“பிறக்கும்போ தொருபொருளும் கொடுவந்த
தில்லை; உயிர் பிரிந்து மண்மேல்
இறக்கும்போ திலுங்கொண்டு போவதிலை
என்று, சும்மா இருந்து வீணே
சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற்
சேராமல், தேசம் எல்லாம்
பறக்குங்கா கமதிருக்கும் கொம்பறியா
தெனத்திரிந்து பயன்பெ றாரே!”
இதன் பொருள் –
பிறக்கும்போது ஒரு பொருளும் கொடு வந்தது இல்லை - பிறக்கும் காலத்தில் ஒரு பொருளையும் நாம் கொண்டு வந்தது இல்லை, உயிர் பிரிந்து மண்மேல் இறக்கும் போதிலும் கொண்டு போவது இலை - உயிர் நீங்கி உலகத்தில் சாகும் காலத்திலும் எதையும் எடுத்துச் செல்வதும் இல்லை, என்று வீணே சும்மா இருந்து – என்று நினைந்து எதையும் செய்யாமல் வீணே காலத்தைக் கழித்து இருந்து, சிறக்கும் தாயினும் அருள்வார் தண்டலையிற் சேராமல் - சிறப்புடைய அன்னையினும் அருள்புரியும் இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருத்தண்டலை என்னும் திருத்தலத்தை அடைந்து வணங்காமல், பறக்கும் காகம் அது இருக்கும் கொம்பு அறியாது என - பறக்கும் இயல்புடைய காகமானது, தான் அமர்ந்து இருக்க ஒரு கொம்பையும் நிலையாகப் பெறாது என்பதைப்போல, தேசம் எல்லாம் திரிந்து பயன் பெறார் - உலகெங்கும் சுற்றி அலைந்து (சிலர்) நலம் பெறாதவர் ஆயினார்.
பிறந்தபோது எதையும் கொண்டு வந்த்து இல்லை, இறக்கும்போதும் எதையும் கொண்டு செல்வதும் இல்லை என்று சிலர் வாய் வேதாந்தம் பேசிக் கொண்டு, வாழுகின்ற காலத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு, அனுபவிப்பதற்காகவே பொருளைத் தேடி, மனம் விரும்புகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை ஆணிகலன்களை அணிந்து மகிழ்ச்சியாக வாழ்வதே சுகம் என்று வாழ்ந்து, நல்வினை எதையும் செய்யாமல் வீணில் காலத்தைக் கழித்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்.
கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள் உலகாயதர்கள் எனப்படுவர். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுப்பர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்பர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால் இந்த உடம்பு ஆனது என்பர். உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய். இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.
இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதோர் மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பு உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.
ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர். கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கயவர்கள். அவரது கூட்டுறவு கூடாது என்பதை, வள்ளல்பெருமான் பின்வரும் பாடலால் காட்டினார்.
"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
பசுஏது, பாசம்ஏது,
பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
மனம்விரும்பு உணவு உண்டு, நல்
வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!"
உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் அறிவுறுத்தினார்.
"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட
மேல்வீடு சொர்க்கம் என்றும்,
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்
பொய்வேடம் மிகுதிகாட்டி,
பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்
போக்கிலே போகவிட்டு,
தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,
தரணிமிசை லோகாயதன்
சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்
மரபில்வரு மௌனகுருவே." -- தாயுமானாவர்.
காகத்திற்கு எந்த மரக்கிளையும் நிலையானது அல்ல என்பது சிந்தனைக்கு உரியது. உயிருக்கு வாய்த்த இந்த உடம்பு நிலையானது அல்ல. உடம்பே நிலையானது என்பவர், பிறப்பு இறப்பு இரண்டுக்கும் உரியவர் ஆகிறார். உயிருக்கு நிலையான இடம் வீடுதான். நிலையான வீட்டை உதவும் இறைவனை வணங்க வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment