44. கருடா! சுகமா?

“ஆம்பிள்ளாய்! எனக்கொடுக்கும் பெரியோரை

      அடுத்தவர்கள், அவனிக் கெல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்; நண்ணாரும்

      ஏவல்செய நாளும் வாழ்வார்;

வான்பிள்ளாய்! எனும்மேனித் தண்டலையார்

      பூடணமாய் வளர்த்த நாகம்,

ஏன் பிள்ளாய்! கருடா! நீசுகமோ? என்று

      உரைத்தவிதம் என்ன லாமே!»


இதன் பொருள் –

    பிள்ளாய் – இளைஞனே!  ஆம்  எனக்  கொடுக்கும்  பெரியோரை அடுத்தவர்கள் - முடியும்  என்று  அளிக்கும்  சான்றோரைச் சார்ந்தவர்கள், பிள்ளாய்! அவனிக்கெல்லாம் நாம் அதிகம் என்பர் – இளைஞனே! உலகிலே  நாமே  சிறப்புடையேம்  என்று  நடந்துகொள்வர்! நண்ணாரும் ஏவல்செய நாளும் வாழ்வார் - பகைவரும் தொண்டு புரிய எப்போதும் வாழ்ந்திருப்பர், பிள்ளாய் வான் எனும் மேனித் தண்டலையார் பூடணமாய் வளர்த்த நாகம் – இளைஞனே! வானமே தனது மேனியாக, எங்கும் நிறைந்த திருமேனியை உடைய திருத்தண்டலையிலே எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் அணிகலனாக வாழ்கின்ற பாம்பு, ஏன் பிள்ளாய் கருடா நீ சுகமோ? என்று உரைத்தவிதம் என்னலாமே - ‘என்ன பிள்ளாய்! கருடனே? நீ நலந்தானோ?' என்று வினவிய வகையாக அதனைக் கூறலாம்.

      பிள்ளை - இளைஞன். ‘பிள்ளை'  என்பது  விளியேற்றால், ‘பிள்ளாய்' என ஆகும். நண்ணார் - பகைவர். வானம் போல எங்கும்  நிறைந்தவர் இறைவர். ஆகையால், ‘வான் எனும் மேனித் தண்டலையார்' என்றார். கருடனைக் கண்டால் பாம்பு நடுங்குவது இயற்கை. அது இறைவனைப் புகலாக அடைந்ததால், கருடனை எளிமையாக நோக்கி நலன் வினவியது. ‘ஏன் கருடா! சுகமா?' என்றால் ‘இருக்கும் இடத்திலேயே இருந்தால் சுகம்' என்று கூறுவது பழமொழி. பெரியோர் நட்பு வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

“தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை, செற்றார் செயக் கிடந்தது இல்” என்னும் திருக்குறள் காண்க. சான்றோர் இனத்துள் தானும் ஒருவனாக வாழவல்லவனைப் பகைவர் எவரும் அவனைச் செய்வதற்கு உரியது எதுவும் இல்லை. “பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே” என்பது திருமூலர் வாக்கு. “பெரியாரொடு நட்பு இனிது” என்பது சுந்தரர் தேவாரம்.


No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...