ஆபத்தில் யாருக்கும் உதவ வேண்டும்.

“அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்

     ஆற்றைக் கடத்துவித்தான்;

அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்

     அருச்சுனன் சமர்புரிந்தான்;


தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி

     சரீரம் தனைக்கொடுத்தான்;

தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்

     ததீசிமுது கென்பளித்தான்;


இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்,

     எவருக்கும் ஆபத்திலே

இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்

     திரங்கிரட் சிப்பர் அன்றோ!


வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்

     வளர்சூரன் உடல்கீண்டவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே.”


இதன் பொருள் ---


        வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர்சூரன் உடல் கீண்டவா – வஞ்சகச் செயலுடைய கிரவுஞ்ச மலையையும் தாருகனையும் சிங்கமுகனையும் சூரபதுனையும் உடலைப் பிளந்த வீரரே!  

        மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

முன் அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து ஆற்றைக் கடத்துவித்தான் - முற்காலத்தில் அஞ்சாதே என்று ஒரு நாயைத் தருமபுத்திரன் சுமந்துசென்று ஆற்றைக் கடப்பித்தான்;

        அடைக்கலம் எனும் கயற்கு ஆக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் - அடைக்கலம் என வந்த கயன் என்னும் கந்தருவனைக் காப்பாற்றத் (தன் ஆருயிர் நண்பனும் தலைவனுமான) திருமாலுடன் அருச்சுனன் போரிட்டான்; 

        முன் தஞ்சம் என வந்திடு புறாவுக்குச் சிபி சரீரந்தனைக் கொடுத்தான் -  முற்காலத்தில் அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்றச் சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அதற்கு ஈடாகத் தந்தான்; 

        முன் தடமலைச் சிறகு அரிந்தவனைக் காக்கத் ததீசி முதுகு என்பு அளித்தான் - முன்னாளில் பெரிய மலைகளின் சிறகை வெட்டிய இந்திரனைக் காப்பாற்றத் ததீசிமுனிவன் தன் முதுகெலும்பை (வச்சிராயுதமாக்க) அளித்தான்; 

        இன்சொலுடனே பூத தயவு உடையர் ஆயினோர் – இனிய மொழியும் உயிர்களிடம் இரக்கமும் கொண்டோர், ஆபத்திலே எவருக்கும் தம் இனிய சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ? – ஆபத்து நேர்ந்த காலத்தில் தம் இனிய உயிரைவிட்டாவது இரக்கத்துடன் யாரையும் காப்பாற்றி அருளுவர் அல்லவா?


விளக்கம்

    திருவள்ளுவ நாயனார், அன்பு இல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாதவர்கள் என்பதால், எல்லாப் பொருளையும் தமக்கே உரியவர்கள் அவர்கள் என்றும், அன்பு உடையவர்கள் பொருளால் மட்டும் அல்லாது தமது உடம்பாலும் பிறருக்கு உரியவர்கள் என்றும் காட்டினார். “அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பது திருக்குறள். எலும்பு, ஆகுபெயராய் உடம்பை உணர்த்தியது.

தருமன் கதை

தருமன் சுவர்க்கத்தை நாடிப்போகையில், ஒரு நாய் இழிந்த நாற்றத்துடன் பின் தொடர்ந்தது. அங்குக் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்கமுடியாமல் அது வருந்த நாயைத் தருமன் தன் தோளிலே சுமந்து அக்கரையில் கொண்டுசேர்த்தான்.


அருச்சுனன் கதை:

தன்னைக் கொல்லவேண்டிச் சக்கரத்தை ஏவிய கண்ணனுக்கு அஞ்சிய கயன் என்னும் கத்தருவன் அருச்சுனனைச் சரணடைந்தான். அவனைக் காப்பதற்காகக் கண்ணனோடு அருச்சுனன் போர் செய்ய நேர்ந்தது, முடிவில் இருவரும் சமாதானம் அடைந்து கந்தருவனை விடுவித்தனர்.


சிபிச்சக்கரவர்த்தி கதை:

தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர்தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என்   இரையைக் கொடு'' என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது. மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாது, புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

"புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

   பெருந்தகைதன் புகழில் பூத்த

அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு

   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்

திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.

   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.

விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்

   அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்".


"இன் உயிர்க்கும் இன் உயிராய்

   இரு நிலம் காத்தார் என்று

பொன் உயிர்க்கும் கழலவரை

   யாம் போலும். புகழ்கிற்பாம்?-

மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -

   இவர் குலத்தோன். மென் புறவின்

மன் உயிர்க்கு. தன் உயிரை

   மாறாக வழங்கினனால்"

என்று கம்பநாட்டாழ்வார் போற்றி உள்ளார்.


"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

என்று புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க.


ததீசியின் கதை:

முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும், மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால், அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனே, அவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால், அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால், அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால், அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர், முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், "இந்திரனே! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்? செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும், காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம், எனக்கும் சொந்தம், உனக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப்பை. இருகாலில் செல்லும் பேய்த்தேர், இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தா, இதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார்.  தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியே, அந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்து, அதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்து, பல்லுயிரையும் காத்தான்.  

பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அங்ஙனம் இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல், தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு வேண்டா கடப்பாடு, மாரி மாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி பிரதி உபகாரம் வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி செய்வார்கள்.


No comments:

Post a Comment

ஆபத்தில் யாருக்கும் உதவ வேண்டும்.

“அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்      ஆற்றைக் கடத்துவித்தான்; அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்      அருச்சுனன் சமர்புரிந்தான்; தஞ்ச...