42. காற்று உள்ள போதே தூற்றிக் கொள்


நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ?

     ஆதலினால், நினைந்தபோதே

ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி

     வைப்பதறி வுடைமை அன்றோ?

கூற்றுள்ளம் மலையவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! குடபால் வீசும்

காற்றுள்ள போதெவரும் தூற்றிக்கொள்

     வதுநல்ல கருமந் தானே?”


இதன் பொருள்


கூற்று உள்ளம் மலையவரும்  தண்டலையாரே - (மார்க்கண்டனுக்காக) எமனுடைய மனம்  கலங்க வந்தருளிய, திருத்தண்டலை  என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 


எவரும் குடபால் வீசும் காற்று உள்ளபோது தூற்றிக்கொள்வது நல்ல கருமம் தானே? - யாவரும் மேலைக்காற்று வீசும்போது (தூற்றுவதைத்) தூற்றிக்கொள்வது நல்ல வேலையாகும் அல்லவா?  நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ - நேற்று இருந்தவர்  இன்று இருப்பது  நிச்சயமோ? (இல்லை).  ஆதலினால் நினைந்த போதே ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி வைப்பது அறிவுடைமை அன்றோ - ஆகையால், உள்ளத்தில் எண்ணம் உண்டான பொழுதே ஆதரவாக உள்ள பொருளைக் கொடுத்து அறத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வது  அறிவுடைமையாகும்.


      கூற்று : உடலிலிருந்து  உயிரைக்  கூறுபடுத்துவோனுக்கு ஆகுபெயர். ஊற்று - ஆதரவு. குடபால் - மேலைத்திசை. "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் : கரும்பு உள்ளபோதே ஆடிக் கொள்" என்பன பழமொழிகள்.

No comments:

Post a Comment

தேடிய பொருளைக் கொண்டு அறம் புரிக

  “குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்      குணம்போலும், ஈக்கள் எல்லாம் கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்      கூடுய்த்த நறவுபோலும், ...