52. தெரிந்து வினையாடல் - 05. அறிந்தாற்றி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒரு தொழிலைச் செய்யும் உபாயங்களை அறிந்து செய்யும்போது, தொழிலைச் செய்வதாலும், அதற்கு உண்டாகும் இடையூறுகளாலும் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு செய்பவனை அல்லாமல், செய்யத் தகுந்தவன் என்று பிறரைக் கொள்ளுதல் கூடாது" என்கின்றார் நாயனார்.

ஒரு தொழிலைச் செய்யும் போது, அதனால் துன்பம் வருமாயினும், இடையூறு வருமாயினும் பொறுத்துக் கொண்டு, எடுத்த காரியத்தை முடித்துக் காட்டவேண்டும். வேண்டியவன் என்னும் ஒரு காரணத்தால், ஒரு தொழிலை அறிவும் ஆற்றலும் இல்லாத ஒருவனிடம் ஒப்படைத்தால், தொழில் முடியாததோடு, கேடும் வரும்.

இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“அறிந்து ஆற்றிச் செய்கிற்பார்க்கு அல்லால், வினைதான்

சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் --- செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானை அல்லது, 

வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று --- வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.

('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன்இனிதே;

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;

ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வு இனியது இல்.” --- இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே - (ஒரு தொழிலைச்) செய்ய மாட்டாதானை, அதனைச் செய் என, வருத்தாமை மிகவும் இனிது. கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே - யமனது வருகையின் நிச்சயத்தை சிந்தித்து நினைத்து வாழ்வது இனிது. ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வு இனியது இல் - செல்வம் அழிந்தாலும், பாவச் சொற்களைச் சொல்லாமைக்கு ஏதுவாகிய , தெளிவினும் தெளிவு பிறிதொன்றில்லை.


“தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் திறன் இலா

முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்;

கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும்

மற்றதன் பால் தேம்பல் நன்று.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் - தெளிவாக அறிந்த அறிவு உடையாரைத் தேடி வைப்பது அல்லாமல், திறன் இலா முற்றலை - திறமையில்லாத வயது முதிர்ந்தவர்களை, நாடி கருமம் செய வையார் - ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்து உடையார்), ஒன்று கற்று அறிந்து கசடு அற்ற காலையும் - ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும், மற்று அதன்பால் – குணம் இல்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு, தேம்பல் நன்று - மெலிதலே நல்லது.

காரியம் முடியவேண்டும் என்று நினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும்.


“தம்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன

வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ?

மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ?

நந்துழுத எல்லாம் கணக்கு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மைந்து இறைகொண்ட மலைமார்ப - வலிமை தங்கிய மலைபோன்ற மார்பை உடையவனே! நந்து உழுத எல்லாம் கணக்கு ஆகுமோ - நத்தையால் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? (ஆகா) (அதுபோல), தம்தொழில் ஆற்றும் தகைமையார் - தம்முடைய தொழில் திறமையுற நடாத்தும் தன்மை உடையார், செய்வன - செய்கின்ற செயல்கள், வெம் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ - கொடுஞ்செயலை உடையாராகிய சினம் உடையவர்களுக்குச் செய்தல் இயலுமோ? (இயலாது).

மேன்மக்கள் செய்யும் காரியங்கள் கீழ்மக்களுக்குச் செய்ய இயலா.


No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...