கைவிடத் தகாதவர்கள்

“அன்னைசுற் றங்களையும், அற்றைநாள் முதலாக

     அடுத்துவரு பழையோரையும்,

அடுபகைவ ரில்தப்பி வந்தவொரு வேந்தனையும்,

     அன்பான பெரியோரையும்,


தன்னைநம் பினவரையும், ஏழையா னவரையும்,

     சார்ந்தமறை யோர்தம்மையும்,

தருணம்இது என்றுநல் ஆபத்து வேளையில்

     சரணம்பு குந்தோரையும்,


நன்னயம தாகமுன் உதவிசெய் தோரையும்,

     நாளும்த னக்குறுதியாய்

நத்துசே வகனையும், காப்பது அல்லாது,கை

     நழுவவிடல் ஆகாதுகாண்.


மன்அயிலும் இனியசெஞ் சேவலும் செங்கைமலர்

     வைத்தசர வண!பூபனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!”


இதன் பொருள் ---


மன் அயிலும், இனிய செஞ்சேவலும் செங்கைமலர் வைத்த சரவண பூபனே - பொருத்தமான வேலையும் அழகிய சிவந்த சேவற்கொடியையும் சிவந்த மலர்க்கரங்களில் வைத்திருக்கும் சரவணனே! உலக முதல்வனே!, 


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


அன்னை சுற்றங்களையும் – பெற்ற தாயையும், சார்ந்த உறவினரையும், 


அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் - (நாம் அறிவு பெற்ற) அந்தக் காலத்திலிருந்து நம்மைச் சார்ந்து வரும் பழைமையானவர்களையும், 


அடு பகைவரில் தப்பிவந்த ஒரு வேந்தனையும் – போர் புரியும் பகைவர் கூட்டத்திலிருந்து பிரிந்து (அடைக்கலம் என்று) வந்த ஓர் அரசனையும், 


அன்பான பெரியோரையும் - அன்புடைய பெரியோர்களையும்,


 தன்னை நம்பினவரையும் – தன் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும், 


ஏழையானவரையும் – வறுமை நிலையில் உள்ளவர்களையும், 


சார்ந்த மறையோர் தம்மையும் – தம்மை வந்து சார்ந்த மறையவர்களையும், 


தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம் புகுந்தோரையும் - (ஆதரிக்க வேண்டிய) சமயம் இது எனக் கருதி துன்பம் நேர்ந்தபோது அடைக்கலமாக வந்து அடைந்தவர்களையும், 


நல் நயமதாக முன் உதவி செய்தோரையும் - மிகவும் நன்றாக முன்னொரு காலத்தில் உதவி புரிந்தவர்களையும், 


நாளும் தனக்கு உறுதியாய் நத்து சேவகனையும் - எப்போதும் தனக்கு நன்மை செய்பவனாய் விரும்பி ஒழுகும் பணியாளனையும், 


காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது - ஆதரிக்க வேண்டுமே அன்றிக்  கைவிடுதல் கூடாது.


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...