திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "இந்தச் சாதனத்தால், இந்தச் செயலை, இவன் முடிக்க வல்லவன் என்று கூறுபடுத்தி ஆராய்ந்து, மூன்று கூறுகளும் ஒத்து இருந்து போது, அந்தச் செயலை அவனிடத்தில் ஒப்படைக்கவேண்டும்" என்கின்றார் நாயனார்.
ஒருவனுக்குத் துணைவரும் பொருளும் இல்லாத காலத்து, எடுத்த காரியம் முடியாது. ஆதலால், தொழிலைச் செய்ய வேண்டியவனுக்கு அமைய உள்ள துணைவரை முதலில் நோக்க வேண்டும், பின்னர் தொழிலைச் செய்வதற்கு உரிய பொருள் நிலையை நோக்க வேண்டும். இரண்டும் ஒத்து வந்தாலும், தொழிலை ஒருவன் விடாது முடிக்கும் ஆற்றல் உடையவனாக இருத்தல் வேண்டும்.
இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து --- இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்க வல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து,
அதனை அவன்கண் விடல் --- மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
(கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
“ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்றுபுரை
சோறுகறி உண்டு தொலைப்பதற்கு, நாடி
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்.”
இதன் பொருள் ---
குன்று புரை சோறு கறி உண்டு தொலைப்பதற்கு, 'குண்டோதர! போ' என்று ஈசன் அருளும் எனக் கூட்டுக. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்தில் குண்டோதரனுக்கு அன்னம் இட்ட படலத்தில் உள்ளது.
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம், சிவபெருமானது அறுபத்துநான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய “திருவிளையாடல் புராணம்” என்னும் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எழாவது படலம் ஆகும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண ரநிகழ்வுக்குப் பிறகு இலட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்ட பின்னும் மடப்பள்ளியில் உணவு அப்படியே இருந்தது. மணமகளான மீனாட்சி அம்மையிடம் அரண்மனை ஆட்கள் இதைப் பற்றி கூறினார்கள். மீனாட்சி அம்மைக்கு, இத்தனை மக்கள் உண்டபின்னும் தன் அரண்மனை உணவு தீராமல் இருப்பது கண்டு, கர்வம் வந்தது. சுந்தரேசுவரரிடம் மணமகன் வீட்டில் உணவு அருந்தாமல் யாரேனும் உள்ளார்களா? என்று மீனாட்சி அம்மை வினவினார்.
சுந்தரேசுவரர் தனது பூதகணங்களை அழைத்து உணரவு அருந்தாதவர் யாரென வினவினார். குண்டோதரன் என்ற பூதம் மட்டும் திருமண வேலைகளில் மூழ்கியிருந்தமையால் உணவருந்தாமல் இருந்தார். அதை அறிந்த சிவபெருமான் குண்டோதரனை உணவருந்தி விட்டு வரும்படி கூறினார். அத்துடன் வடவைத்தீ (வடவாமுகாக்கினி) எனும் பசியை உண்டாக்கினார்.
மடைப்பள்ளியில் உள்ள அனைத்து உணவுகளையும் குண்டோதரன் உண்டார். அதன் பிறகும் பசி அடங்கவில்லை. மீண்டும் சமையல் செய்து உணவிட்டனர், அதையும் குண்டோதரன் உண்டார். இதையறிந்த மீனாட்சி அம்மை, சுந்தரேசுவரரின் திருவிளையாடல் இது என்பதை அறிந்து, ஈசனைச் சரணடைந்தார்.
குண்டோதரனின் பசியை நீக்க சுந்தரர் அன்னப்பூரணியை அழைத்தார். குண்டோதரனின் பசி அடங்கியது, ஆனால், நீர் நிலைகள் அனைத்திலும் உள்ள நீரைக் குடித்தாலும், தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் சிவபெருமான் தனது சடைமுடியில் இருந்த கங்கையை குண்டோதரனின் தாகம் தீர்க்குமாறு கூறினார். மதுரையில் நதியாக ஓடிய கங்கையை வைகை என்று அழைக்கின்றனர்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்
எல்லாவன்சேய் தோற்றான் இரங்கேசா --- சொல்லில்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.”
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! சல்லியன் - சல்லியனை, எல்லவன் சேய் - சூரியகுமாரனாகிய கர்ணன், சாரதியாய் கொண்டதனால் - தனது தேர்ப் பாகனாகக் கொண்டதனால், தோற்றான் - பாரதப் போரில் தோற்று மடிந்து போனான், (ஆகையால், இது) சொல்லில் - எடுத்துச் சொன்னால், இதனை - இத் தொழிலை, இதனால் - இக் கருவியால், இவன் முடிக்கும் என்று - இன்னவன் முடிக்க்க் கூடியவன் என்று, ஆய்ந்து - ஆராய்ந்து (கூறுபடுத்து இம் மூன்றும் தம்முள் ஒத்திருந்தவிடத்து), அதனை - அத் தொழிலை, அவன் கண் விடல் - அவனிடத்தில் (அரசன்) விடக் கடவன் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- திறம் தெரிந்து வேலையிட வேண்டும்.
விளக்கவுரை --- இப்படித் திறம் தெரியாமல் சல்லியனைக் கர்ணனுக்குத் தேர்ப்பாகன் ஆக்கியதால் துரியோதனன் அவமானம் அடைந்ததும் அன்றிக் கர்ணனும் மாண்டு ஒழிந்தான். துரியோதனன் எண்ணியது எல்லாம் வேறாக ஆனது. அருச்சுனன் தேர்க்கு கண்ணன் சாரதியாய் இருந்தான். ஆகையால், அவனோடு சண்டை செய்யும் கர்ணனுடைய தேருக்குச் சாரதியாய் இருக்கச் சல்லியனே தகுதியானவன் என்று தப்பான எண்ணம் கொண்டான். சல்லியன் ஆகாரபுஷ்டியாய், பேருக்கு அரசனாய் இருந்தானே தவிர, போருக்கும் தேருக்கும் வல்லன் அல்லன் என்று யாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அதைக் கொஞ்சமேனும் உணராமல், சாம பேத தான தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களில் வல்லவனாகிய பார்த்தசாரதிக்கு எதிராக, சாரதியாகச் சல்லியனை நியமித்த துரியோதனனது அறிவீனம் வியக்கற்பாலது. இப்படியே அவன் பாரதப் போரில், இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராயாமல், அதனை அவன்கண் விட்டுப் பலமுறை தோற்று, அவமானமடைந்து மாண்டு இகழ்ச்சிக்கு ஆளானான்.
அடுத்து,இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“தசமுகனை ராகவன் நம் சானகியைக் கொண்டே
சிதையவதைத் தான், சிவசிவா! --- இதயத்து
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.”
இரகுகுல உத்தமனான இராமபிரான் தனது சிற்றன்னையாகிய கைகேசி சூழ்வினையால் நாடிழந்து, காடடைந்து நின்ற நிலையில், இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை என்னும் அரக்கி, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க எண்ணி, தன் தமையனாகிய இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்க, அவ் வருணனையைக் கேட்ட இராவணன், சீதைபால் மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து தனது மாமனாகிய மாரீசனைப் பொன்மானாக அனுப்பி, இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்து, இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்க, இராமன் சுக்கிரீவனது நட்புப் பெற்று, அனுமானை அனுப்பி, சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்து, வானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்து, முடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு இலக்காக்கினான்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"அன்று ஆய்ந்து அவர்சொல் இதனை இதனால் இவன்முடிக்கும்
என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் எனலால் கனகக்
குன்றுஆர்ந்த கொங்கைச் சனகியைத் தேடக் குறித்து, நல்கும்
ஒன்றாம் பொன் ஆழியை மாருதிபால் புல்லையூர் முகிலே".
இதன் பொருள் ---
கனகக் குன்று ஆர்த்த - பொன்மலை போலப் பொருந்திய. பொன்னாழி - பொன்னாலாகிய சூளாமணி.
இச் செய்யுளில் இராமபிரான் அநுமன்தான் காரியத்தை முடிக்கக் கூடியவன் என்று அவனிடம் சூளாமணியைக் கொடுத்தனுப்பிய செய்தி குறிக்கப்படுகிறது.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
“உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க, - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
இழவு அன்று எருது உண்ட உப்பு.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
உற்றான் உறாஅன் எனல் வேண்டா - தமக்கு உறவினன் உறவு அல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை, ஒண்பொருளை கற்றானை நோக்கி கைவிடுக்க - காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவால் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க, கற்றான் கிழவன் உரை கேட்கும் - கல்வியறிவால் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துத உதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான், கேளான் எனினும் - கேளாது ஒழிவானாயினும், எருது உண்ட உப்பு இழவு அன்று - காளை உண்ட உணவு நட்டம் ஆகாமை போலப் பயன்கொடாது ஒழியான் என்பதாம்.
நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும் கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்கவேண்டும் என்பதாம்.
கொள் முதலியவற்றை உண்பிப்பது நோயைத் தவிர்த்து எருதுக்கு உரம் செய்வதால், எருது சலிப்பின்றித் தலைவனுக்கு வேலைசெய்யும். அதுபோல் கற்றவன் காரியம் செய்யும்போது அவனுக்கு ஈந்த பொருள் நட்டம் ஆகாமல் தலைவனுக்கு இலாபத்தையே உண்டாக்கும்.
No comments:
Post a Comment