ஈகைச் சிறப்பு
-----
உலக வாழ்வு ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பதாலும், ஒருவரிடம் உள்ள பொருளை அது இல்லாதோருக்குப் பரிமாறிக் கொள்வதாலும் நடைபெறுகின்றது. காரணம், உலகில் உள்ளவர், இல்லாதவர் என்ற ஏற்றத்தாழ்வு நிலைத்து இருப்பதே ஆகும். இந்த ஏற்றத் தாழ்வு இல்லாது நீங்க வேண்டுமானால், வளமாக வாழ்கின்ற மனிதன், வளமாக இல்லாத மற்றவர்க்குத் தன்னிடம் உள்ளதை கொடுத்து வாழ்கின்ற, பரிமாறிக் கொள்கின்ற அறத்தினை மேற்கொள்ள வேண்டும். இல்லாதவன், உள்ளவனை நாடி, வாழ்வுக்கு வேண்டியவற்றை இரந்து நிற்றல் உலக இயல்பு. இல்லை என்று ஒருவன் வந்து இரந்து கேட்கும் வேளையில், உள்ளவன் இல்லை என்னாது, தன்னால் கூடிய வரையில் உதவி செய்து வாழ்வதே கடமை. இந்தக் கடமை உணர்வை வற்புறுத்தவே திருவள்ளுவ நாயனார் பத்துத் திருக்குறட்பாக்களை அமைத்துள்ளார். பொருள் படைத்தவன், தன்னை நாடி வருகின்றவர்க்கு எல்லாம் வரையாது வாரிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் பொருள் வற்றி அவனும் இல்லாதவனாகி விடுவானே என்ற ஐயமும், அச்சமும் தோன்றும். ஐயப்பட வேண்டியதில்லை, அச்சப்பட வேண்டியது இல்லை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுகின்றார்.
“பாத்தூண்மரீஇ யவனைப் பசி என்னும்
தீப்பிணி தீண்டல் அரிது” — திருக்குறள்.
உலகில் எத்தனையோ வகையான இன்பங்கள் உள்ளன. திருவள்ளுவ நாயனார், உள்ளவன் இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவதால் உண்டாகும் இன்பத்தைப் பெரிதாகக் காட்டுகின்றார். பொருள் இல்லார்க்கு இல்வுலக இன்பம் இல்லை என்பது எப்படி உண்மையோ, அப்படியே பொருள் உள்ளவனும், அப்பொருள் தனக்கு மட்டும் உரியதும் அல்ல, தன்னிடத்து நிலையாக இருப்பதும் அல்ல என்பதைப் பலவகையில் சுட்டிக்காட்டி, கொடுத்து மகிழும் இன்பமும், செல்வத்தால் பெறக் கூடிய இன்பமே எனக் காட்டுகிறார்.
“ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்? தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கண்ணவர்” — திருக்குறள்.
இதையே நக்கீரதேவ நாயனாரும் வலியுறுத்துகிறார். இறைவன் திருவருள் நிரம்பப் பெற்றவரும், புலமையில் சிறந்தவருமான நக்கீரதேவர், மலையும் காடும் நாடும் கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும் மக்கள் பலருடைய முயற்சி முழுவதையும் நோக்கினார். எல்லாருடைய உள்ளமும் பொருளை ஈட்டுவதிலேயே பெரிதும் ஆர்வம் கொண்டு இயங்குவது தெரிந்தது. நாட்டுக்குத் தலைவனாக உள்ளவனும், அவனது தொழிலைப் புரிகின்றான். காடுகளில் வாழும் விலங்குகளை வேட்டையாடித் திரியும் வேட்டுவரும் இரவும் பகலும் தமக்குரிய விலங்குகளை வேட்டையாடுவதையே எண்ணி முயல்கின்றனர். இவர்களது உழைப்பின் முடிவு, அனைவர்க்கும் வேண்டுவன உணவும் உடையுமே என்றும், அவற்றுள் உண்பது நாழியும், உடுப்பவை இரண்டும் என்றும், பிறவற்றில் வேற்றுமை ஏதும் இல்லை என்று தெளிந்தார்.
மனிதனுக்கு எப்போதுமே தேவை சிறிதும், ஈட்டுவன பெரிதுமாக இருக்கிறது. தேவைக்குப் போக எஞ்சியுள்ள செல்வத்தால் என்ன பயன் என்று ஆராய்ந்தால், பிறர்க்குக் கொடுத்து உதவுதல் ஆகிய அறம் ஒன்றே. உயிர்க்குத் துணையாக எப்பிறவியிலும் வருகின்ற அந்த அறத்தைச் செய்யாது, பொருளைத் தாமே அனுபவிக்கலாம் என்று எண்ணுகின்ற எல்லோரும் அந்த வாய்ப்பை இழந்தவர்களாகவே உள்ளனர். இதை உலகோர்க்கு உணர்த்த, பின்வரும் பாடலைப் பாடினார்.
“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.” — புறநானூறு.
இதன் பொருள் ---
தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டுள்ள இந்த உலகில், ‘எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது’ என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த பெருவேந்தர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவிலும் கண் விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது, உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு தரப்பினர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து மகிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.
செல்வர்கள் தம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கும் - வறியவர்க்கும் கொடுக்கக் கடமைப்பட்டவர். அப்படி ஈயாதவர் கொடியவர் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். கொடுத்து, அதனால் பெறும் இன்பத்தை அறியாதவர்களாக இருக்கின்றார்களே என்றும் இரங்குகின்றார். அக் கொடியவர்களிடமும் பொருளானது தங்காது என்பதை, “வைத்து இழக்கும்” என்று காட்டுகிறார். இவ்வாறு இழந்து அதனால் வாடுவதைக் காட்டிலும், கொடுத்து, அதைப் பெற்ற வறியவர் கொள்ளும் பெருமகிழ்ச்சியினைக் கண்டு, தாம் இன்புறுதல் சாலச் சிறந்தது.
திருவள்ளுவ நாயனார் இந்த ஈகையினைப் பற்றி மற்றொன்றும் சொல்கிறார். சிறிதளவு பொருள் கொடுத்துவிட்டு, பெரிதளவு புகழ் பெற நினைக்கின்ற மக்கள் வாழ்வதை நாம் காண்கின்றோம். ஒரு சிறு உதவி செய்தாலும் அதைக் கல்லிலேயோ, வேறு சொல்லிலேயோ அல்லது ஒரு நூலிலேயோ எழுதித் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்றவர் நாட்டில் பலர் உள்ளனர். திருவள்ளுவ நாயனார் காலத்திலும் அத்தகையோர் பலர் வாழ்ந்திருக்கக் கூடும். எனவேதான், கொடுத்தலாகிய ஈகை எவ்வாறு அமையவேண்டும் எனத் திட்டவட்டமாகக் காட்டுகின்றார்.
“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்,
குலன் உடையான் கண்ணே உள”
என்னும் திருக்குறள், கொடுப்பது எவ்வாறு அமையவேண்டும் என்பதை நன்கு விளக்குகின்றது. ‘உதவி நாடி வருபவர் இல்லை என்று கேட்பதற்குமுன், அவரது குறிப்பறிந்து கொடுப்பது எனவும், அவர் மற்றொருவரிடம் சென்று மறுபடியும் கேளாத அளவுக்கு மிகுதியாகக் கொடுப்பது எனவும், தான் உடையவனாய் இருந்தும், இல்லை என்று சொல்லாது கொடுப்பது' எனவும் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். ‘பொருள் கேடடு வருபவர் இல்லை என்று சொன்னார்; அவருக்கு நான் நிரம்பக் கொடுத்தேன்' என்று தன் கொடைப் பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளாது கொடுப்பது என்பதே பரிமேலழகர் கண்ட பொருள். அவ்வாறு கொடுப்பவனையே ‘குலன் உடையான்' என நாயனார் குறிக்கின்றார். இன்று வீண் பெருமையில் வாழும் பலருக்கு இந்த அறிவுரை நல்ல கதியைப் பெற வழிகாட்டும். 'உன் வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாது இருக்கட்டும்' என்ற விவிலிய நூலின் வாய்மொழியும் இங்கு எண்ணத் தக்கது. திருவள்ளுவ நாயனார் கருத்து, ஈதல் என்பது கடமையாக அமைய வேண்டும், வெறும் புகழுக்காகவும் பிறவற்றிற்காகவும் அமைதல் கூடாது என்பதே ஆகும்.
இரத்தல் கொடியதுதான். அதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இரக்கின்றவன் தன் இழிநிலையைச் சொல்லிக் காட்டி, ஏதேனும் பெற ஏங்கி நிற்பதைக் காணலாம். ஆனால், திருவள்ளுவ நாயனார் அதனினும் கொடியது ஒன்றையும், இனியது ஒன்றையும் காட்டி, கட்டிக் காக்கும் பொருளை மற்றவர்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறார்.
“இரத்தலின் இன்னாது மன்ற, நிரப்பிய
தாமே தமியர் உணல்”
என்ற திருக்குறளின் வழியே இரத்தலை விடவும், ஈட்டிய பொருளைத் தாமே அனுபவிப்போம் என்று எண்ணுவது மிகக் கொடுமையானது என்று உணர்த்துகிறார். “ஆரா இ\ற்கை அவா” என்று நாயனார் பிறிதொரு திருக்குறள் மூலம் உணர்த்தி அருளியதைக் கருத்தில் கொள்ளுதல் அவசியம். ஆராத என்றால் நிரம்பாத என்று பொருள். பெற்றும் நிரம்பாமை, பெறாத்தால் நிரம்பாமை என்று பொருள் கொள்ளலாம்.
“ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” என்கிறார் திருமூல நாயனார். ஆனால், ஆசை யாரையும் விட்டபாடு இல்லை. “ஆசையும் அன்பும் அறுமின், அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாகுமே” என்றும் அறிவுறுத்துகிறார் திருமூல நாயனார். உயிரல்லாத பொருள்கள் மேல் செலுத்தும் ஆசையையும், உயிர்ப் பொருள்கள் மேல் செலுத்தும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் இறை நிலையை அடைதல் எளிதாகும் என்கிறார் திருமூலர்.“ஆசைக்கு ஓர் அளவில்லை” என்ற தாயுமானாரின் அருள்வாக்கின்படிக்கு, பொருள் உள்ளவன் மேலும் மேலும் சேர்க்க, எண்ணி எண்ணி, பிறரை வருத்தியும், வஞ்சித்தும் பொருள் பெருக்குவதை இன்றும் காண்கிறோம். கள்ளச் சந்தை, கறுப்புப் பணம் பற்றிக் கேள்விப் படாதவர் இல்லை. அவர்களுக்கு நல்ல உணவு இல்லை. உறக்கம் இல்லை. உண்ட உணவு சீரணிக்காமல் உண்ணும் மருந்துதான் அதிகம். செல்வம் என்பது அல்லலைத் தரும் என்பதால், “செல்வம் என்னும் அல்லில் பிழைத்தும்” என்கிறார் மணிவாசகப் பெருமான்.
“ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம், - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம், துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.” — நாலடியார்.
இதன் பொருள் —
பொருள் திரட்டுதலும் துன்பம்; திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்; அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள் தன் அளவில் குறைந்து போகுமாயின் துன்பமே; இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம். ஆதலால், பொருள் துன்பங்கள் எல்லாவற்றிற்கும் தங்குமிடம் பொருளே ஆகும்.
எனவே, துன்பங்களுக்கு உறைவிடமாய் உள்ள பொருளைப் பயன்படுத்தும் முறையினை அறிந்து வழங்குதலே அறிவுடைமை ஆகும்.
“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே
பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது
அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால்
இழத்தலே துன்பமேயாம்.” — நீதிவெண்பா.
இதன் பொருள் ---
துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம். அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே. அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.
இவ்வாறு உள்ளத் துன்பமும், உடல் துன்பமும் அடைகின்ற பொருளாளனைக் காட்டிலும், உணவில்லாது - தேவை கிட்டாது வாடும் ஏழை எத்துணையோ மேலானவன்.
இத்துடன் நிற்காது, திருவள்ளுவ நாயனார் மற்றொன்றினையும் பெருஞ்செல்வம் படைத்தவர்க்கு உணர்த்துகிறார். மரணத்தைப் பற்றி அஞ்சாதவர் யாரும் இல்லை. ஆனாலும், செல்வம் படைத்தவன் மிகவும் அஞ்சுவான். அவனைப் பார்த்துத் திருவள்ளுவ நாயனார், “நீ வைத்துக் கொண்டிருப்பதை, உன்னிடம் மிகுதியாக உள்ளதை மற்றவருக்கும் கொடுக்காது மறைக்கும்போது, உனக்கு மரணமே இனிமையாகும்” என்று அறிவுறுத்துகிறார்.
“சாதலின் இன்னாதது இல்லை, இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை”
என்பது அவர் அருள்வாக்கு. ஈட்டிய பொருளை இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழாமல் வாழ்வதை விட, செத்துப் போவது நல்லது. கொடுமையான மரணத்திற்கு அஞ்சும் செல்வந்தன், அதனினும் கொடுமையான மற்றொன்றில் புகுந்து தன்னையும் கெடுத்து, சமுதாயத்தையும் அழித்து, கடைசியில் அந்த மரணத்தின் வாயில் வேதனையோடு புகவேண்டிய மிகக் கொடிய நிலை உண்டாகிறது. எனவே, பொருளாதாரச் சமத்துவத்தை நிலைநாட்டும் நல்வழியைத் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார். இந்த உண்மை மக்களால் உணரப் பெறுமானால், பதுக்கலும், கொள்ளையும், கலப்படமும், கள்ளச் சந்தையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் நாட்டில் நீங்கி, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற, தனிமனித வாழ்வும், சமுதாய வாழ்வும் நலமுற்று விளங்கும்.
No comments:
Post a Comment