52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில் தானே உரிமை உடையவனாய் முயல்கின்ற செயலை உடையவனை வேறாக நினைப்பவனை விட்டுத் திருமகள் நீங்குவாள்" என்கின்றார் நாயனார்.

தொழிலைச் செய்யப் புகுந்த ஒருவன், அந்தச் செயலைத் தன்னிடத்தே ஒப்படைத்தவனுக்கு அன்னியன் போல் இல்லாமல், சுற்றத்தவர் போல் உரிமையுடன் செய்து வருவதைக் கண்டவர்கள், பொறாமை காரணமாக மாறுப்பட்ட செய்திகளைச் சொன்னால், அவற்றைக் கேட்டு மனம் மாறுபடக் கூடாது. அப்படிச் செய்தால், கோள் சொல்வோர்க்கு இடம் தருபவனிடத்தில் தொழில் புரியத் தகாது என்று எண்ணி, தொழில் செய்யப் புகுந்தவன், தொழிலை விட்டு நீங்குவான். அவ்வாறு நீங்கினால், அவனிடத்தில் தொழில் செய்வார் வேறு ஒருவரும் வரமாட்டார்கள். அதனால் வருவாய் குறைந்து விடும். அதனால், முன்னரே இருந்த செல்வமும் கரைந்து போகும்.


இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“வினைக்கண் வினை உடையான் கேண்மை, வேறாக

நினைப்பானை நீங்கும் திரு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வினைக்கண் வினை உடையான் கேண்மை --- எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ் வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, 

வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் --- அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.

(கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர் செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து.)


பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

“இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; --பொன்னொடு

நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்

இல்லத்தில் ஆக்குத லால்.” --- நாலடியார்.

இத்ன பொருள் ---

நண்பனாக உள்ள ஒருவன் தனக்குத் துன்பமே செய்தாலும்,  விட்டு ஒதுக்கி விடாமல், தனது இனிய நண்பரைப் பொன்னைப் போலப் போற்றிப் பாதுகாத்து வருதல் வேண்டும். பொன்னையும் பொருளையும் அழிக்கின்றது நெருப்புதான். என்றாலும், அதை அன்றாடம் நமது வீட்டில் உணவு சமைக்க மூட்டுகின்றோம். அல்லவா? அதுபோலத்தான் தவறு செய்தாலும் நண்பரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் குறைகளைத் தமது பெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப் போற்றி ஒழுகல் வேண்டும்.


“இன்னா செயினும் விடுதற் கரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ? - துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ

கண்குத்திற்று என்றுதம் கை. ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அணுகுதற்கரிய சிறப்பினை உடைய, வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களை உடைய மலைநாடனே! தவறுதலாகத் தம் கண்ணைக் குத்திற்று என்று தமது கையை மக்கள் வெட்டி நீக்கி விடுவார்களோ? இல்லை. அதுபோலத்தான், அறியாமையால் தீமைகள் செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரை நெருங்காமல் கைவிட்டு விடுதல் தகுந்தது ஆகாது.

தம்மைச் சேர்ந்தோர் ஒருகால் தீமைகள் செய்யினும் அவரை உடனே கைவிட்டு விடாமல் அணைத்துக் கொள்ளல் வேண்டும்.


No comments:

Post a Comment

52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...