“பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்
நெறிபாதம் போற்றி நாளும்
வலியவலம் செய்தறியீர்? மறம்செய்வீர்!
நமன்தூதர் வந்து கூடி
மெலியவரைந் திடுபொழுது கலக்கண்ணீர்`
உகுத்தாலும் விடுவ துண்டோ?
எலியழுது புலம்பிடினும் பூனைபிடித்
ததுவிடுமோ? என்செய் வீரே?”
இதன் பொருள் –
பலவளம் பொலியத் தழைத்த தண்டலை நீள்நெறி பாதம் நாளும் போற்றி - பலவகை வளங்களும் அழகுற விளங்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை எப்போதும் வாழ்த்தி, வலிய வலம்செய்து அறியீர் – (யாரும் வலியுறுத்தாமல்) நீங்களாகவே வலம் வந்து அறியமாட்டீர்கள்!
(ஆனால்), மறம் செய்வீர் – பாவச் செயல்களைச் செய்வீர்கள்!,
நமன் தூதர் வந்து கூடி மெலிய வரைந்திடு பொழுது - எமனுடைய தூதர் வந்து சேர்ந்து (நீங்கள்) சோர்வுறும்படி (வாழ்நாளை) எல்லை முடிந்ததைக் கொண்டு, (உடலில் இருந்து உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு போகும்பொழுது, கலக் கண்ணீர் உகுத்தாலும் விடுவது உண்டோ – கலம் கலமாகக் கண்ணீர் விட்டு அழுதாலும் எமதூதர்கள் உங்களை விட்டுச் செல்வது கூடுமோ?
எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது விடுமோ - எலியானது கதறி அழுதாலும் (அதனைப் பிடித்த) பூனையானது, தனது பிடியை விட்டுவிடுமோ?, என் செய்வீர் - (எமன்தூதர் அழைக்கும் போது) என்ன செய்வீர்?
விளக்கம் –
உயிர்களுக்கு அவற்றின் வினைப் போகத்திற்கு ஏற்ப, உடலைப் படைத்து அருள்புரிகின்றான் இறைவன். உயிரானது உடம்பில் பொருந்துகின்ற கரு உண்டான காலத்திலேயே, அதன் சாதி, ஆயுள், போகம் ஆகியவை நிச்சயிக்கப் பெறுகின்றன. வினை நுகர்வு தீர்ந்து விட்டால், ஒரு கணம் கூட இந்த உடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்" என்றார் பட்டினத்து அடிகள்.
உயிரை உடம்பில் இருந்து கூறு செய்து, உடம்பை விட்டு, உயிரைக் கொண்டுபோக கூற்றுவன் வருவான். அவனது ஏவலின்படிக்கு அமைந்தவன் கூற்றன். உடம்பையும் உயிரையும் கூறு செய்வதால் கூற்றன் எனப்பட்டான். அவன் எப்போது வருவான் என்பது யாராலும் அறிந்துகொள்ள முடியாதது.
எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான், 'வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு' என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை அவன் நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான், தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கவே மாட்டான், அவன் அஞ்சா செஞ்சம் படைத்தவன், உயிரைத் தன்னோடு கொண்டு போவான், உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான். அருகில் உள்ள சுற்றத்தார் செய்வது ஒன்றும் அறியாது துக்கப்படுவார்கள். இயமனிடம் ஒரு கோடி பொன் கொடுத்து, ஒருநாள் வாழச் செய்ய முடியாது.
“நான்முகன் படைத்த நானா வகையுலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்,
ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ
நாள் முதிதோ? கோள் முதிதோ?
நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?
செல்வஞ்சி றப்போ? கல்வி சிறப்போ?
அல்லது உலகின் அறிவு சிறப்போ?
தொல்லை மாஞாலந் தோற்றமோ? படைப்போ?
எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால் சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
நஞ்சுறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
துஞ்சும் பது அந்தப் பஞ்சேந்திரியம்
என்செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?
ஆற்றல் உடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்று உடம்பாகுமோ? தமது உடம்பாகுமோ?
உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?
கண்டுஇன் புறுவது கண்னணோ கருத்தோ? 15
உலகத்தீரே உலகத்தீரே !
நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்,
ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்,
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்,
எழுபது போக நீக்கி இருப்பன முப்பதே (அவற்றுள்)
இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு நாளும் சிலவே, ஆதலால்
பெருக்காறு ஒத்தது செல்வம், பெருக்காற்று
இடிகரை ஒத்தது இளமை, இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்,
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந்நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில்,
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்,
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்,
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,
அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான், பொருளொடும் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான் ஒருகணம், தறுகணாளன்,
உயிர் கொடுபோவான், உடல்கொடுபோகான்,
ஏதுக்கு அழுவீர், ஏழை மாந்தார்காள்,
உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்,
உயிரினை அன்றும் காணீர், இன்றுங்காணீர்,
உடலினை அன்றும் கண்டீர், இன்றுங்கண்டீர்,
உயிரினை இழந்த உடலது தன்னைக்
களவு கொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறை களைந்து, கோவணம் கொளுவி,
ஈமத் தீயை எரியெழ மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப் படுமோ? சதுர் எனப் படுமோ?
என்னும் "கபிலர் அகவல்" கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
உடம்பில் உயிர் உள்ளபோதே, இறைவன் திருவடியை வாழ்த்தி வணங்கி, நல்வினைகளை ஆற்றி நற்கதிக்கு வழியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்னும் ஔவையின் அருள்வாக்கு மறவாமல் கடைப்பிடிக்க வேண்டியது.