“பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்,
பருகுநீர் சேரின் என்னாம்’
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்,
படிகமணி கோக்கின்என்னாம்;
மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை,
மேடமது சேரின்என்னாம்;
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை,
வெண்கல் அழுத்தின்என்னாம்;
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்,
வளைகிழவர் சேரின்என்னாம்;
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்,
வருகயவர் சேரின்என்னாம்;
மாலிகை தரித்தமணி மார்பனே! தெய்வானை
வள்ளிக்கு வாய்த்தகணவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் ---
மணிமாலிகை தரித்த மார்பனே – மணிகளால் ஆன மாலையைத் தரித்த திருமார்பினை உடையவரே!
தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – தெய்வயானை அம்மைக்கும், வள்ளிநாயகிக்கும் வாய்த்த கணவரே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
பாலினொடு தேன் வந்து சேரின் ருசி அதிகம் ஆம் - பாலுடன் தேன் கலந்தால் இனிமை மிகும்; பருகும் நீர் சேரில் என் ஆம் - குடிக்கும் நீர் பாலுடன் கலந்தால் இனிமை தருமா?
பவளத்தின் இடை முத்தை வைத்திடின் சோபிதம் - பவளத்தின் இடையிலே முத்தை அமைத்தால் அழகு மிக்கு விளங்கும்; படிகமணி கோக்கின் என்ஆம் - படிகமணியைத் தொடுத்தால் விளக்கம் உறுமா?
மேல் இனிய மன்னர்பால் யானை சேர்வது கனதை – மேன்மை உடைய அரசரிடம் யானை வந்து சேருவது பெருமை; மேடமது சேரின் என்ஆம் - ஆடு வந்து சேருவது பெருமையா?
மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை - உயர்ந்த பொன்னில் ஒன்பது வகை மணிகள் பதிப்பது சிறப்பு; வெண்கல் அழுத்தின் என் ஆம் - வெள்ளைக் கல்லைப் பதிப்பது சிறப்பாகுமா?
வாலிப மி(ன்)னார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் - பருவமங்கையருடன் இளைஞர்கள் கூடுவது நன்மை; வளை கிழவர் சேரின் என்ஆம் - முதுகு கூனிய முதியவர்கள் கூடுவது நன்மையா?,
மருவும் நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் – நற்பண்பு உடையோரிடம் நல்லோர் சேர்வதே விருப்பமாகும்; வரு கயவர் சேரின் என் ஆம் - தீயவர் கலப்பது என்ன ஆகும்?
நல்லவர்களைச் சேர்ந்தால் நன்மை விளையும். தீயவர்களைச் சேர்ந்தால் தீமையே விளையும். உயர்ந்தாரோடு உயர்ந்தார் கூடுவதே பொருத்தம். பின்வரும் பாடலைக் கருத்தில் கொண்டு நோக்குக.
"அரி மந்திரம் புகுந்தால், ஆனை மருப்பும்
பெருகு ஒளிசேர் முத்தும் பெறலாம், --- நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்
தோலும்அல்லால் வேறும்உண்டோ சொல்".
இதன் பொருள் ---
சிங்கத்தின் குகையிலே புகுந்தோம் என்றால், அங்கே விரும்பப் படாத பொருள்கள் பல இருக்குமாயினும், அங்கே யானையின் தந்தமும், அதில் இருந்து பிறக்கும் மிக்க ஒளி பொருந்திய முத்தும் கிடைக்கப் பெறலாம். நரியின் குழியிலோ, அறுந்த வால்களும், சிறிய மயிர்களும், உடைந்த எலும்பும், கழுதையின் தோலும் ஆகிய இவ்வகையான தாழ்ந்த பொருள்களை அல்லாமல், வேறு உயர்ந்த பொருள்கள் எவையும் கிடைக்கமாட்டா. அதுபோலத்தான், நல்லவர்களைச் சேர்வதும், தீயவர்களைச் சேர்வதும்.
No comments:
Post a Comment