52. தெரிந்து வினையாடல் - 06. செய்வானை நாடி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "செயலைச் செய்பவனை ஆராய்ந்து, செய்ய வேண்டிய செயலை ஆராய்ந்து, செய்யும் காலத்தோடு பொருந்த உணர்ந்து கொண்டு, செயலைச் செய்தல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

செய்பவனது இலக்கணத்தையும், செய்ய எண்ணிய செயலையும் நன்றாக ஆராய்ந்து, காலமும் கருதிச் செய்யவேண்டும். இவ்வித தன்மையை உடையவன், இந்தச் செயலைச் செய்வானாயின், இந்தக் காலத்தில், இந்த செயல் முடியும் என்று ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.“

இதற்குப் பரிமேலழகர் உரை ---

செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, 

வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, 

காலத்தொடு எய்த உணர்ந்து செயல் --- பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.

(செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)


    பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...


“பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்துஇல்லார்

உண்டார் அடிசிலே தோழரிற் - கொண்டாராய்

யாக்கைக்குத் தக்கவறி வில்லார்க் காப்படுப்பின்

காக்கைக்குக் காப்படுத்த சோறு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் ---


பண்டாரம் - பண்டாரத்துக்கு, பல்கணக்கு - பல கணக்குத் தொழிலுக்கும், கண்காணி - (பொருள்களைத் திருடு போகாமல் காக்கும்) மேற்பார்வைத் தொழிலுக்கும், இல்லார் - இல்லக் கிழத்திகளின் காவலுக்கும், பாத்து - பலபேர் பங்கிட்டு, உண்டு ஆர் - உண்டு வயிறு நிறைகின்ற, அடிசில் - உணவின் காவலுக்கும், யாக்கைக்கு - உடம்பு எடுத்ததற்கு, தக்க - தகுதியான அறிவு இல்லார் - மேலான அறிவில்லாதவர்களை, தோழனின் - தங்கள் நண்பர்களைப்போல, கொண்டாராய் --- மனத்துள் கொண்டவர்களாய், கா – காவல் தொழிலுக்கு, படுப்பின் - ஏற்படுத்தினால், (அவையெல்லாம் அவர்களிடத்து) காக்கைக்கு - காகத்துக்கு, காப்பு அடுத்த - தன் காவலில் சேர்ந்த, சோறு – சோறு போல ஆகும். (அதாவது அச் சோற்றைப் போலக் காவலாலேயே களவுபோம்.)


பண்டாரத்தினையும், பல் கணக்கினையும், கண்காணியையும், தனது இல்லத்தில் வாழும் மங்கையரையும், தனக்கு ஆக்கும் உணவினையும் பகுத்து, மக்கள் தன்மைக்குத் தக்க அறிவில்லாதாரையும் தன் தோழரைப் போலக் கொண்டு தேறிக் காக்காவிட்டால், அக்காவலானது, காக்கையைச் சோறு காக்க விட்டதனோடு ஒக்கும்.


“விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்

முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்

தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்

தட்டாமல் செல்லா துளி.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் - தொட்ட அளவில் மெலியும் தளிரின் மேலே நின்றதாயினும், உளி தட்டாமல் செல்லாது - உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத் தளிரை அறுத்துச் செல்லாது. (அதுபோல), கருமம் விட்டுச் செய வைத்த பின்னரும் - காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும், முட்டாது அவரை வியங்கொளல் வேண்டும் - இடையீடின்றி அவரை ஏவி ஆராய்தல் வேண்டும்.


நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும், இத்துடன் தமது பொறுப்புக் கழிந்தது என்று இராமல், அவரை அடிக்கடிக் கண்காணித்து ஊக்கப்படுத்துதல் வேண்டும்.


No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...