90. உளவன் இல்லாமல் ஊர் பாழாகாது

“குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்

     கூர்இரும் புகளைவெல்லும்

கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்

     கோத்திரம் எலாம் அழிக்கும்


நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து

     நண்ணுபற வைகளை ஆர்க்கும்

நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்

     நவில்சாதி தனையிழுக்கும்


உலவுநல் குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்

     டுற்றாரை யீடழிப்பர்

உளவன்இல் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்

     உலகமொழி நிசம் அல்லவோ


வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட

     மதயானை தன்சோதரா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் –


வலமாக வந்து அரனிடத்தில் கனிகொண்ட மதயானைதன் சோதரா - அரனை வலமாகச் சுற்றிவந்து அவரிடம் மாங்கனிநினைப் பெற்ற மூத்த பிள்ளையார் ஆகிய விநாயகரின் தம்பியாகிய இளைய பிள்ளையாரே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய்க் கூர் இரும்புகளை வெல்லும் - (இரும்பின்) குலமான சம்மட்டியும் குறடும் (கொல்லன்) கைக்குத் துணைபுரிந்து மிகுதியான இரும்புகளை அடக்கும்; 


கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன் கோத்திரம் எலாம் அழிக்கும் – இரும்பால் ஆன கோடரியின் உள்ளே மரமானது (காம்பாகச்) சேர்ந்து இருந்து, தன் மரபான மரங்களை ஒழிக்கும்; 


நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் - அழகான பார்வைக்குருவி (தன்னைப் பார்த்து) வந்து அருகில் அமரும் பறவைகளைக் கட்டுப்படுத்தும்; 


நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று நவில் தன் சாதிதனை இழுக்கும் - அன்புடன் வளர்க்கப்பட்ட கலைமான் (காட்டில்) சென்று சொல்லப்படும் தன் இனத்தை அகப்படுத்தும்; 


உலவும் நல்குடிதனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பார் - (பலருடனும்) பழகும் நல்ல குடியிலே கோள் உரைப்போர் சேர்ந்து கொண்டு உறவினரின்  மதிப்பைக் கெடுப்பர்; 


‘உளவன்  இல்லாமல் ஊர் அழியாது' எனச் சொல்லும் உலகமொழி நிசம் அல்லவோ - ‘உளவு கூறுவோன் இல்லாவிட்டால் ஊர் கெடாது' என்று கூறும் உலகச்சொல் உண்மை அன்றோ?


‘பார்வை விலங்கு - ‘பார்வைப் பறவை' என்பவை மனிதர்களால் பழக்கப்பட்டு, அவற்றின் இனத்தைப் பிடிக்கப் பயன்படுபவை. குறடு - பற்றுக்கோடு. ‘உளவன் இன்றி ஊர் பாழாகாது' என்பது பழமொழி. கோடரி என்ற சொல்லே கோடாலி' என மருவியது.


No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...