“அன்னதா னஞ்செய்தல், பெரியோர்சொல் வழிநிற்றல்,
ஆபத்தில் வந்தபேர்க்கு
அபயம் கொடுத்திடுதல், நல்லினம் சேர்ந்திடுதல்,
ஆசிரியன் வழிநின்றவன்
சொன்னமொழி தவறாது செய்திடுதல், தாய்தந்தை
துணையடி அருச்சனைசெயல்,
சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி
தொல்புவியில் நாட்டியிடுதல்,
மன்னரைச் சேர்ந்தொழுகல், கற்புடைய மனைவியொடு
வைகினும் தாமரையிலை
மருவுநீர் எனவுறுதல், இவையெலாம் மேலவர்தம்
மாண்பென் றுரைப்பர் அன்றோ!
வன்னமயில் மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்
வலமாக வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே !புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் ---
வன்ன மயில்மேல் இவர்ந்து இவ்வுலகை ஒருநொடியில் வலமாக வந்த முருகா - அழகிய மயில்மேல் அமர்ந்து இந்த உலகத்தை ஒரு நொடிப் பொழுதில் வலமாக வந்த முருகப் பெருமானே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
அன்னதானம் செய்தல் - (பசித்தவருக்கு) உணவு கொடுத்தல், பெரியோர் சொல்வழி நிற்றல் - பெரியோர் கூறிய நெறியிலே செல்லுதல், ஆபத்தில் வந்தபேர்க்கு அபயம் கொடுத்திடுதல் – இடையூறு என்று வந்தவர்களுக்குப் புகல் அளித்தல், நல் இனம் சேர்ந்திடுதல் - நல்லோருடன் நட்புக்கொள்ளுதல், ஆசிரியன் வழிநின்று அவன் சொன்னமொழி தவறாது செய்திடுதல் - ஆசிரியர் காட்டிய நெறியிலே தானும் சென்று, அவர் ஆணைப்படி நடத்தல், தாய் தந்தை துணை அடி அருச்சனை செயல் - பெற்றோரின் இரு தாள்களிலும் மலரிட்டு வணங்குதல், உயிர் போகினும் சோம்பல் இல்லாமல் வாய்மை மொழி தொல்புவியில் நாட்டியிடுதல் – உயிர் போவதானாலும் சோர்வு இன்றி உண்மை மொழியை (இப்) பழைய உலகிலே நிலைநிறுத்தல், மன்னரைச் சேர்ந்தொழுகல் - அரசரின் ஆதரவிலே வாழ்க்கையை நடத்துதல், கற்புடைய மனைவியொடு மருவினும் - கற்பில் சிறந்த இல்லாளுடன் வாழ்ந்தாலும், தாமரை இலை மருவுநீர் என உறுதல் – தாமரை இலையிலே கலந்த நீரைப் போல(ப் பற்றின்றி) இருத்தல், இவையெலாம் - இவை யாவும், மேலவர்தம் மாண்பு என்று உரைப்பர் - பெரியோருடைய நல்லியல்பு என்று கூறுவர்.
No comments:
Post a Comment