பதிந்தது. பல முறைகள் பார்த்தும் மனத்தில் எத்தனையோ உருவங்கள் பதிவு ஆகாமல் இருந்தும், இந்த உருவம் கண நேரத்தில் பதிவாகிவிட்டது. உருவம் மனத்தில் பதிய, அறிவோடு, கருத்தோடு பார்த்தல் வேண்டும். 

கண்ணால் பார்க்கும் போதே, கருத்திலும் பார்த்ததனால்தான் மனைவியின் உருவமும், குழந்தையின் உருவமும் மனத்தில் பதிந்திருக்கின்றன. அப்படியே இறைவனையும் பார்க்க வேண்டும். மனிதன் உலகத்தில் வாழ்கிறான். வாழ்வு முடிந்தவுடன் சாகிறான். வாழ்நாளில் வருகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகமிகப் பெரிய துன்பம் சாவு. அந்தத் துன்பம் என்றைக்குமே வராமல் இருந்தால் துன்பமே அவனுக்கு அற்றுப்போய்விட்டது எனலாம். துன்பம் இல்லாமல் போனால், ஆனந்தம் தலை எடுக்கும். இருட்டு எங்கே இல்லையோ அங்கே ஒளி இருக்கும். துன்பம் தருகின்ற இருட்டாகிய சாவை ஒழித்து விட்டால், காலத்தை வென்று விட்டால், இன்ப ஒளி உண்டாகும். 

எமன் நேரே வரமாட்டான். அவன் எமதருமராஜா. அவனுக்குப் பல தூதர்கள் இருக்கிறார்கள். அந்தத் தூதர்களைத்தான் அவன் ஏவி விடுவது வழக்கம். மிகப் பெரியவர்களானால் அவனே நேரில் வருவான். மார்க்கண்டேயரைப் பிடித்துப் போக முதலில் வந்த எமதூதர்களால் அவரை அணுக முடியவில்லை. பின்பு கூற்றுவன் வந்தான். அவனாலும் முடியவில்லை. கூற்றுவன் தூதர்களின் தலைவன். அதைக் கேட்டு எமன் சீற்றம் கொண்டானாம். நானே அவனைப் போய்க் கொண்டு வருகிறேன் என்று கரிய எருமை வாகனத்தில் புறப்பட்டு வந்தான். மார்க்கண்டேயர் தன் வாழ்நாளின் முடிவு வந்துவிட்டதைத் தனது பெற்றோர் மூலம் அறிந்து, இறைவனைச் சரண் புகுந்தார். இறைவனைத் தழுவிக் கொண்டு இருந்த மார்க்கண்டேயர் மீது எமன் வீசிய பாசம் இறைவன் திருமேனி மேலும் விழுந்தது. இறைவன் விட்ட உதையால் எமன் ஒழிந்தான். மார்க்கண்யடேயருக்கு எமபயம் தீர்ந்தது.

இவ்வுலகில் இத்தனை காலந்தான் வாழ்வோம் என்று படைக்கும் போது, நாம் செய்திருக்கும் பாவபுண்ணிய வினைகளை எல்லாம் கணக்கிட்டு நமது தலையில் பிரமன் எழுதி அனுப்பிவிட்டான். வாழ்நாள் முடியும்போது,  எமதூதர்கள் அனுப்பப்படுவார்கள். பிரமன் எழுதிய ஓலையின் படி ஒன்று எமனிடம் இருக்கும். அந்த ஓலையையும் எமதூதரையும் கண்டு உடம்பை விட்டுவிட வேண்டுமே என்று உயிர் வேதனைப்படும்.  இந்தத் திண்டாட்ட வாதனையை ஒழிப்பதற்கு இறைவன் திருவுருவத்தை மனதில் எழுதிக் கொள்ளப் பழக்கவேண்டும்.

மனத் திரையில் எப்படி எழுதிக் கொள்வது? ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் பெருமான் திருவுருவத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாலும்,  எழுத முடியாது. நாள் முழுதும் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது. பிழைப்பு வழியையும் பார்க்கவேண்டும். எவ்வளவு நேரம் உழைத்தாலும், வாழ்க்கைக்குப் போதுமான பொருள் கிடைப்பது இல்லை. வீட்டில் தங்கும் சில மணி நேரம், வேண்டிய உணவுப் பொருளை வாங்கி வருவதிலும், உண்பதிலும், உறங்குவதிலுமே போய்விடுகிறது. இறைவனை நினைக்க எங்கே நேரம்?

இருபத்து நான்கு மணி நேரமும் ஆண்டவனை நினைக்க வேண்டாம். அவன் திருவுருவத்தை நினைப்பதற்கு, காலை மாலை என்னும் இரண்டு வேளைகள் உள்ளன. "காலையும் மாலையும் கைதொழுவார்" என்கிறார் அப்பர் பெருமான். அந்த இரண்டு வேளைகளில் வழிபட்டால் போதும். அதிலிருந்து இன்பம் உண்டாகும். நம் நாட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது.  நாள்தோறும் திருமுறைப் பாராயணம் பண்ணுகின்றவர்கள், நேரம் இல்லாவிட்டால் திருப்பதிகத்தின் முதல் பாடலையும் கடைசிப் பாடலையும் சொல்வது வழக்கம். அந்த இரண்டையும் பாடினாலேயே நடுவில் இருக்கிற அத்தனையையும் சொன்னது போலாகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அதைப் போலவே இருபத்து நான்கு மணி நேரத்தில் மாலை என்பது ஒர் எல்லை; காலை என்பது ஒர் எல்லை. பகலில் எங்கும் ஒளி பரவி நிற்கும். இரவில் எங்கும் இருள் கவிந்திருக்கும். ஒளி இறைவனுக்கு அடையாளம். இருள் கூற்றுவனுக்கு அடையாளம். வாழ்க்கையில் ஒளி நிரம்பிய பகல் பிறப்பைப் போலவும்,  இருள் கவ்விய இரவு இறப்பைப் போலவும் உள்ளன. 

"உறங்குவது போலவும் சாக்காடு உறங்கி 

விழிப்பது போலும் பிறப்பு" 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். 

பிறக்கின்ற காலம், இறக்கின்ற காலம் இரண்டுக்கும் எல்லையாக உள்ள இரண்டு பொழுதுகள் காலையும் மாலையும். இந்த இரண்டு நேரங்களில் இறைவனை நினைந்து வழிபட்டு, அவன் திருவுருவத்தை மனத் திரையில் ஒவியமாகத் தீட்டிக் கொண்டால் போதும் என்கிறார் அருணகிரியார். 

காலையும், மாலையும் தவறாமல் வழிபாடு செய்வது சிலருடைய வழக்கம். பெரிய திருக்கோயில்களில் ஆறுகால பூசை நடைபெறும். சிறிய கோயில்களில் காலையும் மாலையுமாகிய இரண்டு சந்திகளில் பூசை நிகழும். சந்திகளில் சிறந்தவை காலையும் மாலையும். இந்த இரண்டு பொழுதும் இறைவனை நினைந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். அது மற்ற நேரங்களில் மனதில் இருக்கும். 

புதிதாகத் திருமணம் ஆனவன், காலையிலே அலுவலகம் செல்கின்றான். செல்வதற்கு முன் ஆசை விழிகளோடு தனது மனையாளைப் பார்த்துவிட்டுப் போகிறான். அலுவலகப் பணியில் இருக்கின்றபோதும், அவன் செய்கின்ற வேலைகளுக்கு இடையே மனைவியின் நினைவும் அவன் கருத்தில் வந்து வந்து மறைந்துகொண்டே இருக்கிறது. காலையும் மாலையும் மனைவியைப் பார்ப்பது செயலாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் மனத்தின் நினைவாக இருக்கிறது. அப்படியே காலையும் மாலையும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபட்டு அவன் திருவுருவத்தை மனத்திலே நினைந்து பழகினால் இடைப்பட்ட காலத்திலும் அந்த நினைவு மறக்காமல் இருக்கும். 

நாம் எத்தனை காலம் வாழ்ந்தாலும், கடைசியில் இறந்து படுவோம் என்கிற ஞானம் வரவேண்டும். இறைவன் நாமத்தைச் சாகிறபோது சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் அது இயலாது. எவ்வளவு முயன்றாலும் பழைய வாசனையே முன்வந்து நிற்கும். இறைவன் நினைவு சாகிறபோது வரவேண்டுமானால் வாழும்போது ஒவ்வொரு சந்தியிலும் அவனை நினைத்துப் பழகியிருக்க வேண்டும். 

“காலன் வரும்முன்னே, கண்பஞ்சு அடைமுன்னே, 

பால் உண் கடைவாய் படும் முன்னே, - மேல்விழுந்தே 

உற்றார் அழும் முன்னே, ஊரார் சுடும் முன்னே 

குற்றாலத் தானையே கூறு” 

என்று பட்டினத்தடிகள் கூறுகிறார்.

சாகும் காலத்தில் இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்று இருப்பதனால் பயன் இல்லை. அப்படி நினைக்கவும் முடியாது. மனத்திலே அவனுடைய நினைவாகிய வாசனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற வேண்டும். இரவில் ஒவ்வொரு நாளும் படுத்துக் கொள்ளும்போது இறைவனை நினைந்து நினைந்து அவன் திருவுருவத்தை மனத்திலே தீட்டிக் கொள்ள வேண்டும். அதன் பயனாக விடியற்காலையில் எழுந்திருக்கும்போது இறைவன் நினைவு வரும், இரவு எதைப்பற்றி நினைத்துக்கொண்டு உறங்குகிறதோ அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு எழுந்திருப்பது மனத்தின் இயல்பு. 

"தொழுது எழுவார் வினைவளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்" என்று மணிவாசகர் திருக்கோவையாரில் பாடியிருக்கிறார். படுக்கும்போது இறைவனைத் தொழுது படுப்பவர்களாதலின் விடிந்தவுடன் எழும்போது நினைப்பு வந்து தொழுகிறார்கள். இது இறைவனுடைய அடியார்களுக்கு இயல்பு. இறைவனுடைய நினைவு அவர்களுக்குக் காலையும் மாலையும் முன்னிற்கிறது. 

இதேபோலத்தான் இறக்கும்பொழுது இறைவனை நினைந்து தொழுதுகொண்டே இறப்பவர்கள் பிறக்கும் பொழுது இறைவனையே நினைந்து தொழும் இயல்போடு பிறக்கிறார்கள். பிறந்தவுடன் ஒருவனுக்கு ஞானம் வந்துவிடாது.  ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்கும் இணைப்பு இருக்கிறது. முதல் நாள் இரவு ஒருவன் படுக்கும்பொழுது எந்த நினைவுடன் படுக்கிறானோ, அதுவே மறுநாள் காலையில் தெளிவாகத் தோன்றுகிறது. இந்தப் பழக்கம் உறுதிப்பட்டால், வாழ்விலே எத்தனை விதமான காரியத்தைச் செய்தாலும் இறக்கும்பொழுது இறைவனது நினைவு முன்வந்து நிற்கும். இறக்கும்போது உள்ள நினைவே மறுபிறப்புக்குக் காரணமாகிறது என்பார்கள். சிற்றின்பங்களை நுகரவில்லையே என்ற நினைவோடே இறந்தால், மீண்டும் பிறந்து அந்த இன்பங்களை நுகர வேண்டி வரும். இறைவன் திருவடியைத் தொழ வேண்டும் என்று இறுதிவரை நினைவோடு இறந்தால், அதற்குத் தக்க பிறவியே கிடைக்கும். 

ஆகவே, எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இல்லை. காலையும் மாலையும் ஆகிய இரு சந்தி வேளையில் இறைவனை நினைத்தால் போதும். அவன் எப்போதும் முன்னே நிற்பான். இறக்கிற காலம் ஆகிய மாலையிலும், பிறக்கிற காலம் ஆகிய காலையிலும் இறைவன் முன்னிற்பான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். காலையும் மாலையும் முன் நிற்கும் உருவம் எது?  என்றால்,  "கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே" வரிசையாகச் சொல்கிறார் அருணகிரிநாதர். இறைவன் திருவுருவத்தைக் கண்ணாரக் கண்டு வணங்கினால் போதும்.

காக்கை நமக்கு வழிகாட்டியாக உள்ளது.  காக்கை ஒரு பறவை. காக்கைக்குக் பத்தி தெரியாது; இசை தெரியாது. பசி மட்டுமே தெரியும். தினமும் அதற்கு உணவு அளித்தால், இங்கே போனால், இந்த வேளையில் உணவு அளிப்பாள் என்பது அதற்குப் பழக்கமாகிவிட்டது.

பழநித் திருப்புகழில் முருகனடியார்களாகிய மாதவர்கள் திருநீறு அணிவதைச் சொல்கிறார் அருணகிரிநாதர். அவர்கள் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறு தடவை சொல்லி அணிகிறார்களாம். "ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று, பூதி ஆகம் அணி மாதவர்கள்" என்கின்றார். இங்கே முருகனுடைய திருக்கோலத்தை நினைப்பூட்டுகையில், ஆறு பொருள்களைச் சொல்கிறார். முருகன் மருங்கில் அணிந்துள்ள சேலையை நினைக்கச் செய்கிறார். அவன் கட்டியுள்ள சீராவை நினைக்கச் செய்கிறார். கையில் அணிந்துள்ள சிவந்த செச்சை மாலையை நினைப்பூட்டுகிறார். சேவல் பதாகையையும் பார்க்கச் சொல்கிறார். தோகையையும் காட்டி, வாகை மாலையையும் கண்டு களிக்கச் செய்கிறார். ஆக ஆறு பொருள்களை அழகாகக் காட்டுகிறார். 

சாகின்ற துன்பம் மிகப் பெரிய துன்பம். அந்தத் துன்பம் போகவேண்டும் என்றால், இறைவன் திருவுருவத்தை மனத்திரையில் எழுதிக்கொண்டு காலையும் மாலையும் நினைந்து வாழவேண்டும். "உள்ளக் கிழியில் உருவு எழுதி" என்பார் அப்பர் பெருமான். அப்படிச் செய்தால் இறைவன் திருவுருவம் இறுதிக் காலத்தில் வந்து முன் நிற்கும். பின்னர் மறுபிறவி எடுத்தாலும் பிறப்பாகிய காலையில் வந்து நிற்கும் என்கின்றார் அருணகிரிநாதர். 

இறைவன் திருவுருவத்தைக் கண்ணாரக் கண்டு வணங்கி, பின்பு காலை மாலை வேளையில் தியானம் செய்தால், அவ்விரு வேளைகளிலும் அவனது திருவுருவம் நமக்கு முன் தோன்றும். ஒருநாள் காலையும் மாலையும் தியானித்துப் பழக்கப்பட்ட உருவம் இறக்கும்போதும் வந்து முன் நிற்கும். அதனால் என்ன பயன்? என்றால்,  ஒலையுடன் எமதூதன் வரமாட்டான். இது அருணகிரிநாதருடைய அருள் அனுபவம். அதையே நமக்கு இப்பாடலின் மூலம் உபதேசித்து அருளுகின்றார். 

மடையில் தண்ணீர் பாய்கிறது. தண்ணிர் வேகமாய்ப் போய் வயலில் பாய்வது தெரிகிறது. பயிர் நன்றாக விளைந்து வருவதையும் பார்க்கிறோம். தண்ணீர் பயிருக்குள் எப்படிப் பாய்ந்தது என்றால் என்ன சொல்வது? தண்ணிர் பாயும்போது கண்ணுக்குத் தெரிந்தது. பயிர் விளைந்து தழைத்து நிற்கும் போதும் கண்ணுக்குத் தெரிகிறது. "இடையில் எப்படித் தண்ணீர் பாய்ந்தது? எப்படிப் பயிர் அவற்றை எடுத்துக் கொண்டது? தானியம் எப்படி விளைந்தது?" என்றால் என்ன பதில் சொல்வது? நடுவில் நடக்கின்ற காரியங்கள் நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. 

அதேபோல, இறைவனுடைய திருவுருவ தரிசனம் கண்டுகொண்டால், அதன் பயனாகத் தீங்குகள் போய்விடும். மனத்திலுள்ள சோர்வுகள் போய்விடும். அச்சம் போய்விடும். இருள் அகன்றுவிடும். ஞான ஒளி பிறக்கும். காலனுக்கு அங்கே வேலை இல்லை. வரமாட்டான். இறைவன் திருவருள் இன்பம் கிடைக்கும். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று விளக்க இயலாது. அது அநுபவித்து உணர வேண்டியது.

"அச்சம்இலர், பாவம்இலர், கேடும்இலர், அடியார்

நிச்சம்உறு நோயும்இலர், தாமும் நின்றியூரில்

நச்சம்மிடறு உடையார், நறுங் கொன்றை நயந்து ஆளும்

பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே".

என்று அப்பர் பெருமான் தமது அருளனுபவத்தை இப்படிக் காட்டிப் பாடினார்.

அருணகிரிநாதப் பெருமான் பின்வருமாறு தமது அனுபவத்தைப் பாடி அருள்கின்றார்..

"ஒலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து, எனக்குக் 

காலையும் மாலையும் முன்நிற்குமே, கந்தவேள் மருங்கில் 

சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்தசெச்சை 

மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே."      --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

முருகப் பெருமானின் திரு அரையில் சாத்தி உள்ள பீதாம்பரத்தின் மீது கட்டி உள்ள கட்டும் (உதர பந்தனம் ஆகிய சேலை), அதில் கட்டி உள்ள சிறிய கூர்மை பொருந்திய உடைவாளும், தோருத் தோள்களில் அணிந்துள்ள சிவந்த நிறம் உடைய வெட்சி மாலையும், சேவல்கொடியும், மயில்வாகனமும், வெற்றித் திறமும் ஆகிய இவைகள், கூற்றுவனுடைய ஓலையையும், அதைத் தாங்கி வருகின்ற அவனது தூதர்களையும் கண்டு அடியேன் கலக்கம் அடைவதை ஒழித்து, காலையிலும், மாலையிலும், அடியேன் எதிரில் தோன்றி நின்று அபயம் தந்து அருளும்.

"வருபவர்கள் ஓலை கொண்டு, நமன் உடைய தூதர் என்று,

     மடிபிடி அதாக நின்று ...... தொடர்போது,

மயல் அது பொலாத வம்பன், விரகு உடையன் ஆகும் என்று,

     வசைகள் உடனே தொடர்ந்து ...... அடைவார்கள்,

கருவி அதனால் எறிந்து, சதைகள் தனையே அரிந்து,

     கரிய புனலே சொரிந்து ...... விடவேதான்,

கழுமுனையிலே இரு என்று விடும் எனும், அவ்வேளை கண்டு,

     கடுகி வரவேணும் எந்தன் ...... முனமேதான்.

பரகிரி, உலாவு செந்தி மலையின் உடனே, இடும்பன்

     பழநி தனிலே இருந்த ...... குமரஈசா!"

என்று திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார்.

இதன் பொருள் ---

திருப்பரங்குன்றத்திலும், திருவுலா வருவதற்கு ஏற்ற திருச்செந்தூரிலும், இடும்பனால் கொணரப் பெற்ற பழநிமலையிலும் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே! எமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு அவனது தூதர்கள் வந்து “நாங்கள் இயமனுடைய தூதர்” என்று கூறி மடியைப் பிடித்து இழுப்பதுபோல் நின்று தொடர்கின்ற போது, “இவன் மயக்கம் மிகுந்த, பொல்லாத வம்பன்; வஞ்சனைக்காரன்” என்ற வசைமொழிகளைக் கூறி, என்னிடத்து நெருங்குவார்கள். அப்படி வந்த காலதூதர்கள் என்னைப் பற்றிக் கொண்டுபோய் எமனுக்கு முன் நிறுத்தி ஆயுதங்களால் துன்புறுத்தி, சதைகளை அரிந்து, உருக்கிய இரும்பு நீரை எனது வாயில் ஊற்றித் துன்புறுத்துவதோடு, கழுவின் முனையில் இரு என்று ஏற்றிவிடுவார்கள். அந்த வேளையில் அடியேனது துன்பத்தைக் கண்டு, விரைந்து என்முன் வந்து அருள் புரியவேண்டும்.

பிறப்பு இறப்பு இவைகளால் உண்டாகும் அச்சத்தையும் துன்பத்தையும் தீர்த்து வைப்பது இறைவன் திருவருளே ஆகும். காலைவேளை ஆகிய பிறப்பின்போது உண்டாகும் அச்சத்தையும், மாலைவேளை ஆகிய இறப்பின் போது உண்டாகும் அச்சைத்தையும் தீர்த்து அருள் புரியும் இறைவன் திருவுரவைக் கண்ணாரக் கண்டு வழிபட்டு, கண்ட காட்சியைத் தியானித்து அருள் பெறுதல் வேண்டும்.

"எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,

அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்று அருளி,

இங்கே என்வினையை அறுத்திட்டு, எனை ஆளும் 

கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே!"

என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.

"செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும், அங்கே வந்து என் முன் நிற்பனே" என்றும் அருணகிரியார் பாடுகின்றார். நாமும் எங்கே, எந்த வேளையில் நினைத்தாலும், அந்த வேளையில், அங்கே வந்து நம் முன் இறைவன் நின்று அருள் புரிய வழிவகுத்துக் கொள்ளவேண்டும்..


No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...