45. அற்பரைப் புகழாதே

 

“வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும்

     விடுவதுண்டோ? மலிநீர்க் கங்கை

முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்

     பெருவாழ்வு முழுதும் உண்டாம்!

மிடியிட்ட வினைதீரும்! தெய்வமிட்டும்

     விடியாமல் வீணர் வாயிற்

படியிட்டு விடிவதுண்டோ? அவரருளே

     கண்ணாகப் பற்று வீரே!”


இதன் பொருள் –


வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும் விடுவது உண்டோ – நன்மை சிறிதும் அறியாத அற்ப அறிவினர்களை அடைந்து, அவர்களிடத்தே ஒன்றை வேண்டினாலும், உன் கவலை நீங்கிவிடுமோ? 


மலிநீர்க் கங்கை முடி இட்ட தண்டலை நாதரைப் புகழின் முழுதும் பெருவாழ்வு உண்டாம் – மிகுந்த நீரினை உடைய கங்கையைத் திருமுடியிலே தரித்து உள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளை வாழ்த்தினால் முழுதும் பெருவாழ்வு உண்டாகும். மிடி இட்ட வினை தீரும் - வறுமையை ஊட்டுகின்ற  ஊழ்வினையானது ஒழியும்.


தெய்வம் இட்டும் விடியாமல், வீணர்  வாயில்  படியிட்டு  விடிவது  உண்டோ - தெய்வம் கொடுத்தும் நீங்காத வறுமையானது, அற்பரின் வாயிற்படியை அடைவதால் நீங்கிவிடுமோ? 


(ஆகையால்), அவர் அருளே கண் ஆகப் பற்றுவீர் - திருத்தண்டலை இறைவரின் திருவருளையே வழியாகப் பிடித்துக் கொள்வீர்.


சுந்தரமுர்த்தி நாயனார் அருளிய “தம்மையே புகழ்ந்து” எனத் தொடங்கும் திருப்புகலூர்த் திருப்பதிகத்தை இங்கு வைத்து ஓதி உணர்க.


No comments:

Post a Comment

45. அற்பரைப் புகழாதே

  “வடியிட்ட புல்லர்தமை அடுத்தாலும்      விடுவதுண்டோ? மலிநீர்க் கங்கை முடியிட்ட தண்டலைநா தரைப்புகழிற்      பெருவாழ்வு முழுதும் உண்டாம்! மிடிய...