50. எய்தவன் இருக்க, அம்பை நோவது ஏன்?

“வைதிடினும், வாழ்த்திடினும், இன்பதுன்பம்

     வந்திடினும், வம்பு கோடி

செய்திடினும், தண்டலைநீள் நெறியார்தம்

     செயலென்றே தெளிவ தல்லால்;

மெய்தவிர, அவர்செய்தார், இவர்செய்தார்

     எனநாடி வெறுக்க லாமோ?

எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த

     கருமம் என்ன? இயம்பு வீரே!


இதன் பொருள் ---


    வைதிடினும் வாழ்த்திடினும் - (பிறர்) இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், இன்பதுன்பம் வந்திடினும் - இன்பம் வரினும் துன்பம் வரினும்,  வம்பு கோடி செய்திடினும் - கோடிக் கணக்காக வஞ்சகம் (பிறர்) செய்தாலும், தண்டலை  நீள்நெறியார் தம் செயல் - (அவை யாவும்) திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரின் அருளே ஆகும், என்றே தெளிவது அல்லால் - எனவே தெளிவடைவது அல்லாமல், மெய் தவிர - உண்மை நீங்க, அவர் செய்தார் இவர் செய்தார் என நாடி வெறுக்கலாமோ - அவர் செய்தார், இவர் செய்தார் என்று ஆராய்ந்து அவர்களை வெறுத்தல் கூடுமோ?, எய்தவர் தம் அருகு இருக்க அம்பை நொந்த கருமம் என்ன இயம்புவீர் - (அம்பை) விடுத்தவர் தம் பக்கத்தில் இருக்கும்போது அம்பை நோவது என்ன காரியம்? சொல்லுவீர்.

      அவரவர் செய்வினையே அவரவர் நுகரும் பயனாக முடிவதால், பிறரை நோவதால், ஏதும் பயனில்லை. வினைப்பயனை நமக்கு ஊட்டும் திருத்தண்டலையாரின் செயல் என்றே கொள்ளல் வேண்டும், ‘எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?' என்பது பழமொழி.

    “நோய் எல்லாம் நோய் செய்தார் மேலஆம், நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்” என்னும் திருக்குறளைக் காட்டி "வருகின்ற துன்பங்கள் எல்லாம், முன்பு பிறர்க்குத் துன்பம் செய்தார்க்கு வந்து சேர்வன. துன்பம் இல்லைமையை விரும்புபவர், பிறர்க்குத் துன்பம் செய்யமாட்டார்" என்கின்றார் நாயனார்.  "தினை விதைத்தவன், தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்" என்னும் பழமொழி இங்குக் கருதத் தக்கது.


      பின்வரும் “சிவஞான சித்தியார்” பாடல்களின் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுக...

“இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்

         இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்

அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி

         அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்

சிவனும் இவன் செய்தி எல்லாம் என்செய்தி என்றும்

         செய்ததுஎனக்கு இவனுக்குச் செய்தது என்றும்

பவம்அகல உடனாகி நின்று கொள்வன் பரிவால்

         பாதகத்தைச் செய்திடினும் பணி ஆக்கி விடுமே.”

         சிவபெருமான் தன்னை வழிபடும் அடியார்களுடன் பிரிப்பின்றி உடன் நிற்பான். அத்தகைய அடியார்கட்கு உலகில் நலம் தீங்குகள் செய்தவர்க்கே அச்செயல்களின் பயன் சென்று பொருந்தும். அல்லாமல், அடியார்களுக்கு வினைப்பயன் எய்தாது. தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கித் தலைவன் செயலே தம் செயலாக அரன் பணியில் நிற்கும் இவ்வடியார்களுக்கு உயிரின் குற்றமாகிய மலமும் நீங்கும். சிவபெருமானும் அடியார்களின் செயல்கள் எல்லாம் தன் செயலாகவும், அடியார்களுக்குச் செய்த எல்லாம் தனக்குச் செய்தன எனவும் உடனாக நின்று ஏற்றுக் கொள்வான். அவ்வாறு கொள்ளவே அடியார்களின் பிறப்பு அகலும். அத்தகைய அடியவர்கள் சிவபிரான் மீது கொண்ட அன்பின் மிகுதியால் எப்போதேனும் தீங்கு செய்திடினும் இறைவன் அதனையும் தனது பணியாக ஏற்று அருளுவான்.

         இப்பாடலில் இவன் என்ற சொல் அடியார்களைக் குறித்தது. அவன் என்ற சொல் சிவபெருமானைக் குறித்தது.

“யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும்

         இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்து

தான்செவ்வே நின்றிட அத் தத்துவன் தான் நேர

         தனை அளித்து முன்நிற்கும் வினை ஒளித்திட்டு ஓடும்

நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி

         நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்

ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்

         ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே.”

         நான் பிறர்க்கு இன்ன நன்மை, தீமை செய்தேன், பிறர் எனக்கு இன்ன நன்மை, தீமை செய்தார் என்று கருதுவது யான் எனது என்னும் செருக்கினால் விளையும் மனக்கோட்டம் ஆகும். இத்தகைய மனக்கோட்டத்தை ஞானம் என்னும் நெருப்பால் காய்ச்சி அதனை நிமிர்த்துதல் வேண்டும். அவ்வாறு நிமிர்த்தி இறைவனின் திருவருள் வழியிலே தன்முனைப்பு இன்றி நிற்க, இறைவன் நேராக வெளிப்பட்டுத் தோன்றி அருள்பாலிப்பான். அவனுடைய முன்னிலையில் நில்லாது ஞானம் உடையாரின் வினைகள் ஒளித்துவிடும். இவ்வாறன்றி, இதனை நான் செய்தேன் என்று தன் முனைப்போடு செயல்படுவோர்க்கு இறைவன் விளங்கித் தோன்றுதல் இல்லை. மேலும் அவர்கள் செய்யும் வினைக்கு ஏற்ற பயனையும் இறைவன் ஊட்டுவான். எனவே அவர்களுக்கு வேறு வினையும் தோன்றும். மாயையினால் ஆகிய கருவிகளைப் பொருந்தி அறியும் சிற்றறிவினின்றும் வழிபட்டு ஏகனாகி இறைபணி நிற்கும் ஞானம் உதித்தால் அன்றி, ஒருவருக்கும் யான் எனது என்னும் செருக்கு ஒழிவதில்லை.

    நல்வினை தீவினை என்னும் இரண்டும் தாமே முன்பு செய்துகொண்டவை. நல்வினையின் பயனாக இன்பமும், தீவினையின் பயனாகத் துன்பமும் விளையும். எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் கலந்தே அனுபவிக்கவேண்டும். இன்பத்திற்கு மகிழும்போது, துன்பத்திற்குத் துவளுதல் கூடாது. இன்பத்தை வேண்டாம் என்னாது அனுபவித்தவன், துன்பம் வந்துபோது அதையும் வேண்டாம் என்னாது அனுபவித்தல் வேண்டும்.

“நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம்கால்

அல்லல் படுவது எவன்.” --- திருக்குறள்.

ஊழ் தீயவற்றை மட்டும் செய்வதில்லை. நன்மைகளையும் செய்கிறது. ஊழால் நன்மை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், அதனால் கேடு விளையும்போது இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. இது ஏன்? ஊழின் நியதிப்படி, ஒருவர் புதிரான விளைவுகளை இயல்பு என்று நினைக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ ஊழ் வகுத்ததை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். ஊழ் என்கிற உலகத்து இயற்கை ஒருவனது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்து நல்லவை நடக்கும்போது, அவை நன்மை என்பதால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள், ஒவ்வாதும் இருந்து, தமக்குத் தீயன நிகழும்போது, இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. மனதைச் சமநிலை செய்து  "இயற்கையாக" வரும் இன்பத்தையும் துன்பத்தையும், ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார் நாயனார். 

நல்லது நடக்கும்போது நல்லது என மனம் மகிழ்ந்து அனுபவிப்பவர், தீயது நிகழும்போது துயர் கொள்வது ஏன்? என வினவுகிறது இப்பாடல். நல்லூழை ஏற்றுக் கொண்டது போல், தீயூழையும் ஏற்றுக் கொள்வதே நியதி. தீயூழ் வந்தபோது, வருந்தித் தவித்துப் பயன் இல்லை. அதைக் கடந்து வாழ முயலவேண்டும். "ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார்" என்று நாயனார் அருளிய திருக்குறளின்படி, ஊக்கத்தைத் திண்ணமாகத் தமது கைப்பொருளாக்க் கொண்டுள்ளவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார். மக்களாய்ப் பிறந்தார் வாழ்க்கை எப்பொழுதும் அயராது அதிராது அசையாது முயற்சித்துக் கொண்டே இருந்து ஊழையும் உப்பக்கம் காண முயலுதல் வேண்டும்.


பின்வரும் பாடல்களைக் கருத்திலு கொள்ளுதல் நலம்.

"முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய

பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,

இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்

துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?". --- கம்பராமாயணம், தைலாமாட்டு படலம்.

இதன் பதவுரை --

பேர் அறம் - பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை நிறீஇ - (தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை நிலைநிறுத்தி; முடிவு முற்றிய பின்பும் நின்று - இந்த வாழ்வு முடிவுக்கு வந்தபிறகும் இருந்து (மறுமையில்);  உறுதியைப் பயக்கும் - நன்மைப் பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின் இனிது - (வாழ்வில்) இன்பம் வந்து நேருமாயின் இனிமையானது;  ஆயிடை - அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் - துன்பம் வந்து நேருமாயின்; துறக்கல் ஆகுமோ?’ - அவ்வறத்தைக் கைவிட ஆகுமோ?

இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு  இன்பமே வரும். ஆயினும், ஒருவேளை துன்பம் வருமாயினும் அதுபற்றி அறத்தைக் கைவிடல் ஆகாது. அறம் என்ற சொல்லின் முழுப் பொருளும் தருமம் என்பதில் அடங்காது. பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம்.


“சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,

உறுகாலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும்,

சிறுகாலைப் பட்ட பொறியும், அதனால்

இறுகாலத்து என்னை பரிவு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

குறையாது, கூடாது. முறைமாறி வந்து சேராது. வரவேண்டிய காலத்தில் வந்தே தீரும். எவராலும் அதைத் தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும்போதே, ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்ட உண்மை இது ஆகும். இதை உணர்ந்து கொள்ளமால், துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்துவதால் என்ன பயன். (பயன் ஏதும் இல்லை).

ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.


“பேறு, அழிவு, சாவு, பிறப்பு, இன்பத் துன்பம் என்று

ஆறு உள அந்நாள் அமைந்தன, -- தேறி

அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)

இவையிவை என்றுஉணரற் பாற்று”  ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

செல்வமும், வறுமையும், இறப்பும், பிறப்பும், இன்பமும், துன்பமும் என்று சொல்லப்படுகின்ற ஆறும், முன்செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன. இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை, மாறி மாறி வருந்தோறும், மகிழாமலும், வருந்தாமலும், நம்மை நாடி வந்த இவை, இவை, இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்து அறிந்து அடங்குதலே செய்யத் தக்கது.


“வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை, - நினைத்தனைத்

தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து

எல்லை இகந்து ஒருவுவார்.” ---   நாலடியார்.

இதன் பொருள் ---

முற்பிறவியில் செய்த வினையின் பயன் இப்போது வருகின்ற துன்பம் என்று எண்ணாமல் அறிவற்ற மூடர்கள் வருந்துவார்கள். ஆனால், கற்றறிந்த பெரியோர்கள் இப்போது படுகின்ற துன்பங்களுக்கு எல்லாம் காரணம், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகளே என்பதை உணர்ந்து, இனித் தீவினைகளைச் செய்வதை விட்டு ஒழித்து, நல்வினைகளையே செய்ய முற்படுவார்கள்.


“பண்டு உருத்துச் செய்தபழவினை வந்து எம்மை

இன்று ஒறுக்கின்றது என அறியார், - துன்புறுக்கும்

மேவலரை நோவது என்? மின்நேர் மருங்குலாய்!

ஏவலாள் ஊருஞ் சுடும்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மின்னலைப் போன்று விளங்கும் நுண்மையான இடையினை உடையவளே! ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூடச் சுட்டுப் பொசுக்கி விடுவான். அதற்கு, அவனை ஏவியவனை நோகவேண்டுமே அல்லாமல், அவனை நோவதால் ஒரு பயனும் இல்லை. அதுபோலவே, முன் பிறவியில் நாம் ஆத்திரம் கொண்டு செய்த பாவச் செயல்கள், தொடர்ந்து வந்து இப் பிறவியில் வருத்துகின்றது என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மைத் துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செய்த செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ? 


பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன, இம்மைவந்து

சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே, வந்து அமரர் முன்னாள்

முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்

நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.   ---  அப்பர்.


முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

    மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்,

    சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,

அந்தி வெண்பிறை சூடும்எம் மானே!

    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!

எந்தை நீஎனக்கு உய்வகை அருளாய்,

    இடைமருது உறை எந்தை பிரானே.         ---  சுந்தரர்


“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்றுப் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


No comments:

Post a Comment

நல்லவரால் நன்மை

  “பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்,     பருகுநீர் சேரின் என்னாம்’ பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்,     படிகமணி கோக்கின்என்னாம்;...