திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பொருள் வரும் வழிகளை விரியச் செய்து, அப் பொருளால் செல்வங்களை வளர்த்து, பொருள் வரும் வழிகளுக்கும், பொருளுக்கும், செல்வங்களுக்கும் வந்த இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் தொழிலை மேற்கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.
மேலே இறைமாட்சி என்னும் அதிகாரத்தில், 385-ஆவது திருக்குறளில் அறிவுறுத்தியபடி, பொருள்களை உண்டுபண்ணுதலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருள்களைக் காத்தலும், காத்த பொருளை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டாகச் செலவழித்தலும் ஆகிய காரியங்களைச் செய்ய வேண்டுமாதலால், வினை செய்பவன் பொருள்களை வளர்க்கவேண்டுமானால், உழவு செய்தல், பசுக் காத்தல், வாணிபம் செய்தல் ஆகிய பொருள் வரும் வழிகளை விருத்தி செய்தல் வேண்டும். அவ்விதம் விருத்தி செய்த பொருள்களுக்கு மற்றவர்களால் துன்பம் வருமானால், அத் துன்பத்தினை நீக்கிக் காத்தல் வேண்டும். இவ்விதம் செயல் புரிபவனையே தேர்ந்து தொழிலில் ஈடுபடுத்தவேண்டும்.
இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்..
“வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை
ஆராய்வான் செய்க வினை.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வாரி பெருக்கி --- பொருள்வரு வாயில்களை விரியச் செய்து,
வளம் படுத்து --- அப்பொருளால் செல்வங்களை வளர்த்து,
உற்றவை ஆராய்வான் --- அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன்,
வினை செய்க --- அரசனுக்கு வினை செய்க.
(வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....
“புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பு அற நாடின் வேறு அல்ல; --- புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவர் அன்பும்
வாரி அறவே அறும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறு அல்ல --- புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்த வேசையரின் தொடர்பும் விரைதல் இன்றி ஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல; புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரி அறவே அறும் --- புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்; அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்க நீங்கிவிடும்.
பொருட் பெண்டிர், பொருளை மட்டும் கொண்டு பொருள் கொடுப்பாரைக் கொள்ளாதவராகலின், அவர் தொடர்பு கொள்ளத் தக்கதல்ல. பொருட்பெண்டிரால் பொருள் கரையும். பொருள் வரும் வழி விரிவடையாது.
நதியில் புது வெள்ளம் வருகின்ற போது, ஏற்கெனவே உள்ள நீரையும் அடித்துச் சென்று விடும். பொதுமாதர் தொடர்பும் அப்படியே உள்ள பொருள் அனைத்தையும் வற்றச் செய்து விடும்.
No comments:
Post a Comment