40. காரிகை கற்றுக் கவி சொல்ல வேண்டும்.

பாரதியார்' ‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்

     கல்வியினிற் பழக்கம் இல்லார்!

சீரறியார் தளையறியார் பல்லக்கே

     றுவர்! புலமை செலுத்திக் கொள்வார்!

ஆரணியும் தண்டலைநீள் நெறியாரே!

     இலக்கணநூல் அறியா ரேனும்

காரிகையா கிலுங்கற்றுக் கவிசொல்லார்,

     பேரிகொட்டக் கடவர் தாமே.


இதன் பொருள்


ஆர் அணியும் தண்டலைநீள் நெறியாரே - ஆத்திமாலையை அணிந்த, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்நீள்நெறிஎன்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே!


கல்வியினில் பழக்கம் இல்லார் பாரதியார் அண்ணாவி புலவர் என்பார் - கலையறிவு பழகி அறியாத பயிலாதவர் (சிலர்) தம்மைப் பாரதியார் எனவும், அண்ணாவி எனவும், புலவர் என்றும் (தம்மைப் புகழ்ந்து) சொல்லிக் கொள்வர்; சீர் அறியார், தளை அறியார், பல்லக்கு ஏறுவர், புலமை செலுத்திக்  கொள்வார் - (ஆனால், செய்யுளின்  உறுப்பான) சீரை அறியாதவரும் தளையை உணராதவரும் ஆகிய அவர்  பல்லக்கில் ஏறிக்கொண்டு  புலவர் போல நடந்துகொள்வார்! (இதனை என்ன என்பது?) இலக்கண நூல் அறியாரேனும் -(அவர்கள்) இலக்கண நூலைப் பயிலா விடினும், காரிகையாகிலும் கற்றுக் கவிசொல்லார்  பேரி  கொட்டக்  கடவர் - (யாப்பிலக்கணமான) காரிகை என்னும் நூலையேனும்  படித்துச் செய்யுள் இயற்றும் திறமில்லாத அவர்கள் (வயிற்றுப் பிழைப்புக்காகப்) பறையடித்து வாழ வேண்டும்.


      ஆர் - ஆத்தி :  இக்காலத்தில் பலரும் யாப்பிலக்கணத்தைப் பயிலாமலே பாட்டு எழுதிப் பெயரும்,  புகழும்

பெரும்பொருளும் ஈட்ட எண்ணுகின்றனர். மக்களை நெறிப்படுத்தும் நோக்கத்தை விட, பொருளையும் புகழையும் ஈட்டும் நோக்கமே மேலோங்கி உள்ளது என்று கருதும்படியாக உள்ளது. பாடலின் உயிராகக் கருதப்படும் ஓசையின் உருவாக்கத்தை ஒட்டியாப்பிலக்கணம் வகுக்கப்பட்டதுபல்வேறு இலக்கியங்களைப் பயின்ற பயிற்சியும், யாப்பிலக்கண அறிவும் உடையவர்களால் மட்டும் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைக்க முடியும். இதில் சாதித்தல் அரிது என்பதை, “காரிகை கற்றுக் கவி பாடுவதினும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றுஎன்னும் சொற்றடர் உணர்த்தும்.  பிற்காலத்தில் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்ட அச்சு மற்றும் பிறவகை நூல்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றங்களும், யாப்பிலக்கணத்தைப் புறந்தள்ளி, கவிதைகளைப் புனையும் நிலைக்கு வித்திட்டது. யாப்பிலக்கணத்தைக் கல்லாமலே, கவிதை புனையும் பழக்கம், நாளடைவில் வழக்கமாகிப் போய்விட்டது. காரிகை கற்றுக் கவி பாடவேண்டும், காரிகை கற்றுக்  கவிபாடுவதினும்  பேரிகை  கொட்டிப்  பிழைப்பது  நன்றே என்பதனையும்  உணராதவர்களின்  இழிவை உணர்த்த, ‘காரிகை யாகிலும் கற்றுக் கவி சொல்லார்' என்றார். சிலர் காரிகை கற்றாலும் கவிசொல்ல முடியாமல் இயற்கைக் கவிவளம் இல்லாமையால்  திகைக்கின்றனர். சிலர்  யாப்பிலக்கணம் கல்லாமலே பாடல் எழுதத் தொடங்கிவிடுகின்றனர். 


No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...