89. பயனற்ற உறுப்புக்கள்

தேவா லயஞ்சுற்றி டாதகால் என்னகால்

     தெரிசியாக் கண்என்னகண்

தினமுமே நின்கமல பாதத்தை நினையாத

     சிந்தைதான் என்னசிந்தை


மேவா காம்சிவ புராண மவை கேளாமல்

     விட்டசெவி என்ன செவிகள்

விமலனை வணங்காத சென்னிஎன் சென்னிபணி

     விடைசெயாக் கையென்னகை


நாவார நினையேத்தி டாதவாய் என்னவாய்

     நல்தீர்த்தம் மூழ்காவுடல்

நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்

     நண்ணினாற் பலனேதுகாண்


மாவாகி வேலைதனில் வருசூரன் மார்புருவ

     வடிவேலை விட்டமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் —-


வேலைதனில் மாஆகி வருசூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா! - கடல் நடுவிலே மாமரமாகி வந்த சூரபதல் ன் மார்பிற்படும்படி வடிவேலை விடுத்தருளிய முருகப் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


தேவ ஆலயம் சுற்றிடாத கால் என்ன கால்? - இறைவன் எழுந்தருளி உள்ள திருக்கோயிலை வலம் வராத கால் கால் அல்ல; தெரிசியாக் கண் என்ன கண்? - காணாத கண் பயனற்ற கண்; தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை? - நாடோறும் உன் தாமரைத் திருத்தாள்களை எண்ணாத உள்ளம் பயனற்றது; மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள்? - பொருந்திய சைவ ஆகமங்களையும் சிவபுராணங்களையும் கேளாது விலகும் செவிகள் பயனற்றவை; விமலனை வணங்காத சென்னி என் சென்னி - குற்றமற்ற சிவபரம்பொருளை வணங்காத தலை பயனுடையது அல்ல; பணிவிடை செயாக் கை என்ன கை? - தொண்டு செய்யாத கைகள் பயனற்றவை; நாவு ஆர நினை ஏத்திடாத வாய் என்ன வாய்? - நா நிறைய உன்னை வாழ்த்தாத வாய் பயனற்றது; நானிலத்து நல்தீர்த்தம் மூழ்கா உடல் என்ன உடல்? - உலகிலே தூய சிவதீர்த்தங்களில் மூழ்காத உடம்பால் பயனில்லை; பாவி ஆகிய சனனம் நண்ணினால் பலன் ஏது? - பாவத் தன்மை பொருந்திய இத்தகைய பிறவி எடுத்ததனாலே எப்பயனும் இல்லை.


     விளக்கம்தேவ + ஆலயம்: தேவாலயம். சிவபுராணம் என்றதனால் ஆகமமும் கோயிலும் பிறவும் சிவத்தொடர்பு ஆயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகைப்படும். ஆகையால் நிலம் நானிலம் ஆயிற்று. நான்கு + நிலம்: நானிலம்.


     இறைவனை வழிபட்டு உய்வதற்கே மனித உடம்பு வாய்த்தது. வழிபடாத பிறவி பயனற்றது என்பது சொல்லப்பட்டது.


கோள்இல் பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. திருக்குறள்.


எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள், தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளுதல் இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல என்கிறார் திருவள்ளுவ நாயனார். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதும் கொள்ளப்படும். காணும் தன்மை இல்லாத குருட்டுக் கண் பயன்றறது போலவே, வணங்காத தலையும் பயன்றறது என்றார். இனம் பற்றி, வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனற்றவை எனவும் கொள்ளவேண்டும் என்பது கூறப்பட்டது. எண் சாண் உடம்பிற்குத் தலையே முதன்மை என்பதால், திருவள்ளுவ தேவர், தலையைக் குறிப்பட்டுப் பாடினார்.


இறைவனை வணங்குவதற்குத் தான் தலை. அவனை வாழ்த்துவதற்குத் தான் வாய். அவன் திருவடிகளை வணங்கிக் கூப்புவதற்குத் தான் கை. திரு அங்கமாலை என்னும் திருப்பதிகம் அப்பர் பெருமானாரால் காட்டப் பெற்றது. உடல் உறுப்புக்களைப் பற்றிப் பாடப் பெற்றது. அதில், தலை வணங்கவேண்டும், கண்கள் காண வேண்டும், செவிகள் கேட்க வேண்டும், மூக்கு முரல வேண்டும், வாய்வாழ்த்த வேண்டும், நெஞ்சம் நினைய வேண்டும், கைகள் கூப்ப வேண்டும், உடம்பு இறைவன் திருக்கோயிலை வலம் வரவேண்டும், கால்கள் இறைவனுடைய திருக்கோயிலை சூழ வேண்டும் என்று அங்க உறுப்புக்களின் பயனைக் காட்டிப் பாடி இருப்பார்.  


திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே  கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே”, கண்இமைத்துக் காண்பார்தம் கண்என்ன கண்ணே  நாராயணாவென்னா நாவென்ன நாவேஎனஞ் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சிழர் குரவைப் பகுதியில் காட்டப்பட்டு உள்ளது.


ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண் எல்லாம் காணாத கண்களே”, “ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே”, ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளேஎனத் திருஞானசம்பந்தப் பெருமானார் பாடியள்ள திருப்பதிகத்தையும் காண்க.


வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

 தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

 சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

 வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.” அப்பர் தேவாரம்.


வள்ளற்பெருமானார் பாடியுள்ள பின் வரும் பாடல்களையும் கருத்தில் கொள்க.


எந்தை! நினை வாழ்த்தாத பேயர் வாய், கூழுக்கும்

ஏக்கு அற்று இருக்கும் வெறுவாய்;

எங்கள் பெருமான்! உனை வணங்காத மூடர் தலை,

இகழ்விறகு எடுக்கும் தலை;

கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர் கண்,

கலம் நீர் சொரிந்த அழு கண்;

கடவுள்! நின் புகழ்தனைக் கேளாத வீணர் செவி,

கைத்து இழவு கேட்கும் செவி;

பந்தம்அற நின்னை எண்ணாப் பாவிகள் தம் நெஞ்சம்,

பகீர் என நடுங்கும் நெஞ்சம்;

பரம! நின் திரு முன்னர் குவியாத வஞ்சர் கை,

பலி ஏற்க நீள் கொடும் கை;

சந்தம்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!”


ஐய! நின் சீர்பேசு செல்வர் வாய், நல்ல தெள்

அமுது உண்டு உவந்த திருவாய்;

அப்ப! நின் திருவடி வணங்கினோர் தலை, முடி

அணிந்து ஓங்கி வாழும் தலை;

மெய்ய! நின் திருமேனி கண்ட புண்ணியர் கண்கள்,

மிக்கஒளி மேவு கண்கள்;

வேல! நின் புகழ் கேட்ட வித்தகர் திருச்செவி,

விழாச் சுபம் கேட்கும் செவி;

துய்ய! நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம், மெய்ச்

சுகரூபமான நெஞ்சம்;

தோன்றல்! உன் திருமுன்னர் குவித்த பெரியோர் கைகள்

சுவர்ணம் இடுகின்ற கைகள்,

சையம்உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உள்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே ---  திருவருட்பா.


வீட்டுத் தலைவ!நின் தாள்வணங்கார் தம் விரிதலை, சும் 

மாட்டுத் தலை, பட்டி மாட்டுத் தலை; புன் வராகத்தலை; 

ஆட்டுத் தலை,வெறி நாய்த்தலை; பாம்பின் அடுந்தலை;கல் 

பூட்டுத் தலை:வெம் புலைத்தலை; நாற்றப் புழுத்தலையே"      --- திருவருட்பா.

No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...