“கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன,
குலவும் ஆட்டின்கண் அதர்தான்
கூடப் பிறந்தென்ன, தண்ணீரி னுடனே
கொடும்பாசி உற்றும்என்ன,
மாகர்உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்தென்ன,
வல்இரும் பில்துருத்தான்
வந்தே பிறந்தென்ன, நெடுமரந் தனில்மொக்குள்
வளமொடு பிறந்தென்ன,உண்
பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்தென்ன,
பன்னுமொரு தாய்வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்தென்ன,
பலன்ஏதும் இல்லை அன்றோ?
மாகனக மேருவைச் சிலையென வளைத்தசிவன்
மைந்தனென வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் —
மாகனக மேருவைச் சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா! - பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்த சிவபிரானுக்குத் திருமகனாகத் தோன்றிய முருகப் பெருமானே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன? - தாமரையாளுடன் (இலக்குமியுடன்) மூதேவி பிறந்ததனால் (மூதேவிக்கு) என்ன பயன்?
குலவும் ஆட்டின் கண் அதர்தான் கூடப் பிறந்து என்ன?- விளங்கும் ஆட்டினிடத்தில் (கழுத்தில் நீண்டு தொங்கும்) அலையும் தாடி உடன் பிறந்து என்ன பயன்?,
தண்ணீரினுடனே கொடும்பாசி உற்றும் என்ன? - தண்ணீரில் கொடிய பாசி தோன்றிப் பயன் என்ன?
மாகர் உணும் அமுதினோடு நஞ்சம் பிறந்துஎன்ன? - வானவர் உண்ணும் அமுதத்தோடு (பாற்கடலில்) ஆலகால விடம் தோன்றி என்ன பயன்?
வல் இரும்பில் துருத்தான் வந்தே பிறந்து என்ன - உறுதியான இரும்புடன் துரு வந்து தோன்றி என்ன பயன்?
நெடுமரந்தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன - நீண்ட மரத்தினிலே (குமிழி போன்ற) முடிச்சு செழிப்புடன் உண்டானால் என்னபயன்?
உண் பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன - உண்ணும் பதம் மிகுந்த செந்நெல்லுடன் பதர் தோன்றி என்ன பயன்?
பன்னும் ஒரு தாய் வயிற்றில் பண்பு உறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன - சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தாயின் வயிற்றிலே நற்குணமுடைய அறிவாளியுடன் கொடியவர்கள் தோன்றி என்ன பயன்?,
பலன் ஏதும் இல்லை அன்றோ - எவ்வகை நலனும் இல்லை அன்றோ?
நல்லவற்றுடன் ஈயவை தோன்றதலும் இயல்பே. ஆனாலும், நல்லவற்றுடன் தோன்றிய தீயவற்றால் பயன் ஏதும் இல்லை என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment