நூலின் பயன்

வன்னமயில் எறிவரு வேலாயு தக்கடவுள்

     மலைமேல் உகந்தமுருகன்

வள்ளிக் கொடிக்கினிய வேங்கைமரம் ஆகினோன்

     வானவர்கள் சேனாபதி


கன்னல்மொழி உமையாள் திருப்புதல்வன் அரன்மகன்

     கங்கைபெற் றருள்புத்திரன்

கணபதிக் கிளையஒரு மெய்ஞ்ஞான தேசிகக்

     கடவுள்ஆ வினன் குடியினான்


பன்னரிய புல்வயலில் வானகும ரேசன்மேல்

     பரிந்துகுரு பாததாசன்

பாங்கான தமிழாசி ரியவிருத் தத்தின்அறை

     பாடலொரு நூறும்நாடி


நன்னயம தாகவே படித்தபேர் கேட்டபேர்

     நாள்தொறும் கற்றபேர்கள்

ஞானயோ கம்பெறுவர் பதவியா வும்பெறுவர்

     நன்முத்தி வும்பெறுவரே.


இதன் பொருள் ---


வன்ன மயில் ஏறி வரு வேலாயுதக் கடவுள் - அழகிய மயிலின்மேல் எழுந்தருளும் வேலாயுதம் ஏந்திய பெருமான், மலைமேல் உகந்த முருகன் - மலைகளில் வாழ்வதை விரும்பிய முருகன், வள்ளிக்கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் – பூங்கொடி போன்ற வள்ளியம்மையாரை மணக்க அழகிய வேங்கைமரம் ஆகி நின்றவன், வானவர்கள் சேனாபதி - அமரர் படைத்தலைவன், கன்னல்மொழி உமையாள் திருப்புதல்வன் – கரும்பைப் போன்ற மொழியை உடைய உமையம்மையாரின் திருமகன், அரன்மகன் - அரனார் திருமகன், கங்கை பெற்றருள் புத்திரன் - கங்கையின் திருப்புதல்வன், கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிகன் – மூத்த பிள்ளையாருக்குப் பின் பிறந்த ஒப்பற்ற மெய்ஞ்ஞான குருநாதன், ஆவினன் குடியினான் - ஆவினன் குடியில் வாழ்வோன், பன்னரிய புல்வயலில் வால குமரேசன்மேல் - (ஆகிய) புகழ்தற்கு அடங்காத திருப்புல்வயலில் வாழும் பால குமரக்கடவுள் திருவடிக்கு, பரிந்து - விரும்பிய, பாங்கான தமிழ் ஆசிரிய விருத்தத்தின் - அழகிய தமிழில் ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத்தால், குருபாததாசன் அறைபாடல் ஒருநூறும் - குருபாததாசன் என்னும் அடியேன் பகர்ந்த நூறு செய்யுளையும், நாடி நன்னயமதாகவே படித்த பேர் - ஆராய்ந்து விருப்பத்துடன் படித்தவர்களும், கேட்ட பேர் - கேட்டவர்களும், நாள் தொறும் கற்றபேர்கள் - ஒவ்வொரு நாளும் பிழையறப் படித்து அறிந்தவர்களும், ஞானயோகம் பெறுவர் - ஞானத்தை நல்கும் யோகத்தை அடைவார்கள்; பதவி யாவும் பெறுவர் - எல்லாப் பதவிகளையும் அடைவார்கள்; நன்முத்தியும் பெறுவர் - நல்ல வீடுபேற்றையும் அடைவார்கள்.


No comments:

Post a Comment

52. பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போசனம் செய்யலாமா?

  “சுற்றமாய் நெருங்கியுள்ளார், தனையடைந்தார்,      கற்றறிந்தார், துணைவேறு இல்லார், உற்றவே தியர்,பெரியோர்க்கு உதவியன்றிப்      பிறர்க்குதவும் ...