பொது --- 1108. தந்தமும் துன்ப

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

தந்தமும் துன்ப (பொது)


முருகா! 

உன்பால் அன்பு இன்றி, 

பொதுமாதர் மீது வைத்த அன்பால் விளையும் 

துன்பம் தீர அருள்வாய்.


தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்

     தந்தனந் தந்தனந் ...... தனதான


தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்

     தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி


தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்

     தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி


நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்

     சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம்


நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்

     தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ


சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்

     தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி


தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்

     பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர்


அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்

     தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி


அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்

     றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு, அந்தகன்

     தண்ட ஒன்ற அன்று ஒடுங் ...... கிடும் ஆவி,


தஞ்சம் என்றும் பரிந்து, இன்சொல் வஞ்சம் தெரிந்து

     அன்றும் என்றும் தனம் ...... தனைநாடி,


நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி, நன்று என்று நெஞ்

     சின்கண் அன்பு ஒன்றில் மங் ...... கையர் நேசம்


நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்து,

     இன்பம் ஒன்று இன்றி இங்கு ...... உழல்வேனோ?


சுந்தரன் பந்தமும் சிந்த வந்து, அன்புடன்

     தொண்டன் என்று அன்று கொண் ...... டிடும், ஆதி,


தும்பை செம் பொன்சொரிந்தும் தரும் கொன்றை, துன்-

     பம் கடிந்து என்பொடுந் ...... தொலையாநீர்


அந்தம் முந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து

     அன்றும் இன்றும் புனைந் ...... திடும்வேணி,


அன்பர் நெஞ்சு இன்புறும் செஞ்சொலன் கந்தன் என்று

     அண்டர் அண்டம் தொழும் ...... பெருமாளே.


பதவுரை


சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி --- சுந்தரமூர்த்தி நாயனாரின் பந்தபாசம் நீங்கும்படியாக, பரிவுடன் வந்து “இவன் எனது அடிமை” என்று முன்னொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும்,


தும்பை --- தும்பை மலரையும்,


செம் பொன் சொரிந்து தரும் கொன்றை --- செம்மையான பொன் போன்ற இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றை மலரையும், 


துன்பம் கடிந்து என்பொடும் --- உயிர்களின் வினைத் துன்பத்தைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன்,


தொலையா நீர் --- வற்றாத கங்கை நதியையும்,


அந்தம் முந்து இந்துவும் --- அழகு மிக்கு விளங்கும் பிறைச்சந்திரனையும்,


கெந்தம் மிஞ்சும் கொழுந்து --- நறுமணம் மிகுந்த மருக்கொழுந்து, (ஆகியவற்றை)


அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி அன்பர் ---  பழங்காலம் முதல் இக்காலதிலும் அணிந்த திருச்சடையை உடையவரும், அன்பு வடிவானவரும் ஆகிய சிவபெருமானுடைய


நெஞ்சு இன்புறும் செம் சொ(ல்)லன் கந்தன் என்று --- மனம் குளிரும்படியாக இனிமையான சொற்களைப் பேசுபவனாகிய கந்தச் சுவாமி என்று


அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே --- தேவர்களும் அண்டங்களில் உள்ளோரும் வணங்கித் தொழுகின்ற பெருமையில் மிக்கவரே!


தந்தமும் --- கோரப் பற்களையும்,


துன்ப வெம் சிந்தை கொண்டு – துன்பத்தை விளைவிக்கும் கொடிய மனத்தையும் கொண்டவன் ஆகிய,


அந்தகன் --- இயமன்,


தண்ட ஒன்ற அன்று --- சினத்துடன் எழுந்து நெருங்கி வருகின்ற அக்காலத்தில், 


ஒடுங்கிடும் ஆவி ---  உடலில் இருந்து நீங்கிவிடும் உயிர். (இந்த உண்மைதனை அறிந்து இருந்தும்)


தஞ்சம் என்றும் --- (பொதுமகளிரிடம்) உனது அடைக்கலம் நான் என்றும்,


பரிந்து இன்சொல் வஞ்சம் தெரிந்த அன்றும் என்றும் தனம் தனை நாடி ---  அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதரின் உள்ளத்தில் வஞ்சம் உள்ளது என்று தெரிந்த அன்றும், அதற்குப் பிறகும் கூட, அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி (அலைந்து திரிந்து)


நின் தன் அன்பு என்பது ஒன்று இன்றி --- தேவரீரது திருவடிக்கண் அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல்,


நன்று என்று --- இதுவே நன்மை தருவது என்று மனத்தில் கொண்டு,


நெஞ்சின் கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் நின்று அளந்தும் --- உள்ளத்தில் அன்பு என்பது ஒரு சிறிதும் இல்லாத மங்கையர்களின் நேசத்தையே கருதி இருக்கின்ற


சளம் கொண்டிடும் புன்கண் நந்த --- மூர்க்கத் தனத்தால் உண்டான துன்பமானது வளர,


இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ --- இன்பம் என்பது ஒரு சிறிதும் இன்றி இந்த உலகில் அடியேன் அலைந்து கொண்டு இருப்பேனோ?

பொழிப்புரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் பந்தபாசம் நீங்கும்படியாக, பரிவுடன் வந்து “இவன் எனது அடிமை” என்று முன்னொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும்; தும்பை மலரையும், செம்மையான பொன் போன்ற இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றை மலரையும், உயிர்களின் வினைத் துன்பத்தைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன், வற்றாத கங்கை நதியையும், அழகு மிக்கு விளங்கும் பிறைச்சந்திரனையும், நறுமணம் மிகுந்த மருக்கொழுந்து, ஆகியவற்றைப் பழங்காலம் முதல் இக்காலத்திலும் அணிந்த திருச்சடையை உடையவரும், அன்பு வடிவானவரும் ஆகிய சிவபெருமானுடைய மனம் குளிரும்படியாக இனிமையான சொற்களைப் பேசுபவனாகிய கந்தச் சுவாமி என்று தேவர்களும் அண்டங்களில் உள்ளோரும் வணங்கித் தொழுகின்ற பெருமையில் மிக்கவரே!

கோரப் பற்களையும், துன்பத்தை விளைவிக்கும் கொடிய மனத்தையும் கொண்ட இயமன் சினத்துடன் எழுந்து நெருங்கி வருகின்ற அக்காலத்தில், உடலில் இருந்து நீங்கிவிடும் உயிர். இந்த உண்மைதனை அறிந்து இருந்தும் பொதுமகளிரிடம் உனது அடைக்கலமாகப் புகுந்து இருந்தும், மனத்தை மயக்கும் அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதரின் உள்ளத்தில் வஞ்சம் உள்ளது என்று தெரிந்த அன்றும், அதற்குப் பிறகும் கூட, அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி அலைந்து திரிந்து, தேவரீரது திருவடிக்கண் அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், இதுவே நன்மை தருவது என்று மனத்தில் கொண்டு, உள்ளத்தில் அன்பு என்பது ஒரு சிறிதும் இல்லாத மங்கையர்களின் நேசத்தையே கருதி இருக்கின்ற மூர்க்கத் தனத்தால் உண்டான துன்பமானது வளர, இன்பம் என்பது ஒரு சிறிதும் இன்றி இந்த உலகில் அடியேன் அலைந்து கொண்டு இருப்பேனோ?


விரிவுரை

சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி --- 

பந்தம் சிந்த – உலகப் பற்றானது தொலையும்படியாக.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதிசைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரர் என்பதாகும். நம்பியாரூரர் என்பதை ஆரூரர் என்று சுருக்கி அழைப்பர். சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். இவருடைய அழகினையும் பொலிவினையும் கண்டு, சிறுவன் சுந்தரனை மகன்மையாகக் கொண்டு, அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். வைதிகத் திருவும் மன்னர் திருவும் பொலிய நம்பியாரூரர் வளர்ந்து வந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நம்பியாரூரர் திருமணக் கோலம் கொண்டு மணம் வந்த புத்தூரில் திருமணப் பந்தருக்கு வந்து சேர்ந்தார். மணவறையில் அமர்ந்தார்.

அந்த வேளையில், திருக்கயிலாயத்திலே, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வாக்களித்தபடியே, அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு,  சிவபெருமான் ஒரு முதிய வேதியர் கோலம் தாங்கித் தண்டு ஊன்றி திருமணப் பந்தருள் நுழைந்து, அங்கிருந்த சபையாரை நோக்கி, "இந்த நாவல் நகர் ஊரன் எனது அடிமை" என்றார். சுந்தரர் வெகுண்டு, "அந்தணர் வேறு ஒர் அந்தணருக்கு அடிமை ஆவதில்லை. பித்தனோ மறையோன்" என்றார். வேதியர், "அந்தக் காலத்தில் உனது பாட்டன் எனக்கு எழுதித் தந்த அடிமை ஓலை இருக்கிறது. என்னை இகழாதே" என்றார். "அந்த அடிமை ஓலையைக் காட்டும்" என்றார் சுந்தரர். சபை முன்னே காட்டுவேன் என்றார் வேதியர். சுந்தரர் அவரைத் தொடர்ந்து ஓடி, ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார்.

அங்கிருந்தவர்கள் அந்தணரைப் பார்த்து, "ஐயரே இந்த உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டு வந்தீர். நீர் இருப்பது எங்கே" என்று கேட்டனர். அதற்கு, "நான் இருப்பது திருவெண்ணெய்நல்லூர். இவன் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்து எறிந்தான். அதனாலேயே இவன் எனது அடிமை என்பது உறுதி ஆயிற்று" என்றார். அதுகேட்ட சுந்தரர் "உமது ஊரிலேயே இந்த வழக்கைப் பேசலாம்" என்றார். வேதியரும் "அப்படியே செய்வோம். அங்கே மூல ஓலையைக் காட்டி சாதிப்பேன்" என்றார்.

எல்லோரும் திருவெண்ணெய்நல்லூரை அடைந்து, வேதியர்கள் நிறைந்த சபையில் தனது வழக்கை வேதியர் சொன்னார். சபையார் வேதியரைப் பார்த்து, "அந்தணர் அடிமை ஆகும் வழக்கம் இல்லையே" என்றனர். வேதியர் "என் வழக்கு நியாயமானது. இவன் வலிந்து கிழித்த ஓலை படியோலை. மூல ஓலை இதோ பாருங்கள்" என்று காட்டினார். அதில், "திருநாவலூரிலே வாழும் ஆதிசைவனாகிய ஆரூரன் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் மரபினரும் திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு வழித்தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகின்றோம். இங்ஙனம் ஆரூரன்" என்ற வாசகம் இருந்தது. 

“அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை

பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால்

வரு முறை மரபு உளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை

இருமை யால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து.”  -- பெரியபுராணம்.

சபையார், அந்த ஓலையையும், சுந்தரரின் பாட்டனாருடைய வேறு கையெழுத்துக்களையும் ஒப்பு நோக்கி, சுந்தரரைப் பார்த்து, இந்த வேதியருக்கு அடிமையாய் இருப்பது உமது கடன் என்றனர்.

அந்த வேளையில் சபையார் வேதியரைப் பார்த்து, “முதியவரே! ஓலையில் உமது ஊர் இவ்வூர் என்று உள்ளது. உமது வசிப்பிடத்தைக் காட்டும்” என்றனர். “காட்டுகிறேன் வாரும்” என்று நடந்த வேதியரின் பின்னே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் மற்றவர்களும் நடந்தனர். அவ்வூரில் உள்ள ‘திரு அருட்டுறை” என்னும் திருக்கோயிலின் உள்ளே நுழைந்து மறைந்தார் வேதியர். எல்லோரும் திகைத்தனர். அப்போது சிவபெருமான் உமாதேவியாருடன் ம்பழவிடைமேல் காட்சி கொடுத்து, “சுந்தரனே! முன்பு நீ நமக்குத் தொண்டன். திருக்கயிலாயத்தில் நமது அணுக்கத் தொண்டனாக இருஉந்த காலத்தில், மாதர் மீது மனம் வைத்தாய். அதனால், நமது ஏவலின்படி இந்த மண்ணில் பிறந்தாய். இவ்வுலக பாசம் உன்னைப் பற்றாதபடிக்கு நாமே தடுத்து ஆட்கொண்டோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

“முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப்

பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது

துன்பு உறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்து

நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்’ என்றார்.”   --பெரியபுராணம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனின் திருக்கருணையை வியந்து போற்றினார். இவ்வாறு, சமர்த்தாக வெற்றி கொண்டு சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பாடிப் பரவுகின்றார்.


தொலையா நீர் --- 

வற்றாத நீர்ப் பெருக்கை உடைய கங்கை நதி.


அந்தம் முந்து இந்துவும் --- 

அந்தம் முந்து - அழகு மிக்கு விளங்கும். இந்து – சந்திரன். இங்கே  பிறைச்சந்திரனைக் குறித்தது.


கெந்தம் மிஞ்சும் கொழுந்து --- 

கெந்தம் – நறுமணம். கொழுந்து – மருக்கொழுந்து. 


தந்தமும் --- 

தந்தம் – பல். இங்கே இயமனுடைய கோரப் பற்களைக் குறித்தது.


தண்ட ஒன்ற அன்று --- 

தண்டுதல் – சினம் மூண்டு எழுதல்.


பரிந்து இன்சொல் வஞ்சம் தெரிந்த அன்றும் என்றும் தனம் தனை நாடி ---  

பரிந்து – பரிதல் – அன்பு காட்டுதல். தனம்தனை நாடி – பொருளைத் தேடி.

அன்பை நாடாது பொருளையே நாடி இருக்கும் பொதுமகளிரின் உள்ளத்தில் வஞ்சமே நிறைந்து இருக்கும். அது தெரிந்தும், அவர் தரும் கலவிச் சுகத்தைப் பெரிதும் விரும்பி, அவர்க்குக் கொடுப்பதற்காகப் பொருளைத் தேடி காமுகர் அலைவர். பொருளுக்காக அற்பர்களை எல்லாம் புகழ்ந்து கூறி இச்சகம் பேசுவர். அவர்மீது கவிகளையும் பாடுவர்.

அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத

அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,

     அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,

     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,

     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.                        – கச்சித் திருப்புகழ்.


சளம் கொண்டிடும் புன்கண் நந்த --- 

சளம் – மூர்க்கம். புன்கண் – துன்பம். நந்துதல் – வளர்தல். 


கருத்துரை


முருகா! உன்பால் அன்பு இன்றி, பொதுமாதர் மீது வைத்த அன்பால் விளையும் துன்பம் தீர அருள்வாய்.


No comments:

Post a Comment

பொது --- 1108. தந்தமும் துன்ப

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் தந்தமும் துன்ப (பொது) முருகா!  உன்பால் அன்பு இன்றி,  பொதுமாதர் மீது வைத்த அன்பால் விளையும்  துன்பம் தீர அர...