அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வண்டுதான் மிக (பொது)
அன்பர் மனத்தில் உறையும் முருகா!
தேவரீரை வழிபட்டு உய்ய அருள்.
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ...... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம் ...... விதமாக
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன்
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகம் என்
பந்திமா மலர் சொரிந்து, ...... உடைசோர,
வம்புசேர் கனி பொருந்து இன்பவாய் அமுது அருந்த,
அந்த மா மதன் நலம் ...... விதமாக
விண்டு, மேனிகள் துவண்டு, அன்றில் போல், உளம்இரண்டு
ஒன்றுமாய் உற அழிந்த், ...... அநுபோகம்
விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து,
உன்தன் மேல் உருக என்று ...... அருள்வாயே?
பண்டு பாரினை அளந்து, உண்ட மால் மருக! செம்
பைம்பொன் மாநகரில், இந் ...... திரன்வாழ்வு
பண்பு எலாம் மிகுதி பொங்கு, இன்ப யானையை மணந்து,
அன்பின் ஓர் அகம் அமர்ந் ...... திடுவோனே!
அண்டர்தாம் அதிபயம் கொண்டு வாடிட, நெடும்
தண்டு வாள் கொடு, நடந் ...... திடு சூரன்
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட,வெகுண்டு,
அம் கை வேல் உற விடும் ...... பெருமாளே.
பதவுரை
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக --- முன்பு பூமியை (வாமனராக வந்து) அளந்தவரும், (கண்ணனாக வந்து) உண்டவருமான திருமாலின் திருமருகரே!
செம் பைம் பொன்மா நகரில் இந்திரன் வாழ்வு –- செம்மையான பசுமையான பொன்னுலகம் எனப்படும் தேவலோகத்தில் இந்திரனின் செல்வமாக அமைந்தவரும்,
பண்பு எ(ல்)லா(ம்) மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து --- பண்புகள் யாவும் நிறைந்து விளங்கும் இன்ப வடிவமான தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தவரே!
அன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே --- அன்பால் வழிபடுவோரின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!
அண்டர்தாம் அதிபயங் கொண்டு வாடிட --- தேவர்கள் மிக்க அச்சம் கொண்டு வாடி இருக்க,
நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் அங்கமானது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு --- பெரிய தண்டாயுதம், வாள் ஆகியவற்றைக் கொண்டு போரிட வந்த சூரபதுமனது உடலானது பிளவுபட்டு, எங்கும் கூச்சல் எழும்பும்படி சினந்து,
அங்கை வேல் உற விடும் பெருமாளே --- அழகிய திருக்கையில் விளங்கும் அழகிய வேலாயுதத்தைச் சென்று தாக்கும்படியாக விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகம் --- வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில்
மென் பந்தி மா மலர் சொரிந்து --- வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்களைச் சொரிந்து,
உடை சோர --- அணிந்துள்ள ஆடை நெகிழ,
வம்பு சேர் கனி பொருந்தி --- புதுமையான இன்பத்தைத் தருகின்றதும், கனியின் சுவை உடையதும் ஆகிய,
இன்ப வாய் அமுதருந்து அந்த மா மதன் நலம் --- இன்பத்தைத் தருகின்றதும் ஆகிய வாயூறலை அமுதமாக அருந்துகின்ற அந்த மன்மதலீலையின் நலமானது,
விதமாக விண்டு --- விதவிதமாக விளைய.
மேனிகள் துவண்டு --- இருவர் உடலும் சோர்வுபட்டு,
அன்றில் போல் உளம் இரண்டு ஒன்றுமாய் உறவு அழிந்து --- அன்றில் பறவையைப் போல இருவர் உள்ளமும் ஒன்றி, இரண்டு என்பது அழிந்து,
அநுபோகம் விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து --- காம நுகர்ச்சியை மிகுதியாகவே தருகின்ற இளமையான முலைகளை உடைய பொதுமாதரின் கூட்டுறவை விட்டு,
உன்றன் மேல் உருக என்று அருள்வாயே --- தேவரீரது திருவடிகளில் அடியேனது மனம் உருகி நிற்கும்படியாகத் திருவருள் புரிவீராக.
பொழிப்புரை
முன்னொரு காலத்தில் வாமனராக வந்து, மாவலியிடம் மூன்று அடி மண் கேட்டு, தனது நெடிய திருவடியால் இந்த உலகை அளந்தவரும், கண்ணனாக வந்து இந்த பூமியை உண்டவருமான திருமாலின் திருமருகரே!
செம்மையான பசுமையான பொன்னுலகம் எனப்படும் தேவலோகத்தில் இந்திரனின் செல்வமாக அமைந்தவரும், நற்பண்புகள் யாவும் நிறைந்து விளங்கும் இன்ப வடிவமான தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தவரே!
அன்பால் வழிபடுவோரின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!
தேவர்கள் மிக்க அச்சம் கொண்டு வாடி இருக்க, பெரிய தண்டாயுதம், வாள் ஆகியவற்றைக் கொண்டு போரிட வந்த சூரபதுமனது உடலானது பிளவுபட்டு, எங்கும் கூச்சல் எழும்பும்படி சினந்து, அழகிய திருக்கையில் விளங்கும் அழகிய வேலாயுதத்தைச் சென்று தாக்கும்படியாக விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்களைச் சொரிந்து, அணிந்துள்ள ஆடை நெகிழ, புதுமையான இன்பத்தைத் தருகின்றதும், கனியின் சுவை உடையதும், இன்பத்தைத் தருகின்றதும் ஆகிய வாயூறலை அமுதமாக அருந்துகின்ற அந்த மன்மதலீலையின் நலமானது, விதவிதமாக விளைய. இருவர் உடலும் சோர்வுபட்டு, அன்றில் பறவையைப் போல இருவர் உள்ளமும் ஒன்றி, இரண்டு என்பது அழிந்து, காம நுகர்ச்சியை மிகுதியாகவே தருகின்ற இளமையான முலைகளை உடைய பொதுமாதரின் கூட்டுறவை விட்டு, தேவரீரது திருவடிகளில் அடியேனது மனம் உருகி நிற்கும்படியாகத் திருவருள் புரிவீராக.
விரிவுரை
இப் பாடலின் முற்பகுதியில் பொதுமாதர் கலவி நிலைதனை எடுத்துக் கூறி, அதனைஐ விடுத்து நிலையான இன்ப வாரிதியில் திளைத்து இருக்கும் பேற்றைப் பெறுதற்கு, இறைவன் திருவடியில் மனம் உருகி வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தினார் அடிகளார். “மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம், உன்தனை நினைத்து அமைய அருள்வாயே” என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளார் என்பதை அறிக.
பண்டு பாரினை அளந்து உண்ட மால் ---
பாரினை உண்ட மால், பாரினை அளந்த மால். கண்ணனாக அவதரித்து மண்ணை உண்ட பெருவாயர். வாமனராக வந்து அவதரித்து மாவலியிடம் மூன்று அடி மண் கேட்டு, உலகை அளந்த திருமால். பிரளயத்தின்போது பூவுலகை திருமால் விழுங்கி தன் பொன் வயிற்றில் வைத்துக் காத்த நிகழ்வை ஆழ்வார்கள் பாடி உள்ளார்கள்.
“பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுளார் அறிவார் அவன்தன்
கள்ளமாய மனக்கருத்தே.” -- நம்மாழ்வார்)
“மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்,
எண்ணில் அலகளவு கண்டசி ராழியாய்க்
கன்றிவ் வுலகளவும் உண்டோ? உன் வாய்.” -- பொய்கையாழ்வார்
“ உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்” -- பூதத்தாழ்வார்.
“ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
போாழியான் தன் பெருமையை” -- திருமழிசையாழ்வார்.
“மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளை” –- பெரியாழ்வார்.
“நாமம் பல சொல்லி, நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நல்நெஞ்சே! - வாமருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் *
கண்ணனையே காண்க நம் கண்” -- மூன்றாம் திருவந்தாதி.
“உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே” --- நம்மாழ்வார்.
“ஞாலமும் மேலை விண்ணோடு உலகேழும் உண்டு
குறளாய் ஒர் ஆலின் இலைமேல் பாலனும்” - அப்பர்.
பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டான். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டான். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.
“காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.”
மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.
அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.
மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.
“மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.”
“எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.”
"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.
உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகை எல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.
அன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே ---
அகம் – உள்ளம். “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” என்பார் அப்பர் பெருமான்.
"இறைவன் எங்கே இருக்கின்றான்?" இந்தக் கேள்வியை விட, "இறைவன் இல்லாத இடம் எது?" என்று கேட்பது பயனுடையதாக இருக்கும்.
ஔவைப் பாட்டி ஒரு நாள் நெடுந்தூரம் நடந்து வந்து, சற்றே இளைப்பாற ஒரு கோயிலுக்குள் நுழைந்து, சுவாமி சந்நிதிக்கு நேரே காலை நீட்டி அமர்ந்தார். அதை அங்கு இருந்த சிறுவன் ஒருவன் பார்த்தான். "பாட்டி, சுவாமி இருக்கின்றார்" என்றான். ஔவைப் பாட்டி, "அப்படியா, நான் களைப்பில் கவனிக்கவில்லை. நானோ கிழவி. மிகவும் அலுப்பாக உள்ளது. சுவாமி இல்லாத இடமாகப் பார்த்து, நீயே எனது காலைக் கொஞ்சம் திருப்பி விடு. உனக்குப் புண்ணியமாகப் போகும்" என்றார். பையன் சிந்தனையில் ஆழ்ந்தான். "சுவாமி இல்லாத இடமா?"
எங்கும் நிறைந்து விளங்குவது பரம்பொருள். அது அன்பு வடிவானது. ஓர் உருவமோ, ஒரு பெயரோ இல்லை. இறைவன் அன்பு வடிவானவன் என்பதை, "அன்பு உருவாம் பரசிவமே" என்னும் வள்ளல் பெருமான் வாக்கால் அறியலாம். "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்று மணிவாசகப் பெருமான் காட்டினார்.
இறைவன் ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாதவன். அவன் சோதி வடிவமானவன். சோதி என்று நாம் கருதுவதுமே உருவ நிலைதான் என்கிறது மணிவாசகம். "சோதியாய்த் தோன்றும் உருவமே!, அருவாம் ஒருவனே!" எனவரும் திருவாசகத்தால் அறியலாம். அந்த சோதி என்பதும் கூட, நமது கற்பனையைக் கடந்தது என்பதால், "கற்பனை கடந்த சோதி", என்றும், அது கருணையே வடிவானது என்பதால், "கருணையே வடிவமாகி" என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் வழங்கினார்.
அன்பு எங்கு உள்ளதோ, அங்கே சிவம் விளங்கும். அன்பு வேறு, சிவம் வேறு என்பவர் அறிவு இல்லாதவர். அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்கிறார் திருமூல நாயனார்.
"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே." -- திருமந்திரம்.
"மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" என்றார் திருவள்ளுவ நாயனார். "மலர்மிசை ஏகினான்" என்னும் சொற்றொடருக்கு, அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேருதல் என்று அற்புதமான உரையை வகுத்தார் பரிமேலழகர். "சேர்தல்" என்பது "இடைவிடாது நினைத்தல்" என்றார்.
மலர் என்றது, அன்பால் நினைவாரது உள்ளமாகிய தாமரை மலர். "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்றாற் போல், பூ என்று வெறுமனே சொன்னாலே அது தாமரையைத் தான் குறிக்கும். இங்கே உள்ளமானது தாமரை எனப்பட்டது. அன்பு இருந்தால், உள்ளம் தாமரை ஆகும். அதற்கு கையானது குவிய வேண்டும். கை குவிந்தால் இதயம் தானே மலர்கின்ற தன்மையைப் பெறும். "கரமலர் மொட்டித்து இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப, சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்" என்பார் மணிவாசகப் பெருமான். "கைகுவித்து இரு கண்களில் நீர் பெருகி" என்பார் தாயுமானார்.
இறைவனை உள்ளக் கமலத்தில் வைத்து, இடையறாது வழிபடுவது ஞானபூசை ஆகும். "இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை" என்கிறது சைவசித்தாந்தம். இந்த ஞான பூசையைச் செய்து இறைவனுடைய மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர் பெரியபுராணத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற பூசலார் நாயனார்.
"அங்கு இங்கு எனாதபடி, எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எதுவோ", "தன் அருள் வெளிக்கு உள்ளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எதுவோ", "மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எதுவோ" சமய கோடிகள் எல்லாம் தம் தெய்வம், எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடும்படியாக நின்றது எதுவோ", "எங்கணும் பெருவழக்காய் உள்ளது எதுவோ", "யாதினும் வல்ல ஒரு சித்தாகி (அறிவுப் பொருளாகி) இன்பமாய் என்றைக்கும் உள்ளது எதுவோ" "கங்குல் பகல் அற நின்ற எல்லை உள்ளது எதுவோ" அதுவே பரம்பொருள் என்கின்றார் தாயுமான அடிகளார்.
எனவே, அளவில்லாத ஆற்றலும், அளவில்லாத கருணையும் உடைய இறைவன், அவரவர் கருதுகின்ற வடிவங்களில், அவரவர் இடுகின்ற பெயரைக் கொண்டு, எழுந்தருளி அருள் பாலிக்கின்றான் என்பது தான் உண்மை. எனவே, அன்பு வடிவான சிவத்தை, அன்பு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும். எனவே தான், அன்பால் நினைவாரது உள்ளம் "கமலம்" எனப்பட்டது.
அழுத பிள்ளையைப் போல, துன்பம் நேரும்போதும், தேவை உண்டாகும் போதும் இறைவனை நினைந்து வழிபட்டு, பிறகு அவனை மறந்து உலகியலிலேயே உழல்வது மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல், எப்போதும் இறைவனது திருவடியை நினைப்பதையே, சேர்தல் என்னும் சொல்லால் குறித்தார் திருவள்ளுவ நாயனார்.
உருவமும் பெயரும் அற்ற, பரம்பெருளுக்கு உரியது, இந்த வடிவம்தான், இந்தப் பெயர்தான் என்று பாவித்து முழங்குவது எல்லாம் வெறும் சமயப் பூசலே.
"யாதுஒரு தெய்வம் கொண்டீர், அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதுஒரு பாகனார்தாம் வருவர், மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும், பிறக்கும், மேல் வினையும் செய்யும்,
ஆதலால், இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே.
என்கிறது சைவசித்தாந்தம்.
எச்சமயத் தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம்;
எல்லாம் செய் வல்ல தெய்வம்; எனது குல தெய்வம்.
என்கிறார் வள்ளல் பெருமான்.
“ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்“ என்பது அப்பர் தேவாரம்.
சுருதி வானவனாம், திருநெடுமாலாம்,
சுந்தர விசும்பின் இந்திரனாம்,
பருதி வானவனாம், படர்சடை முக்கண்
பகவனாம், அக உயிர்க்கு அமுதாம்
எருது வானவனாம், எயில்கள் மூன்று எரித்த
ஏறு சேவகனுமாம்,"பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம், கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே. --- திருவிசைப்பா.
"பின்னும் கருதுவார் கருதும் உருவமாம்" என்பதைப் பரிமேலழகர், "அவர் நினைந்த வடிவத்தோடு" என்று அழகுறக் காட்டினார்.
இறைவன் தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவான் என்பதை, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன்அமர்ந்த அன்பினர் ஆய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து உள் இருக்கும் புராணர்" புறத்தே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் திருவீழிமிழலை என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
புறத்தே கோயில் மற்றும் பிற இடங்களில் நமது வேண்டுதலுக்கு ஏற்ப எழுந்தருளி அருள் புரிகின்ற, பரம்பொருளுக்கு, நிரந்தரமான இடம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
நஞ்சத்தை உண்டதனால் இருள் ஒத்த செறிந்த அழகினை உடைய கண்டத்தை உடைய எம்பெருமானை, வானோர் உலகத்தான், தேவர் உலகத்தான் என்று சொல்பவர்கள் எல்லாம் அவர்கள் அறிந்தவாறே சொல்லிக்கொள்ளட்டும். ஞானமே வடிவாகிய அவன் என் நெஞ்சத்தான் என்றே நான் சொல்வேன் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.
“வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம் என்க; - ஞானத்தான்,
முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்,
என்நெஞ்சத் தான்என்பன் யான்.” -- அற்புதத் திருவந்தாதி.
இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், பொருளின் இயல்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டும். எந்தப் பொருளுக்கும் பொது இயல்பு என்றும் சிறப்பு இயல்பு என்றும் இருநிலைகள் உண்டு. இயல்பு என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றே. ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாகவே உள்ள இயல்பு "சிறப்பு இயல்பு" என்றும், வேறு ஒரு பொருளின் சார்பினால் உண்டாகி, அந்தச் சார்பு நீங்கியதும், நீங்குகின்ற இயல்புக்கு "பொது இயல்பு" என்றும் பொருள். சிறப்பு இயல்பு என்பது "சொரூப இலக்கணம்" ஆகும். பொது இயல்பு என்பது, "தடத்த இலக்கணம்" ஆகும்.
ஆன்மாவானது, எந்தப் பொருளைச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையை அடைந்து நிற்கும். காரணம், அது தற்சுதந்தரம் இல்லாதது. ஆனால், இறைவனோ, வந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல் என்றும் ஒரே தன்மையனாய் இருப்பான். இது பற்றியே, இறைவனை "மெய்ப்பொருள்" என்றும் "செம்பொருள்" என்றும் பெரியோர் வழங்குவர். குணம், குறி, பெயர், செயல், ஆகிய ஒன்றும் இல்லாமல், தன் நிலையில் தானாகவே விளங்கும் ஒரு பொருள்தான் இறைவன். அது மெய்ப்பொருளின் சொரூப நிலை ஆகும்.
கருத்துரை
அன்பர் மனத்தில் உறையும் முருகா! தேவரீரை வழிபட்டு உய்ய அருள்.
No comments:
Post a Comment