திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்
தெரிந்து வினையாடலாவது, முந்திய அதிகாரத்தில், செயலுக்கு உரியவ ஒருவனை ஆராய்ந்து தெளிதலை அறிவுறுத்திய நாயனார், இப்போது, அவ்வாறு தெளியப்பட்ட ஒருவரை, அவர் செய்யக்கூடிய தொழிலை அறிந்து ஆளுகின்ற திறத்தை அறிவுறுத்துகின்றார்.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒரு செயலைத் தன்னிடத்து வைத்தால், அச் செயலில் ஆகக் கூடியதும், ஆகாததும் ஆகிய செயல்களை ஆராய்ந்து அறிந்து, ஆகிவரும் செயல்களையே செய்யும் இயல்பு உடையவனையே செயலில் விடவேண்டும்" என்கின்றார் நாயனார்.
தொழிலுக்கு நியமிக்கப்பட்டவன் திறத்தை அறியும் வண்ணம், இரகசியமானதும், இரகசியம் அல்லாததும் ஆகிய இரண்டிற்கும் பொதுவாகிய ஒரு தொழிலில் முதலில் அவனை ஈடுபடுத்தி, அத் தொழிலைத் திறம்படச் செய்வானானால், அதனைக் கொண்டு, இவன் இந்தச் செயலைத் திறம்படச் செய்து முடித்தான், இனி, எத் தொழிலைக் கொடுத்தாலும் திறம்படச் செய்வான் என்ற நம்பிக்கை பிறந்த பின்னர், இரகசியமான தொழில்களையும் அவனிடத்தில் ஒப்புவிக்கலாம்.
இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்...
“நன்மையும், தீமையும் நாடி, நலம் புரிந்த
தன்மையான் ஆளப் படும்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
நன்மையும் தீமையும் நாடி --- அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து,
நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்,
ஆளப்படும் --- பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
(தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்...
“நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
நல்லவும் தீயவும் நாடி - நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, பிறர் உரைக்கும் கட்டுரையின் - மாறுகொண்ட இருவர் கூறும் கட்டுரை ஒன்றால், நல்ல பிறவும் உணர்வாரை - நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை, வல்லிதின் நாடி வலிப்பதே - ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, புல்லம் புல்லத்தை புறம் புல்லுமாறு – காளை ஒன்று மற்றொரு காளையோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.
'அரசன், அறிவால் மிக்க அமைச்சர்களோடு கூடி ஒழுகின், அரச காரியங்கள் இனிது நடைபெறும் என்பது இங்கே சொல்லப்பட்டது..
வலிமை பெற ஆராய்தலாவது - ஆழ்ந்து ஆராய்தல். ஒரு காளை மற்றொரு காளையோடு மாறுபாடின்றி இணைந்து ஒழுகின் பொலிவு பெற்றிருத்தலோடு அவைகளால் முடியும் காரியங்கள் இனிது விரைந்து முடிதல்போல, அரசன் அறிவால் தன்னை ஒத்த அமைச்சர்களோடு இணைந்து ஒழுகின், அரச காரியங்கள் இனிது விரைந்து முடியும். புல்லுதல் - மனத்தால் புல்லுதல். காளைகள் மாறுபட்டு ஒழுகின் காரியம் நடத்தல் இல்லை என்பது அறிந்தது ஒன்று. காளைகள் போல - உலக இயலாகிய வண்டியைச் செலுத்துவதற்கு, அரசன் அமைச்சர்கள் என்போர்கள் இன்றியமையாதவர்கள் என்பதாம்.
“நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு,
எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ;
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்,
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்.” --- கம்பராமாயணம், அரசியல் படலம்.
இதன் பொருள் ---
நாயகற்கு - தன் அரசனுக்கு, நல்லவும் தீயவும் நாடி - நன்மை தருவனவற்றையும் தீமை பயப்பனவற்றையும் ஆராய்ந்து; எல்லை - முடிவில்; மருத்துவர் இயல்பின் - நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளை நோக்காது அவர்களது நலத்தையே நோக்கிச் செயற்படும் மருத்துவர்களின் தன்மைபோல; எண்ணுவார் - தலைவனுக்கு நன்மையையே கருதுவர். ஒல்லை வந்து உறுவன - அன்றியும் விரைவில் வந்து சேரும் தீங்குகள்; உற்ற பெற்றியின் - நேர்ந்த இடத்து; தொல்லை நல்வினை என - முன்னர்ச் செய்த புண்ணியம் வந்து உதவுவது போல; உதவும் சூழ்ச்சியார் - அத் தீங்குகளைப் போக்கத் துணைபுரியும் சிந்தனைத் திறம் உடையவர்களும் ஆவார்.
இங்கு அமைச்சர்கள் மருத்துவர்களைப் போன்று இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. நோய் அற்ற ஒருவன் தனது உடல் உறுதிபெற, ஊட்டம் தரும் மருந்தினை நாடியும், நோய் உற்றவன் நலம் பெற வேண்டி, நோய் நாடி, அதன் காரணத்தை நாடி, அதனைத் தணிக்கும் வழிகளை நாடி, நோயாளி நோய் ஆகியவற்றின் தன்மைக்குத் தக்கவாறு செயற்படுபவர் மருத்துவர். அதுபோல, அமைச்சர்களும் அரசன் ஆட்சி நலமுடன் திகழச் செய்தற்கு உரியவற்றைத் தேர்ந்து தெளிந்து செயற்படுத்தியும், தீமை நேர்ந்த காலத்தில், அதனை ஆராய்ந்து காரணத்தைக் கண்டு அறிந்து, நீக்குதற்கு உரிய வழிகளை எண்ணி, தக்கது கொண்டு துப்படைதும் செய்தனர்.
No comments:
Post a Comment