தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

 


“குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்

     குணம்போலும், ஈக்கள் எல்லாம்

கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்

     கூடுய்த்த நறவுபோலும்,


பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற

     பாலன்என் றுட்கருதியே

பாராட்டி முத்தம்இட் டன்பாய் வளர்த்திடும்

     பண்பிலாப் புருடர்போலும்,


துயிலின்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்

     தொட்டுத் தெரித்திடாமல்,

தொகைபண்ணி வைத்திடுவர்; கைக்கொண்டு போகவரு

     சொந்தமா னவர்வேறுகாண்!


வயிரமொடு சூரனைச் சங்கார மேசெய்து

     வானவர்க் குதவுதலைவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் –

சூரனை வயிரமொடு சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா - சூரபதுமனைச் சினந்து சங்காரம் செய்து தேவர்களுக்குத் துணைபுரிந்த முதல்வரே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம்போலும் - குயிலின் முட்டையைத் தன்னுடையது என்று நினைத்துக் காகம் அடைகாக்கும் தன்மையைப் போலும்,

ஈக்கள் எல்லாம் கூடியே தாம் உண்ணவேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் - எல்லா ஈக்களும் சேர்ந்து தாம் பருகவேண்டும் என்று நினைத்து நாள்தோறும் அடையில் கொண்டு வைத்த தேனைப் போலவும், 

பயில் சோரருக்குப் பிறந்திடத் தாம் பெற்ற பாலன் என்று உள் கருதியே - (தம் மனைவியருடன்) கலந்த கள்ளக் காதலருக்குப் பிறந்த பிள்ளையைத் தாங்கள் பெற்ற மகன் என்று மனத்தில் எண்ணி, பாராட்டி முத்தம் இட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – கொண்டாடி, முத்தம் கொடுத்து அன்புடன் வளர்க்கின்ற மனித இயல்பு இல்லாத ஆடவர்களைப் போலவும், 

துயில் இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால் தொட்டுத் தெரித்திடாமல் - தூக்கம் இல்லாமல் செல்வத்தை ஈட்டி ஒருவர்க்கும் அணுவளவும் கொடுக்காமல், தொகை பண்ணி வைத்திடுவர் - தொகை தொகையாக எண்ணி வைத்திடுவர், கைக்கொண்டு போக வரு சொந்தமானவர் வேறு - (அப்பொருளை) எடுத்துக்கொண்டு போக வருகின்ற உரிமையாளர் வேறு ஆவார்.


விளக்கம் –

  பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணாமற் சேர்த்து வைப்பவருடைய பொருளை, அவர் வாழும் காலத்திலேயே பிறர் அனுபவிக்க நேரும். உடம்பின் நிலையாமை மற்றும் செல்வத்தின் நிலையாமை குறித்த இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது. 

ஒருவனுக்கு அளவுபடாத செல்வம் வருவது, கூத்தாடும் இடத்தில் கூத்தினைக் காண, ஒவ்வொருவராக வந்து திரள்வது போல சிறிது சிறிதாக வந்து பெருகும். அப்படி வந்த செல்வமானது ஒழிந்து போகும் காலம் வரும்போது, கூத்து முடிந்தவுடன், மக்கள் ஒருசேரப் போய்விடுவது போலப் போய் ஒழியும். பெரும் செல்வமாகிய துறக்கச் செல்வமும், ஒருவன் சிறுகச் சிறுகச் செய்து வந்த நல்வினை காரணமாக அவனை வந்து அடையும். அந்த நல்வினை ஒழிந்து, தீவினை வந்த காலத்து, அது முற்றுமாகப் போய்விடும். கூத்தாடுகின்ற இடமாக இருந்தாலும், கூத்து நடக்க இல்லையானால் ஒருவரும் வருவதில்லை.  நல்வினை இல்லையானால் செல்வம் வருவதில்லை.

    “கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெரும்செல்வம், போக்கும் அது விளிந்து அற்று” என்பது நாயனார் அருளிய திருக்குறள். எனவே, செல்வம் இருக்கின்ற காலத்திலேயே விரைந்து அறம் செய்க என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.


    குயில்களுக்கு கூடு கட்டத் தெரியாது, அதனால் குயில் தான் இட்ட முட்டையை காக்கையின் கூட்டிலேயே இட்டு விடுகிறது. காக்கைகள், குயிலின் முட்டையை தன் முட்டை என்று நினைத்து, அதனைத் தன் முட்டைகளுடனே சேர்த்து அடைகாக்கும். குயிலின் குஞ்சு, காக்கையின் குஞ்சிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், காக்கை அதனைத் தன் குஞ்சு போலவே உணவளித்து வளர்க்கும். இதனைத் திருமூல நாயனார் பின்வரும் மந்திரத்தால் காட்டுகின்றார்.

“குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் 

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் 

இயக்கில்லை போக்கில்லை ஏன்என்பதில்லை 

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.”

குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போகமயக்கத்தால் இயங்காமலும், போக்கு இல்லாமலும், ஏன் என்று கேட்கா மலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்றாள்.

    மலர்கள் தோறும் தேனைத் தேர்ந்து சிறிது சிறிதாக எடுத்துக் கூடுகளில் தேனீக்கள் சேகரிக்கின்றன. ஆனால் அந்தத் தேனைத் தேனீக்கள் அனுபவிப்பது இல்லை. தேனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். தேனீக்கள் தேனை இழக்கின்றன. அதுபோல் பொருளைத் தேடி வைத்தவர்கள் செல்வத்தின் நிலையாமை காரணமாகச் செல்வத்தை இழக்கிறார்கள். செல்வம் இருந்த காலத்தில் இவர்கள் நல்ல அறம் செய்யவில்லை. இல்லாதவர்களுக்குக் கொடுக்கவில்லை. செல்வம் இழந்த நிலையில் அவர்களும் அனுபவிக்க இயலாது. தேனீக்கள் தேன் சேகரித்து இழக்கும் செயலைக் காட்டி விரைந்து அறம் செய்வதை வலியுறுத்தும் நாலடியார் பாடல் பின்வருமாறு ---

“உடாஅதும் உண்ணாஅதும் தம்முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட

உய்த்தீட்டும் தேனீக் கரி.”

ஒருவன் தேடி வைத்த பொருள், அவன் வாழுகின்ற காலத்திலேயே வேறு ஒருவனுக்குச் சொந்தமாகலாம். எனவே, தேடி வைத்த பொருள் உள்ளபோதே, நல்ல அறங்களைச் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.  

“....... ...... ..... தூயோய் நின்னை,

நல்வினைப் பயன்கொல் நான்கண்டது என,

தையல், கேள்! நின் தாதையும் தாயும்

செய்த தீவினையில் செழுநகர் கேடுஉறத்

துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன்

அன்புகொள் அறத்திற்கு அருகனேன், ஆதலின்

மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து,

தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே,

மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்.” ---  மணிமேகலை, கச்சிமாநகர் புக்க காதை.

இதன் பதவுரை ---

தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என - தூய குணம் செய்கைகளை உடையாய்!  நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி, மேலும் கூறலுற்று, தையல் கேள் – நங்கையே கேட்பயாக. நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்தமை கேட்டு - உனது தந்தையும் தாயும் முற்பிறப்பில் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரை மாநகர் தீக்கிரையாகிக் கேடு எய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் - புத்த தேவனின் அருள் அறத்தினைப் புரியும் தகுதியுடையேன், ஆகலின் – ஆதலாலே, மனைத் திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென அறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத்தனை ஆயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத்தினை உடைய பெருந்தவம் செய்யலானேன்.

முற்பிறப்பில் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றார் என்பதை, "செய்த தீவினையின் துன்புற" என்றும், அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினார். 


“சுழல் சகடக் கால்போலும், தோன்றியே அழிமின் போலும்,

அழன்மன வேசை போலும்,  அருநிதி மேவிநீங்கும்;

பழமைபோல் அதனைநம்பிப்  பழியுறச் செருக்கல்,மேக

நிழலினை நம்பிக் கைக்கொள்  நெடுங்குடை நீத்தல் ஒப்பே.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

உருளும் வண்டியின் உருளையின் கால்போலவும், தோன்றி மறையும் மின்னைப் போலவும், நச்சு உள்ளமுடைய பொதுமகள் போலவும், செல்வம் பொருந்தி நீங்கும். அச் செல்வத்தை அழியாது இருக்கும் என்று நம்பி, வசை பெருகும்படி தற்பெருமை கொள்ளுதல், மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கிவிடுவதை ஒக்கும்.


“புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற

செல்வத்தின் பன்மைத் தன்மை 

நிலைமேலும் இனி உண்டே? 'நீர் மேலைக் 

கோலம்' எனும் நீர்மைத்து அன்றே, 

தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் 

படர்புறத்தும் தாவி ஏறி, 

மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் 

வானரங்கள், வரம்பு இலாத.”   ---  கம்பராமாயணம், இராவணன் வதைப் படலம்.


இதன் பதவுரை ---

வரம்பிலாத வானரங்கள் - அளவற்ற குரங்குகள்; மலைமேல் நின்று ஆடுவபோல் - மலை ஒன்றின் மேல் நின்று (மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல;  தலைமேலும் தோள்மேலும் தட முதுகின் படர் புறத்தும் - இராவணேசுவரனுடைய தலைகள் மேலும், தோள்கள் மேலும், அகன்ற முதுகின் விசாலப் பரப்பின் மீதும்; தாவி ஏறி - தாவிக் குதித்து ஏறி;  ஆடின - நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து -இழிந்த புலைத் தன்மை உடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு ஒருப்படும்;  பொது நின்ற செல்வத்தின் - (உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும் தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை  - இழிந்த தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ? - இராவணன் வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில் உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து  அன்றே - (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேல் குமிழியின் (நிலையிலாக்) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

முக்கோடி வாழ்நாளும், முயன்று உடைய பெருந்தவமும், முதல்வன் முன் நாள், எக்கோடியாராலும் வெல்லப்படாய்  எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் கொண்டிருந்த இராவணன், எல்லாம் தொலைந்து வீழ்ந்து கிடக்கின்றான். அவனது உடல் மீது வானரங்கள் தாவிக் குதித்து நடனம் ஆடுகின்றன. செல்வத்தின் நிலையாமைக்கு உவமை இதுவே என்பது குறித்து, கவிச்சக்கவர்த்தி, தனது கூற்றாக இப்படிக் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...