“கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்,தகு
குழந்தைபல பெறுதலாலும்,
குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலும்,
கொளும்பிதிர்க் கிடுதலாலும்,
தேடியே தெய்வங்க ளுக்கீத லாலும்,
தியாகம் கொடுத்தலாலும்,
சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
சினத்தைத் தவிர்த்தலாலும்,
நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலும்,மிக
நல்வார்த்தை சொல்லலா லும்,
நன்மையே தருமலால் தாழ்ச்சிகள் வரா; இவை
நல்லோர்கள் செயும்முறைமைகாண்!
வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்
வந்துதவி செய்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர!ஈசனே!
இதன் பொருள் ---
மனம் வாடி நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன்வந்து உதவி செய்த முருகா - உளம் சோர்ந்து (திருமுருகாற்றுப்படை என்னும்) தமிழ்ப்பாடலைப் பாடிய நக்கீரதேவர்முன் எழுந்தருளி அருள்புரிந்த முருகப் பெருமானே!,
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சோதரர்கள் கூடியே வாழ்தலாலும் - உடன்பிறந்ததோர் ஒன்றாகக் குடி இருந்து வருவதாலும், தகு குழந்தை பல பெறுதலாலும் - நல்ல மக்கள் பலரைப் பெறுவதாலும், குணமாகவே பிச்சை இட்டு உண்கையாலும் - நற்பண்புடன் பிறருக்குப் பகுத்து உண்டு சாப்பிடுவதாலும், கொ(ள்)ளும் பிதிர்க்கு இடுதலாலும் – ஏற்றுக் கொள்ளும் தென்புலத்தார்க்குக் கொடுப்பதாலும், தெய்வங்களுக்குத் தேடியே ஈதலாலும் - தெய்வங்களை நாடி வழிபாட்டு, தெய்வத் திருப்பணிகளுக்குப் பொருளைக் கொடுப்பதாலும், தியாகம் கொடுத்தலாலும் - வறியோர்க்கு வழங்குவதாலும், சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச் சினத்தைத் தவிர்த்தலாலும் - அறிவில் சிறியோர் புரியும் தப்புகளை மன்னித்துக் கோபம் கொள்ளாமல் விடுதலாலும், நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் - (பெரியோர்களை நாடிச் சென்று அவர்களைப் பணிந்து வணங்குவதாலும், மிக நல்வார்த்தை சொல்லலாலும் - சாலவும் இனிய சொற்களையே பேசுவதாலும், நன்மையே தரும் அ(ல்)லால் தாழ்ச்சிகள் தரா - நன்மையே உண்டாகும் அல்லாது குறைவுகள் உண்டாகமாட்டா; இவை நல்லோர்கள் செய்யும் முறைமை - இவைகள் நல்லோர்களின் இயல்புகள்.
தென்புலத்தார் (பிதிரர்) - நம் முன்னோர்களில் இறந்தவர்கள். அவர்களுக்கு இடுதலாவது அவர்களுடைய ஆன்மா அமைதி அடைய வறியோருக்குக் கொடுத்தல். ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை' என்றார் திருவள்ளுவ நாயனார். தெபுலத்தார் என்னும் சொல்லுக்கு, வ.உ.சி. அவர்கள், அறிவில் சிறந்தோர் என்றே பொருள் கொண்டு உள்ளதும் அறியத் தக்கது.
நக்கீரனுக்கு அருளிய கதை:
கீரம் - சொல், நக்கீரர் - நல்ல இனிய சொற்களை உடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.
சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களையெல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக் குகையில் அடைத்து வைத்து அவர்க்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.
நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.
அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என்ன செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். முன்னொரு காலத்தில் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால், அவன் திருக்கை வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டி 'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையும் காத்தருளியது.
“அருவரை திறந்து, வன் சங்க்ராம கற்கிமுகி அபயம் இட, அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி” என்பது அருணகிரிநாதர் அருளிய பூதவேதாள வகுப்பு “பழுத்தமுது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை இடித்துவழி காணும்” என்பது அருளகிரிநாதர் அருளிய வேல்வகுப்பு.
“ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,
ஓடிப் பிடித்து, அவரையும்
காராய குன்றத்து அடைத்து,உரிய நியதிக்
கடன் துறை முடிக்க அகலக்
கருதி முருகாறு அவர் உரைத்தருள, நீலக்
கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றம் திறந்து,இவுளி முகியைப்
பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்தகரன் ஊராளி
சிறுதேர் உருட்டி அருளே,
செய செயென அமரர்தொழ, அசுரர் மிடி சிதறுமுனி
சிறுதேர் உருட்டி அருளே." --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.
No comments:
Post a Comment