51. சாகும் காலத்தில் சங்கரா

“வாங்காலம் உண்டசெழுந் தண்டலையார்

     அடிபோற்றி வணங்கி நாடிப்

போங்காலம் வருமுன்னே புண்ணியம்செய்

     தரியகதி பொருந்து றாமல்

ஆங்காலம் உள்ளதெல்லாம் விபசாரம்

     ஆகிஅறி வழிந்து வீணே

சாங்காலம் சங்கரா! சங்கரா!

     எனின்வருமோ தருமந்தானே!”


இதன் பொருள் ---

    வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார் அடிபோற்றி வணங்கி நாடி - எடுத்த நஞ்சினைப் பருகிய, வளமிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரின் திருவடியை வழிபட்டு, ஆராய்ந்து, போங்காலம் வரும் முன்னே புண்ணியம் செய்து – இறக்கும் காலம் வரும் முன்னே புண்ணியச் செயல்களைச் செய்து, அரிய கதி பொருந்துறாமல் - சிறந்த நிலையை அடையாமல், ஆம்காலம் உள்ளது எல்லாம் விபசாரம் ஆகி அறிவு அழிந்து - வாழும் நாள் உள்ளவரைக்கும் தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்து; சாம்காலம் வீணே சங்கார சங்கரா எனின் தருமம் வருமோ - இறக்கும்போது வீணாகச் சங்கரா! சங்கரா! என வேண்டினால் நன்னெறி கிடைத்திடுமோ?

      வாழ்நாளில் ஒருவனுக்கு எதன்மேல் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதுவே இறுதியில் அவன்  நினைவில் இருக்கும். ஆகையால், வாழ்நாள் முழுதும் இல்லாத இறைவன் நினைவு இறுதியில் வராது. மனிதரில் பலருக்கும் வீண்பொழுது கழிப்பது என்றால், வெல்லம் போல் இனிக்கும்.  வாழ்நாள் முழுதும் தவறு செய்தவன் அதன் பயனை அனுபவித்தே ஆகவேண்டும். எனவே, வாழ்நாளை வீணில் கழித்துவிட்டு, சாகின்ற காலம் நெருங்கும்போது, மரண பயத்தால், "சங்கரா! சங்கரா!" என வேண்டிக் கொள்வதால் பயன் இல்லை. வேண்டின்  பயன்பெறல் ஒண்ணாது.

விளைநிலத்தை உழுது பயிரிட்டால் பயன் விளையும். பாழ் நிலத்தை உழுவதால் பயனில்லை. “பாழ்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்கு” என்பது திருவாசகம். பயனில்லாத காரியங்களைச் செய்து பயனறறுப் போதல் அறிவுடைமை ஆகாது.

"காணாமல் வேணது எல்லாம் கத்தலாம், கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதே, நாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தக்கால்,

கீச்சுக்கீச்சு என்னும் கிளி".

இது ஔவைப் பிராட்டியாரின் தனிப் பாடல்களில் ஒன்று.

இதன் பொருள் ---

கற்றவரைக்  காணாதபோது, அவர்கள் இல்லாத இடத்தில், ஒருவர் தாம் விரும்பிவாறு எல்லாம் உரக்கப் பேசலாம். ஆனால், கற்றவர் வந்துவிட்டால், நாணாமல் வாய் திறந்து நல்ல சொற்களைச் சொல்ல இயலாது. கிளி தனக்குக் கற்பித்தவற்றை அஞ்சாமல் பேசும். ஆனால், தனக்குப் பகையான பூனை ஒன்று வருமானால், அச்சத்தால் அது, கீச்சு கீச்சு என்று கதறும். 

நல்லவர்களின் பார்வையில் இல்லாத வரையில் கன்னா பின்னா என்று வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கத் தோன்றும். ஆனால், கற்ற பெரியோர்கள் முன்னிலையில் நல்ல சொற்களைக் கூட வாய்விட்டுப் பேச முடியாதபடி அச்சம் வந்து முன் நிற்கும். இது எதைப் போன்றது என்றால், வீட்டிலே கிளியை வைத்து, அதற்கு வார்த்தை சொல்லிப் பழக்குவார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கும் கிளி. ஆனால், தனக்குப் பகையான பூனை வந்துவிட்டால், அச்சத்தில் கிளியானது, தனது இயல்பான நிலையில், கீச்சு கீச்சு என்று அலரும். அப்போது "அக்கக்கா" என்று சொல்லாத, கிளியின்  நிலையைப்  போன்றதே  நமது  நிலை.

மனிதர்களும்கூட தட்டிக் கேட்க யாரும் இல்லாதபோது, தம்மையே பெரிதாக மதித்து, வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். நல்ல வார்த்தை பேச வராது. அதிலும், இறைவன் திருநாமத்தைச் சொல்லுவது என்றால் வாய் நோகும். ஒருக்கால், சொல்லிக் கொண்டு இருந்தாலும், அச்சப்படும் நிகழ்வு நேர்ந்தால், ஐயோ, ஐயோ என்று அலறல் தான் வரும். "சிவசிவ" என்று சொல்ல வராது. வாழும்போதே இப்படி என்றால், மரணம் சம்பவிக்கும் காலத்தில் எப்படி இருக்கும்?.

இறைவன் நினைப்புச் சாகின்ற தருணத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். நம்முடைய அனுபவத்தில் நம் நினைவில் என்ன என்ன படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம். திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம். கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால், கனவிலும் இறைவன் வருவான். நாம் இறைவனை நினைப்பதில்லை. அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகளே கனவில் தோன்றுகின்றன. "கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய், கருணை ஈதோ" என்று வள்ளல்பெருமான் புலம்பியது போல, நமக்குப் புலம்ப வருவது இல்லை.

கனவில் இறைவனைக் காண வேண்டுமென்றால், நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

பயத்தால் அலறும்போது, "அம்மா, அப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது இறைவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும்.

மரண பக்குவம் ஆகின்ற காலத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வராது. கூடி இருப்பவர்களாவது சொல்லவேண்டும். அதைக் கேட்டுக் கொண்டே உயிர் பிரியவேண்டும். நல்வினைப் பயன் இருந்தால் நடக்கும். இல்லாதபோது, ஐயோ, அம்மா என்ற அலறல் சத்தம்தான் இருக்கும். கூ... கா.... என உறவினர்கள் கூடி அழுவார்கள். சாகப் போகின்றவனும் அலறுவான். கூட இருப்பவர்களும் அலறுவார்கள். "செத்த பிணத்தின் முன், இனிச் சாகும் பிணங்கள் கத்தும்."

உயிரினது இந்தத் தன்மையை அறிந்த அப்பர் பெருமான், இறைவன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை, சாகும் தருவாயிலும் சொல்லும் பாக்கியத்தை அருள் புரியுமாறு சிவபெருமானிடம் வேண்டுகின்றார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்றும் வழக்குச் சொற்கள் உண்டு. இளமையில் இருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி வரவேண்டும். ஒருக்கால் மரண பயத்தால், சொல்ல நாக்கு எழாத நிலை வந்துவிடக் கூடாது என்பதால், சாகின்ற போதும் உனது திருநாமத்தைச் சொல்லுகின்ற பாக்கியத்தை அருள்வாய் என்று வேண்டுகின்றார்.

"தூமென்  மலர்க்கணை கோத்துத்தீ வேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண!நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே".

இதன் பொருள் ---

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை உம்மிடத்தே வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே!  எங்களுக்கு நன்மையை அளிப்பவனே! உன் திருப் பெயரை உனது திருமுன் நின்று துதித்து, "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லகின்ற பாக்கியத்தை அருள் புரிவாயாக.

பட்டினத்து அடிகளாரும் இவ்வாறே வேண்டுகின்றார்....

"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போது,ஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே".      

இதன் பொருள் ---

திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! அடியேன் ஒரு வரத்தை உம்மிடம் யாசிக்கின்றேன். அதனைத் திருவருள் செய்யவேண்டும். கோழையும் கட்டி, கண்களும் உள்வாங்கி, உணர்வும் கெட்டு, உடம்பும் பொய்யாகி விடுகின்ற காலத்தில், திருநீற்றை அணிந்து, கைகளால் உம்மைத் தொழுது, பஞ்சாட்சரத்தை ஓதும்படியாக அருள் புரியவேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். இறைவனும் அவரைத் தனது தோழராகவே கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். "ஐயனே!  தேவரீரை நான் எப்போதும் நினைக்கிறவன் ஆயிற்றே. வழுக்கி விழுந்தாலும் உனது திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோ, அம்மா, அப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.

"அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்,

அதுவும் நான்படப் பாலது ஒன்று ஆனால்,

பிழுக்கை வாரியும் பால்கொள்வர், அடிகேள்!

பிழைப்பன், ஆகிலும் திருவடிப் பிழையேன்;

வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான் அறியேன் மறுமாற்றம்;

ஒழுக்க! என்கண்ணுக்கு ஒருமருந்து உரையாய்,

   ஒற்றியூர் என்னும் ஊர் உறைவானே!"

என்று, தாம் இறைவன் திருநாமத்தை எப்போதும் மறவாமை குறித்துப் பாடுகின்றார். பிறிது ஓரிடத்தில், "நற்றவா! உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்கின்றார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கின்றது.

அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தாவது பழகி வர வேண்டும். கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், எமன் "இந்த நேரத்தில் நான் வருவேன்" என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே, இப்பொழுதிலிருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடியை வழிபடப் பழகினால், இறக்கும் பொழுது அவன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான்.

"சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து  என்னைச் சூழ்ந்து கொண்டால்,

வேலாயுதா! என்று கூப்பிடுவேன், அந்த வேளை தன்னில் 

மாலான வள்ளி தெய்வானையுடன் மயில் விட்டு இறங்கி,

காலால் நடந்து என் முன்னே வர வேணும் கந்தப்பனே"

என்று வேண்டுதலை வைக்கின்றார் அடியவர் ஒருவர். ஆறெழுத்து மந்திரத்தினை சதாகாலமும் நினைத்து நினைத்து உரு ஏறிய உள்ளம் இப்படிப் பேசுகின்றது. சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து சூழ்ந்து கொள்ளுகின்ற தருணத்தில் கூட இறைவன் நினைவு வந்து விடுமாம் அந்த அடியவருக்கு. "கூப்பிடுவேன்" என்று உறுதிபடக் கூறுகின்றார்.

இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனால் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்ல, அது மனத்திலே ஏறி, அதன் பொருள் உள்ளத்திலே தங்கும். அதனுடைய ஆற்றல் உள்ளத்தில் பதியும். அதனால் இறைவன் மீது கொண்ட பற்று மிகுதியாகும். இன்ப அனுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அனுபவங்கள் ஏற்படும்.

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லிப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, "ஆறுமுகம்"  என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில்  விழுந்து குளிர்கிறது. காரணம் என்ன?  அவள் பலகாலும் கேட்டுப் பழகிய அந்தச் சொல், இப்போது அந்தப் பெண்ணுடைய கணவனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்றுதான் அப்பர் பெருமான் கூறுகின்றார்.

இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே! உறங்குதியோ" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருநாமத்தைக் கேட்டவுடனே உள்ளம் உருகவேண்டும். அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது, மனம் இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். எமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.


No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...