அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உம்பரார் அமுது (பொது)
முருகா!
காமக் கடலினின்றும் முத்திக் கரை சேரத் திருவருள் புரிவாய்.
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ...... தனதான
உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
டுண்டுமே கலைகழன் ...... றயலாக
உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத்
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன்
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக்
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உம்பர் ஆர் அமுது எனும் தொண்டைவாய் அமுதம்உண்டு,
உண்டு, மேகலை கழன்று, ...... அயலாக,
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி, அன்பு
ஒன்று இலாரொடு துவண்டு, ...... அணைமீதே
செம்பொன்ஆர் குடம் எனும் கொங்கை, ஆபரணமும்
சிந்த, வாள் விழி சிவந்து, ...... அமர் ஆடத்
திங்கள் வேர்வு உற அணைந்து, இன்ப வாரியில் விழும்
சிந்தையேன் என விதம் ...... கரைசேர்வேன்?
கொம்புநால் உடைய வெண் கம்ப மால் கிரிவரும்
கொண்டல் ப்லோமசையள் சங்க் ...... ரம, பாரக்
கும்பமால் வரைபொருந்து, இந்த்ர பூபதி தரும்
கொண்டல் ஆனையை மணம் ...... செயும்வீரா!
அம்பு ராசியும் நெடும் குன்றும், மாமரமும் அன்று
அஞ்ச, வானவர் உறும் ...... சிறைமீள,
அங்க நான் மறைசொலும் பங்கயாசனம் இருந்து,
அங்கை வேல் உற விடும் ...... பெருமாளே.
பதவுரை
கொம்பு நால் உடைய --- நான்கு தந்தங்களைக் கொண்டதும்
வெண் கம்ப மால் கிரி வரும் கொண்டல் --- வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனனும்,
புலோமசையள் சங்க்ரம பார கும்ப மால் வரை பொருந்து இந்த்ர பூபதி தரும் --- புலோமசை எனப்படும் இந்திராணியின் மிக்கு எழுந்து, கனத்து குடத்தைப் போன்றும், பெரிய மலையினைப் போன்றும் உள்ள தனங்களை அணைகின்ற இந்திரனின் யானை வளர்த்த,
கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா --- மேகத்தைப் போன்று அருள்மிக்கவர் ஆகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வீரரே!
அம்புராசியும் --- பெரிய கடலும்,
நெடும் குன்றும் --- நெடிய கிரவுஞ்ச மலையும்,
மா மரமும் அன்று அஞ்ச --- மாமரமாய் நின்ற சூரபதுமனும் அச்சம் கொள்ளவும்,
வானவர் உறும் சிறை மீள --- தேளவர்கள் தாங்கள் அடைபட்டு இருந்த சிறையினின்றும் வெளியேறவும்,
அங்க நான்மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து --- ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் உபதேசித்து அருள்கின்ற பதும ஆசனத்தில் வீற்றிருந்து,
அம் கை வேல் உற விடும் பெருமாளே --- அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
அணை மீதே --- படுக்கையில் கிடந்து,
உம்பர் ஆர் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு --- தேவர்கள் உண்ணுகின்ற அமுதம் போன்றது என்று எண்ணி, பொதுமகளிரின் கொவ்வைப் பழம் போலச் சிவந்த வாயில் ஊறுகின்ற எச்சிலைப் பருகிப் பருகி,
மேகலை கழன்று அயலாக --- இடையில் உள்ள ஆடை விலகி விழ,
உந்தி வாவியில் விழுந்து --- கொப்பூழ் ஆகிய குளத்தில் விழுந்து,
இன்பமா(க) முழுகி –-- சுகமாக அழுந்தி அனுபவித்து,
அன்பு ஒன்று இலாரொடு துவண்டு --- அன்பு என்பது இல்லாத பொதுமகளிரோடு கலந்து சோர்வுற்று,
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த --- அழகிய பொன்னால் ஆன குடம் போன்று உள்ள முலைகளின் மீது தரித்துள்ள அணிகலன்கள் கழல,
வாள் விழி சிவந்து அமராட --- ஒளி பொருந்திய கண்கள் செந்நிறம் கொண்டு கலவிப் போரில் ஈடுபட,
திங்கள் வேர்வு உற அணைந்து --- திங்களைப் போன்ற முகத்தில் வியர்வை அரும்பத் தழுவி,
இன்ப வாரியில் விழும் சிந்தையேன் --- கலவி இன்பமாகிய கடலிலே விழுவதையே கருத்தாகக் கொண்ட அடியேன்,
எ(ன்)ன விதம் கரை சேர்வேன் --- எந்த விதத்தில் காமக் கடலிலே இருந்து நற்கதி ஆகிய கரையைச் சேர்வேன்?
பொழிப்புரை
நான்கு தந்தங்களைக் கொண்டதும், வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதம் என்னும் வெள்ளையானையின் மீது வரும் மேகவாகனனும், புலோமசை எனப்படும் இந்திராணியின் மிக்கு எழுந்து, கனத்து குடத்தைப் போன்றும், பெரிய மலையினைப் போன்றும் உள்ள தனங்களை அணைகின்ற இந்திரனின் யானை வளர்த்த, மேகத்தைப் போன்று அருள்மிக்கவர் ஆகிய தேவயானை அம்மையைத் திருமணம் புணர்ந்த வீரரே!
பெரிய கடலும், நெடிய கிரவுஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரபதுமனும் அச்சம் கொள்ளவும், தேவர்கள் தாங்கள் அடைபட்டு இருந்த சிறையினின்றும் வெளியேறவும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் உபதேசித்து அருள்கின்ற பதும ஆசனத்தில் வீற்றிருந்து, அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
படுக்கையில் கிடந்து, தேவர்கள் உண்ணுகின்ற அமுதம் போன்றது என்று எண்ணி, பொதுமகளிரின் கொவ்வைப் பழம் போலச் சிவந்த வாயில் ஊறுகின்ற எச்சிலைப் பருகிப் பருகி, இடையில் உள்ள ஆடை விலகி விழ, கொப்பூழ் ஆகிய குளத்தில் விழுந்து, சுகமாக அழுந்தி அனுபவித்து, அன்பு என்பது இல்லாத பொதுமகளிரோடு கலந்து சோர்வுற்று, அழகிய பொன்னால் ஆன குடம் போன்று உள்ள முலைகளின் மீது தரித்துள்ள அணிகலன்கள் கழல, ஒளி பொருந்திய கண்கள் சிவக்க, கலவிப் போரில் ஈடுபட்டு, திங்களைப் போன்ற முகத்தில் வியர்வை அரும்பத் தழுவி, கலவி இன்பமாகிய கடலிலே விழுவதையே கருத்தாகக் கொண்ட அடியேன், எந்த விதத்தில் காமக் கடலிலே இருந்து நற்கதி ஆகிய கரையைச் சேர்வேன்?
விரிவுரை
உம்பர் ஆர் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு ---
இனிமையாகவும், மென்மையாகவும் பேசும் இயல்பை உடைவயர்கள் பெண்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார் திருவள்ளுவ நாயனார். பால் சுவை மிக்கது. தேனும் சுவை மிக்கது. இரண்டுமே நன்மை பயப்பவை. பாலும் தேனும் கலந்த போது, அந்தக் கலவையின் சுவையானது இன்னது என்று அறியலாகாத இனியதொரு சுவையை உடையது. அதுபோல இன்னது என்று அறிய முடியாத இன்பம் தருகின்ற இனிய மொழியை உடையவள் ஆகிய தலைவியின் காதல் சிறப்பை உரைத்தது இத் திருக்குறள். பணிவுடைய சொல் என்பதால், பணிமொழி என்று நாயனார் காட்டிய நயத்தையும் எண்ணுக. இது பெண்மக்களின் இயல்பு. அன்பு மிகுந்தபோது, தலைவியின் வாழிதழில் ஊறும் எச்சிலைத் தலைவன் சுவைப்பான்.
அது போலவே, விலைமாதர்களின் இதழூறலைக் காம வயப்பட்டவர்கள், பால் என்றும் அரிய அமுதம் என்றும், கற்கண்டு என்றும், தேன் என்றும் கூறி மகிழ்வர். தம்பால் வரும் ஆடவரை மயக்குவதே தொழிலாக உடையதால், இனிமையாகவும் மென்மையாகவும் பேசுவதில் தேர்ந்தவர்கள் விலைமாதர்கள்.
இதழூறலைப் பற்றி, இத் திருப்புகழில் அடிகளார், அமுதத்தினை மிகவும் விட்டு, அதில் மாம்பழச் சாற்றினைக் கலந்து, பாலையும், தேனையும் கூட்டி, இனிய கற்கண்டையும் விரவியது போன்ற இனுமையைத் தருகின்ற இதழூறல் என்று காட்டி இருப்பது காண்க.
இனிமைக்குச் சிறப்புச் சேர்க்க இவ்வாறு கூறினார்.
இறையின்பமானது எப்படி இனிக்கும் என்பதை, வள்ளல் பெருமான் திருவருட்பாவில் காட்டி உள்ளார்.
தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,
தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தேங்கின்
தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,
இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,
அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,
அடிமலர்க்கு என்சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!
“எதிரும் புலவன் வில்லிதொழ
எந்தை உனக்குஅந் தாதிசொல்லி
ஏழைப்புலவர் செவிக்குருத்தோடு
எறியும் கருவி பறித்தெரிந்த,
அதிரும் கடல்சூழ் பெரும்புவியில்
அறிந்தார் அறியார் இரண்டுமில்லார்,
ஆரும் எனைப்போல் உனைத் துதிக்க
அளித்த, அருண கிரிநாதன்
உதிரும் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து, தேனை வடித்து
ஊற்றி, அமுதின் உடன்கூட்டி,
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரம் கனிந்த திருபுகழ்ப்பா
மாலை புனைந்தான் வருகவே!
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே!”
எனத் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல் காட்டி இருப்பதும் காண்க.
இறையருள் வயப்பட்டோர்க்கு உண்டாகும் இன்பத்தை இப் பாடல்கள் உணர்த்தி நின்றன. இந்த இன்பம் மேன்மையை அளிக்கும்.
ஆனால், காமவயப்பட்டோர்க்கு விலைமாதர் தரும் அதரபானமானது எப்படித் தித்திக்கும் என்பதை இப் பாடலில் அடிகளார் காட்டி, விலைமாதர் தரும் இன்பம் கேட்டினை அளிக்கும் என்பதை உணர்த்தினார்.
உந்தி வாவியில் விழுந்து ---
உந்தி – கொப்பூழ். வாவி – குளம்.
“உந்தி என்கின்ற மடு” என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.
ஆழமுள்ள மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணை அரிதோ, அத்துணை அரிது பொதுமாதரின் உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக் கரை சேர்வது.
“அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும்" ---(பழிப்பர்) திருப்புகழ்.
“பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக னென்று சேர்வேன்”. -- உரைதரு (திருப்புகழ்)
“அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்” --- திருவருட்பா.
இன்ப வாரியில் விழும் சிந்தையேன், எ(ன்)ன விதம் கரை சேர்வேன் ---
வாரிதி – கடல். காமத்தைக் கடலாக உருவகித்தார் அடிகாளர்.
“காமக் கடல் மன்னும் உண்டே, அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்.” -- திருக்குறள்.
“காமம்வீழ் இன்பக் கடலாமே, காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம், - ஏமத்தீண்டு
ஆம்பரலே தோன்றும் அளி, ஊடல் ஆம்பரலில்
தெற்றித் தெறிப்பாம் ஒளி,ஒளிபாய் கண்ணேசீர்த்து
உற்று உகப்பாய்ப் பெற்ற மகவு.” --- இன்னிலை.
காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும். காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும். அவ்வின்பத்தினின்று உண்டாகும் அன்பே முத்தாகும், அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம். காதலர் இருவர்க்கும் காமத்தின் அளவு குறைவு நிறைவின்றி என்றும் பெருகியிருப்பதால் காமத்தைக் கடல் என்றார். அலை வருவது போலப் புணர்ச்சி மேன்மேலும் நிகழ்வதால் அதனை அலை என்றார். காதலன் காதலியாகிய இருவரிடத்தும் புணர்ச்சி நிகழினும் ஒத்த அன்பு தோன்றுவது அருமையாதலால் அதனை முத்து என்றார்.
ஆழமாகிய பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ, அங்ஙனமே பொதுமாதரின் உந்தி என்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர முடியாது. அவர்கள் முருகப்பெருமானது தண்டை அணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி, அம் மடுவினின்றும் உய்ந்து முத்தி என்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது.
தன் நாயகனுக்கு மாத்திரம் இன்பம் அளிக்க அலங்காரம் பண்ணிக் கொள்ளும் பெண்ணின் அழகு பிறர் கண்களில் படாது. பிறர் கண்களில் படவேண்டும் என்றே தம்மை அலங்காரம் பண்ணிக் கொண்டு, ஆடவர் உள்ளங்களை மயக்கிக் கவரும் சித்திர மாதர்கள் உள்ளனர். அத்தகைய சித்திர மாதர் மேனி முழுவதும் வெங்காம சமுத்திரம் படர்ந்திருக்கிறது. அருணகிரிநாதர் இங்கே கற்புடைய பெண்களைக் குறிக்கவில்லை. பிறர் கண்ணில் பட்டும் மையல் செய்யாத கற்புடைய மங்கையர்களுடைய அழகு அவர்களுடைய கணவர்களுக்கு மட்டுமே குளிர்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும். கடல் பரவிக் கிடக்கின்றது என்றாலும் அதில் ஒரு துளியாவது மனிதனுடைய தாகத்தை அடக்காது. கடல் நீரைப் பருகப் பருகத் தாகந்தான் அதிகமாகும். அதைப்போல, காமத்தை அனுபவிக்க அனுபவிக்க மேலும் மேலும் தாகம் உண்டாகும். காமம் மேலும் வளரும். அந்தக் காமக்கடல் புறப் பார்வையில் படும்படியாகப் பொதுமாதர்களுடைய உறுப்புக்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தன் புறக் கண்களால் இந்த அழகைப் பார்த்து மனத்தை இழப்பவன், அக்கடலுள் மூழ்கித் துன்புறுகிறான். வாழ்நாளை வீணாக்கிக் கொண்டு ஆழ்ந்து போகிறான்.
சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். தெப்பம் ஏது? என்றால், "கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புணை என யான் கடந்தேன்" என்கின்றார் அருணகிரிநாதர். காமத்தை வெல்லக் காமத்தை வென்றவன்தான் வழி காட்ட முடியும். குறமகள் வள்ளியை நாடித் தேடிச்சென்று திருமணம் புணர்ந்த முருகப் பெருமான் திருவருள் என்னும் தெப்பம் தனக்குத் துணையாக வாய்த்தது என்கின்றார். வள்ளித் திருமணம் என்பது, காமத் திருமணம் அல்ல. அது ஞானத் திருமணம். பக்குவப் பட்ட ஆன்மாவைத் தேடிச் சென்று இறைவன் அருள் புரிந்த வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துவது அது. இறைவன் மாசு இல்லாத அடியார்களைத் தேடிச் சென்று ஆட்கொண்டு அருள்வான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில் வீரன்" என்று முருகப் பெருமானைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
கற்பில் சிறந்த பெண்களைக் காணும்போது காம உணர்வு தலைக் காட்டாது. ஆண்களுடைய பெயர்களுக்குப் பிறகு செட்டியார், ரெட்டியார், முதலியார், ஐயர் என்ற பட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் பெயர்களுக்குப் பின் எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் "அம்மாள்" என்ற பட்டமே உள்ளது. லட்சுமி அம்மாள், சரசுவதி அம்மாள், பாகீரதி அம்மாள் என்று எந்தப் பெண்மணியாக இருந்தாலும் அம்மாள் என்று அழைப்பதே வழக்கம். அண்ணன், தனது தங்கையை 'அம்மா' என்றே அழைக்கும் பாங்கும் இருந்தது. தந்தையும் தனது மகளை, 'அம்மா' என்றே அழைப்பார். மனைவியைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் அம்மாவே. காமத்தை வெல்ல வேண்டியவர்கள் உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பார்க்க வேண்டும். தாயாகப் பழக வேண்டும். தாயிடம் பேசுவது போலப் பேசவேண்டும். பெண்டாட்டி என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் பெண் என்பதுதான். அதற்கு இப்போது மனைவி என்ற பொருள் வந்துவிட்டது. மனைவி ஒருத்தியைத்தான் பெண்ணாகக் கண்டார்கள். மற்றவர்களைத் தாயாகப் பார்த்தார்கள்.
திருவள்ளுவர், பேராண்மை என்று சொல்கிறார். இதற்கு வீரம் என்றும் பொருள். மனிதன், அகவீரம், புறவீரம் என்று இரண்டு விதமான வீரம் உடையவன். உடம்பின் ஆற்றலால் தன்னை எதிர்க்கின்றவர்களோடு போராடி வெல்வது புறவீரம். அகவீரம் என்பது காமத்தை வெல்லும் வீரம். உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பாவித்து, தன் உள்ளத்தில் எழுகின்ற வெங்காமத்தைப் பொசுக்கி வெல்கின்ற வீரமே அகவீரம். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்" என்பார் ஔவைப் பிராட்டியார்.
அகப் பகையை வென்றவர்கள் முனிவர்கள். புறப் பகையை அடக்கும் ஆண்மை உடையவர்களுக்கும், வீரம் மிக்கவர்களுக்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குவது அருமை. புறப்பகையை அடக்க ஆண்மை வேண்டுமென்றால் அகப்பகையை அடக்கப் பேராண்மை வேண்டும். அகப்பகையை வென்றவர் மாபெரும் வீரர். திருவள்ளுவ நாயனார், "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்கின்றார்.
முருகப் பெருமான் திருவருளே புணையாக, கலங்காத திட சித்தத்தைக் கொண்டு, பொதுமார் இன்பம் என்னும் காமசமுத்திரத்தைக் கடந்து விட்டதாக அருணகிரிநாதர் பாடுகின்றார்.
“கடத்தில் குறத்தி பிரான்அருளால் கலங்காத சித்தத்
திடத்தில் புணைஎன யான்கடந் தேன்,சித்ர மாதர்அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.” --- கந்தரலங்காரம்.
கொம்பு நால் உடைய வெண் கம்ப மால் கிரி ---
நான்கு தந்தங்களைக் கொண்டதும், வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும் இந்திரனுடைய வெள்ளையானை.
கொண்டல் ---
கொண்டல் – மேகம். மேகத்தை வாகனமாக உடையவன் இந்திரன். எனவே, அவன் கொண்டல் எனப்பட்டான்.
புலோமசையள் ---
இந்திரன் தேவியான இந்திராணிக்கு புலோமசை என்று ஒரு பெயர் உண்டு.
ஆனையை மணம் செயும் வீரா ---
ஆனை – தேவயானை. தேவலோகத்தில் உள்ள இந்திரனின் யானையால் வளர்க்கப் பெற்றவர். ஆனையை மணந்தவர் என்பதால், முருகப் பெருமானை, “ஆனைதன் நாயக” என்று பிறிதொரு திருப்புகழில் போற்றினார் அடிகளார்.
அம்புராசி ---
பெரிய கடல்.
நெடும் குன்று ---
நெடிய மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது.
மாயைகள் பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும் விண்ணுலகுக்குச் சென்றது.
கிரவுஞ்ச மலை - வினைத்தொகுதி.
தாரகன் - மாயை.
சூரபதுமன் - ஆணவம்.
சிங்கமுகன் - கன்மம்.
கடல் - பிறவித் துன்பம்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார். "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!" -- திருப்பரங்குன்றத் திருப்புகழ்
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
வேல் - வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல்.
மா மரமும் அன்று அஞ்ச, வானவர் உறும் சிறை மீள அம் கை வேல் உற விடும் பெருமாளே ---
முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தான். ஆலகாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.
“நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.”
“தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.”
"எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருள் உருவம் அழிந்தது.
“ஏய் என முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீ அழல் சிகழி கான்று சென்றிட, அவுணன் கொண்ட
மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.”
அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவிலே ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
“திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்”. --- வேல் வகுப்பு.
சூரபதுமன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் நிழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு, ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரபதுமன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.
“புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே.”
சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபதுமன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
“தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.”
அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார்.
ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபதுமன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அது அவனது தவத்தின் பெருமை! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையை அளக்க வல்லார் யார்? ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
“மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்.”
“தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.”
இடுக்கண் தீர்ந்த இமையவர், முருகப்பெருமான் மீது பூமழை பொழிந்தனர். பாமலர் மொழிந்தனர். தேவர்கள் சிறை மீண்டனர்.
“வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! - மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!” --- கந்தர் கலிவெண்பா.
கருத்துரை
முருகா! காமக் கடலினின்றும் முத்திக் கரை சேரத் திருவருள் புரிவாய்.
No comments:
Post a Comment