குணம் கெட்ட துட்டன்
-----
உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும் தன்மை உடையன. மனிதன் எப்போதும் கூட்டமாக வாழும் தன்மை உடையவன். தன் உள்ளத்திற்குப் பொருந்திய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு அவனுக்கு வாய்ப்பு உண்டு. தனியாகப் பிறந்த மனிதன் முதலில் தாய் தந்தையுடன் வாழ்கிறான். பின்பு சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறான். அதன் பின்பு மனைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறான். அதன் விளைவாகக் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பத்தை நடத்துகிறான். மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவர்களோடு பேரன் பேத்திகளைப் பெறுகிறான். அவற்றால் அவனுடைய குடும்பமே பெரியது ஆகிவிடுகிறது. ஊரார், உற்றார் என்று அவன் பிறருடன் சேர்ந்து வாழ்கிறான்.
அவனுடைய நிலைமையும், தலைமையும் பெருகப் பெருக அவன் இணக்கம் கொள்ளும் மனித சமூகம் விரிகிறது. நாட்டில் உள்ள மக்களோடு இணங்கி வாழ்கிறவன் பெரிய தலைவனாகிறான். உலகம் முழுவதும் உள்ள மக்களோடு சேர்ந்து வாழ்கிறவன் மிகமிகப் பெரிய மனிதனாகிறான். சிலருக்குத் தம்முடைய சுற்றத்தார்களை மாத்திரம் தெரிந்துகொள்ளும் வாழ்க்கை இருக்கும். சிலர் உறவினர்களாலும், ஊரவர்களாலும் மதிக்கப்படுகிற நல்லவர்களாக வாழ்கிறார்கள். அப்படியே நாட்டுக்குத் தலைவராக உள்ளவர்களை, உலகத்தவர் பலர் தெரிந்து கொள்ளும் மேன்மையும் இருக்கிறது.
'இனம் இனத்தோடு சேரும்' என்று சொல்வார்கள். நம்முடைய பண்புக்கு ஏற்றபடி அந்தப் பண்பை வளர்க்கின்ற மக்களோடு சேருவதுதான் இயல்பு. நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறான் இறைவன். நம்மிடத்தில் உள்ள தீய குணங்கள் மாற்றுவதற்கு ஏற்பச் சிறந்த மக்களோடு சேருவதற்கும் வாய்ப்பு உண்டு. உடம்பில் அழுக்கு இருக்கும்போது அழுக்கோடு புரண்டு கொண்டிருப்பவன் அறியாதவன். அழுக்கை நீக்குவதற்கு இறைவன் தண்ணீரைக் கொடுத்திருக்கிறான். அழுக்கைப் பூசிக் கொண்டு வாழாமல் அதனை மாற்றிக் கொள்வதற்குரிய நீரைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. அதுபோல இந்த உலகத்தில் அழுக்கு நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள்; தூய நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள். மனிதன் பிறந்தவுடன் எந்தப் பழக்கத்தையும் கொண்டு வருவது இல்லை. பழைய பிறவியில் இருந்த அவனுடைய சில குணங்கள், இயல்பாக இருக்கின்றன. ஆனாலும் அவற்றை மெல்லப் போக்கிக் கொள்வதற்கு நல்ல குணங்கள் உள்ளவர்களோடு இணங்க வேண்டும். அப்படி இணங்குவதனால் குற்றங்கள் குறைந்து, குணங்கள் பெருகும். விலங்குகள்கூட மனிதர்களோடு பழகினால் தம்முடைய குணங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்கின்றன.
"நிலத்து இயல்பால் நீர்திரிந்த அற்றாகும் மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு" என்பது திருக்குறள். நமக்கு இயல்பாக உள்ள அறிவு விளக்கம் பெறுவதற்கும், குணம் சிறந்து நிற்பதற்கும் நல்லவர்களுடைய இணக்கம் தேவை. “நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமுமே அல்லாது, நின்கும் நிலை உளதோ” என்பது பட்டினத்தடிகளார் அருள்வாக்கு. அல்லாதவர்களுடைய இணக்கத்தால் நம்மிடத்து ஏற்கெனவே பொருந்தி உள்ள தீய குணங்கள் வளர்வதோடு, நாம் யாரைச் சார்ந்து உள்ளோமோ, அவர்களுடைய தீயகுணங்களும் நம்மைச் சாரும். மனிதன் வரவர நல்லவற்றை எண்ணவும் நல்லவற்றைப் பேசவும் நல்லவற்றைச் சிந்திக்கவும் வேண்டும். இவற்றை இயல்பாகப் பெறாவிட்டாலும் சிறந்து நிற்பவர்களுடன் இணங்க வேண்டும். “குற்றம் குறைந்து, குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணை என நம்பு கண்டாய்” என்பது தாயுமானார் அருள்வாக்கு.
நாமாக எதையும் அறிந்துகொள்ள முடியாது. அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்பு உடையது உயிர். பெரியவர்களுடன் பழகினால் எண்ணுதற்குரிய நல்லவைகள் இன்ன இன்ன என்பது தெரியவரும். நல்லவற்றைச் செய்வதற்கு முன்னால் நல்லவற்றை நினைக்கவும், பேசவும் தெரிந்து கொள்வதே சிறந்த சாதனை. பணத்தை வைத்துக் கொண்டு, உடல் பலத்தை வைத்துக் கொண்டு, மக்கள் துணையை வைத்துக் கொண்டு தனக்கு மட்டும் அன்றிப் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களையே செய்ய வேண்டும். அதற்கு நமக்கு வாய்ப்பு இல்லையென்று எண்ணிப் பலர் சோர்ந்து போகிறார்கள். எடுத்தவுடன் மனிதன் செயலில் இறங்குவது இல்லை. மனத்திலே எண்ணி, பலகாலம் சிந்தித்து, அதனை நிறைவேற்றுவதற்கு என்ன வழி என்று ஆலோசிக்கிறான். அதைப்பற்றி மற்றவர்களுடன் பேசுகிறான். அதன் பின்னே அதனைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடுகிறான். மனத்தில் எத்தனை திண்மையான எண்ணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி செயலை நிறைவேற்றுவதற்குரிய வகை தானே வந்து சேரும்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்”
என்று திருவள்ளுவ நாயனார் கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் வேண்டிய கருவிகள் தாமே வந்து சேரும்.
நாம் இப்போது எத்தனையோ கருவிகளைப் பெற்றிருக்கிறோம். அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொள்ளாமையால், நம்மால் வெற்றி காண முடிவது இல்லை. கிடைத்த பொருளைக் கொண்டு பெறத் தக்க பெரும்பயன் இருக்க, அதனை மறந்து, கிடைத்ததைக் கொண்டு சிறப்பாக வாழப் பழகாமல், கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டு நிற்கிறோம். இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற கருவிகளுள் மிகச் சிறந்தது அறிவு. தனுகரண புவன போகங்கள் ஆகியவை விலங்குகளுக்குக் கிடைக்காத வகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தக்கபடி முயற்சி செய்து, நல்ல பயனை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 'பெறுதற்கரிய பிறவி' என்று மனிதப் பிறவியைச் சொல்வதற்குக் காரணம் இதுதான். நாம் அந்தக் கருவிகளைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்வதில்லை. அதற்கான வழி நமக்குத் தெரிவதில்லை. பயன்படுத்திக் கொள்ளும் நல்லவர்களைக் கண்டு நாம் செய்யலாம்.
சிறு குழந்தை உலகத்தினரைப் பார்த்து ஒவ்வொன்றாகப் பழக்கம் செய்து கொள்கிறது. ஒடுவதும், ஆடுவதும், சிரிப்பதும், அழுவதும் ஆகிய எல்லாமே குழந்தை பிறரிடமிருந்து தெரிந்து கொள்பவைகளே. தாய்தந்தை உலகம் ஆகியவற்றோடு கலந்து மெல்ல மெல்லப் புதிய பழக்கங்களை உண்டாக்கிக் கொள்கிறது. ஆகவே, அறிவை உடைய மனிதன் தனக்கு தெரியாவிட்டாலும் நல்லவர்களுடன் கலந்து நல்ல எண்ணங்களையும் நல்ல பேச்சையும் நல்ல செயல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நல்லவர்களோடு இணங்குவது என்பது எளிதில் வருவது இல்லை. உலகில் பெரும்பாலும் தீயவர்களுடைய ஆதிக்கமே நிலவுகிறது. ஆகையால், தீயவர்களுடைய கூட்டத்திற்குள் புகுவது மிக எளிதாக இருக்கிறது. நாம் தீயவர்களை ஒதுக்கி, நல்லவர்களைத் தேட வேண்டும். நன்மை என்பது பலவகைப்படும். அறம் செய்வது நன்மை; பொருள் ஈட்டுவது நன்மை; நல்ல முறையில் இன்பம் பெறுவதும் நன்மைதான். நம் வாழ்நாள் மிகக் குறுகியது என்பதை உணர்ந்து எல்லாவற்றிலும் சிறந்த நன்மை எது, அதனைப் பெறுவதற்குரிய வழி என்ன என்று ஆராயவேண்டும். மிகச் சிறந்த நன்மை இறைவன் அருளைப் பெறுவதுதான். அந்த அருளைத் தருவதற்குரிய நாயகனாகிய இறைவன் எப்போதும் இருக்கிறான்; எங்கும் இருக்கிறான். நாம் முயன்றால் அருள் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டான்.
ஆனால், முயல்வதற்குரிய வழி தெரியாமல் நாம் திண்டாடுகிறோம். நம்முடைய இணக்கமெல்லாம் இறைவனைப் பற்றி எண்ணாதவர்களுடைய இணக்கமாகவே இருக்கிறது. ஏதோ சம்பிரதாயத்திற்காக, கடவுள் என்று சொல்லிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக சாமியார் வேடம் பூண்டு, பொய்யாக வாழ்கிறவர்களோடு உறவு வைத்துக் கொண்டு வாழ்வதால் பயன் இல்லை. அவர்களுடைய இணக்கம் நமக்கு நலம் தராது. “இணக்கம் அறிந்து இணங்கு”, “சேர் இடம் அறிந்து சேர்” என்ற ஔவையின் அருள்வாக்கை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய இயற்கை மாறவேண்டுமானால், நல்ல குணங்கள் படிய வேண்டுமானால், முதலில் நாம் தீயவர்களுடன் இணங்கக் கூடாது. இறைவனை வணங்கித் துதிக்க அறிந்த மனிதர்களுடன் இணங்க வேண்டும். பெரும்பாலோருடைய நிலை அப்படி இல்லை. வணங்கத் தெரியும். துதிக்கத் தெரியும். கைமேல் பலன் தருகிற மக்களைத்தானே வணங்க வேண்டும், துதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாச் செயலுக்கும் மூலகாரணனாக இருந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றித் தருகிறவன் இறைவன். தம்மால் புகழ்ந்து துதிப்பதற்கு உரியவன் அவன்தான் என்பதை அறிவாளிகள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் எண்ணுவது இல்லை.
உலகத்தில் சிறுசிறு இலாபங்களில் மனத்தைப் போக்கி வாழ்கின்றவர்கள் இறைவனை வணங்குவதும் இல்லை; துதிப்பதும் இல்லை. ஓரிடத்தில் ஒரு பெரிய விருந்து நடக்க இருந்தது. விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காகப் பூந்தி பண்ணிக் குவித்திருந்தார்கள். அந்தப் பூந்தியில் எறும்பு வந்து மொய்த்துக் கொள்ளுமோ என்ற ஐயம் விருந்து செய்யும் தலைவருக்கு உண்டாயிற்று. உடனே அங்கே இருந்த ஒரு பெரியவர் ஒரு தந்திரம் செய்தார். கொஞ்சம் சருக்கரையைக் கொண்டு வந்து பூந்திக் குவியலைச் சுற்றிச் சிறிது தூரம் விட்டு வட்டமாகத் தூவினார். எறும்புகள் வந்தன. அந்தச் சருக்கரையிலேயே நின்று மொய்த்திருந்தன. அதைத் தாண்டிப் பூந்திக் குவியலுக்குப் போகவில்லை. பூந்தியாகிய பெரிய பயனைப் பெறாமல் சர்க்கரையாகிய சிறிய பயனைப் பெற்று நின்றுவிட்டன.
மனிதனும் அப்படித்தான் இருக்கிறான். தான் பெறுகிற புலன் நுகர்ச்சியைப் பெரிதென்று எண்ணி அதனோடு நின்றுவிடுகிறான். இன்னும் சிலர் அறிவினால் ஆராயும் ஆராய்ச்சியில் ஏற்படுகிற இன்பக் கிளுகிளுப்புக் கண்டு அதோடு நின்றுவிடுகிறார்கள். அவர்கள் எல்லாம் சின்ன எறும்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இறைவன் அருள்பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்தத் துறையில் எண்ணியும் பேசியும் செயல் செய்தும் வாழ்கிறவர்களே சிறந்த நன்மையை அடைவார்கள். இறைவனை வணங்கித் துதித்து அவனுடைய திருவருளைப் பெறுகிறவர்களே மனிதப் பிறவியில் பெரிய பயனை அடைவார்கள். அத்தகைய மனிதர்களோடு இணங்க வேண்டுமென்று அறியாது, இறைவனை வணங்கித் துதிக்க அறியாதவரோடு இணங்கிப் பயன் இல்லை. இவர்களுடன் இணங்குவதால் நம்மிடத்தே இயல்பாக உள்ள தீக்குணங்கள் அல்லாமல், புதிய தீயகுணமும் வந்து சேரும்.
இறைவனை வணங்காமலும் துதிக்காமலும் இருக்கிறவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுடன் இணங்குவது கூடாது என்கிறார் அருணகிரிநாதர். நூல்களை எல்லாம் ஆராய்ந்திருந்தாலும், தத்துவங்களை அறிந்திருந்தாலும், பல பெரிய மனிதர்களை அறிந்திருந்தாலும், எத்தனை பண்பாடு இருந்தாலும், இறைவனுடைய அன்புப் பிணைப்பு இல்லாத இடத்து, அவர்கள் திருமங்கல்யம் இல்லாத அழகியைப் போன்றோர் என்றே சொல்ல வேண்டும். "இந்த நிலையில் இருக்கிற என்னைக் காக்க வேண்டும்' என்று முருகப் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிறார் அருணகிரிநாதர்.
மல சம்பந்தத்தினால் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுடைய இடரைப் போக்குகிறவன் முருகன். அவன் நிர்மலன். "குணம் கெட்டதுட்டனாகிய என்னை, நிர்மலன் ஆகிய நீ ஈடேற்ற வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொள்கிறார். முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வேலாயுதத்தை வைத்திருக்கிறார். அது ஞானத்தின் அடையாளம். அது ஞானவெற்றியைத் தருகின்ற விக்கிரம வேலாயுதம். வேல் புகுந்த இடத்தில் தோல்வி என்பது சிறிதும் இராது.
அசுரர்களைப் போர்க்களத்தில் அந்த வேலாயுதம் கொன்றது. அசுரர்கள் ஊனை உணவாக உடையவர்கள். ‘பிசிதர்' என்று அருணகிரிநாதர் சொல்லுகிறார். அவர்கள் ஊனை உண்பவர்கள் ஊனை உண்ணும் வாயிலிருந்து நிணம் கக்குகிறது. வேல் அவர்களுடைய வாய்களை இரத்தமும் ஊனும் கக்கும்படி செய்கிறது. ஊன் உண்ணுகிற அசுரர்களை, 'பிசிதர்' என்கிறார் அருணகிரிநாதர். தாம் உண்ட ஊன் உணவைக் கக்குவது போல, வேல், அவர்களது வாயைக் கிழித்துப் புண்படுத்தி நிணத்தைக் கக்கும்படி செய்கிறது. அவர்கள் உடம்பு சிதைந்து, குலைந்து போர்க்களத்தில் வீழ்ந்தமையால் பலருக்குக் கொண்டாட்டம். பிறரைக் கொன்று கொண்டாடி வந்த அசுரர்கள், உயிர்விட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறார்கள், அவர்களுடைய திண்ணடாட்டத்தால் உலகில் உள்ள உயிர்கள் கொண்டாட்டம் அடைகின்றன.
போர்க்களத்தில் அசுரர்களுடைய உடல்கள் துண்டு பட்டுக் கிடக்கின்றன, சாமானிய உடல்போல் இல்லாமல் மலைபோல் இருக்கிற அசுரர்கள் பிணமாகக் கிடக்கிறார்கள். மயானத்தில் காக்கையும் கழுகும் வந்து ஊனைக் கொத்தித் தின்னும். பிணம் உள்ள இடத்தில் அவை விருந்து அயரும். காக்கையும் கழுகும் பந்தலிட்டுப் பறக்கின்றன. நான் முந்தி, நீ முந்தி என்று பிணங்குகின்றன, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அசுரர்களுடைய பிணங்கள் கிடப்பதனால் எங்கே பார்த்தாலும் பந்தல் போட்டது போலக் காக்கையும் கழுகும் இணைந்து பறக்கின்றன. பேய்கள் சேர்ந்து கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடுகின்றன. பேய்கள் வைரவருடைய சாபத்தால் உணவு இல்லாமல் வாடுபவை. உயிரோடு இருப்பவர்கள் உடலை உண்ணக் கூடாது என்பது அவர்களுக்கு இட்ட கட்டளை. ஆகையால், போர்க்களத்தில் இறந்தவர்களை உண்பதற்காக அவை தேடிக்கொண்டிருக்கும். போர் நடக்கிறது என்றால் பேய்களுக்குத்தான் முதலில் கொண்டாட்டம்.
இங்கே அலகைகள் எல்லாம் துணங்கை ஆடுகின்றன. துணங்கை என்பது கைகளைக் கோர்த்துக்கொண்டு சுற்றிச் சுற்றி ஆடுகிற ஒருவகையான ஆட்டம். போர்க்களத்தில் கிடந்த அசுரர்களுடைய உடல்களைத் தின்று வயிறு தடித்து பேய்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. பலகாலம் பட்டினி கிடந்து, போதிய உணவு எங்கே கிடைக்கப் போகின்றது என்று வாடி நின்றவை அவை. இப்போது தம் அளவுக்கு மிஞ்சி விருந்து உண்டு துணங்கை ஆடுகின்றன. மேலே கொடியும், கழுகும் இணைந்து பந்தல் போட, அந்தப் பந்தலின் கீழே கைகோத்து நடமாடி முருகப் பெருமானை வாழ்த்துகின்றன. அந்தப் பேய்கள். திருமுருகாற்றுப் படையில் முருகன் சூரனோடு போர் செய்ததால் பேய்மகள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்கிறார் நக்கீரர்.
“உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதிய ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறல்களம் பாடித் தோள்பெயரா
நினம்தின் வாயள் துணங்கை துங்க."
கொடியும் கழுகும் தம்முள் போராடிப் பிணங்கிப் போட்டி போட்டு ஊனை ஈர்க்கின்றன. அலகைகள் தமக்கு வேண்டிய உணவை உண்டு கைகோத்து ஆடுகின்றன. இவ்வாறு அசுரர்கள் போர்க்களத்தில் படும்படியாக வெற்றிவேலை விடுத்தார் முருகப் பெருமான். “துட்டர்களாகிய அசுரக் கூட்டங்களை வேலாயுதத்தால் அழித்து வெற்றி கண்ட நிர்மலனே! துட்டன் ஆகிய என்னை, என்பாலுள்ள தீய பண்புகளை எல்லாம் மாற்றி ஈடேற்ற வேண்டும்” என்று இந்தப் பாட்டில் வேண்டிக் கொள்கிறார் அருணகிரிநாதர்.
“வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக்
குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்! கொடியும் கழுகும்
பிணங்க, துணங்கை அலகை கொண்டாட, பிசிதர்தம்வாய்
நிணம்கக்க விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே!” -- கந்தர் அலங்காரம்.
காக்கையும் கழுகும் ஒன்றனோடு ஒன்று போட்டி போடவும், பேய்கள் துணங்கைக் கூத்து ஆடவும், ஊன் உணவை உடைய அசுரர்களின் வாய்கள் நிணத்தைக் கக்கவும் வெற்றிவேற்படையை விடுத்து அருளிய மலமற்ற தூய முருகப் பெருமானே! தேவரீரை உடம்பால் வணங்கி, வாயினால் புகழந்து அறியாத துட்டர்களுடன் பொருந்தி இருந்து, குணம் கெட்டுப்போன தீயவனாகிய அடியேனை நற்கதி அடையும்படி செய்தருள்வாய்:
No comments:
Post a Comment